ஜெயபால் இரத்தினம்
கிராமங்களில் வாழும் எளிய மக்களின் வாழ்வியல் அவலங்களைக் காட்சிப்படுத்தும் எத்தனையோ புனைவுகள் தமிழில் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில், ஆனால் முற்றிலும் மாறுபட்ட படைப்பாக வெளிவந்திருக்கிறது ’பங்குடி’ புதினம். ஒரு ஊரில் வாழும் பலதரப்பட்ட விளிம்புநிலை மக்களை மட்டுமல்லாது ஆட்டுக்குட்டிகள், மலை, ஏரி, நிலம், பயிர்கள், எனக் காட்சிப்படுத்தப்படும் ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும் உயிரோட்டமாக, நம் முன்னே நிழலாட வைக்கும் தனித்துவமான படைப்பு இது.

இப்புதினத்தின் ஆசிரியர், திரு, க.மூர்த்தி. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை என்னும் ஊரில் செயல்பட்டுவரும் அரசுக் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசியராகப் பணியாற்றி வரும் இவர் எழுதிய முதல் புதினம் இது. ‘பங்குடி’ – இது புதினத்தின் தலைப்பு, இதன் பொருள் என்ன? இச்சொல் யாரை அல்லது எதைக் குறிப்பிடுகிறது? இது ஏதேனும் ஒரு குடி(இனம்)சார்ந்த பெயரா? இன்னும் இன்னும் எத்தனையோ கேள்விகள். ஆனால் நூலாசிரியர் எங்குமே இதற்கு விடையளிக்கவில்லை. மாறாகப் பலவித ஊகங்களுக்கு மட்டுமே இடம் அளிக்கிறார். ஆனாலும் கதை முடிவில் நாம் உணர்வது, ‘பங்குடி’ என்பது விளிம்புநிலை மக்களுக்கான ஒரு பொதுக் குறியீட்டுச்சொல் என்பதுவே.
எளிய கதைகள் பலவும் பின்னி ஒற்றைக் கதையாடலில் மய்யமிடாமல் ஒரு கூட்டுக் கதையாடலாக மையமற்று உருவெடுத்திருக்கிறது பங்குடி; தனது முன்னுரையில், சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டுவரும், நூலாக்கம் குறித்த விவரிப்புகளைத் தவிர்த்துவிட்டு, ’ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த தனது பால்ய காலத்தினைப் புதினம் மீட்டுருவாக்கம் செய்து காட்டியிருப்பதாகவும்தான் சந்தித்திருந்த மனிதர்களின் அன்றாடத்தினைப் புனைவுகள் மற்றும் பாத்திரங்கள் வாயிலாக விசாரணை செய்யும் முயற்சியாகவும், ஊடறுத்துப் பார்க்கும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களாகவும் பங்குடிகள் இந்நாவலில் நிறைந்து கிடக்கிறார்கள்’ என்று தனது உள்ளத்து உணர்வுகளை உணர்வுப்பூர்வமான சொல்லாடல்களால் வெளிப்படுத்தி, நம்மை நேரடியாகக் கதைக் களத்திற்குள் இழுத்துச்செல்கிறார் நூலாசிரியர்.
புதினத்தின் மையக்கருவாக அமைந்திருப்பது, நிலமும் அந்நிலத்தில் வாழும் பழங்குடிகளான எளிய மனிதர்களது வாழ்வியல் சூழல்களும்தான். இங்கே நிலம் என்பது நூலாசிரியரின் சொந்த ஊரான எசனை கிராமம். அக்கிராமத்தில் வாழும் அஞ்சலை, சந்தனக்குருவி, பேரிங்கை, பொக்காளி, உடுக்காட்டி அமரக்குஞ்சரம், வீரையன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கதைமாந்தர்களாக உலவுகின்றனர். இந்த மனிதர்கள் மட்டுமல்லாமல், அவ்வூரில் உள்ள உரத்தாமலை, கம்பெருமாமலை, பெரிய ஏரி போன்ற இயற்கை அமைவுகளும் கூட இங்கே கதைமாந்தர்களாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இவை தவிர, பேரிங்கைக்குத் தொடர்புடைய செருநிலா கிராமம் மற்றும் பங்குடி மக்கள் வாழ்வாதாரம் கருதி, புலம்பெயரும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு வடக்கத்தி கிராமம் ஆகியவையும் கதைக் களம்தான்.
