ஜெயபால் இரத்தினம்
எளிய மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள்,ஒன்றும் செய்ய இயலா ஏதிலிகளாய் ஒடுங்கும் குரலற்றவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடங்கள் ஆகியவற்றின் சில துளிகளை, சின்னஞ்சிறிய கதைகளாய்ப் படைத்தளிப்பதன் மூலம், அவர்களின் வலியை, அவர்கள்பால் உள்ள நியாயத்தை வாசகனுக்குள் முழுமையாகக் கடத்திவிட முடியுமா என்ற கேள்விக்கு ஆம் என்ற பதிலை உரத்துக் கூறும் சிறுகதைகள் கவனம் பெறுபவை. அப்படி ஒரு கவனம் ஈர்க்கும் சிறுகதைகளின் தொகுப்புதான்’ ‘குடம்பி’. இந்நூலின் ஆசிரியர் நிழலி.
எளிய மனிதர்களின் குறிப்பாக பெண்களின் துயரங்களை எளிமையாக ஆனால் நுட்பமாக வெளியிடும் ஆற்றல் பெற்ற கவிதாயினி மற்றும் சிறுகதையாளர். இது இவரது நான்காவது படைப்பு. இவரது முந்தைய படைப்புகளான ‘சவுக்காரம்’ என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பும் ‘ஒப்பந்தமிட்டஇரவு’ மற்றும் ‘பரிதியாழ்’ என்ற தலைப்பிலான கவிதைத் தொகுப்புகள், வாசகர்களின் பெரும் வரவேற்பையும் சில அமைப்புகளின் பரிசுகளையும் பெற்றவை.

“வாசிப்பின் வழியே கிராமத்து வாழ்வை நம்முள் கடத்திவிடுகிற வல்லமையைப் பெரும்பாலான கதைகள் பெற்றிருக்கின்றன – எளிய இருப்பின் பாத்திரங்களைத்தான் – ஒவ்வொரு கதையும் பேசுகிறது. சக உயிர்களின் நேசமே தொகுப்பின் மையமாக இருக்கிறது. நிழலியின் பாத்திரங்கள் வாழ்வை எதிர்கொள்ளும் அதே நேரம் சகஉயிர்களுக்காக வாழவும் தயாராக இருக்கின்றன“ – என்ற கவிஜி அவர்களின், நீண்ட உயிரோட்டமான அணிந்துரையோடும், பெண்மையின் உயர்வுகளைக் கொண்டாடும் கதைகள் சிலவும், அந்த உயர்வென்னும் சுடர் நடுவில் இருளாய் ஒளிந்திருக்கும் துயரங்கள், அவமானங்கள், சிறுமைப்படுத்தும் வலிகள், தோள்களில் தாங்கி நிற்கும் சுமைகள் பற்றிய படைப்பாளியின் கவலையை அக்கறையுடன் வெளிப்படுத்துகின்றன என்றுரைக்கும் ரவிவர்மன் அவர்களது வாழ்த்துரையுடனும், எழுதித்தீராத வாழ்வின் கதையென இயம்பும் அம்சப்பிரியா அவர்களது வாழ்த்துரையுடனும், பூத்துக்காய்த்துச் செழித்திருக்கும் அத்துணை கதைகளுக்குள்ளும் நின்று நிதானித்துக் கடந்து செல்லக் காரணமொன்று ஒளிந்திருப்பதாகக் கருதுகிறேன் என்ற நூலாசிரியரின் தன்னுரையுடனும் துவங்குகிறது நூல்.
“வலியின் பேரின்பம்” முதலாக, “பிறந்தநாள்” முடிவாக, மொத்தம் இருபத்து நான்கு தலைப்புகளில் இருபத்து நான்கு சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள், ஆறு சிறுகதைகள் மூன்றாம் பாலினத்தவர் குறித்துப் பேசுகின்றன. உடல் உருமாற்றம் அடையும் நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள், மானஅவமானங்களுக்குப் பயந்த அப்பாக்களின் அடக்குமுறை, அம்மாக்களின் பாசப்போராட்டம் ஆகியவற்றை நுட்பமாகவும் எதார்த்தமாகவும் வெளிப்படுத்துகிறார் நூலாசிரியர்.
