சி.திருவேட்டை

ஒரு சர்வாதிகார (காலனிய) அரசின் ஒடுக்குமுறைச் சட்டம் சனநாயக அரசுக்குப் பொருந்துமா?. சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் பொருந்தாது என்பது தெரியும். அரசியல் சட்டம் சனநாயக விழுமியங்களைக் கொண்டிருந்தாலும் ஆளுவோர் சர்வாதிகாரிகளாக வந்துவிட்டால் சனநாயகத்திற்கு அதோகதிதான். இதைத்தான் 1975ல் இந்திராகாந்தி அவசர நிலையின் போதும், தற்போதைய மோடி ஆட்சியி்லும் நாம் அனுபவிக்கின்றோம். இந்திராகாந்தியின் 21 மாத கால எமர்ஜென்சி எதிர்த்தவர்களை மட்டும் சிறைப்படுத்தியது. எழுத்துரிமையைப் பறித்தது. எதிர் கட்சிகளை ஒடுக்கியது.
திரு எல்.கே. அத்வானி அவர்கள் ஊடகங்களைப் பார்த்து ‘அவர்கள் உங்களை வளையச் சொன்னார்கள். நீங்கள் தவழ்ந்தீர்கள்’என்றார். ஆனால் தவழ்ந்தது பத்திரிகையாளர் மட்டும் தானா..?. சாவர்க்கர் மன்றாடி மன்னிப்பு கடிதம் எழுதி பிரிட்டீசாருக்கு அடிமைச் சேவகம் செய்தது போல் மிசாவில் கைதாகி இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து மன்றாடிய ஆர்எஸ்எஸ் தலைவர் தேவரஸ், சிறையிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டுமெனத் துடித்த முரளிமனோகர் ஜோஷி, நானாஜி தேஷ்முக், உடல் நிலையைக் காரணம் காட்டி வீட்டுச் சிறையில் இருந்த வாஜ்பேய் என்ற விபரங்களை பார்க்கிறபோது ஆர்எஸ்எஸ்காரனின் டிஎன்ஏ யிலேயே மன்னிப்பும், மன்றாடுதலும் பொதிந்திருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. கம்யூனிஸ்டுகள் சிறைக் கூடத்தைப் பயிற்சிப் பட்டறையாக்கினர். தலைமறைவாய்ப் போனவர்கள் சனநாயகத்தை மீட்டெடுக்கும் பணியிலே களம் கண்டனர்.
மாணவர்களில் ஜவஹர் லால் நேரு JNU பல்கலைக்கழக (எஸ்எப்ஐ) மாணவர்களின் வீரஞ்செறிந்த சனநாயகப் போராட்டம் திகைப்பூட்டுகிறது. மாணவர் சேர்க்கை, கற்பித்தல், கற்றல், கருத்துகளின் மோதல், புதியன கண்டடைதல் என ஜேஎன்யூ ஓர் அறிவுச் சுரங்கம். சமூகப் படிநிலைகளில் உள்ள மாணவர்களுக்குச் சம வாய்ப்பளிக்கும் ஆசிரியர் மாணவர் கமிட்டி என்ற ஏற்பாடு மெய்சிலிர்க்க வைக்கிறது. இதைச் சீர்குலைக்க முயற்சித்தது எமர்ஜென்சி. இருப்பினும், இந்திராவின் எமர்ஜென்சி மதச்சார்பற்றது. வேறுபாடு இல்லாமல் அவசர நிலையை எதிர்த்தவர்கள் ஒடுக்கப்பட்டனர். ஆனால், இன்றைய மோடியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி எப்படிப்பட்டது. சனநாயகத்தை முடக்குவது, வேண்டாதவர்களைச் சிறையிலடைப்பது மட்டுமல்ல, பன்முகச் சமூக அமைப்பையே உடைப்பது.
இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்துவர்களை அந்நியர்கள் (எதிரிகள்) என அடையாளப்படுத்தி வெறுப்பு அரசியலை வளர்த்தெடுப்பது. மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பது. மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைத்து பெருமுதலாளிகளுக்குச் (கார்பரேட்) சேவகம் செய்வது. சாதிய, மத மூடத்தனங்களை பரப்பிச் சனாதன (பிராமணீய) மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவது, இதற்கான சித்தாந்தக் கருத்தியல் கட்டமைப்பை விரிவுபடுத்த ஊடகங்களைத் தனது கைப்பிடிக்குள் இறுக்குவது, சட்டப்பூர்வமாகச் சுய அதிகாரம் கொண்ட அமைப்புகளைக் குலைப்பது. முதலாளித்துவச் சுரண்டலின் உள்ளீடாக இருக்கும் ஊழலைச் சட்ட ரீதியாக மாற்றுவது. இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்ற கனவை உருவாக்குவது.
இதற்காகவே, காந்தியைக் கொலை செய்த அதே பாணியில் கோவிந்த் பன்சாரே, கல்புர்க்கி, கவுரிலங்கேஷ் என தொடர்கொலைகள். மத வெறுப்பு, மாட்டிறைச்சி அரசியல், லவ் ஜிகாத், கலாசாரத் தாக்குதல் அரசியல், கும்பல் படுகொலைகள் என மிகப் பெரிய சதியாக ஒரு வலைப் பின்னல் உருவாக்கப் பட்டுள்ளது.