புதினத்தில் நகர்த்தப்படும் கதை ஒன்றல்ல, பல. கம்பெருமாமலையின் அடிவாரத்தில் சொற்பநிலம் வைத்திருக்கும் சந்தனக்குருவி – அஞ்சலை குடும்பக் கதை; பங்குடி மக்களின் பல்வேறு வாழ்வியல் சூழல்கள், கம்பெருமாமலையில் உள்ள பாறைகளை உடைத்துத் திருவைகளாக, உரல், அம்மிக் குழவிகளாக வார்த்தெடுக்கும் கைவினைஞர்களான ஒட்டக்குடிகளது கதை; பேரிங்கை என்னும் பெண்ணின் தனிப்பட்ட கதை, என்று கதைகளின் பட்டியல் நீள்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இந்தக்கதைகள் அனைத்தையும் இணைக்கும் மையப்புள்ளி எசனை கிராமம். தவிர, இவை எதிலும் பொருந்தாமல் துருத்திக்கொண்டிருக்கும் ஒரு கதையாகக் கோவில்கட்டும் கதையும் உண்டு. எளிய கதை கள் பலவும் பின்னி ஒரு கூட்டுக் கதையாடலாக மையமற்று உருவெடுத்திருக்கிறது என்ற திரு அழகிய பெரியவனின் அறிமுகக்குறிப்பு இங்கே நினைவுகொள்ளத்தக்கது.
முதல் அத்தியாயம் தனிக் கவனம் பெறுகிறது. அடைமழைக் காலத்தில் கிராம மக்கள், குறிப்பாக எளிய மக்கள் பட்டபாடு சொல்லி முடியாதது. யாரும் யாருக்கும் உதவி செய்ய வாய்ப்பில்லை; அவரவர் பாடே பெரும்பாடாக இருக்கும். எசனைவாழ் பங்குடி மக்கள் பட்ட அடைமழைக்கால இன்னல்களை அழகியலோடும் மண்மணத்தோடும் உணர்வுபூர்வமாக வட்டார வழக்கில் விவரிக்கிறார் நூலாசிரியர். சுமார் முப்பது நாற்பது, ஆண்டுகளுக்கு முன்னர்வரை பெரும்பாலான ஊர்களிலுள்ள மக்கள் ஒவ்வோர் ஆண்டும் அனுபவித்த துயரங்கள் அவை. கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய அவரவர் முன்னோர்கள் கடந்துவந்த வாழ்வியல் சூழல்கள் அவை.
அம்மி, திருவை, ஆட்டுக்கல் போன்ற கற்பொருட்களை உருவாக்கும் கைவினைஞர்களுக்குப் பாறைகளும் அப்பாறைகளைத் தாங்கி நிற்கும் மலைகளும் தானே பெருந்தாய். எசனைவாழ் ஒட்டக்குடிகளின் பெருந்தாயான ‘கம்பெருமாமலை’ மீது அம்மக்கள் கொண்டிருந்த பேரன்பையும் பெருங்காதலையும் அழகியலோடு வெளிப்படுத்துகிறார் நூலாசிரியர். எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்னர் எங்கிருந்தோ புலம்பெயர்ந்து வந்து இந்த மண்ணோடும் மலையோடும் ஒன்றிவிட்ட மக்கள் அவர்கள். கற்பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்து அதன்மூலம் தங்கள் வயிற்றுப்பாட்டை நிறைவு செய்துகொள்ளும் எளிய மக்கள் அவர்கள். மூப்பாடியாய் முன்நின்று இவர்களை வழிநடத்துபவன் வீரையன். அவர்கள் கம்பெருமாமலையிலுள்ள காட்டுத் திருக்கையம்மனுக்கு ஆண்டுதோறும். கைப்பிள்ளைக்காரிகளின் தாய்ப்பால் படையலுடன் விழா எடுக்கின்றர். எசனையில் வாழ்ந்துவரும் எளிய பங்குடி மக்களில் ஒருவன் சந்தனக்குருவி. இவனது மனைவி அஞ்சலை. கம்பெருமாமலையின் அடிவாரத்தில் இவர்களுக்கென்று சொற்ப நிலம் உள்ளது. அவற்றிலிருந்து வரும் வெள்ளாமைதான் இவர்களது வாழ்வாதாரம். அது கைக்கும் வாய்க்கும் மட்டுமே போதுமானதாக இருந்தது.