தங்களால் அருவருப்பாகப் பார்க்கப்பட்ட ஒரு புழு குடம்பி(கூட்டுப்புழு)யாக முடங்கி, வண்ணத்துப்பூச்சியாய் உருமாற்றம் பெற்றுக் கூடுடைத்து வெளியேறிப் பறப்பதை அழகியலோடு ரசிக்கும் மனிதர்கள், தங்கள் குழந்தைகள் இயற்கையாய்ப் பெறும் உருமாற்றத்தை வெறுத்து ஒதுக்கும் துயரத்தை வலியோடு விவரிக்கிறார். பசியால் அழும் தனது சகோதரி குழந்தைக்குப் பால் கொடுக்க முனையும் திருநங்கையான மகதி, சகோதரியின் மாமியாரின் தவறான புரிதலால் எதிர்கொள்ளும் பிரச்சனையை ஒரு கதை பேசுகிறது.
அரசு மருத்துவமனையில் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொண்ட பெண்களின் நிலையை இரண்டு கதைகள் வெவ்வேறு கோணங்களில் பேசுகின்றன. குழந்தை பெற்றெடுத்த தாயின் மார்புகளில் இயற்கையாகப் பால் சுரக்கவில்லை. பசியால் வீறிட்டுக்கதறும் தன் குழந்தைக்குப் பால் கொடுக்கமுடியாமல் அவள் படும் வேதனையையும், பக்கத்துப் படுக்கைக்காரிகளின் மனிதாபிமானத்தையும் எளிமையான உரையாடல்கள் மூலம், அவர்களை நமக்கு நெருக்கமானவர்களாக உணரச்செய்கிறது ஒரு கதை.
ஆண் குழந்தை வேண்டும் என்ற கணவனின் வற்புறுத்தலுக்காக, பிள்ளை பெறும் இயந்திரமாக மாறித் தொடர்ந்து ஆறு பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறாள் ஒரு பெண். முந்தைய பிரசவத்தின்போதே அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்கள் வற்புறுத்தியும் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள மறுத்துவிட்ட அவள், மீண்டும் சூலுற்று, குழந்தை பிறக்கப்போகும் தருவாயில் யாருடைய துணையும் இன்றித் தன்னந்தனியாக அரசு மருத்துவமனைக்கு வந்து, பிரசவத்திற்காகச் சேர்கிறாள்.
அவளுக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறக்கிறது. மீண்டும் ஒருமுறை குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கான அறிவுரைகள் வழங்கப்படுவதும் அவற்றை அவள் புறக்கணிப்பதும் நடந்தேறுகிறது. இக்கதைகள் அரசு மருத்துவமனைகளை நம்பிச் செல்லும் எளிய மக்களின் துயரங்களை மட்டும் அல்லாது அரசு மருத்துவமனைகள் மனிதாபிமானங்களின் இருப்பிடமாகவும் செயல்படுகின்றன என்பதையும் சேர்த்தே பேசுகின்றன.
பெண்கள் எல்லாக்காலத்திலும் ஆண்களைச் சார்ந்து வாழ்பவர்களாகவும், தமக்கென தனித்துவம் எதுவுமில்லாமலும், இன்னாருடையவள், அதாவது இன்னாரது மகள், மனைவி. அம்மா என ஆண்களுடனான உறவுமுறையிலான அடையாளத்தை மட்டுமே சுமப்பவர்களாகவும், வாழும் சமூக அவலத்தை மூன்று கதைகள் பேசுகின்றன. இன்னும் இரண்டு கதைகள், பெண்களின் மார்பகத்தைப் பற்றி, ஆனால் விரசமின்றிப் பேசுகின்றன. நூற்றண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் நடைபெற்ற தோள்சீலைக் கலகத்தின் துவக்கப்புள்ளியாக அமைந்திருந்தது நங்கேலி என்ற பெண் செய்த தியாகம்தான். அந்தத் தியாக நிகழ்வைப் புனைவு எதுவுமின்றி அப்படியே நம் கண் முன்னே கொண்டு வருகிறார், நூலாசிரியர், நங்கேலி என்ற தலைப்பிலான கதையில்.
ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து விடுபடுவதற்காகப் புனித நூல்களில் புதைந்துகொள்ள விரும்பும் மார்பகங்கள் பற்றியது ஒரு கதை. கோவிலில் சாமி கும்பிட நீண்ட நடைப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக ஒரு தாயும் மகனும் மேற்கொள்ளும் தர்க்கமாக அமைந்த ஒரு கதை, கோவிலுக்கு நடைப்பயணம் மேற்கொள்வதில் உள்ள எதார்த்தையும், அதிலுள்ள உளவியலையும் ஆழமாகப் பேசுகிறது. மூன்று பிள்ளைகளைப் பெற்றபின்பு கணவனையும், கல்யாண வயதில் நிற்கும் ஒரு மகள் மற்றும் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு யாருடனோ ஓடிப் போன பொறுப்பற்ற தாய், பிள்ளகளைப் பற்றிக் கவலைப்படாமல், மானஅவமானங்களுக்குப் பயந்து தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோகும் அப்பா, ஆகிய இழப்புக்களால் சிறு குழந்தைகளுடன் அனாதையாக நிற்கும், இளம் பெண், இவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு முதிர்கன்னி ஆகியவர்களைக் காட்சிப்படுத்துகிறது ஒரு கதை.

பெண்கள் தங்கள் இறுதிக்காலத்தில் சந்திக்கும் துயரங்களை மூன்று கதைகள் பேசுகின்றன. மகன்கள் பேரக்குழந்தை ஆகியோருடன் நன்றாக வாழ்ந்து வரும் ஒரு பெண், தனது இறுதிக் காலங்களில் தன் வீட்டுத் திண்ணையையே தனது இருப்பிடமாகக்கொண்டு, அத்திண்ணையில் அமர்ந்தவாறு தெம்மாங்குப் பாடல்களைப் பாடிப் பாடியே மகிழ்ச்சியுடன் காலம் கழிக்கும் அவள், வீட்டைப் புதுப்பிப்பதற்காகத் திண்ணையை இடிக்க முயற்சிக்கும் மகன்களை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்துவிடுகிறாள். ஆனால், அவள் இறந்த மறுநாளே திண்ணை இடிக்கப்பட்டுச் சுவர் எழுப்பப்படுவதை ஒரு கதை பேசுகிறது. தன் கணவன் இறந்தபின் தனது மகன் மற்றும் சகோதரர்கள் தன்னைப் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், வாய்ப்பு வந்தும் மறுமணம் செய்து கொள்ளாமல் இருந்துவிட்டு பின்னர், அவர்களால் கைவிடப்பட்ட நிலையில் இறுதிக் காலத்தில் யாருமற்ற அனாதையாய் வாழ்ந்து அனாதையாகவே இறந்து கிடந்த ஒரு பெண்ணின் அவலத்தை மற்றொரு கதை பேசுகிறது.
