ஜெயபால் இரத்தினம்
பரந்து விரிந்த கடலில் எழுந்து கரையை நோக்கி வரும் அலைகளைப்போன்றது மனித மனம்; சிறு குழந்தையாய் மெல்லத் தவழ்ந்து வந்து கரையில் நிற்போரின் கால்களுக்கு அருகில் வந்து ஆனால் தொடாமல் திரும்புவதும் உண்டு; விளையாட்டுப் பிள்ளையாய் வேகமாக ஓடிவந்து கரையில் நிற்பவர்களது கால்களைத் தொட்டுவிட்டு ஓடிவிடுவதும் உண்டு; பொங்கி எழுந்து கடும் சீற்றத்துடன் வேகமாய் வந்து கரையிலுள்ளவற்றை அழிப்பதும் உண்டு. தவழ்வதும், ஓடிவருவதும், பொங்கி வருவதும், அந்தந்த நேரத்தில் கடலில் நிலவும் சூழலைப் பொருத்தது. கடலும் படைப்பாளனின் மனநிலையும் ஒன்றுதான்.

அகராதி என்னும் புனைபெயரில் கவிதாயினி ஒருவர், பல்வேறு நேரங்களில் எழுதி, கணையாழி உள்ளிட்ட பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளிவந்த பதிமூன்று சிறுகதைகளின் தனித்தொகுப்புதான் ’வசுந்தராதாஸ் குரல்’ என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் நூல். இது தனது இரண்டாவது படைப்பு என்கிறார் நூலாசிரியர். இந்த நூலுடன் இவர் எழுதிய மூன்று குறுநாவல்களின் தொகுப்பாக ‘மரக்குரல்’என்னும் தலைப்பில் ஒரு நூலும் வெளிவந்துள்ளது. அதை மூன்றாவது எனக் கொள்ளலாம்.
’பன்னிரெண்டும் பன்னிரெண்டு ரகம்’ என்பது இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒரு சிறுகதையின் தலைப்பு, அத்தலைப்பைப்போலவே இந்நூலில் இடம்பெற்றுள்ள பதின்மூன்று கதைகளும் பதின்மூன்று ரகம். அகல்யா என்ற பெண்ணுக்கு ஒரு பத்திரிகைச் செய்தி ஆச்சரியத்தை அளித்ததுடன். அச்செய்திக்குரியவளை நேரில் பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தையும் தூண்டியது. கணவனுக்குத் தெரியாமல், அவளைத் தேடிக்கண்டுபிடித்து நேரில் பார்த்து திருப்தியுடன் புன்னகை வழியத் திரும்புகிறாள். சரி, முன்பின் தெரியாத அந்தப் பெண்ணைச் சந்திக்கத் தூண்டியது எது: யார் அந்தப்பெண்? பத்திரிகைச் செய்தி இப்படிச் சொல்கிறது;
பள்ளியில் படிக்கின்ற இரு குழந்தைகளுக்கு அம்மாவான ஒரு பெண்ணை, அவர் திருமணமாகாதவர் என நம்பி, பல ஆண்களும் அதிகாரிகளும் ஏமாந்தனர்; ஒரு ரிங் மாஸ்டராக அனைவரையும் அவள் ஆட்டிப்படைத்தாள்; அதிகார வட்டம் திக் திக். இவ்வளவுதான் செய்தி. இழிவாக நடத்தியும் சந்தேகப் புத்தியுடன் கேள்விக் கணைகளால் துளைத்தும், மனதில் ஆறாத ரணங்களை ஏற்படுத்தியும் வந்த முன்னாள் காதலனிடமிருந்து விலகி ஒதுங்கிக்கொண்டவள், சந்தேகப் புத்தியுடைய கணவனிடம் மாட்டிக்கொண்டு தவித்துக்கொண்டிருந்தவள் அகல்யா. ஆண்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்தவளுக்கு, ஆண்களைத் தவிக்கவிட்ட ஒருவளும் இருக்கிறாள் என்ற செய்தி ஆறுதல்தானே; அவளை நேரில் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்புதானே. அதுவே: ‘வழியும் புன்னகை’ என்னும் தலைப்பிலான முதல் கதை.
நகரத்தில் வாழும் ஒரு மனிதன், சொந்தக் கிராமத்து மக்களின் நேசத்தையும், உறவுகளின் பாசத்தையும் உணரச்செய்யும் நிகழ்வாக விரிகிறது, ’கிளைகள்’ என்னும் தலைப்பிலான கதை. தனி மரமாய் வாழ்ந்துவரும் சீமாச்சு என்னும் சமையல் கலைஞனின் வாழ்க்கைப் போராட்டக் கதை, எதார்த்தங்களுடன், ‘சுடர்’ என்னும் தலைப்பில். ஒரு சராசரிப் பெண் மீது எதிர்பாராதவகையில் திடீர் மின்னலென வெட்டிய கணநேரத்து ஊடக வெளிச்சம், அவள் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. அந்த வெளிச்சம் அவளை ஊடகத்துறைக்குள் இழுத்து வருகிறது. அங்கே, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, ‘செலிபிரட்டி’ என்ற மாய அந்தஸ்த்தைத் தக்கவைத்துக் கொள்ள அவள் படும்பாடுகள், போடும் வேடங்கள், அடையும் மன உளைச்சல்கள் வரவையும் செலவையும் ஈடுகட்டமுடியாமல் எதிகொள்ளும் பொருளாதாரச் சிக்கல்கள், ஆகியவற்றை விரிவாகவே பேசுகிறது ‘தீர்மானம்’ என்னும் தலைப்பிட்ட ஒரு கதை, இது தனிப்பட்ட ஒரு மெர்சியின் கதை இல்லை.
