இரா.நடராஜன்
இன்று ஆண், பெண் என்கிற பாகுபாடு வெகுவாக இல்லையென்றாலும் பொதுவான குடும்பச் சூழலில் புத்தகங்களை வாசிப்பதற்கு ஆண்களுக்குக் கிடைக்கும் நேரத்தைவிடப் பெண்களுக்குக் கிடைக்கும் நேரம் மிக மிகக் குறைவு. அப்படியான சூழலில் முப்பது நூல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை முழுமையாகத் திறனாய்வு செய்து லண்டன் வானொலியில் ஒலிபரப்பு செய்தவற்றைத் தொகுத்துப் பிரேமா இரவிச்சந்திரன் அவர்கள் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

நிறையப் பத்திரிகைகளில் நூல்களின் திறனாய்வுகளை வாசித்திருக்கிறேன். இலக்கிய இதழ்களில் அவை நல்ல முறையில் வருகின்றன. பெரும்பாலான தினப் பத்திரிகைகளில் வாரந்தோறும் திறனாய்வுகளை வெளியிட்டாலும், அவற்றில் புத்தகத்தின் அத்தியாயங்களைக் குறிப்பிட்டு, இதைப் பற்றி விளக்கமாகவும் விரிவாகவும் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
இந்த நூலில் ஆசிரியர், ‘எதிர்காலத்தின் நம்பிக்கைக்குரிய இளைய தலைமுறையினருக்கு’ என்று இந்தப் புத்தகத்தைச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். “உலகத்தின் கதைகளையும் வாழ்க்கைப் பாடங்களையும் அறிந்துகொண்டு வாழ்பவர்களே முழுமையான மனிதனாக இருக்க முடியும்” என்று தனது ஆதங்கத்தினை முதல் விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கல்வி என்பது நான்கு சுவர்களுக்குள் இருப்பது மட்டுமல்ல, முழுமையான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் இதுபோன்ற நூல்களையும் இளைய தலைமுறையினர் வாசிக்க வேண்டும். முதல் புத்தகம் கா. அரவிந்த் குமார் அவர்கள் எழுதிய, ‘தேசம்மா’ காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது. இந்த நூலில், ‘ஒவ்வொரு பொழுதையும் முதலில் பார்ப்பவர்கள் மீனவர்கள்; ஆனால் அவர்கள் வாழ்வில் விடியல் எப்போது?’ என்று விளிம்புநிலை மனிதர்களுக்காகக் கா. அரவிந்த் குமார் எழுதியுள்ளதாக ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
இரண்டாவது நூலாக வேல. ராமமூர்த்தி அவர்கள் எழுதிய நாவலான ‘குற்றப்பரம்பரை’ இடம் பெற்றிருக்கிறது. இந்த மண்ணின் மகன் என்கிற முறையிலே குற்றப்பரம்பரை நூலினை உடனே படிக்க வேண்டுமென்று தோன்றியது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைக் குற்றப்பரம்பரையினர் என்கிற முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருந்தார்கள். இப்பொழுது அப்படியில்லையென்றாலும் இவர்களுடைய விமர்சனப் பார்வை வித்தியாசமாக இருக்கிறது. இவர்கள் எப்படிக் குற்றப்பரம்பரையினர் ஆனார்களென்று சொல்லும்பொழுது, “போரில் தோற்று அடிமையாக வாழ மனமில்லாமல் உயிரைப் பணயம் வைத்துக் களவுத் தொழிலில் ஈடுபட்டதாகவும், இவர்கள் சுயநலக்காரர்கள், தீண்டாமையைப் போற்றுபவர்கள், முதுகில் குத்துபவர்கள் போன்ற சமூகக் குற்றவாளிகளோடு சமரசம் செய்து இசைந்து வாழ்வதில்லை” என்றும் குறிப்பிட்டிருப்பதை நாவலிலிருந்து கையாண்டிருக்கிறார். அதனால்தான் அவர்களை நாம் குற்றப்பரம்பரையினராக முத்திரை குத்தித் தனியாக வைத்திருக்கின்றோம்.
ஒவ்வொரு புதன்கிழமையும் நாங்கள் காந்தியத்தைச் சிறைச்சாலைகளிலும் வியாழக்கிழமைகளில் சீர்திருத்தப்பள்ளிகளிலும் நடத்துகிறோம். அவர்கள் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் என்னவென்றால், “காவல்துறை எங்கள் மீது பழி போடுகிறது; ஒரு முறை செய்த குற்றத்திற்காக அடுத்தடுத்து எங்கள் மீது முத்திரை குத்தி, யாராவது ஒரு குற்றவாளி கிடைக்கவில்லையென்றால் எங்கள் மீது பழி சுமத்திச் செய்யாத குற்றத்துடன் இணைத்து விடுகிறார்கள்” என்கிறார்கள். இந்த வழக்கிற்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு (put up case) என்கிற சொல்லாட்சியைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இவர்கள் இப்படித்தான் இருப்பார்களென்று அடையாளப்படுத்தி அவர்கள் மீது அனாவசியமாகப் பழி போட்டு விடுகிறோம். அந்தப் பார்வையும் வன்முறையாகத்தான் கருதப்பட வேண்டும்.
