மயிலம் இளமுருகு
தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான கவனிக்கத்தக்க படைப்புகளையும் மொழிபெயர்ப்பு நூல்களையும் சிறார் இலக்கிய நூல்களையும் எழுதி வரும் கமலாலயன் அவர்கள் மிகச்சிறந்த ஆளுமையாக விளங்குகிறார். முனைவர் கே.சதாசிவன் அவர்கள் எழுதிய தமிழகத்தில் தேவதாசிகள் என்ற நூலை மொழிபெயர்ப்புச் செய்தமைக்காக 2023 மொழிபெயர்ப்பிற்கான அருட்செல்வர் நா. மகாலிங்கம் விருது கமலாலயன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது… பி.ஏ.காதர் அவர்கள் எழுதிய பின்வரும் இரண்டு நூல்களை மொழிபெயர்த்துள்ளார். இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், இலங்கை மலையகத் தமிழ் மக்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள், பாம்பு மனிதன்; ரோமுலஸ் விட்டேகர் வாழ்க்கைப் பயணம் என்ற நூலையும்… சோமநாதர் என்ற ஆய்வு நூலையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்… இந்த நூல்கள் எல்லாம் ஆய்வு உலகில் கவனிக்கத்தக்க நூல்களாக உள்ளன. NCBH, நேஷனல் புக் டிரஸ்ட், கலைஞன் பதிப்பகம், மங்கை பதிப்பகம் போன்ற பல்வேறு பதிப்பகங்கள் இவர் எழுதிய நூல்களை வெளியிட்டுள்ளன. கமலாலயன் பல்வேறு நூல்களை மொழிபெயர்த்துள்ளார். மேலும் சிறுகதைத் தொகுப்புகளையும் பல்வேறு கட்டுரைகளையும் எழுதி உள்ளார். இவர் பின்னணிப் பாடகி A.P.கோமளாவின் வாழ்க்கையை நூலாக எழுதியுள்ளார்.

இந்நூலைப் பதிப்பித்த பதிப்பாசிரியர் அய்யாசாமி அவர்கள் கூறுகையில், கலைமாமணி ஏ.பி.கோமளா அவர்கள் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். முறைப்படி கர்நாடக இசை கற்று ஆயிரக்கணக்கான மேடைகளில் கச்சேரிகள் செய்தவர். அவர் என்னுடைய இரு பெண்களுக்கும் இசை கற்றுத்தந்த குருவாக வாய்த்தது எங்கள் பெரும்பேறு. அலர்மேல்மங்கைக்கும், பூர்ணிமாவுக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இசை கற்றுத்தந்தார். ஒருகாலத்தில் திரையுலகில் பின்னணிப்பாடகியாகக் கொடிகட்டிப் பறந்தவர் அவர். நிலவோடு வான்முகில் பாடலையும், மாதா பிதா குரு தெய்வம் பாடலையும் யாரால் மறக்கமுடியும். இவை போன்ற, ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் கோமளா அம்மா. அவர்மீது எங்களுடைய பெண்கள் கொண்ட குருபக்தியின் விளைவே இந்த நூல் என்கிறார்.
கோமளா அவர்கள் என்னுரையில் குறிப்பிடும்போது:
சிறு வயதிலேயே நான் பெற்றோரை இழந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் எல்லாருமாகச் சேர்த்து நாங்கள் ஒன்பதுபேர். ஆனாலும் நானும் தங்கை கங்காவும் மட்டுமே தனியாக வாழ்ந்து சிரமப்படும்படி ஆகிவிட்டது.
எனக்கு கங்கா; கங்காவுக்கு நான். அவ்வளவுதான். இசைதான் எனக்கு எல்லாமாகிவிட்டது. இந்நூலை எழுதிய கமலாலயன் கூறும்போது, கோமளா அம்மையாருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதவேண்டும் என்று அய்யாசாமி அவர்கள் சொன்னபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயம் தயக்கமும் எழுந்தது. ஏனெனில் மிகச்சிறந்த இசைக்கலைஞர் ஒருவரின் வாழ்க்கையை எழுதும் அளவுக்கு எனக்கு இசை ஞானம் கிடையாது. இசை ஆர்வம் மட்டுமே உண்டு. வெறும் ஆர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு, இவ்வளவு பெரிய இசை ஞானம் படைத்த கலைஞரின் வாழ்க்கையைச் சரியாகச் சித்தரிக்க முடியுமா என்ற ஐயமே என் தயக்கத்துக்குக் காரணம். எனினும் ‘தயங்காம எழுதுங்க’ என்று கோமளா அம்மாவே ஒருமுறை சொன்னபிறகு எனக்குத் துணிவு வந்தது. எழுதியிருக்கிறேன். எழுத்தில் கோமளா அம்மையார் என்ற மகத்தான ஆளுமையின் முழுப்பரிணாமமும் வெளிப்பட்டு விட்டது என்று என்னால் கூறமுடியவில்லை. ஏனெனில் அவருடைய வயது மூப்பின் காரணமாக ஏராளமான தகவல்களை அவரால் நினைவுபடுத்திக் கூறமுடியவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக சிறுகச் சிறுக வெவ்வேறு நாட்களில் அவரோடு உரையாடிச் சேகரித்த விவரங்களின் தொகுப்பே இந்தநூல். மேலும் நல்லவேளையாக அவரும், அவருடைய தங்கை கங்கா அவர்களும் பத்திரிகை நறுக்குகள், புகைப்படங்கள் போன்றவற்றைப் பத்திரமாக வைத்திருந்தது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. வாழ்க்கை, எப்போதும் நாம் எதிர்பாராத ஆச்சரியங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.
