நிகழ் அய்க்கண்
இந்நூலில் நிலைக்குமா இந்திய ஜனநாயகம்; சாவித்ரி தேவியை முன்வைத்துப் பாசிசம் மற்றும் சூழலியம் பற்றிச் சில குறிப்புகள்; பேராசிரியர் சிவத்தம்பியும் நவ சிந்தனைகளும்; திரு.வி.க. பார்வையில் பெளத்தம் எனும் நான்கு பிரிவுகளின் கீழ் 26 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

சுதந்திர இந்திய வரலாற்றின் இருண்ட காலமாகக் கருதப்படும் நெருக்கடிநிலையின்
25, 40வது நினைவு தினம் பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும்போதுதான் அமைந்தது. (25.6.75 – 21.3.77) நெருக்கடிநிலை ஒடுக்குமுறைக்கு ஆளான கட்சிகளுள் இன்றைய பா.ஜ.கவின் அன்றைய வடிவமான பாரதிய ஜன சங்கும் அதன் வழிகாட்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸும் முக்கியமானவை. காங்கிரஸைத் தோலுரிப்பதற்குப் பா.ஜ.கவிற்கு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தபோதிலும் எந்தக் கண்டனங்களும் இன்றி அதனைத் தாண்டிச்சென்றது. இதற்குக்காரணம், நெருக்கடிநிலை என ஏதும் இல்லாமலேயே பா.ஜ.கவினர் இன்று நெருக்கடி நிலைக்குரிய அதிகாரங்களையெல்லாம் செயல்படுத்திக்கொண்டிருப்பதுதான்.
நெருக்கடி நிலை அறிவிப்பின் மூலம் இந்திரா இந்த நாட்டிற்கு சொன்ன சேதி, “அரசியல் சட்டத்தைக்காட்டிலும் அரசு புனிதமானது”என்பதுதான். இந்த அம்சத்தில் பா.ஜ.கவும், இந்திராவும் வேறுபட்டிருக்கவில்லை. பா.ஜ.க விற்கு இந்திராவைக்காட்டிலும் காந்தி, நேரு, சோனியா, ராஜீவ் இவர்களே முக்கிய எதிரிகள். இந்த நாட்டையும், அரசியலையும் எல்லாவிதமான குழப்பங்களிலிருந்தும் காக்கவல்லவராக இந்திரா எப்படி தன்னை முன்னிருத்திக்கொண்டாரோ அவ்வாறே மோடியும் தன்னைக் காட்டிக்கொள்கிறார்.
1966இல் பிரதமராக்கப்பட்ட இந்திரா, தன்னிடம் அதிகாரத்தைக் குவித்துக்கொள்ளும் விதமாக, அவரைப் பிரதமராக்கியவர்களையே ஓரங்கட்டினார். தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வங்கிகளை தேசியமயமாக்கியது: மன்னர் மானியங்களை ஒழித்ததுமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். வரிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் வறுமை ஒழிப்புத் திட்டங்களை அறிவித்தார். 1971 பாகிஸ்தானுடனான போரில் வெற்றி கொண்டு, தனது செல்வாக்கினை உயர்த்திக்கொண்டாலும், போரினால் ஏற்பட்ட நிதிச்சுமை மற்றும் அப்போது ஏற்பட்டிருந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு நிலைமையை மோசமாக்கியது. இந்தப் பின்புலத்தில், குஜராத் முதல்வரின் ஊழலுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் உருவான ‘நவநிர்மாண்’ இயக்கம் வட மாநிலங்களில் பரவியது.
நேரு மீதிருந்த வெறுப்பில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்டவர்கள் மதவாத சக்திகளுடன் கைகோர்த்தனர். அப்போது, தேர்தலையொட்டிய வழக்கில் இந்திராவுக்கெதிராக, அலகாபாத் உயர் நிதிமன்றத்தீர்ப்பு அமைந்துவிட்டது. மேல்முறையீட்டு மனுவும் அத்தீர்ப்பினை உறுதிசெய்தது. தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு மறுநாள் ‘இந்திரா’ பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். அதுவே நெருக்கடி நிலைப் பிரகடனத்திற்கு வித்திட்டது. நெருக்கடி நிலைக்குப்பிறகு 1977இல் ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு 1980இல் இந்திரா பிரதமராகி, பாப்புலிச அரசியலை நோக்கி நகர்ந்தார். அதாவது, ஒருவகைப்பெரும்பான்மைவாத அரசியலை முன்வைத்து, மதம் மற்றும் இதர ஆதிக்கச்சக்திகளோடு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்றார்.

