தமிழில் : ஆயிஷா இரா.நடராசன்
விஞ்ஞானி புஷ்பா மித்ரா பார்கவா ஹைதராபாத் செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் தேசிய ஆய்வகத்தின் நிறுவனர். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். சர்வதேச அளவில் முதன்மையாய் விளங்கும் மூலக்கூறு உயிரியலாளர். 1986ல் தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை திருப்பி ஒன்றிய பாஜக அரசுக்குத் தன் கடும் எதிர்ப்பைக் காட்டிப் பரபரப்பை ஏற்படுத்தியவர். 107 தலைசிறந்த விஞ்ஞானிகளை ஒன்றிணைத்து “நம் இந்திய ஜனநாயகத்தைக் காப்போம்” என்ற சிறப்பு அறிக்கையை வெளியிட்டவர். மத்திய மோடி அரசு அறிவியல் வளர்ச்சிக்கான நிதியை முற்றிலும் முடக்கி தரமான அறிவியல் ஆராய்ச்சிகளை நிறுத்திக் கல்வியில் இருந்து அடிப்படை அறிவியலை நீக்கி நாட்டை இருண்ட பாதைக்குத் திருப்பி விட்டதாக இந்தக் காரசாரமான நேர்காணலில் அவர் விவாதிக்கிறார். அவரை நேர்காணல் செய்தவர் அடுல்டேவ். இந்த நேர்காணல் அவர் மறைவுக்கு முன்பாக 2017 ஆம் ஆண்டு தி காரவென் (The Caravan) அரசியல் / கலாச்சார இதழில் வெளிவந்தது. தமிழில் ஆயிஷா இரா.நடராசன்

ஏனைய விஞ்ஞானிகள் போலில்லாமல் மோடி அரசை நேரடியாக எதிர்த்து நிற்கிறீர்களே
மூன்று காரணங்கள். இந்த அரசு ஜனநாயக அரசு அல்ல. இது இந்துத்துவ சர்வாதிகார அரசாக இயங்குகிறது. இரண்டாவதுசி.எஸ்.ஐ.ஆர். ஊடுருவப்பட்டு விட்டது.ஆர்.எஸ்.எஸ்.வாதிகளின் கூடாரமாக அதை மாற்றுகிறார்கள். மூன்றாவது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளது. 51A பிரிவின்படி ஒவ்வொரு இந்தியரும் விஞ்ஞான விழிப்புணர்வு பெற வேண்டும் என்கிற ஷரத்தை இந்த அரசு மதிக்கவில்லை, அந்த ஷரத்தைக் கொண்டுவந்த கல்வியாளர் முன்னாள் கல்வி அமைச்சர் நூருல் ஹசன் அவர்களோடு நெருங்கிப் பணி ஆற்றியவன் நான். என்னால் இவற்றைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை.
மேலும் சிறுபான்மையினர் மீதான சகிப்புத் தன்மையைத் தகர்த்துக் கொடூரமான அச்சத்தை தருகிறார்கள். முற்றிலும் அறிவியல் மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரையாக முன்வைத்து நமது இந்தியாவின் அறிவியல் பெருமைகளையே சீர்குலைக்கிறார்கள். நம்பிக்கைவாத மதவெறிக் கொள்கைகளை அறிவியலில் புகுத்தி நம்பமுடியாத அளவிற்கு நம் பகுத்தாயும் சிந்தனை மரபிற்கே முற்றுப்புள்ளி வைக்க நிதியே ஒதுக்கித் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள்.

சந்திராயன் முதல் இஸ்ரோவின் வெற்றிகளை எல்லாம் தனது அறிவியல் வெற்றி என்று மோடி பறைசாற்றுகிறாரே?
இஸ்ரோவின் நிலைமை மிக மிக மோசம். அவர்கள் திட்டங்களுக்காகக் கேட்ட தொகையில் நான்கில் ஒரு பகுதிகூட ஒதுக்கவில்லை. உதிரிப்பாகங்கள் முதல் தகவல் தொடர்பு வரை அதானி குழுமத்திடம் விட்டு தனியார் மயம் ஆக்கி விட்டார்கள். எப்போது ரஃபேல் நுழைந்ததோ அதிலிருந்தே நமது ராணுவத் தளவாட உற்பத்தி அறிவியல் உட்படப் பலவற்றில் தனியார் மயம் புகுந்து விட்டது. நுண் அறிவியல் முதல் தட்பவெப்ப – ஆய்வு, உடற்கூறியல் என்பதில் மருத்துவ மருந்தியல் துறை பலகோடி தனியார்மய ஊழலில் சிக்கி உள்ளது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். கடந்த பத்தாண்டுகளில் இவர் முடக்கிச் சீரழிக்காத அறிவியல் துறையே கிடையாது.
