து.பா.பரமேஸ்வரி
கீழடியின் பெருமைகளைக் கீழடி பிறந்த வரலாறுகளை இளையோர்களும் எளிதில் வாசித்து அறிந்துகொள்ளும் வகையில் ‘ஆதனின் பொம்மை’ என்கிற நாவல் ஒன்றைப் படைத்துள்ளார் ஆசிரியர்.

காக்கைப்பாடினியார் என்கிற மதுமிதா; கதை கேப்டன் பாலு பள்ளி விடுமுறைக்குக் கீழடியில் இருக்கும் மாமா கந்தசாமியின் வீட்டிற்கு வருகை புரிவதிலிருந்து விரிகிறது. கீழடியில் கண்டெடுத்த ஆதனின் பொம்மை வீட்டிற்குள் இருப்பதால் சலிப்பாகத் தோன்றவே, பாலு கீழடி மாமாவின் தென்னந்தோப்பிற்குத் தனது பொழுதைக் கழிக்க எதார்த்தமாகச் செல்கிறான். கீழடி தோப்பின் கோணமரத்துக்குக் கீழே குவியலாகப் பழைய கறுப்பு சிவப்பு மண்பானை ஓட்டுச்சில்லுகள் உடைந்தும் விரிசல் பட்டும் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. அதையெல்லாம் வியப்புடன் பார்த்து ஆராய்ந்த பாலுவின் கண்களில் தட்டுப்பட்டது ஒரு பொம்மையின் முகம் பொதிந்த ஓடு.
பிள்ளைகள் தங்களின் சுய திறன் தரத்தை வளர்த்துக் கொள்ள நமது மூதாதையரின் வரலாறுகளை அறிந்து கொள்ள வேண்டும். பாலு அந்துவனாக மாறிய வரலாறு ஆதன் பாலுவின் எதிரில் வந்து நின்ற போது பல ஈர நிலத்தின் ஆழத்தில் புதைந்திருந்த கிழங்குகள் போல மண்ணரித்து அழுக்காகக் காட்சியளித்தான். தனது பெயர் ஆதன் என்றும் தான் மூவாயிரம் வருடங்களாக இந்த கீழடிப் பகுதியில் வாழ்ந்து வரும் மூத்த குடியன் என்றும் ஆதன் கண்டெடுத்த இந்தப் பொம்மையைத் தான் பல ஆண்டுகளாகத் தேடி வருவதாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பாலுவிடம் இருக்கும் அந்த பொம்மையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டி ஆதன் கேட்டுக் கொண்டான். இருவருக்கும் இடையில் அடர்த்தியான நட்பு மிக விரைவாகவே முகிழச் செய்தது.
ஆதன் தன்னைப் பற்றியும் தனது குடும்பம் குறித்தும் சுவாரஸ்யமாகப் பகிர ஆரம்பித்தான். தனது பூர்வீகத்தைக் கருக்காக எடுத்துரைத்தான். பாலுவிற்கு ஆதனின் சமகாலத்திலிருந்து நீங்கி நிற்கும் தோற்றமும் அவனது செய்கைகளும் அவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட விதமும் ஒருவித மாயாலோக பிரமிப்பை ஏற்படுத்தியது. தன்னால் கீழடி தோப்பில் கைவரப்பட்ட பொம்மையைப் பற்றிய ஆதன் பகிர்ந்த தகவல்கள் பாலுவின் ஆர்வத்திற்கு மேலும் தீனி போட்டன. ஆதனின் வழி மூதாதைய வரலாறு பாலுவைப் புதிர்ச்சாலைக்குள் பாதை தேடிப் பயணிக்கும் விறுவிறுப்பான மனநிலையைத் தூண்டியது. காலத்தின் பின்னோக்கிப் போன பாலு ஆதனின் தோழன் அந்துவனாக மாறிப்போனான். அந்துவன் தான் புகுந்துகொண்ட காலங்களின் மனிதர்களைக்கண்டு ஆச்சரியப்பட்டான்.