பாப்புலிஸ அரசியல் அணுகுமுறை இந்திராவுக்கு அரசியல் ஆதாயத்தினை தந்தபோதிலும், அதுவே காங்கிரஸின் பிரதான எதிரியாகப் பா.ஜ.க. உருவாவதற்கும் இட்டுச்சென்றது. 13 ஜூன் 2000 அன்று, சுப்பிரமணியசுவாமி ‘த ஹிந்து’ ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையில், ஆர்.எஸ்.எஸ்.ஸும், பா.ஜ.கவும் இந்திரா காந்தியின் முன் மண்டியிட்டு. நெருக்கடிநிலைக்கு எதிரான போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தன எனவும், அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் தியோரசும், அடல்பிஹாரி வாஜ்பேயும் மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்தனர் என்கிறார். அவர் மேலும் கூறும்போது, “(நெருக்கடிநிலை) எதேச்சதிகாரத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ நேர்ந்ததற்கு இந்தியச்சமூகத்தின் பன்மைத்தன்மையும் பல்லினச்சமூக அமைப்புமே காரணம். இந்திய ஜனநாயக அமைப்பின் ஆதாரப்புள்ளியாக இந்தப்பன்மைத்தன்மையே அமைகிறது. இந்தியா எனும் முழுமைக்குள் அமைந்துள்ள பல்வேறு கூறுகளுக்கும் இடையே நிலவும் இழுவிசையே இந்தியா ஒரு ஜனநாயக அமைப்பாக உருப்பெற்றிருப்பதன் அடையாளமாக உள்ளது” என்கிறார். இவர்தான் சாவித்ரி தேவி:
பாசிசம் என்பது ஓர் இனம் அல்லது மதத்தின்மீது வெறுப்பை உருவாக்கும் அரசியல் மட்டுமல்ல, அது அடிப்படையில் மானுடத்தின் மீதே வெறுப்பை விதைக்கும் ஓர் அணுகல் முறையாகும். பாசிசமானது மனிதனை மையமாக வைத்து இந்தப் பிரபஞ்ச சுழற்சியை விளக்கும் மதப்பார்வைகள் மற்றும் மனிதனை மையமாக வைத்த அனைத்திற்கும் எதிரி; இயற்கையைக்காத்தல்; பிற உயிர்களின் உரிமையைப்பாதுகாத்தல் எனும் பெயரில் எல்லாவற்றிற்கும் எதிரானவர்களாக அது மனிதர்களைக்காணுகிறது. பாசிசத்தின் பன்முகப்பரிமாணங்களை விளங்கிக்கொள்ள சாவித்ரி தேவியின் வாழ்வு நமக்கு ஒரு சாட்சியம். 1905ஆம் ஆண்டு, பிரான்சில் ஒரு கிரேக்கத்தந்தைக்கும், ஆங்கிலேய அன்னைக்கும் பிறந்தவர்தான் மேக்ஸியாமி போர்டோஸ்தான் என்கிற சாவித்ரி தேவி. இவர் தத்துவம், வேதியியலில் முதுகலைப்பட்டமும், தத்துவத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். 20ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் ஐரோப்பா முழுவதும் ஆரிய வர்த்தம் குறித்து ஒலித்துக்கொண்டிருந்த சொல்லாடல்கள் மேக்ஸியாமியை இந்தியாவை நோக்கி ஈர்த்தன. 1932இல் கொழும்பு வந்தடைந்தவர், பின்னர் ராமேஸ்வரம் வந்து இராம நவமிக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்கிறார். இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் நெருக்கம் ஏற்படுகிறது. இதற்கடுத்துக் கல்கத்தா சாந்திநிகேதனில் தங்கி ஹிந்தி மற்றும் வங்க மொழியில் தேர்ச்சி பெறுகிறார். பின்னர் டெல்லி, மதுரா நகரங்களிலுள்ள கல்லூரிகளில் இந்திய வரலாற்றுப்பாடங்களைக் கற்பிக்கிறார்.