இன்று ஊடகத் துறையில் மட்டுமல்லாமல், பலதுறைகளிலும் உள்ள மெர்சிக்களின் கதை. காதலித்து மணந்த கணவன், நல்ல வேலை, கைநிறைய சம்பளம் என்ற ஆசைகளால் உந்தப்பட்டு, வெளிநாடு சென்று ஆங்கேயே நீண்டகாலம் தங்கிவிட, அவன் இப்போ வருவான், அப்போ வருவான் என்ற நம்பிக்கையில் அவனுக்குப் பிடித்த வண்ணத்தில் ஓவியம் தீட்டிக்கொண்டு காலம் கடத்தும் ஓர் இளம் மனைவியின் கண்ணீர்க் கதை ‘நீலப்பூ’ என்ற தலைப்பில். உள்ளாடை அணிய மறுக்கும் ஒரு சிறுவனின் கதை ’பன்னிரெண்டும் பன்னிரெண்டு விதம்’.
ஒரு சிறுமி, அவள் பார்த்த ஒரு திரைப்படத்தில், அவள் வயதை ஒத்த சிறுமி ஒருத்தி, உயரத்திலிருந்து காற்றில் மிதந்து கொண்டே மெல்லிய இறகாக அந்தரத்தில் தன் கவுன் பறக்க அசைந்து ஒரு தேவதையாகக் கீழே இறங்கி வருவதைப் பார்க்கிறாள். அதைப்போல தன்னையும் யாராவது படம் எடுக்கமாட்டார்களா என்று ஏங்குகிறாள். ஒருகட்டத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்தால்கூட போதும் என்ற அளவுக்குத் தன் ஏக்கத்தைச் சுருக்கிக்கொண்டாலும், அவள் பெரிய பெண்ணாக வளர்ந்து திருமணம் செய்துகொண்டு குழத்தைகள் பெற்றுக்கொண்ட பின்னரும்கூட அவளது ஏக்கம் நிறைவேறவில்லை. ஒவ்வொரு முறையும் அவள் அடையும் ஏமாற்றத்தை உணர்வுப்பூர்வமாகக் காட்சிப்படுத்துகிறது ’கறுப்பு வண்ணமாயப்பெட்டி’. என்னும் தலைப்பிட்ட கதை.
ஒரு சிறிய நிலப்பரப்பின் அரசிகளான மூன்று சகோதரிகள் தங்களுக்கான கணவன்மார்களைத் தேர்ந்தெடுக்க நடத்தும் நவீன சுயம்வரம் அல்லது நேர்முகத் தேர்வுதான் ‘இரண்டாம் சாமத்திற்குப்பின் ஒரு கேள்வி’ என்னும் தலைப்பிட்ட கதையின் கரு. எல்லா வசதிகளையும் கொண்ட பெண்களுக்கு ஆண்கள் எதற்காக தேவைப்படுகிறார்கள் என்று தர்க்கம் செய்து, தேவையின் நியாயத்தை உணர்ந்து, அத்தேவையை அடைய அவர்கள் என்னமாதிரியான நடைமுறைகளைக் கையாள்கிறார்கள் என்பது கதையின் விவரிப்பு. இது வக்கிரமா அல்லது உளவியலா என்பதை வாசகர்கள் தீர்மானித்துக்கொள்ளலாம்.

பிரபல நடிகையும் பாடகியுமான வசுந்தராதாஸ் குரல்மீது பெரும் மையல் கொண்ட ஒருவன்(அவன் பெயர் சுதாகர் அல்லது திவாகர் அவளது குரலுக்கு நெருக்கமான மற்றும் அதே பெயரை உடைய ஒரு பெண்ணின் தொடர்பு கிடைத்து இரண்டு வருடகாலம் நேரில் பார்க்காமலேயே தொலைபேசியில் பேசியே பழகிவருகிறான். நடிகை வசுந்தரதாஸ் உருவம் மற்றும் பாடிய பாடல் வரிகளைக்கொண்டே, தான் பழகிவரும் பெண்ணின் உடலழகு குறித்து ஒரு மதிப்பீடு செய்து வைத்திருந்தான். ஒருநாள் இருவரும் நேரில் சந்திக்கும்போது, அவனது கற்பனை பிம்பம் உடைய… அவன் விலகிக்கொள்ள விரும்புகிறான். வசுந்தராதாஸ் குரல்மீது அவன் கொண்ட மையலை வெகு நுணுக்கமாக உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் கதாசிரியர். இக்கதையின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் உள்ளது.