எழுத்தாளர் அ. வெண்ணிலா அவர்கள் எழுதிய 500 பக்கங்கள் கொண்ட கங்காபுரம் நாவலை முழுமையாக வாசித்து அதன் சாராம்சத்தை மூன்று பக்க அளவில் இந்த நூலில் கொடுத்திருக்கிறார். பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாவலாக இந்த நூலையும் பார்க்கிறார். சாமானிய மனிதர்களுக்கானதொரு புத்தகமாக, ‘நெடுஞ்சாலை வாழ்க்கை’ எனும் நூல் இடம்பெற்றிருக்கிறது. லாரி ஓட்டுநர்களின் வாழ்க்கை அடங்கிய இந்தப் புத்தகத்தில், சாலைகளை, ‘கருப்பு ரத்த நாளங்கள்’ என்று சொல்கிறார்கள். ஓட்டுநர்கள் நமக்காக நெடுஞ்சாலைகளின் வழியாக இமயம் முதல் குமரி வரை பல்வேறு திசைகளிலிருந்து பொருள்களைக் கொண்டுவந்து நம்மிடம் சேர்ப்பதும், இங்கிருந்து வேறு திசைகளுக்குக் கொண்டுசெல்வதுமாக இருக்கிறார்கள். ஆனால் இந்தச் சமுதாயத்தில் அவர்களுக்கிருக்கும் மதிப்பு என்னவாக இருக்கிறது? லாரி ஓட்டுனர் என்றாலே பெண் கொடுக்கத் தயங்குகிறோம். விலைமாதர்களைச் சந்திக்கும் வாய்ப்பிலிருக்கும் அவர்களைப் பெண்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றோம். அவர் அப்படி இல்லாவிட்டாலும் இப்படித்தான் இருப்பாரென்று முத்திரை குத்தி ஒதுக்கி விடுகிறோம். விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தினைச் சிறந்த முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
பிரபலங்களுடைய நாவல்களை விமர்சனம் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கச்சேரியில் பாட மிகவும் பிரபலமான பாடலைத் தேர்ந்தெடுத்தால் அதனைப் பாடுவது மிகவும் கடினம். ஏனெனில் அதிலுள்ள ராகம் தாளம் பாவனைகளை எல்லோரும் அறிந்திருப்பார்கள். இசைக்கலைஞர்கள் அதனைச் சாமர்த்தியமாக ஒதுக்கிவைத்து விடுவார்கள். விமர்சனத்தில் பிரபலமானவர்களாகக் கருதப்படுபவர்களுடைய நூல்களை விமர்சனம் செய்வதென்பது ஒரு சவாலான பணி. ஏனெனில் அதைப் பற்றிப் பலரும் படித்திருப்பார்கள். கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதிய கோபல்ல கிராமம் பலரும் அறிந்திருக்கும் நாவல். அதைப் பற்றி ஒரு வித்தியாசமான அணுகுமுறையோடு இந்த நூலில் விமர்சனம் செய்திருக்கிறார்.
‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்கள் எழுதியது. இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், கடலோரக் கிராமத்தில் வசிக்கும் மீனவர்களது வாழ்க்கை வரலாற்றைச் சொல்லக்கூடிய புத்தகமாக அது இருக்கலாமென்று எண்ணித் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார். அந்தப் புத்தகம் இஸ்லாமிய சமுதாயத்தில், இஸ்லாமிய மக்களுடைய ஆழ்ந்த மத நம்பிக்கைகளை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறார்கள், அதை வைத்து எவ்வாறு சம்பாதிக்கிறார்கள், எவ்வாறு சிதைக்கிறார்கள் என்பதைத் தோப்பில் முகமது மீரான் எழுதியிருக்கிறார். ஓர் இஸ்லாமியர்தான் இஸ்லாமியத்தைப் பற்றி எழுத முடியும். அதை ஆசிரியர் எப்படி எழுதியிருக்கிறார் என்பதை இந்த நூலில் கொடுத்திருக்கிறார். “தவறு இழைப்பது தவறு எனில், தவறை மன்னிக்காததும் தவறுதான்!” என்கிற வரியைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வரி சமுதாயத்தில் நம் எல்லாருக்குமே தேவையான ஒன்று.