வேளச்சேரியை அடுத்த புறநகர்ப் பகுதியான சதாசிவநகரில், ஒரு பெரிய இல்லத்தின் பக்கவாட்டில் எளிய ஒரு வீட்டின் முன்னறையில், பழுத்த பழம் எனச்சொல்லுமாறு மூத்துத் தளர்ந்திருந்த ஒரு பெண்மணியை “இவங்கதான் ஏ.பி.கோமளா, அந்தக் காலத்துல புகழ்பெற்ற ஒரு பின்னணிப் பாடகி” என்று நண்பர் அய்யாசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
உங்களோட வாழ்க்கை வரலாற்றை எழுதப் போகிறவர் இவர்தான் என்று என்னை அறிமுகம் செய்தபோது அவரது முகத்தில் வியப்பும், மகிழ்ச்சியும் சற்றே பளிச்சிட்டன. அதன்பிறகு கொஞ்ச நேரம்வரை தன்னைப் பற்றி அவரே சொன்னார். தெலுங்கு மொழியில் இவரையும், அன்றைய நாட்களில் புகழ்வானில் மிதந்த நட்சத்திரங்களான வேறுபல பின்னணிப் பாடகிகளையும் பற்றி ஒரு தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது. அதை என்னிடம் தந்தார். அந்தக்கால கருப்பு- வெள்ளைப் புகைப்படங்கள் நிரம்பிய நூல் அது. இவ்வாறு நூல் எழுந்த வரலாற்றை ஆசிரியர் உணர்வுப்பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கோமளாவின் இல்லத்திற்கு அந்த நாட்களில் மிகப்பெரும் இசைக் கலைஞர்கள் அவ்வப்போது வந்து செல்வார்கள். குறிப்பாக ஜி.என்.பாலசுப்ரமணியம் (ஜிஎன்பி.), சீனிவாஸராவ் போன்றோர் இந்தச் சிறு குழந்தையின் பாடலைக் கேட்டுப் பூரித்திருக்கிறார்கள். உச்சி முகர்ந்து கொண்டாடியிருக்கிறார்கள். இந்த வகையான பயணத்தில், கோமளா அகில இந்திய வானொலி நிலையம், சென்னையின் ஒரு தொழில்முறைக் கலைஞராகப் பணியில் சேர்ந்தபோது-1944-ஆம் ஆண்டில் அவருக்கு வயது ஒன்பதுதானாம்! அன்றிலிருந்து, 1995 வரையில், ஐம்பது வருடகாலம் தொடர்ந்து கோமளா அவர்களின் இசையும், வாழ்க்கையும் ஒன்றாகப் பிரவாகமெடுத்துப் பெருகியோடியே வந்திருக்கின்றன.
அதையடுத்து, மந்திரிகுமாரி, தூக்குத்தூக்கி, உத்தமபுத்திரன்.. என அந்தக்காலத்து வெற்றிப்படங்களில் தொடர்ந்து பல பாடல்கள். திரை இசைப் பயணம் தடையேதுமின்றித் தொடர்ந்திருக்கிறது. ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருப்பேன் என்கிறார் கோமளா. அவை எல்லாம் இன்றளவும் காற்றில், வானொலி, தொலைக்காட்சி ஒலி – ஒளி நிகழ்ச்சிகளுடைய அலைகளாக மிதந்துகொண்டேதான் இருக்கின்றன. ஏராளமான மேடைக் கச்சேரிகளும் செய்திருக்கிறார். தமிழ்நாடு இயலிசை நாடக மன்றத்தின் கலைமாமணி விருதை மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்முறை பதவிக்காலத்தின்போது, வாங்கியிருக்கிறார் கோமளா.