நிலமோ, மலையோ, பாறைகளோ அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டவர்களுக்கு மட்டும்தான் அவை தாய், கடவுள் எல்லாம். ஆனால், மற்றவர்களுக்கு அவை இயற்கை அமைவுகள் அவ்வளவுதான். திடீரென ஒருநாள், எங்கோ உள்ள ஒரு வடக்கத்தி ஊரில் கோவில் கட்டுவதற்கான கற்கள் தேவைகளுக்காக உரத்தாமலை வடக்கத்தி ஆட்களது கைகளுக்கு மாறுகிறது. உள்ளூரில் செல்வாக்குச் செலுத்தும் மனுகோபால் என்பவன் வடக்கத்தி ஆட்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்துப் பலன்பெறுகிறான். ஒட்டக்குடிகள் மலையில் ஏறவும் பாறைகளைப் பிளக்கவும் தடுக்கப்படுகிறார்கள். அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் தடைபட்டுப் போகிறது. செய்வதறியாது திகைத்து நிற்கும் அம்மக்களின் கூக்குரல்களும் புலம்பலும் அழுகையும் யார் மனத்தையும் கரைக்கவில்லை. நிராதரவாக நிற்கிறார்கள்.
பெரும் இயந்திரங்கள் மூலம் பாறைகள் உடைக்கப்பட்டு வாகனங்கள் மூலமாக அவை தொடர்ந்து எடுத்துச்செல்லப்படுகின்றன. பாறை உடைக்கும் பணிகளுக்காக மலையடிவாரத்தில் உள்ள சந்தனக்குருவியின் நிலம் உட்பட பங்குடிகளது நிலமும் ஆக்கிரமிப்புக்குள்ளாகிறது. அதனால் எசனையில் வாழும் பங்குடி மக்கள் பலரின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது. மனுகோபாலையும் வடக்கத்திக்காரர்களையும் எதிர்த்து யாரும் எதுவும் செய்யமுடியாத, பேச முடியாத நிலை.
மலையிலிருந்து உடைக்கப்பட்ட பாறைகளையும் கற்களையும் ஏற்றிச்செல்லும் வாகனங்கள்கூட உள்ளூர் மக்களுக்குப் பலவித பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. பால்வாடியில் படிக்கும் ஒரு சிறுமி இந்த வாகனத்தால் இடிபட்டு இறந்ததுகூட எந்தக் கல்மனதையும் கரைக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடு என்ற பெயரில் ஒட்டக்குடிகள் உள்ளிட்ட பங்குடி மக்கள் கோவில் கட்டும் ஊருக்குக் கூலிவேலைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மலையில் அமைந்த பாறைகளும், மலை சார்ந்து ஆனால் சுதந்திரமாக வாழந்த எளிய மக்களும் ஒருசேர எங்கோ ஒரு வடக்கத்தி கிராமத்திற்குப் புலம் பெயர்க்கப்பட்டனர். அங்கே அவர்கள், அந்த மக்கள் பட்ட துயரம் சொல்லி மாளாதது.அவர்களது கூலிகூடச் சுரண்டப்பட்டது.
செருநிலா என்ற ஊரில் கணவனுடனும் ஐந்து வயது மகனுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த பேரிங்கை என்ற பெண்ணின் வாழ்வில் திடீரெனப் புயல் வீசுகிறது. கணவன் நீரில் மூழ்கி இறந்துவிட… தனித்துவிடப்படும் அவள், தனது மாமியாரால் வீட்டைவிட்டுத் துரத்தப்படுகிறாள். நிர்க்கதியாய் நின்ற அவளை எசனைக்கு அழைத்து வந்த உடுக்காட்டி அமரகுஞ்சம், மனைவியைப் பிரிந்துவிட்ட தனது தம்பியான பொக்காளி என்பவனுடன் சேர்த்து வாழ வைக்கிறான். தெருமதனிகள் இளக்காரமாகப் பேசுகிறார்கள். அவர்களுடன் சண்டை கட்டுகிறாள். பொக்காளியால் அவளது உடல்தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. அதனால் அவனுடனும் சண்டை கட்டுகிறாள். மதனிகளுடனும் பொக்காளியுடனும் கூக்குரை என்பது தினப்படி நியதியானது. ஒரு கட்டத்தில் அவ்வூருக்கு வரும் மிளகாய் வியாபாரியுடன் கூடத்தொடங்குகிறாள். தனக்கு எதிரான விமர்சனங்களைப் புறந்தள்ளுகிறாள். அவளை அறுத்துக்கட்டுவதற்காகக் கூடும் ஊர்ப் பஞ்சாயத்தை தைரியமாக எதிர்த்து நின்று பஞ்சாயத்தார்களை நிலைகுலைய வைக்கிறாள்.