தமிழர்கள் சிந்துவெளித் தோன்றிகள் என்றும் இன்றைய தென் பகுதியின் குடியேறிகள் சிந்து வெளியின் வழியோடிகள் என்பதும் அதிலும் குறிப்பாக வைகை பெருக்கெடுக்கும் மதுரையும் அதன் சுற்றுவட்டாரங்களும் ஒரு தலைமுறைக்கு முன்பான மூத்த குடி சிந்துவெளி வந்தேறிகள் என்பதையும் பொம்மையின் கதை, கால ஊஞ்சலின் ஆட்டம், காலத்தின் சுழற்சி போன்ற அத்தியாயங்கள் அறியப்படுத்துகின்றன. ஆரியர்களின் நிலத்துவேஷம் சிந்துவெளி மக்கள் மீது வெறுப்பாவேசத்தை உமிழ்ந்தது. அதன் நீட்சியாகச் சிந்துநதிக் கரையை ஆக்கிரமிக்க கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர் ஆரியர்கள். தங்களின் சொந்த நிலத்தைவிட்டுச் சிந்துவெளி மக்கள் விரட்டப்பட்டு நாடோடிகளாக பல பகுதிகளுக்கு நடந்தே பெயர்ந்த நமது மூதாதையரின் துயர்நிலைகளை நாவல் தத்ரூபமாகக் காட்சிப்படுத்துகிறது.
ஒற்றை ஆதிக்கத்தைக் கையில் எடுக்க முனையும் உலகின் அனைத்துப் பகுதி ஆட்சியாளர்களும் நமது தொன் சமூகத்தில் ஆரிய வந்தேறிகளால் நிகழ்த்திக் காட்டிய சூதுகளின் வலைப்பின்னல்கள். இன்றைய தலைமுறைப் பிள்ளைகளின் கரங்களில் வரலாறுகளைக்கொண்டு சேர்க்க வேண்டும். தை அறுவடை கால விழாக்களையும் சிந்து வெளி மக்களின் வணிக முறை வகையறாக்களிலும் தெளிவு பெற மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் மற்றும் அறுவடைத் திருநாள் போன்ற பகுதிகள் காலக்கண்ணாடிகள். மிகப் பிரமாண்டமாக விமரிசையாகச் சிந்துவெளி மக்கள் தங்களின் குடிப்பகுதிகளான உறையூர், மதிரய், முசிறி, கீழையூர், காஞ்சி என சிந்து நதிக் கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் அறுவடை விழாவில் சந்தைப்படுத்தப்பட்ட பொருட்கள் பற்றிய செய்திகள் மக்களின் கலாச்சார வழமைகள், தொன்ம கலைகள், பண்டமாற்று முறைகள் என அனைத்தையும் காட்சிப்படுத்திய விதம் பண்டைய தமிழ்வழிக்குடிகள் கண் முன் நிழலாடுகின்றனர்.
பெண்களைப் போற்றியும் வழிபட்டும் சமத்துவம் பாராட்டிய சிந்துவெளி மூதாதையர் அதிகமாகப் பெண்தெய்வங்களையே வணங்கியதாகப் பல வரலாறுகள் பதிவு செய்துள்ளதையும் நாவல் வழிமொழிகிறது. ஆண்தெய்வங்களையே முதற் கடவுள் தமிழ்க்கடவுள் மும்மூர்த்திகள் பரமபிதா அல்லாஹ் ஏன் சமணத்திலும் பௌத்தத்திலும் கூட ஆண் தெய்வங்களை முன் நிறுத்திப் போற்றுதலுக்குரியவராக வணங்கப்பட்ட இடைக்காலத்தில் மனித குலம் தோன்றி பண்பட்டு வந்த காலங்களில் வழிபாட்டுத் தெய்வமாகவும் கொண்டாடும் கடவுளராகவும் பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வந்தது ஊர்ஜிதமாகிறது.
