கமலாலயன்
தென் தமிழ் நாட்டின் மலைப்பகுதியில், ஒரு சிறிய நகரில், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதி விட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் அந்த இளைஞர். தந்தை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒரு முன்னணிச் செயல்வீரர். அடிக்கடி போராட்டம், மறியல் என்று சிறைக்குப் போய்விடுவார். குடும்ப பாரத்தை அம்மாதான் சுமந்தாக வேண்டும். ஒரு சிறிய பெட்டிக்கடை. வீட்டு முன்பாகப் பணியாரமும், இட்லியும் சுட்டு விற்பார் அம்மா. அப்பா அந்த இளைஞரைச் சட்டம் படிக்க வைத்து வக்கீல் ஆக்கி விட வேண்டு மென்று திட்டம் வைத்திருந்தார். அதன் மூலம், கட்சிக்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தன்னுடைய மகன் உதவிகரமாயிருப்பார் என்பது அப்பாவின் எண்ணம்.
மகனுக்கும் அப்போது வேறு எதுவும் ஐடியா இருக்கவில்லை. அந்தச் சமயத்தில்தான் ஆசிரியை தேன்மொழி அந்த இளைஞரிடம் அவர் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறியமைக்குப் பாராட்டுத் தெரிவித்த பின்,” அடுத்து என்ன செய்யப்போகிறாய் ?” என்று கேட்டிருக்கிறார். இவர் தன் அப்பாவின் வக்கீல் கனவைச் சொல்லித் தனக்கு உண்மையில் என்ன செய்வதென்று ஒரு யோசனையும் இல்லை என்பதைத் தெரிவித்தார். ஆசிரியை கொஞ்சமும் யோசிக்காமல்,” இல்லைப்பா. நீ நல்ல மார்க்ஸ் வாங்கியிருக்க. பேசாம டீச்சர் ட்ரெய்னிங்குக்கு அப்ளை பண்ணு. ஒனக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். ட்ரெய்னிங் முடிச்சவுடனே ஒரு வேலை கெடைச்சிரும். ஒன் குடும்பமும் நல்ல நிலைக்கு வந்துரும், நீயும் நல்லா இருப்ப” என்று அறிவுறுத்தினார்.

அந்த இளைஞர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கு விண்ணப்பித்து விட்டார். அப்போதெல்லாம் ஆசிரியப் பயிற்சியில் இடம் கிடைக்கப் பணம் நிறையக் கொடுக்க வேண்டியிருந்ததாம். அவ்வளவு பணத்துக்கு நாமெங்கே போவது என்று அவரின் மனம் ஏங்கித் தவித்ததாம். நல்ல வேளையாக அந்த ஆண்டில்தான் முதன் முறையாகக் கலந்தாய்வு மூலம் பயிற்சி நிலையங்களில் இடம் கொடுக்கும் முறை நடைமுறைக்கு வந்திருக்கிறது. இவர் கலந்தாய்வுக்குப் போன போது, அங்கே நேர்காணலில் இவரிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார் அதிகாரி ஒருவர்: “ஏப்பா, இந்த ட்ரெய்னிங்குக்கு நீ எதுக்கு அப்ளை பண்ணின?” இவர் மிகவும் வெள்ளந்தியான தொனியில் உண்மையைச் சொன்னாராம் : “அது வந்து சார், இந்த ட்ரெய்னிங்க முடிச்சா ஒடனே வேலை கிடைக்கும்னு எங்க டீச்சர் சொன்னாங்க சார்.அதுனாலதான் இங்க வந்தேன். “இடம் கிடைத்து விட்டது.