தினமும் அடித்துத் துன்புறுத்தும் கணவனின் அடாவடிகளைப் பொறுத்துக் கொண்டு, ஏதோ அடி உதை என்பது அன்றாட வாழ்வின் தவிர்க்கமுடியாத ஓர் அங்கம் என்பதுபோல எந்த எதிர்ப்பையும் அல்லது வலியையும் தனது பிள்ளைகளிடம்கூடக் காட்டிக்கொள்ளமல் வாழ்கிறாள் ஒரு தாய்., பிள்ளைகள் வளர்ந்து வேலை மற்றும் வாழ்வாதாரம் கருதி வெளியூர்கள் சென்று அங்கேயே நிலைகொண்டுவிட்ட பின்பும், தினசரி அடி உதைகளை எதிர்கொண்டு வருகிறாள் அவள். பிள்ளைகளைப்பார்க்க விரும்பி அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைக்கிறாள். அவர்கள் மறுக்கவே, தெரிந்தவரை அழைத்துப் பிள்ளைகளிடம் பேசச் சொல்கிறாள். அவரும் பேசுகிறார். அவருக்குக் கிடைத்த பதில் “ அடி உதை என்ன புதுசா? எப்போதும் நடப்பதுதானே, இது எங்களை அங்கே வரவழைக்க நடத்தப்படும் நாடகம், நாங்கள் அங்கே வரமாட்டோம், எதற்காக வரவேண்டும்” என்று பேசி தொலைபேசி இணைப்புத் துண்டிக்கப்படுவதாக ஒரு கதை முடிவடைகிறது.
வேலைக்குச் செல்வதற்காக அன்றாடம் பேருந்தில் பயணம் செல்லும் ஒரு பெண், கூட்ட நெரிசலில் சிக்கித்தவிக்கும்போது, ஏற்படும் அவளின் மனவோட்டத்தை ஒரு கதை பேசுகிறது. சாதியக் கட்டமைப்பில் சிக்குண்டு பெருந் துயரங்களைச் சுமக்கும் துணி துவைக்கும் பெண்தொழிலாளி ஒருவர் படும்பாட்டை மற்றொரு கதை பேசுகிறது. ஒரு பெருமழைக்கால வெள்ளம் மற்றும் பண்டிகை ஆகியவற்றின் காரணமாகப் பள்ளி விடுதியிலிருந்து அனைவரும் வெளியேறும்போது, சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தில் சிக்கித் தவித்து நின்ற ஒரு சிறுமியின் அவலத்தையும் பின்னர் அவளுக்குக் கிடைத்த ஆறுதலையும் பற்றி ஒரு கதை பேசுகிறது.
இன்றைய அவசர யுகத்தில், வாழ்வியல் சூழல்கள் முற்றிலும் மாறியுள்ளன. இந்த மாறுதல்களை ஏற்க மறுக்கும் மூத்த தலைமுறையின் குமுறல்களை ‘நகர்வு’ என்னும் கதை உரையாடுகிறது. இப்படி ஒவ்வொரு கதையும், நாம் அன்றாடம் சந்திக்கும் எதார்த்தத்தை முன்வைத்து வாசகனுடன் உணர்வுப்பூர்வமாக உரையாடல்கள் நிகழ்த்துகின்றன ஒவ்வொரு கதைக்குமான தலைப்பும் பாத்திரங்களுக்கான பெயரமைவும் கூட தனித்துவமாக உள்ளது. சில கதாபாத்திரங்களுக்குப் பெயர்கூட இல்லை. பொதுவாக அவன், அவள் அவ்வளவே…
படிக்கத் துவங்கிய உடனேயே வாசகனைத் தன்னுள் இழுத்துக்கொள்ளும் வசீகரநடை,. அவனைப் பாத்திரங்களுடன் ஒன்ற வைப்பதுடன், அவற்றின் இன்ப துன்பங்களில் தங்களையும் பொருத்திப் பார்க்கத் தூண்டும் அளவுக்கு வீரியம் பெற்றவையாவும் உள்ளன. அவலங்களைப் பேசினாலும் அவற்றிற்காக யார்மீதும் குற்றம் சுமத்தாத கருணையும், வாசகனை யாருக்கு எதிராகவும் தூண்டிவிடாத தாயுள்ளத்தையும், மனித நேயத்தையும் எல்லாக் கதைகளிலும் உணர முடிகிறது. ஒரு தனித்துவமான படைப்பு. மேலும் மேலும் சிறப்பான நூல்களை படைக்க வேண்டுமென நூலாசிரியரை வாழ்த்துவோம்.