இயலாதவர்களுக்கு சிறிய உதவி செய்துவிட்டு பெரிய அளவில் தம்பட்டம் அடித்துக் கொள்வதும் தொடர்ந்து உதவி செய்வதுபோல பாசாங்கு காட்டிவிட்டு ஒரு கட்டத்தில் நகர்ந்து கொள்வதும் சமுதாயத்தில் அடிக்கடி நாம் பார்த்துவரும் ஒரு வழக்கமான காட்சிதான். இந்தப் பாசாங்கு ஒருவகை மனநோய்தான். அப்படி ஒரு மனநோயைப் படம் பிடித்துக்காட்டுகிறது ‘சச்சின்’ என்னும் தலைப்பிலான ஒரு கதை. தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் மின்தூக்கி பழுதடைந்ததால் படிக்கட்டை உபயோகிக்க நேரிடும் இருபெண்கள், அங்கே படிக்கட்டு அருகிலுள்ள ஓரிடத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கண்டு இரக்கம் கொண்டு உணவு வாங்கித் தருகிறார்கள்.
மற்ற நண்பர்களது பங்களிப்புடன் ஓரிரு நாட்களுக்கு சுழற்சி முறையில் உணவு வழங்குகிறார்கள்; உடை வாங்கித்தருகிறார்கள்; அதையெல்லாம் படமெடுத்து முகநூலில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பிப் பெருமைபட்டுக் கொள்கிறார்கள். அவரை ஒரு காப்பகத்தில் சேர்க்கவேண்டும் என்பது வரை திட்டமிடுகிறார்கள். எல்லோரிடமும் பெருமைகளைப் பகிர்ந்துகொண்ட பின் உதவி செய்யும் மனப்பான்மை படிப்படியாய் குறைகிறது. இதற்குள் மின்தூக்கி பழுது நீக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் தங்களது வழக்கமான பாதையில் பயணிக்கத் துவங்கினர். கருணை, உதவி போன்ற பாசாங்குகளும் முடிவுக்கு வந்தன.
‘பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்’ காதற் சிறப்புரைக்க வந்த வள்ளுவனின் வாக்கு இது. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒரு கதையின் தலைப்பு ‘வாலெயிறு ஊறிய நீர்’. கருவும் இதுதான். இப்படி இலக்கிய நயத்தோடு அல்லாமல், ‘உதட்டோடு உதடுசேரும் முத்தம்’ என்பது இன்று சராசரியாகப் பயன்படுத்தப்படும் சொல்லாட்சியாகவும், திரைப்படங்களில் வெகு இயல்பாகக் காட்டப்படும் காட்சிகளில் ஒன்றாகவும் மாறிவிட்டது. இதை அருவருப்பு என்று கருதி ஒதுக்கும் ஒரு பெண், அதை ஆனந்தமாகக் கருதும் சூழலுக்கு ஆளாகிறாள் என்கிறது ஒருகதை.
“எக்ஸ்” இது ஓர் உணர்வுபூர்வமான கதை. மிக நெருக்கமாகப் பழகிய, ஆனால், உப்பு சப்பில்லாத காரணத்தால் சண்டையிட்டுப் பிரிந்து அவரவர் பாதையில் பயணித்து வரும் கருத்தொருமித்த காதலர்கள் பல ஆண்டுகள் கழித்து, எதேச்சையாக சந்திப்பதும் பின்னர் அவரவர் பாதையில் தொடர்ந்து பயணிக்க முற்படுவதுமே கதை. இருவரது முந்தையகால அந்நியோன்யத்தையும், தற்போது ஏற்படும் உணர்வுகளையும் நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார் கதாசிரியர். ‘உதட்டோர மென்குழிவு அசைந்தமரும் சிற்பம்’ – ஒரு கோவில் தூணில், தான் கண்ட நல்ல வேலைப்பாடமைந்த உயிரோட்டமுள்ள ஒரு அழகிய மங்கையின் கற்சிற்பத்தின் தோற்றத்தில் மனதைப் பறிகொடுக்கும் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞனின் மாய அனுபவங்களும் அதற்காக அவன் தன்னையே பலிகொடுத்துக்கொண்ட சோகத்தையும் காட்சிப்படுத்தும் கதை. கற்சிலைக்கும் அவனுக்குமான உணர்வுபூர்வமான உரையாடல்கள் சிறப்பாக உள்ளன.
ஒரு கவிஞர் கதைசொல்ல ஆரம்பித்தால் காட்சிகள் கவிதையாக விரிவதும், சொல்லாடல்கள் இலக்கிய நயம்பட அமைவதும் இயல்புதானே. ஆம், இந்தக் கவிதாயினியின் கதைகளும் அந்த இயல்புகளுடனேயே உருப்பெற்றுள்ளது. கதைகள் மட்டுமல்ல, பாத்திரங்களும் நம்முடன் உரையாடுகின்றன. நல்ல படைப்புகள். இவர் மேலும் மேலும் கவித்துவமான கதைகளைப் படைக்க வாழ்த்துவோம்.