எழுதியவரை படித்துக் காட்டியபோது அவரது முகத்தில் புன்னகை அரும்பியது. “எல்லாம் பிடிபடும். சும்மா எழுதுங்க” என்று சொல்லிச் சிரித்தார். தொடர்ந்து இந்த வரலாற்றை எழுதி முடிக்கும்வரை அவரது குரல் உத்வேகம் அளிக்கும் என்று தோன்றியது எனக்கு. 1935-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28 அன்று பிறந்தவள் நான். சென்னையில் திருவல்லிக்கேணியில்தான் பிறந்தேன். என் முழுப்பெயர் ஆற்காட்டு பார்த்தசாரதி கோமளா என்பது. அப்பா பெயர் பார்த்தசாரதி. அம்மா பெயர் லக்ஷ்மி. அம்மா, அப்பா இருவருமே சங்கீதப் பிரியர்கள், அதனால், 3 வயதானதுமே எனக்குப் பாட்டுக் கற்றுத்தந்து பாடச் செய்தார்கள். அப்போது சென்னை வானொலியில் நாதஸ்வரம் வாசிப்பதற்கு ராஜமுந்திரியிலிருந்து காடவள்ளி பைடிசாமிகள் வருவார். அவர் சென்னைக்கு வரும்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வந்து எனக்குச் சங்கீதத்தில் இருக்கும் ஆர்வத்தைக் கவனிப்பார். அவருக்கு என்னை மிகவும் பிடித்துப் போய்விட்டது போலும்; அவர் என் பெற்றோரிடம் “உங்கள் பெண்ணை என்னுடன் ராஜமுந்திரிக்கு அனுப்புங்கள். அங்கு நான் அவளுக்கு முறையாகச் சங்கீதம் கற்றுத் தருகிறேன்” என்று கேட்டார். அவ்வாறே ராஜமுந்திரியில் குருகுலவாசம் இரண்டு ஆண்டுகள்வரை செய்தேன். சாஸ்த்ரீய சங்கீதம் கற்றுக்கொண்டேன்.
நான் திரைப்படப் பின்னணி இசைத்துறையில் ஓர் உயர்வான இடம் பெறுவதற்கு, குறிப்பாக மலையாளப் பட உலகில் இடம் பெறுமளவிற்கு முக்கியக் காரணமாக அமைந்தவர் பி.லீலா. அவர் இசையமைப்பாளர்களிடம், “கோமளாவுக்கு ஒரு பாட்டு கொடுங்க, நா இன்னொரு பாட்டுப் பாடறேன்” என்று கேட்டு வாய்ப்புகளை வாங்கித் தந்தவர் அவர். ஒரு வகையில், லீலா எனக்கு உயிருக்குயிரானவர். நாங்கள் இரண்டு பேரும் கேரள மாநிலத்தின் ஓணம் பண்டிகையையொட்டி நடைபெறும் இசைக்கச்சேரிகளின் இணையாகச் சென்று பங்கேற்றிருக்கிறோம்.
மலையாளத் திரைஇசைப் பயணத்தில் முப்பதுக்கு மேற்பட்ட மலையாளப்படங்களில் தொடர்ந்து பின்னணி பாடியிருக்கிறார் கோமளா.
KPAC நாடகப் பாடலாக மிகப்புகழ்பெற்ற சக்கரப்பந்தலில் தேன்மழ சொரியும் என்ற பாடலைப் பதிவு செய்வதற்கு, தேவராஜன் மாஸ்டர் தன்னை அழைத்த தருணத்தைப் புன்னகையுடன் நினைவுகூர்ந்து சொல்கிறார் கோமளா.
‘நாடோடி மன்னன்’ படத்தில் நான் பாடவேண்டுமென்று எம்.ஜி.ஆர் விரும்பினார். ஆனால் அச்சமயத்தில் ஏராளமான மேடைக்கச்சேரிகளுக்கு ஒப்புக்கொண்டுவிட்டதால் என்னால் அப்படத்தில் பாட முடியாமல் போனது. ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் சேர்ந்து ஒரு டூயட் பாடலை “நானன்றி யார் வருவார்?” எனப் பாடினேன். ‘நான் பெற்ற செல்வம்’ படத்தில் கவி.கா.மு.ஷெரீப் எழுதிய ‘மாதா பிதா குரு தெய்வம்’ பாடலையும் நான் பாடியிருக்கிறேன். மிகவும் ஹிட்டான பாடல்கள் அவை.
1968-இல் ‘மன்னிப்பு’ என்ற படத்தில் ‘குயிலோசையை வெல்லும்’ என்ற பாடலை
பி.சுசீலாவுடன் இணைந்து பாடியது மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்து விட்டது. காரணம்: திரையிசையில் அதுதான் கோமளாவின் பின்னணி இறுதிப்பாடல்.