மத்திய அரசின் மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவில் (ஜி.இ.ஏ.சி.) உறுப்பினாக இருந்தவர் நீங்கள், இன்றைய விவசாயிகள் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
விவசாயிகளை நாம் கைவிட்டது கொடுமை. அவர்களை ஏதோ கிரிமினல்கள் போல நடத்துகிறார்கள். நாம் மரபணுமாற்றப் பருத்தி (பி.டி.பருத்தி) மற்றும் மரபணுமாற்றக் கத்திரிக்காய் இவற்றுக்கு அன்று (2010ல்) மத்திய அரசின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு மூலம் (தடையைக் கொண்டுவர) முடிந்தது. விவசாய இடுபொருட்களைப் பெற்றுச் சந்தைக்கு வழங்கும் அமைப்பையே இன்று சிதைத்துவிட்டார்கள். அதானி குழுமப் பண்ணைமுறையை வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள். விவசாய உற்பத்தி தன்னலமற்ற உழைப்பு அர்ப்பணிப்பு மூலம் – இந்திய விவசாயிகள் பெரும் பஞ்சங்களையே முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள். ஏற்கெனவே கடும் கடன் சுமையில் தவிக்கும் அவர்களது மிக மிகச் சாதாரணமான கோரிக்கைகளைக்கூடப் பரிசீலிக்கும் மக்கள் அரசாக இது இல்லை. எப்படிக் கார்ப்பரேட் உணவு உற்பத்திக்கு இவர்களைப் பலியிடலாம் என்பதையே குறிக்கோளாகக்கொண்ட இந்த அரசு காலிஸ்தான், மத சரிதம் என்றெல்லாம் அதையும் திசை திருப்பவே பார்க்கிறது. தற்போது தேசிய வேளாண் ஆராய்ச்சிக் கழக நிதியையும் முடக்கி விட்டார்கள். விவசாய நுண் உயிரி- ஆய்வுகள் இனி தனியார் ஆய்வகங்களில்தான் நடக்கும் என்றால் நமக்கு மத்தியில் ஓர் அரசு எதற்கு?

இருபத்தோரு வயதிலேயே உயிரி-வேதியியலில் பிஎச்.டி பட்டம் முடித்தவர் நீங்கள். சார்லஸ் ஹைடல் பெர்கரோடு இணைந்து அமெரிக்க விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்ப ஆய்வில் தொட்கி 1954 முதல் இருபதாண்டுகள் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து என்று பணிசெய்த உலகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி நீங்கள். இந்தியாவின் தற்போதைய கல்விச் சூழல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
புதிய கல்விக் கொள்கையே அனைத்து ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களின் அடிப்படையிலும் அமைந்ததுதான். அது அடிப்படை அறிவியலுக்கு எதிரானது. இனி நம் நாட்டுக் குழந்தைகள் எதைக் கல்வியாகக் கற்க வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்யும். பள்ளிக் கல்வியில் இருந்து டார்வின் தூக்கி எறியப்பட்டு விட்டார். இஸ்லாமிய அறிவியலாளர்கள் மட்டுமல்ல, விடுதலை வீரர்களைப் பற்றியும்கூட இனி பாடத்தில் இருக்காது. உயர் கல்வி முற்றிலும் தனியார் மயமாகிறது. ஒருவர் இந்த நாட்டில் இயற்பியல் படிப்பதாக இருந்தால் – அவர் இயற்பியலோடு தொடர்புடைய நேனோவியல், இயற்வேதியியல் எனப் படிக்க வேண்டும். இங்கே அவர்கள் கீதா சாரம், வேத கணிதம் என வைத்து அறிவியலை மூன்றாம் தரமாக்கி விட்டார்கள். வாஜ்பாய் அரசாங்கம் சோதிடத்தை ஒரு பல்கலைக்கழக “அறிவியல்” பாடமாக்கியபோது நாடே வீதியில் இறங்கிப் போராடியது. இன்று எதிர்க் குரல்கள் முடக்கப்படுகின்றன. பேராசிரியர் கல்பர்க்கி, டாக்டர் நரேந்திர தபோல்கர், அறிஞர் கோவிந்த பன்சாரே ஆகியோரைப்போல அவர்கள் கொலை செய்து தங்களது சித்தாந்தத்தைச் சட்டமாக்கிட எதையும் செய்யத் துணிகிறார்கள். நேரடியாக கொலையாளர்களை அடையாளம் காட்டியும் அவர்களுக்கு எந்தத் தண்டனையையும் பெற்றுத் தர இன்று வரை முடியவில்லை. எந்த வளர்ச்சி சமுதாயத்திலும் இந்த நிலையை நீங்கள் பார்க்க முடியாது. இன்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றி மதவாதப் பிற்போக்கு அரசியல் சட்டமாக அதை மாற்றிவிடத் துடிக்கிறார்கள்.
அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்திட முடியாத ஒரு சூழல் நிலவுவதால் பத்மபூஷன் விருதை திருப்பிவிடத் தீர்மானிக்கிறேன் என்று கூறி இருக்கிறீர்களே?
எங்கள் ஐதராபாத் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் தேசிய ஆய்வகம் எனும் அந்தஸ்தே கேள்விக்குறி ஆக்கப்பட்டிருக்கிறது. இங்கு நுண் உயிரி முதல் மூலக்கூறியல் வரை பல்துறை ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த மையத்தை மூலக்கூறு உயிரியல் பிணையச் சிறப்பு மையமாக ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்தம் ஏழு துறைகள் சார்ந்து ஆயிரம் பேர் ஆய்வு செய்து பல சாதனைக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறோம். 1987 முதல் இன்று வரை முன்னூறுக்கும் மேற்பட்ட சர்வதேச உரிமங்களைத் தரும் கண்டுபிடிப்புகளைச் சாதித்து இருக்கிறோம். தொற்றுநோய்கள் பிரிவு, கணிப்பிய உயிரியல் மற்றும் உயிரி தகவலியல் பிரிவில் உலகிலேயே தலைசிறந்த ஆய்வகச் சான்று ஆறுமுறை கிடைத்தது. இன்று எங்கள் நிலை என்ன? நாங்கள் மாதச் சம்பளம் வாங்கி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிறது. எங்களது அடிப்படை ஆய்வுத்துறைக்கான நிதி ஒதுக்கீடு நின்றுபோய் இரண்டு வருடங்களாகிறது. உங்கள் ஆய்வுக்காக நீங்களே நிதி ஆதாரங்களை உருவாக்கிக்கொள்ளலாம் என்கிறார்கள். கடன் பெற்று ஆய்வைத் தொடர அம்பானி அதானியை நாட நிர்பந்திக்கிறார்கள் அமுல் பால் உற்பத்தியின் ஓர் ஆய்வுப் பிரிவாகச் செயல்படுங்கள் என்கிறார்கள். எங்களுக்கான ஆய்வுக் கருவிகளைச் சுவிட்சர்லாந்தில் இருந்தோ, சுவீடனில் இருந்தோ துல்லியத்திற்காக நாங்கள் கேட்டுப் பெற முடியாது. உள்ளூர்ச் சரக்கை வைத்து உள்ளூர் ஆய்வு என மிரட்டி மூன்றாம் தரமான ஆளும் கட்சி ஆதரவு கார்ப்பரேட் ஆய்வுக் கருவிகளை சப்ளை செய்யும். அதற்குப் பெரிய கமிஷன். பதினாறு ஆய்வுத் திட்டங்கள் ஒப்புதல் பெறும் நிலையில் மூன்றாண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் பசுமாடு அதன் பால் முதல் உமிழ்நீர் வரை ஏதாவது ஒன்றை ஆய்வு செய்யுமாறு பிரதமர் அலுவலகமே கடிதம் அனுப்புகிறது. வெட்கக்கேடு.

ஏனைய துறைகளும் அப்படித்தான் உள்ளவை? சரி. பத்மபூஷன் விருதைத் திருப்பினால் அது எதிர்ப்பைப் பதிவு செய்யும் என்று நம்புகிறீர்களா?