பஞ்சாப் அரசியலில் அகாலிதளத்தை உடைக்கப் பிந்திரன்வாலே என்பவனை உருவாக்கி காலிஸ்தான் வாதத்திற்குத் தூபம் போட்டார் இந்திரா. காலிஸ்தான் முழக்கம் வரம் கொடுத்த இந்திராவின் செவிப்பறையைக் கிழித்தது. சீக்கியர்கள் புனிதமெனக் கருதும் பொற்கோயில் பிந்திரன்வாலேயின் தலைமையிடம் ஆனது. இந்திரா பொற்கோவிலுக்குள் (ஆப்பரேசன் புளூ ஸ்டார்) ராணுவத்தை அனுப்பினார். காங்கிரஸ் நடத்திய விளையிட்டில் தனது மெய்க்காவலர்களால் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் சீக்கிய மக்கள் கொல்லப்பட்டனர். வீடுகள், வாகனங்கள் கொளுத்தப்பட்டன. ஆர்எஸ்எஸ் காரர்களும் காங்கிரஸ் தலைவர்களும் தலைமை தாங்கி இக்கலவரங்களை நடத்தினர். டில்லியில் டியூட்டியிலிருந்த 20 சதவீதம் போலீஸை உடனடியாக நீக்கினர்.
அரசு எந்திரம் கலவரத்தீயைப் பரப்பிக் கொண்டிருந்தது. இக் கலவரத்தின் போது டில்லி சிபிஎம் அலுவலகத்தில் பிரகாஷ் காரத் உள்ளூர் மக்களைத் திரட்டிச் சீக்கிய பகுதிகளுக்குப் பாதுகாப்பு கொடுங்கள் எனத் தனதுத் தோழர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்டுகள் சீக்கியர்களைப் பாதுகாக்க ஓடிக்கொண்டிருந்தனர். ‘இந்துக்கள் இப்பொழுதுதான் இந்துக்களாக நடந்து கொள்கிறார்கள்’ என்று ஆஎஸ்எஸ் பெருமைப் பட்டது. தனது இந்துத்துவ அரசியலுக்கு உதவும் எனக் கருதியது. பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பு என தர்ணா செய்தவர்கள் அத்வானி, வாஜ்பாயி. என எண்ணற்ற சம்பவங்கள்.. இதோடு, 1984 போபால் விச வாயுக் கசிவு.. மக்களும் தொழிலாளர்களும் போராடாத போது சில ஆயிரம் டாலர்களை மிச்சம் பிடிக்க பாதுகாப்பின்றி மக்களைக் கொலை செய்யும் முதலாளித்துவச் சுரண்டல்.. இவர்களுக்குத் துணை போகும் அரசு அமைப்புகள்.. யார் பொறுப்பு என்பதில் சட்டம் சரிவர இல்லாததால் யூனியன் கார்பைட் நிறுவனம் தலைமையகம் உள்ள அமெரிக்காவில் வழக்கு நடத்தப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்காடுதல், இந்தியாவின் சுயசார்பைப் பாதுகாத்திட தொழில் நுட்ப வளர்ச்சிப் பணிகள்.. மின்னணு தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் நிபுணர் குழு உறுப்பினராக 30 ஆண்டுகள் பயணம்.. அறிவுசார் சொத்துரிமைச் சட்டம், தேச விரோத அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம், அறிவியல் இயக்கத்தில் இணைந்து மக்களுக்காகப் பணியாற்றியது, இடையில் தனது காதல், கம்யூனிச இயக்கத்தில் தனது மனைவியின் பணி, கைக் குழந்தையை விட்டு மனைவி இறப்பு என ஓரிரு பக்கங்கள்.. தேசத்தின் சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகள் ஊடக தனது வாழ்க்கையின் அரை நூற்றாண்டுப் போராட்ட பயணங்களை நம் கண் முன்னே காட்சிப்படுத்தி இருக்கிறார் பிரபீர் புர்காய்ஸ்தா.
1975 செப் 25 அன்று ஜேஎன்யூ பல்கலைக்கழகத்திற்குள் மொழியியல் துறை வாயிலில் ஒரு கருப்பு நிறக்காரில் சீருடை அணியாத காவலர்களால் கடத்தப்பட்டு மிசா கைதியாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டது. 2023 அக் 3ல் டில்லி சிறப்புக் காவல் அதிகாரிகளால் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டது என இரண்டு எமர்ஜென்சியின் ஒற்றுமை வேற்றுமையை இப்புத்தகம் பேசுகிறது.. முதலில் எஸ்எப்ஐ தலைவர் திவாரியைக் கைது செய்ய வந்தவர்கள் இவரைக் கைது செய்தனர். இரண்டாவதில் ஓராண்டு வீரமிக்க விவசாயிகள் போராட்டத்தை, தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை, பாலியல் தொல்லை கொடுத்த மத்திய அமைச்சரைக் கண்டித்து விளையாட்டு வீராங்கனைகள் நடத்திய போராட்டத்தைத் தனது நியூஸ் கிளிக் இணைய தளத்தில் வெளியிட்டதற்காக, போராட்டக் களச் செய்தியை உலக கவனத்தை ஈர்த்ததற்காக பிரபீர் மோடியால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டுமே சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் எதிரானது. கார்பரேட் நலன்களுக்கானது. முந்தையதைவிடப் பிந்தையது அரசியல் சாசனத்திற்கும், தேசத்திற்கும் ஆபத்தை விளைவிப்பது. பொதுவாகத் தன் வரலாற்றுப் புத்தகங்கள் எப்பொழுதுமே தனிநபர் துதி பாடும். சாகசங்களைப்பேசும். இப் புத்தகம் இதிலிருந்து விலகி நிற்கிறது. வரலாற்றைத் தொழிலாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் பேசுகிறது.