இயற்கையாய் அமைந்த தனது தேவையைப் பெற நியாயமான வழிகளில் முயன்றும், போராடியும் பெறமுடியாத நிலையில், மனித மனம், திருமணம், கற்பு எனும் சமூகச் சட்டகங்களை மீறுவது இயல்பானது. இதில் ஆண், பெண் என்ற பால் பாகுபாடு எதுவும் இல்லை. ஆனால் சமூகத்திற்கு அந்தப் பார்வையும் பாகுபாடும் இருக்கிறதே. தன்பாலுள்ள நியாயத்தைக்கூறிச் சமூகத்தை நோக்கிக் கேள்வி எழுப்பும் பெண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? அப்படி ஒரு கேள்வி எழுப்பும் பெண்ணாக வாசகர்கள் முன்னே வருகிறாள் பேரிங்கை. அவளது வாழ்வும், அவள் பாலிருக்கும் நியாயங்களும் அவள் மீதான பரிவை நமக்குள் கடத்தி விடுகின்றன. நாம் சிலைகளாய்ச் சமைந்து விடுகிறோம்.
பேரிங்கை ஓர் ஆழமான பாத்திரப்படைப்பு. ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அமைந்திருப்பதுடன் ஒவ்வோர் உரையாடலும் தனித்துவமான மண்வாசனையுடன் கூடிய இயல்பான சொற்களால் நிரம்பியிருப்பதும் இப்படைப்பிற்குப் பெரிதும் வலு சேர்க்கின்றன. ஆடு வளர்ப்பின் நுணுக்கங்கள் பல இடங்களிலும் பரவி நிற்கின்றன. வாய்த்தகராறு என்றால் ‘கூக்கரை’, வாய்த்தகராறு சற்று நீண்டு சிறு கைகலப்பாக மாறினால் அது ‘கிட்டுமாறு’என்று சண்டைகளை அவற்றின் நீட்சிக்கேற்ப வகைப்படுத்தப்படும் பாங்கு சிறப்பு. ஊர்ப் பஞ்சாயத்துகளும், தெருச்சண்டைகளும், சண்டைகளில் வெளிப்படும் வசவுகளும் புலம்பல்களும் வட்டார வழக்கில் அச்சு அசலாக அப்படியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அர்த்தமற்ற சண்டைகளென்றாலும், பஞ்சாயத்துகளென்றாலும் அழகிய விவரணையில் அந்தக் காட்சிகள் நம்மைப் பெரிதும் ஈர்க்கின்றன. திருவிழாக்கள், அவற்றின் சடங்குகள், அப்போது நடத்தப்படும் தெருக் கூத்துக்கள் அனைத்தும் உயிரோட்டமாகவும் அழகியலோடும் நம் கண்முன்னே விரிகின்றன.
பாத்திரங்களின் உரையாடல்களில் எசனை உள்ளிட்ட ஊர்களின் மண்ணுக்கே உரிய தனித்துவமான வட்டார வழக்குகளும் விடுகதைகளும் பழமொழிகளும் இயல்பாக இடம்பெற்று நம்மைக் காட்சிகளுடன் ஒன்றவைக்கின்றன. புதினத்தின் கதையமைப்பிலும், நூல் கட்டமைப்பிலும் சில முரண்பாடுகள் எட்டிப் பார்க்கின்றன. ஆனாலும் வலுவான காட்சியமைப்புகளும் உணர்வுப்பூர்வமான உரையாடல்களும் வாசகனது கவனத்தைத் திசை திருப்பவில்லை. வட்டார வழக்குகளுடன் கூடிய உயிரோட்டமான விவரணைகளே இப்புதினத்தின் பலம். அசல் கிராமத்தின் வலியும், நிதர்சனமும் பெருங்கதையாய் நம் முன்னே விரிகிறது. காத்திரமான படைப்பு.
கதைக்களமான எசனை கிராமத்து மூப்பாடியாக முன்நின்று அங்கு வாழ்ந்த மற்றும் வாழும் விளிம்புநிலை மக்களது வலிமிகுந்த வாழ்வியல் சூழல்களை அவரவர்களது கூற்றாகவே நம்முடன் உரையாட வைப்பதில் நூலாசிரியர். வெற்றி கண்டுள்ளார். மேலும் பல காத்திரமான படைப்புகளை அளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் அவரை வாழ்த்துவோம்.