பயிற்சி முடிந்து சில மாதங்களிலேயே வேலையும் கிடைத்து விட்டது. பத்தொன்பது வயதில் ஆசிரியர் வேலை. குழந்தைகளை எப்படிக் கையாள்வது என்பதைப் பொறுத்த வரை மிகவும் சாதாரணமான, பொதுப்புத்தியில் அன்று என்ன ஆழமாக வேரூன்றியிருந்ததோ அந்த எண்ணம்தான் இவருக்கும் இருந்தி ருக்கிறது. நல்ல வேளையாகத் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் தொடர்பு கிடைத்து, வாசிக்கும் பழக்கம் விரிவடைந்ததில் அவருடைய அணுகுமுறையே முற்றிலும் மாறிப்போயிருக்கிறது.

இன்றைக்குக் குழந்தைகளோடு தானும் ஒரு குழந்தையாக மாறி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று ஒரே அமர்க்களம் செய்து கொண்டிருக்கிறார் அந்த இளைஞர். அவர்- தேனி சுந்தர். டுஜக் டுஜக், மாணவர் மனசு உள்பட ஆறு நூல்களின் ஆசிரியர். பட்டறிவும்,படிப்பறிவும் இணைந்த ஒரு முதிர்ச்சியும், குழந்தைகளின் உலகில் தன்னையும் கரைத்துக் கொண்டு அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதென்பது, தானும் அவர்களோடு இணைந்து கற்றுக் கொள்வது தான் என்ற தெளிவும் அவரை இயக்க, அவரும் தொடர்ந்து இயங்கி வருகிறார். இந்து தமிழ் திசை, புதிய ஆசிரியன் போன்ற இதழ்களில் தன்னுடைய கற்பித்தல் சார்ந்த அனுபவங்களைப் பதிவு செய்கிறார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் என்பதால் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயிலும் பிஞ்சுக் குழந்தைகளின் நடுவே. அவர்களின் மன உலகம் சார்ந்தும், கற்றல் வெளிப்பாடுகள் சார்ந்தும் ஏராளமான அனுபவங்களை அவரால் பெற முடிகிறது. அவற்றை அசை போட்டு, உள்வாங்கித் தான் பெற்ற இன்பத்தை, – துன்பத்தையும் கூட – மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
அவருக்கென்று ஒரு தனித்தன்மை யுள்ள மொழி வாய்த்திருக்கிறது. அது, கிட்டத்தட்டக் குழந்தைகளின் மொழியே தான் என்று சொன்னால், மிகையாகி விடாது. அவருடைய கட்டுரைகள் அனைத்துமே பெரும்பாலும் மிகச் சிறியவை. இரண்டரைப் பக்கங்கள், மூன்று பக்கங்களுக்கு மேல் அவை போவதில்லை. பெரிய கோட்பாட்டு ரீதியான விளக்கங்க ளுக்குள்ளோ. உளவியல் ரீதியான அலசல்களுக்குள்ளோ போய் விடாமல் அனுபவங்களை அவற்றின் உண்மைத்தன்மையுடன் பதிவு செய்கிறார். அவருடைய மொழி அதற்குப் பெரும் துணையாய் அமைந்து வாசிப்பவர்களின் மனங்களைச் சுண்டி இழுக்கிறது. பேரா.ச.மாடசாமி அவர்கள் குறிப்பிடுவது போல, “அது நகைச் சுவை நிறைந்த மொழி, உணர்ச்சி ததும்பும் மொழி, பெருமையும் பெருமிதமுமாய் மனதில் நிறைந்த (நிறையும்) மொழி.“
சமீபத்தில் வெளியாகியிருக்கும் அவருடைய மாணவர் மனசு நூல், ஒரு சிறிய புத்தகம். 72 பக்கங்களில், பதினாறு கட்டுரைகள். அணிந்துரை வழங்கிச் சிறப்பித்திருக்கிறார் பேரா.ச.மாடசாமி. தேனி. சுந்தரைப் போன்றே ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுத் தன் அனுபவங்களை நூல்களாக்கிக் கொண்டிருக்கும் கல்வியாளரும், எழுத்தா ளருமான இரா.எட்வின் தன் வாசிப்பு அனுபவத்தை ஒரு சிறு முன்னுரை வடிவில் வழங்கியுள்ளார். இரண்டு ஜாம்பவான்கள் இந்த நூல் பற்றிச் சொல்லியிருப்பதற்கு மேல், நாம் என்ன சொல்லி விட முடியும் என்ற தயக்கத்துடன்தான் இந்தக் கட்டுரையைத் தொடங்கினேன்.