‘நீலக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ எனும் நரசய்யா அவர்கள் எழுதிய புத்தகத்தினைத் “திராவிடப் பண்பாட்டின் கடல் பயணம்” என்கிற தலைப்பில் விமர்சனம் செய்திருக்கிறார். ஒரு மிகச் சிறந்த படைப்பிலக்கியவாதியாக இருக்கிறார். சிறுவர்களுக்கான பூஞ்சிட்டு மின்னிதழில் இவரது தொடர்கதைகள் வெளிவந்திருக்கின்றன. ‘பாரதி விஜயம்’ எனும் நூலினை விமர்சனம் செய்திருக்கிறார். இதில் பாரதியாருடைய காலகட்டத்தில் அவரைப் பற்றி வெளிவந்த பிரபலமானவர்களின் கட்டுரைகள், அவரோடிருந்த குவளைக்கண்ணன் மற்றும் யாரெல்லாம் அவரோடு இருந்தார்களோ அவர்களைக் கண்டடைந்து பேட்டி கண்டு சேகரித்த தகவல்களடங்கிய ஒரு முழுமையான தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.
கடற்கரை மத்த விலாச அங்கதம் அந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார். எழுத்தாளர் சமஸ் அவர்கள், பாரதியாரின் ‘ரௌத்திரம் பழகு’ வரியை அடிப்படையாக வைத்து இளைய தலைமுறையினருக்காக ‘அரசியல் பழகு’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்த நூலின் விமர்சனமும் இடம்பெற்றிருக்கிறது.
பொதுவாகப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை முதல் மதிப்பெண் எடுக்க வேண்டுமென்று சொல்லித்தான் வளர்க்கிறோம். நா. முத்துநிலவன் அவர்களது, ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’ எனும் புத்தகமானது, “மதிப்பெண் மட்டுமே முக்கியமல்ல; அது வாழ்க்கையின் கூறாக மட்டுமே இருக்க வேண்டும். மற்ற பரிமாணங்களையும் புரிந்துகொள்வது முக்கியம்” என்பதாக அமைந்திருக்கிறது.
தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களது ‘முட்டு வீடு’ எனும் நூலும் இடம்பெற்றிருக்கிறது. அவரது நூலை இவர் எப்படி அணுகி இருக்கிறாரென்று முழுமையாக வாசித்தேன். பெண்கள் குறிப்பிட்ட காலத்தில் எப்படி விளிம்பு நிலை மனிதர்களாக நடத்தப்படுகிறார்கள் என்பதைக் கிராமத்துச் சூழ்நிலையோடு கலந்து இலக்கிய ஆளுமை கொண்டு தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். எனக்கு ஓர் ஒப்புமை தோன்றியது. தமிழச்சி தங்க பாண்டியன் ஆங்கில இலக்கியம் படித்தவர். இவரும் ஆங்கில இலக்கியம் படித்துத் தமிழில் அணுகியிருக்கிறார்.
“கண்கள் கடந்த காகித வீதிகள்” என்கிற தலைப்பிலான புத்தகத்தில் தமிழன்பன் அவர்கள் எழுதியிருப்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முரசொலி மாறன் அவர்களிடம் தமிழன்பன் ‘The Conversation With Indian Economist” எனும் புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அதனைப் பெற்றுக்கொண்ட அவர், கண்களில் ஒற்றிக்கொண்டாரென்று தமிழன்பன் அவர்கள் பதிவு செய்ததை இவர் குறிப்பிட்டிருக்கிறார். முரசொலி மாறன் அவர்கள் புத்தகங்களை எவ்வாறு அணுகினார் என்பதும் நமக்குத் தெரிகிறது.
இந்தப் புத்தகத்தின் முழுமையான சாராம்சம் என்னவென்றால், “ஒரு நூலைச் சார்புத் தன்மையோடு இல்லாமல் நடுவுநிலைமையோடு முழுமையாக வாசிக்க வேண்டும்; வரிகளுக்கு இடையேயுள்ள வரிகளையும் படிக்க வேண்டும் (Read between lines). பிரேமா இரவிச்சந்திரன் அவர்கள் புத்தகங்களின் வரிகளை மட்டும் வாசிக்காமல் வரிகளுக்கிடையுள்ள வரிகளையும் படித்ததால்தான் அவரால் சிறப்பாகத் திறனாய்வு செய்ய முடிந்திருக்கிறது. அதுவும் மிகத் தரமானதாகவும் துல்லியமான முறையில் சரியானதாகவும் உள்ளதெனும் நம்பிக்கை அவருக்கு வந்ததால் மட்டுமே அதனைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார்.
இவர் முப்பது புத்தகங்களை வாசித்து ஒரு நூலை உருவாக்கியிருக்கிறார். நான் அவரது புத்தகத்தையும் இணைத்து முப்பத்தொரு புத்தகங்களை வாசித்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன். சிறப்பான விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய இளைய தலைமுறைகள் வாசிக்க வேண்டிய தொகுப்பு நூல்.