அட்ஆண்களைக் காட்டிலும் பெண்களே பிரதான பாலினமாகக் கொண்டாடப்பட்டதையும், கல்வி அதிகாரம் ஞானம் எனப் பெண்களுக்குச் சமமான அறிவுத்திறன் ஆண்கள் கொண்டிருந்ததும் நாவல் நமக்குச் சுட்டிக்காட்டி பெண்களின் மகத்துவத்தை மூத்த குடி வழியாக வாசகருக்கு அறியப்படுத்துகிறது சிந்துவெளிவாசிகள் நடனங்கள், நாடகங்கள், தொன்ம விளையாட்டுகள் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர். மேலும் இசைக்கருவிகளில் தொன்ம இசை வாத்தியங்களாகப் பறையும் யாழும் பயன்படுத்தப்பட்டு வந்ததும் பாணினிகளும் பாணர்களும் மக்களை மகிழ வைக்க குழுத் தலைமைகளைப் போற்றும் வகையிலும் நிலம் குறித்தும் சிந்து வெளி வளம் பற்றியும் கவிபாடிக் கொண்டாடி வந்துள்ளதையும், அதற்கான சன்மானங்களாகச் சந்தைத்திருநாளன்று இறைச்சி போன்ற தங்கள் பாரம்பரிய உணவுகளும் நாணயங்களும் மக்களும் கோ மகன்களும் அவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டதும் வரலாற்று ஆவணங்கள். அதேபோல நமது சிந்துவெளி மக்கள் மாடுபிடித்தல் ஏர்தழுவுதல் போன்ற வீர விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வமுடையவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.
வேட்டையாடி குடிகளாகவும் மீன்பிடித்து உண்ணும் பரதவர்களாகவும் விளைநிலத்தில் உணவுப் பொருட்கள் விளைவித்து உண்ணும் விவசாயிகளாகவும் எனத் தனிப்பட்ட நபர்கள் தங்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் உணவுகளைச் சுயமாகத் தேடிப்பிடித்து உண்ணும் உணவு உற்பத்தியின் பன்முகத் திறமைசாலிகளாக இருந்து வந்தனர். பல்லுயிர்களின் இறைச்சிகளையும் மீன் வகைகளையும்கூட உண்டு வாழ்ந்து வந்துள்ளனர் என்பதும் நாவல் பதியமிடும் தகவல்கள். அதேபோல சிந்துவெளிப் பெண்கள் பயன்படுத்திய ஆபரணங்களையும் நாவல் பதிவு செய்துள்ளது இடைக்கால மூத்தகுடிகளின் பயன்பாட்டு ஆடை அலங்காரங்கள் அனைத்திலும் நமது பழங்குடி மக்களின் மிச்ச சொச்சத்தின் மீள்புணர்வு என்பதும் விளங்குகிறது.

சிந்து நதிக்கரையின் எதிர் புறத்தில் ஆரியர்களின் கொட்டில்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க சிந்துவெளியின் வளமை ஆரியர்களின் கண்களைப் பறிக்கவே அங்கேயே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்தனர். முதலில் வந்தேறி நாடோடிகளாகவே வந்த ஆரியர்கள் பிற்பாடு நமது சிந்துவெளி நிலக்குடிகளின் மீது போர் தொடுத்து அவர்களைக் தென்பகுதிக்கு விரட்டியடித்த வரலாறுதான் வைகையின் வரலாறு.
ஆரியத்தின் வழித்தோன்றியானாலும் புருஷிடம் இன வெறுப்பு இருந்ததாக ஆதன் உணர்ந்ததில்லை. காரணம் வெள்ளத்தில் அடித்து வந்த ஆதனைக் காப்பாற்றி தனது குழுவினருக்குத் தெரியாமல் அவன் குணமாகும் வரை அடைக்கலம் தந்து பணிவிடை செய்து வந்த மாண்பு கொண்ட பிள்ளையாக புருஷ் பாத்திரம் நம்மைச் சில கணங்கள் அவன் இழப்பில் கண்ணீர் துளிர்க்கச் செய்கிறது.