‘டுஜக், டுஜக்‘ என்ற வித்தியாசமான தலைப்பில் சுந்தர் படைத்த ஒரு நூல்,மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த நூலைப்பற்றி வெளியான அறிமுகங்கள், வாசிப்பு அனுபவங்கள், விமரிசனங்களையெல்லாம் தொகுத்து, அதுவே ஒரு தனி நூலாகும் அளவுக்கு அது பெற்ற வரவேற்பு அமைந்தது. தமிழில், மிக அரிதாகவே இப்படி ஒரு புத்தகம் வரவேற்புப் பெறுகிறது. சுந்தரின் இல்லத்தில், அவருடைய மகனும் மகளும் செய்யும் சேட்டைகள், குறும்புகள், அப்பாவுடன் – அம்மாவுடன் – ஏனையோருடன் நிகழ்த்தும் உரையாடல்கள், மொபைல் போனில் அவர்கள் நிகழ்த்தும் மாயங்கள்- என இந்த நூல் பூராவிலும் குழந்தைமை இழையோடிக் கொண்டிருக்கும்.
அரிய வாசிப்பு அனுபவத்தைத் தந்த நூல் அது. சுந்தரின் வகுப்பறை அனுபவங்களைச் சிறு சிறு கவிதைகளின் வடிவில் மிக இயல்பான வார்த்தைகளில், பெரும்பாலும் தனக்கும், பிள்ளைகளுக்குமான உரையாடல்களின் வடிவில் தொகுத்துத் தந்திருக்கிறார் அவர். இப்படியொரு தொகுப்புக்கு விதை போட்டவர் பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள். அவர்தான் எப்போதோ ஒரு முறை தேனி சுந்தருக்கு அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சலில் பின் வரும் வேண்டுகோளை முன் வைத்திருந்திருக்கிறார்: “வகுப்பறை டயரி எழுதுங்கள். வகுப்பு மலர்ந்திருந்த நேரம்,துவண்டிருந்த நேரம், பிள்ளைகள் கவனித்த பாடம், கவனம் விலக்கிய பாடம், எழுப்பிய கேள்விகள், சொன்ன பதில்கள், வகுப்பறையில் மேம்பட்ட உறவுகள், பதுங்கிக்கிடந்த பாகுபாடுகள்… எல்லா வற்றையும் குறித்து வையுங்கள். உங்கள் பணியையும் சுய விமரிசனத்துடன் மதிப்பிட்டுத் தொடர்ந்து எழுதுங்கள்…” தேனி சுந்தர் எழுதி வந்திருக்கிறார். விளைவு – ‘ஒங்கூட்டு டூணா’ – என்ற சிறிய நூல்.
ஆசிரியர், வழக்கமான பாணியில் உடையணிந்து வராமல், ஜிப்பாவைப் போட்டுக்கொண்டு போயிருந்திருக்கிறார். “ கேவலமா இருக்கு சார். வேற ஆள் மாரி இருக்கீங்க” – என்று சொல்லும் குழந்தைகள்.குழந்தைகளுக்குள் வரும் சண்டைகள், வம்பு வழக்குகள் எல்லாம் எப்படி ஒரே நொடிக்குள் காணாமற் போய் விடுகின்றன என்று ஒரு பதிவு சொல்கிறது. சார் ஒரு நாள் பள்ளிக்கு லீவ் போட்டிருந்ததால் வரவில்லை. மறு நாள் பள்ளிக்கு வரும் சாரிடம், பிள்ளைகள்,” சார், அன்னைக்கு நீங்க வரலைல? அப்பா நாங்க ஜாலியா இருந்தோம்…” என்கிறார்கள். “ ‘அப்டீன்னா சார் இன்னிக்கு வீட்டுக்குப் போயிரட்டுமா ?” என்று கேட்கிறார். பிள்ளைகள் ‘போயிருங்க’ என்று சொல்லவே, தடுமாறி விடுகிறார். பல முறை திரும்பத்திரும்பக் கேட்கிறார். “போயிருங்க சார். போங்க சார்…” என்று சொல்லிக் குழந்தைகள் ஆசிரியரைக் கிட்டத்தட்ட அழ வைத்து விடுகிறார்கள்.