சர்மா அவர்கள் கூறுகையில் அம்மாவோட பாணி ரொம்ப ரொம்பத் தனித்துவமானது. மற்ற வித்வான்கள் பாடற கிருதிகளை அம்மா பாடவே மாட்டாங்க. இவங்க பாடற கிருதிகளோட பாடாந்தரமே வேறயா இருக்கும். அப்படியே மத்தவங்க பாடறத அம்மா பாடினாலும் ராக ஆலாபனையில் வேறுபாட்டைக்கொண்டு வந்திருவாங்க. அம்மாவுக்குப் பிடித்தமான ரெண்டு அபூர்வமான ராகங்கள்: விவாதி, சந்திரஜோதி ராகங்கள். முழுமையாப் பாடம் பண்னுவாங்க. கோமளா பின்னணி பாடிய முதல் திரைப்படம். ‘தியாகய்யா’ (1945). இசை மேதையாகவும், துறவியாகவும் வாழ்ந்த தியாகராஜரின் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரம் அது. அப்படத்தின் இயக்குநரான சித்தூர் வி.நாகைய்யா, அப்படத்தில் ஒரு நடனக் காட்சியை அமைக்க முற்பட்டபோது, அவருடைய தேர்வு – பின்னணி பாடுவதற்கு – ஏ.பி.கோமளா ஒருவர் மட்டுமே. ஆனந்த பைரவி ராகப் பாடல் அது. ‘மதுரா நகரிலோ’ என்று தொடங்குவது.
அன்றைய காலகட்டத்தின் பிரபலமான இசை இயக்குநர்களான டி.ஆர்.பாப்பா, பிரதர் லக்ஷ்மணன், தட்சணாமூர்த்தி, பாபுராஜ், தேவராஜன் ஆகியோரின் இசையமைப்பில் பாடும் ஒரு நல்வாய்ப்பினைப் பெற்றிருந்தார். கர்னாடக இசை, திரையிசை இரண்டிலும் திறமை வாய்ந்தவர், பண்பட்ட கலைஞர் கோமளா, இன்னும் உயர்ந்த இடங்களை எட்டியிருக்க வேண்டும். ஆனால் மூத்த இசைக்கலைஞர்களின் உள்ளார்ந்த பொறாமை, போட்டி மனப்பான்மையினால்தான் கோமளா உயரிய இடத்தை அடைய முடியாமற் போனது. கலைஞர்களுக்கு இடையே நிலவும் போட்டி ஆரோக்கியமானதாகவும், அறிவார்ந்ததாகவும் இருக்க வேண்டும். நடைமுறையில் அப்படி இருப்பதில்லையே, என்ன செய்யலாம்? உள்ளார்ந்த வருத்தம் என்.சி.ஞானப்ரகாசத்தின் குரலில் இழையோடியது. அப்படியே கடந்த கால நினைவுகளில் மூழ்கிப்போனார் அவர்.
“இதையெல்லாம் பார்த்துப் பார்த்து, குடும்பநலனையும் கருதி திருமணம் என்ற பேச்சே எழ அனுமதிக்காமல் இருந்துவிட்டேன். எதற்காக என்றால், எனக்கு சங்கீதம் முக்கியம். சங்கீதமே பரமானந்தம்” என்று தியாகராஜரும் சொல்லியதை இவ்விடத்தில் நினைவுகூர்கிறார் கோமளா… “இப்போது என் தங்கை கங்காவும் நானும் மட்டுமே வாழ்கிறோம். எனக்கு அவள், அவளுக்கு நான் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
எனது கண்ணோட்டத்தில் மனிதர்கள் மரணிப்பவர்கள். ஆனால் இசை – மெலோடி – நிரந்தரமானது; நித்தியத்துவம் வாய்ந்தது. கலைஞர்கள் யாராக இருந்தாலும், சக கலைஞர்களுடன் வாக்குவாதங்கள், முரண்பாடுகள் எழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதுதான் எனது சக கலைஞர்களுக்கு நான் கூறும் அன்புரை” என்று கோமளா சொல்லியிருப்பது கவனத்திற்குரியது. பின்னணிப் பாடகி A.P. கோமளாவின் வாழ்க்கைக் கதையை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மிகச் சிறப்பாக எழுதிய வரலாற்று எழுத்தாளர் திரு கமலாலயன் அவர்களின் பணி பாராட்டத்தக்கது. இன்னும் இதுபோன்று பல்வேறு நூல்களைச் சிறப்பாக அவர் எழுதித் தமிழ் உலகுக்கு அழகு சேர்ப்பார் என்று நம்புகிறோம்.