சிந்துவெளியின் பாழிப் பகுதி இனத்தவரை தஸ்யூக்கள் என்று அழைக்கப்பட்டதும், மேலும் மிலேச்சர்கள் என்கிற சிந்துவெளியின் ஒரு குழுவினர் இருந்து வந்ததும் ஆரியர்கள் இந்தப் பகுதி மக்களைக் கடுமையான வன்மாவேசத்தில் கொன்று குவித்த வரலாறுகளும் சிந்துவெளி நாகரிகத்தின் கல்வெட்டுகள். விசேஷத் தகவல்கள். ஆரியர்கள் நம்பும் வாய்வழிச் செய்திகள், அவர்களின் மொழியில் ‘ச’வரிசை பயன்படுத்தும் இடங்களில் ‘ஹ’ எழுத்துகள் பயன்படுத்தி வந்ததையும் நாவல் கோடிடுகிறது. கோதுமைக் கஞ்சியும் தீயில் சுட்ட இறைச்சித் துண்டுகளும் ஆரியர்களின் உணவுப்பயன்பாட்டில் இருந்து வந்ததும், மிருகங்களின் தோல்களைக் குளிர்க் காயும் போர்வைகளாகப் பயன்படுத்தியதை சிந்துவெளி நாகரிக காலமும் பதிவு செய்துள்ளது.
இவ்வாறாக ஒவ்வொரு நிலத்தில் தங்கிப் போன வந்தேறிகளாகச் சிந்துவெளி இன மக்கள் பிரிந்து போயினர். வட பகுதியிலிருந்து தென் பகுதி வரை தங்களை இருத்திக்கொண்டு தங்களின் வம்சங்களை வளர்த்தார்கள். ஆக வடக்கிலிருந்து தென் கோடி வரை இருப்பவர்கள் ஆதி பூர்வீக சிந்து இனத்து வழியோடிகள் என்கிற நமது மூதாதையர் வம்ச வரலாறு நாவல் வழியாக புலப்படுகின்றது. அனைவரும் ஒரு தாயகத்துப் பிள்ளைகள் என்பதே ஆதி வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அதேபோல் பிறப்பால் எந்தத் தொழிலும் உருவாகவில்லை. இதுபோன்ற வந்தேறிகள் தங்களுக்கு உகந்ததான நிலத்தையும் அது இட்டுத் தந்த தொழிலையும் தங்களின் விருப்பம்போல தேர்வு செய்து கொண்டனர். பிற்காலத்தில் இந்த வந்தேறிகளின் தலைமுறையே அந்தந்தத் தொழில்களின் குலப்பிரிவினையில் சாதிகளாகக் கூறு போடப்பட்டனர். ஆதியில் சாதி இல்லை என்பதே நமது வரலாறு நமக்குக் காட்டித் தருகிறது.
தான் மூவாயிரம் ஆண்டுகள் மேற்கொண்ட கடுமையான தவத்தின் பலனான கீழடி அகழ்வாரய்ச்சி வழியாக மூதாதையரின் மேன்மையும் வரலாறும் உலகிற்கு வெளிப்பட்டதில் தனது தவம் பலித்ததில் அக மகிழ்ந்து தனது பொம்மையுடன் அங்கிருந்து மறைகிறான் ஆதன். ஆதன் இப்போது தனது பொம்மையுடன் பூர்வீகத்தை நோக்கிப் பயணப்படுகிறான் என்பதே நூலாசிரியர் இறுதிக் கட்டத்திற்கு ஒரு காற்புள்ளியுடன் வாசகரை ஆதனின் அடுத்த பயணத்தைப் பற்றி அனுமானிக்கச் செய்கிறார்.
நாவல் வெறும் வழக்கமான இளையோருக்கான பக்கங்களைக் கொண்டு விரியவில்லை. அனைத்து வயதொத்தவரும் வாசிக்கும் வகையில் நமது முன்னோர்களின் வரலாற்றை உலகு அறியச் செய்யும் முயற்சியாகவே தோன்றுகிறது. மேலும் பிரிவினைவாதத்தால் மொழி மதம் சமயம் நிலம் இனம் சாதி வர்ணம் எனப் பிளந்திருக்கும் உலக மக்கள் அனைவரையும் ஒரு புள்ளியில் ஒன்று சேர்க்கும் ஒரு யுத்தியாக தேசிய சமத்துவத்தைக் கடந்து யுக சமத்துவத்தை நிலைநாட்ட உதய சங்கர் மனித குலத்தை ஒரே இனமாக ஒரே மூதாதையரின் பிள்ளைகள் என்றும் ஒரே வழியில் வந்த பூர்வகுடி வழியோடிகள் என்றும் தனது நாவல் மூலம் அறிவுறுத்துகிறார்.