ஏனைய துறைகள் இதைவிட மோசம். ஆனால் யாருமே வாயைத் திறக்கவில்லை. உதாரணமாகக் கணிதம் என்பது இந்திய சாதனை வெளியாக இருந்தது. சீனிவாச ராமானுஜன், ஹாரிஷ் சந்திரா, கார்மார்க்கர், ராஜ் சந்திரபோஸ், சேஷாத்ரி மெஹல்னோபிஸ் என்று இவர்கள் யாவருமே அவரவர்களின் கணிதத் துறையில் உலகறிந்த பிரமாண்டங்களை உருவாக்கிக் கொடுத்தவர்கள். உதாரணமாக சி.ஆர்.ராவ் மாட்ரிக்ஸ் அல்ஜிப்ராவிலும் லீனியர் அல்ஜிப்ராவிலும் செய்த பங்களிப்புகள் அழியாப் புகழ் பெற்றவை. இன்று நிலை என்ன? இந்தியாவில் மொத்தம் பன்னிரண்டு சிறப்பான கணித ஆய்வகங்கள் உள்ளன. தற்போது நிதி ஒதுக்கீடு ஏறக்குறைய பூஜ்யம். ஓர் ஆய்வகம் நுண் கணிதத்தில் ஆய்வு செய்தால் அந்தத் துறையில் வேறு ஆய்வகம் ஆய்வு செய்யக்கூடாது என்று உத்திரவு போடுகிறார்கள். அப்படி கணித ஆய்வு செய்ய முடியுமா? கோட்பாட்டு இயற்பியல், வேதி அறிவியல் என்று எதை எடுத்தாலும் ஓர் ஆய்வு மாணவரோ, அறிவியலாளரோ தான் விரும்பும் திசையில் பயணிக்க முடியாது. உங்கள் இறகுகள் வெட்டப்படும். வேறு எப்படி இந்தக் கொடுமையை எதிர்ப்பது? பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்கூட அறிந்திடாத ஒடுக்குமுறை இது. சொந்த நாட்டில் இன்று அறிவியலாளர்கள் குற்றவாளிபோல, கிரிமினல்போல ஊழல்வாதிபோல ஜோடிக்கப்படுவதும் கேட்டால் கொலைகூட செய்து விடுவதும்… அதற்குத்தான் என் விருதுகளை திருப்புகிறேன். இனி இவற்றை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறேன்?
இந்திய அறிவியல் மாநாடு 1964ல் கூட்டப்பட்டபோது அறிஞர் சதீஷ் தவானோடு இணைந்து நியூக்ளிக் அமிலம் தொடர்பாக ஹைதராபாத்தில் உலக – கருத்தரங்கம் நடத்தி பெரிய அளவில் கவனம் பெற்றீர்கள். சமூகத்தில் அறிவியல் சிந்தனைக்கான கழகம் எனும் அமைப்பையும் ஏற்படுத்தினீர்கள். இன்று அதன் தேவை அதிகரித்துள்ளதே?
இந்திய அறிவியில் மாநாடு என்பது உருத்தெரியாமல் அழிக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாக உள்ளது. 1914ல் மலேரியா நோய் விழிப்புணர்வுக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இந்திய அறிவியல் மாநாட்டுக் கழகம். 1963ல் பொன்விழா ஆண்டு இந்திய அறிவியல் மாநாடு டி.எஸ்.கோத்தாரி தலைமையிலும் 1973ல் வைரவிழா ஆண்டு இந்திய அறிவியல் மாநாடு – சூரி பகவந்தம் தலைமையிலும் நடத்தினோம். இந்த இரண்டிலும் எனது பங்களிப்பு முழுமையாக இருந்தது. இன்று அப்படி ஓர் அமைப்பு தேவை இல்லை என்று நரேந்திர மோடி நினைக்கிறார். இந்திய அறிவியல் மாநாடுகள் கடந்த பத்தாண்டுகளாகப் பெரிய கேலிக்கூத்தாகத் திட்டமிட்டு ஆக்கப்பட்டன. இந்தியப் புராதன அறிவியல் என்கிற பெயரில் சமஸ்கிருத வேதகால உளறல்களைத் திணித்து உலகை அதிர்ச்சி அடைய வைத்தார்கள். ‘ஓம்’ ஒலிபற்றி ஆய்வு, புஷ்பக விமானம் (ராமாயணம்) குறித்த தொழில்நுட்பம் என கேலிக்கூத்துகள் வேறு. இந்திய அறிவியல் மாநாடு என்பதற்கு இந்துத்துவ மாற்றாக – இந்தியா சர்வதேச அறிவியல் திருவிழா என்பதை நூறுகோடி ரூபாய் செலவில் சுதேசி அறிவியல் இயக்கம் என ஆர்.எஸ்.எஸ். மயமாக்கி உண்மையான விஞ்ஞானிகளை வெளியற்றிவிட்டு தியானம், யோகக் கலை என சாமியார்களை அறிவியலாளர்களாக்கி விட்டார்கள். ஆண்டுதோறும் ஜனவரியில் 118 ஆண்டுகளாக கூடி வந்த இந்திய அறிவியல் மாநாட்டிற்கு உலக அந்தஸ்து இருந்தது. நோபல் அறிஞர்கள் பியரி கியூரி முதல் வெங்கி ராமகிருஷ்ணன் வரை ஆண்டுதோறும் நம் நாட்டிற்கு வருகை புரிவதும் ஆய்வு முடிவுகளைப் பகிர்வதும் பெரிய அளவில் நமக்கு உதவியது.