1937இல் சுவாமி சத்தியானந்தாவைச்சந்தித்தபின், “ஆரியக்கடவுளரைப்போற்றும் ஒரேநாடு இந்தியாதான். யூதர்களை எதிர்த்து நிற்கும் வல்லமை பெற்ற நாடும் இதுதான்” என்கிறார் சத்தியானந்தாவின் இந்து மிஷனில் இரண்டாண்டுகள் தங்கி மனிதனை மையமாக வைத்துப் பிரபஞ்சத்தை அணுகும் கிறிஸ்தவத்தினைக் கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால் யதார்த்தத்தில், “கிறிஸ்தவத்தில் ஆழ்மையம் மனிதனாக இருந்தது. ஒருவரது துயரம், மீளுதல், மகிழ்ச்சி, மீட்சி என்பது அதன் நோக்கமாக இருந்தது. இந்துமதத்தில் இந்த மனித மைய வாதத்திற்கு இடமில்லை. என்றென்றைக்குமான பிரபஞ்ச இருப்பே பிரதானம்.”என்கிறது. 1939 இல் காங்கிரஸின் மதச்சார்பற்ற கொள்கையை விமர்சிக்கின்ற அவரது “இந்துக்களுக்கு எச்சரிக்கை” எனும் நூல் வெளியிடப்படுகிறது. 1940இல் முகர்ஜி என்பவரைத்திருமணம் செய்துகொண்டு இந்தியக்குடியுரிமை பெறுகிறார். இரண்டாம் உலக யுத்தத்தின் போது இவ்விருவரும் அச்சுநாடுகளுக்கு உளவு வேலை பார்க்கின்றனர்.
உலகப்போரில் ஹிட்லரின் தோல்வி சாவித்ரியைக் கலங்கடிக்கிறது. எனினும் இந்தத்தோல்விகளும் அழிவுகளும் அவருக்கு ஹிட்லர்மீதும், நாசிசத்தின் மீதும் இருந்த நம்பிக்கையை இம்மியும் குலைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி ஜெர்மனிக்குள் நுழையும்போது அங்கே கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்படுகிறார். அங்கு சிறையிலிருந்த நாசிகளைச்சந்தித்து சிறைச்சுவர்களில் ‘ஹெய்ல் ஹிட்லர் ‘ என எழுதுகிறார். சிறையிலிருந்து விடுதலையான பிறகு பிரிட்டனின் நவநாசிக்கட்சியில் சேர்ந்து செயல்பட்டு, யூத இன அழிப்பினை மறுத்துக் கட்டுரைகள் எழுதுகிறார். 1958இல் ஆரிய மேன்மையை வலியுறுத்தும் அவரது ‘மின்னலும் சூரியனும்’ நூல் வெளியிடப்படுகிறது. இக்காலகட்டத்தில், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச்சென்று ‘நியோ நாசி அகிலம்’; என்கிற அமைப்பை உருவாக்கினார். இந்து மதம், ஆரியர்கள் தோன்றிய பூமி, ஆரிய மேன்மை, நாசிசம், விஷ்ணுவின் இறுதி அவதாரமான ஹிட்லரின் வழிகளினூடாகப் பிரபஞ்ச ஒழுங்கை நிலைநாட்டத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த சாவித்ரி 1982இல் லண்டனில் காலமாகினார்.
பேராசிரியர் சிவத்தம்பியும் நவ சிந்தனைகளும்; வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகல் முறை என்பது மிகவும் வறட்டுத்தனமாகப் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டிருந்த தமிழ்ச்சூழலில் அதனைச்சற்றே நெகிழ்த்தி லூயி அல்தூஸ்ஸர், டெர்ரி ஈகிள்டன் ஆகியோர் முன்வைத்த கருத்தியல் என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படையில் மார்க்சிய அணுகல்முறையைச் செழுமையாக்கியவர் பேராசிரியர் சிவத்தம்பி. வரலாறு எழுதுதல், இலக்கியவழி வரலாறு எழுதுதல் ஆகியன குறித்துத் தமிழ்ச்சூழலில் ஒரு பிரக்ஞையை உருவாக்கியவர். விரிந்த புலமையும் கல்வியியல் தகுதிகள் உள்ளபோதும் அவர் ஒரு மக்களறிஞர் அல்லர். காரணம், தம் மக்களின் உரிமைகள் மீறப்படுதலை விருப்பு வெறுப்பின்றி அவர் கண்டிக்கவோ அல்லது செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவோயில்லை. மேலும், அவருடைய சர்வதேசப் புலமைக்கு அப்பால், அவரிடம் வேர்கொண்டுள்ள உள்ளூர்த் தன்மை கவனிக்கப்படவேண்டியதாகும். இத்தகைய பாரம்பரியத்தில் தோன்றிய பேரா.சிவத்தம்பி தன்னாட்டில் மையம் கொண்டவராகவும், அதன் பண்பாடு, மரபுகளில் ஆழ வேர்பாய்ச்சியவராகவும் இருந்துவந்துள்ளார்.
சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நாவல் முதலான நவீன இலக்கியங்கள், திரைப்படம் குறித்தெல்லாம் விரிவாகப்பேசிய சிவத்தம்பி, மணிமேகலை, சிந்தாமணி முதலான பேரிலக்கியங்கள் குறித்து ஒன்றும் பேசியதில்லை. திருக்குறளில் காணப்படும் சமணக்கூறுகளுக்கு அழுத்தம் கொடுத்ததில்லை. பக்தி இலக்கியம் குறித்த விமர்சனமற்ற பார்வையே அவரிடம் வெளிப்பட்டது. சிவத்தம்பியின் விரிந்த ஆய்வுக்களத்தில் மணிமேகலைக்கும் இதர சமணக்காப்பியங்களுக்கும் இடமில்லாமற்போனதற்கு அவரிடம் வேரோடி நின்ற சைவ மனநிலையே காரணமாகும்.
எண்பதுகளின் இறுதியில் ஏற்பட்ட மாற்றங்கள் அறியப்பட்ட மார்க்சியத்தின் மீதும், மக்களால் தூக்கி எறியப்பட்ட சோசலிசக் கட்டுமானங்கள் குறித்தும் விரிவான விவாதங்களுக்கு வழிவகுத்தன. சோசலிசக்கட்டுமானத்தின் கருத்தியல் அடிப்படைகளான பிரதிபலிப்புக்கொள்கை, அடித்தள- மேற்கட்டுமானக்கோட்பாடு ஆகியவற்றின் மீதான விமர்சனத்தைச் சிவத்தம்பி வைக்கும்போது, “சோசலிச எதார்த்தவாதத்தை (சோசலிசம் என்ற உள்ளடக்கம் + எதார்த்தவாதம் என்கிற முதலாளிய வடிவம்) நாம் பேசியிருக்கக்கூடாது. நாங்கள் விமர்சன யதார்த்தவாதத்தைப் பேசியிருக்கவேண்டும்” என்கிறார். மார்க்சியத்திற்குப்பிந்தைய சிந்தனைகளான அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் பற்றிக்கூறும்போதுகூட, இவையெல்லாம் இங்கே பொருந்தாது எனவும், இக்கருத்தியல்கள் எல்லாவற்றையும் விமர்சிக்குமே ஒழிய தீர்வைச்சொல்லாது என்கிறார்.
திரு.வி.க. பார்வையில் பெளத்தம்; திரு.வி.க. சைவத்தை வாழ்நெறியாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர். பிற சமயப்பொறை என்பதை ஏற்றுக்கொண்டவர் ஆயினும் சைவமே சிறந்த ஒன்று என்பதை வெளிப்படுத்தத் தயங்கியவரும் இல்லை. அதுமட்டுமன்று, தமிழகத்தில் நடந்த சமயப்போரின் ஊடாக சமணமும், பெளத்தமும் அழிக்கப்பட்ட வரலாற்றிலும் சைவத்தின் பக்கம் நியாயம் இருந்ததாகக்கருதியவர். எல்லாவற்றையும் தாண்டி பெளத்தத்தின் சில அடிப்படைக்கூறுகளை அவர் போற்றினார். பிற மதங்கள் கடவுளை வைக்கும் இடத்தில் பெளத்தம் அறத்தை வைக்கிறது என்பதையும், பிற மதங்கள் தம் இலக்கை அடைய பக்தி, வேள்வி, நோன்பு, புனித நீராடல் முதலான வழிமுறைகளை வைக்கும் இடத்தில் பஞ்சசீலம், தசசீலம், எண்வழிப்பாதை முதலான அறவழிகளை மட்டுமே தன் இறுதி இலக்கை அடையும் நெறிகளாகப் பெளத்தம் முன்வைக்கிறது என்பதைத் திரு.வி.க மிக அற்புதமாகச் சொல்லிவிடுகிறார். அதுமட்டுமின்றி, தமிழக்கியங்களான தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட அனைத்திலும் வெளிப்படும் பெளத்தக்கருத்துகளையும், தாக்கங்களையும் எடுத்துவைக்கிறார். இந்து தர்மத்தில் ஏதேனும் அறக்கருத்துக்கள் இருக்குமாயின் அவை வைதீக மதிப்பீடுகளை மறுத்த பெளத்தச் சிந்தனைகளின் கொடைதான் என்கிறார் திரு.வி.க.