“இந்த நூலை ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் வகுப்பறை நிகழ்வுகளின் பதிவுகள் என்று சொல்வதா, இல்லை, குழந்தைகளின் உளவியலைப் பேசும் கவிதைகள் என்று சொல்வதா… எப்படி வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகலாம். இன்றைய சமகாலத்திற்கு மிகவும் அவசியமான எழுத்து இதுவென்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்“ என்கிறார் இந்து தமிழ் திசை நாளிதழின் முது நிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ்.
தேனி சுந்தரின் மாணவர் மனசு என்ற நூல் கிடைத்தது. கிடைத்த அன்றே படித்தும் விட்டேன். இதற்குக் குழந்தைகளின் மனசு என்று தலைப்பிட்டிருந்தாலும் பொருத்தமாகத்தான் இருந்திருக்கும். தவிரவும், குழந்தை என்றால், பதினெட்டு வயதாகும் வரையில் அனைவரும் குழந்தைகள் என்றுதான் யுனெஸ்கோ வரையறை சொல்லுகிறது…பள்ளியின் கழிவறையில் கோப்பைகள் உடைக்கப்பட்டு, நாசம் செய்யப்பட்ட நிலையில் வாசலில் எல்லாம் மலம் கழிக்கப்பட்டு மிக மோசமான ஒரு காட்சி தெரிகிறது.
யார் இந்த வேலையைச் செய்தது என்ற புலன் விசாரணை நடந்து முடிந்து உண்மைகள் தெரிய வரும் போது அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் புலனாகின்றன. குற்றவாளிகளே விசாரணை அதிகாரிக்கு உதவுவதாக நடித்து, நிரபராதிகளான சிலர் மீது பழி விழம் வகையில் திசை திருப்பி விடுகிறார்கள். இன்றைய நிலையில், குழந்தைகளின் நடுவேயும் எப்படியெல்லாம் சதி செய்கிற மனோபாவம் நிலவுகிறது என்று தெரிய வரும் போது திகைத்துப் போகிறோம்…

சாரே அயிட்டுப்போவுது, பாயசம் சாப்பிட்ட காமராஜர், அடேய் …அடேய் கொஞ்சம் பொறுங்கடா போன்ற பல கட்டுரைகள் குழந்தைகளின் மனங்களையும், மொழிகளையும் சித்தரிக்கும் சிறுகதைகள். வாசித்து முடிக்கையில், தேனி சுந்தர் குழந்தைகளின், மாணவர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் காட்சி நம் மனக்கண்களில் தோன்றுகிறது… கிராமத்துப் பிள்ளையான சுந்தர், படித்து ஆசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டு வந்த பின், பணியாற்றிய இடங்களில் கிடைத்த அனுபவங்களைக் கவித்துவமிக்க நடையில், ஆனால் குழந்தைகளும் படித்து அனுபவிக்கக்கூடிய எளிய மொழியில் பதிவு செய்திருக்கிறார். புத்தகப் பெருங்காட்டிற்குள் அவர் பயணம் செய்வதோடு நின்று விடாமல், நம்மையும் தன்னோடு உலாவ அழைத்துச் செல்கிறார்.
நாமும் போய்த் திரும்பியபின், அசை போடும் போதுதான் தெரிகிறது, எப்படிப்பட்ட ஓர் அரிய வெளியில் அந்தப்பயணம் நிகழ்ந்திருக்கிறதென்ற உண்மை!