ஆனால் அப்படியான ஒரு வாயில் கதவைத் தற்போது அடைத்து விட்டார்கள். இன்று ஆய்வுகளை சாதாரண நிலையில்கூட சி.எஸ்.ஐ.ஆர். இல்லை. விஞ்ஞானிகள் எனும் போர்வையில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் ஊடுருவி விட்டார்கள். ஐ.ஏ.எஸ். எனும் இந்திய ஆட்சித்துறையில் 80 சதவிகிதம் ஆர்.எஸ்.எஸ். ராமர் கோவிலுக்கு விஞ்ஞான முறைப்படி ராமநவமி அன்று ராமர் சிலை மேல் சூரிய ஒளியை எதிரொளித்து புதிய “ராமன்-விளைவு” ஏற்படுத்தப் பலகோடி திட்டம்… இந்திய விமான நிலையங்கள், கப்பல் கட்டுமானம், ரயில்வே என்று தொழில்நுட்பம் அதானி மயமாகிறது. சி.எஸ்.ஐ.ஆர். போன்ற அறிவியல் ஆய்வகங்கள் காவிமயம் ஆகின்றன. இதுதான் யதார்த்த சூழல். பொதுமருத்துவத்துறையை பாபாராம்தேவும், வானியல் ஆய்வுத்துறையை சோதிட வல்லுனர்களான இந்து பிரகாஷ், ஜி.டி.வாசிஷ்டா போன்றவர்களும் பார்த்துக்கொள்வார்கள்.

இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டப் பத்மபூஷன் விருதைத் திருப்பித் தருவது தீர்வா?
இந்தியாவின் நவீன காலக் கோவில்கள் என்று இந்திய ஆய்வு நிறுவனங்களை நேரு அழைத்தார். சிறியதும் பெரியதுமான 240 ஆய்வுக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் சித்தாந்த அடித்தளம் தகர்க்கப்பட்டுவிட்டது. இந்திய அரசியல் சட்டமே பெரிய ஆபத்தில் உள்ளது. சகோதரத்துவம், அறிவியல் விழிப்புணர்வு, சகிப்புத்தன்மை அறிவு வளர்ச்சிக்கான பொதுத் தேடல் தகர்ந்து மத அடிப்படைவாதமும், அறிவியலே என்பது பெரிய பிரச்சாரமாகி நம் அடுத்த சந்ததியை சீர்குலைத்து வருகிறது. அறிவியல்வாதிகள் குறைந்தபட்ச இந்திய- சித்தாந்த ஆதரவாளர்கள் ஏதாவது ஒருமுறையில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டி இருக்கிறதே?
எனக்குத் தெரிந்த எதிர்ப்பு அரசு முன்பு கொடுத்த விருதை திருப்புவது. ஆனால் இறுதித் தீர்வு இந்த மதவாத, அறிவியல் பேரழிவு அரசை தூக்கி எறிந்து பாசிசத்தை வேரோடு பிடுங்கி எறிவதுதான் என்பது யாவரும் அறிந்ததே.