ஸ்ரீநிவாஸ் பிரபு
வாசிப்பு ஒரு மகத்தான அனுபவம். யதார்த்த வாழ்வில் காண முடியாத பல காட்சிகளை அவை அடுக்கிக் காட்டுகிறது. பல மனிதர்களைச் சந்திக்க வைக்கிறது. பல விதமான நிலங்களை, காடுகளை, ஆறுகளை, மலைகளை, மலர்களை என ஏராளமான இயற்கைக் காட்சிகளை கண் முன் நிறுத்துகிறது. மன உணர்வுகளுக்கு இயைந்த விதத்தில் ஒவ்வொன்றும் உருக்கொண்டு, ஒரு புரிதலையும் மனதையும் விரிவாக்குகின்றன. வாசிக்க வாசிக்க நம்மையறியாமல் நமக்குள் இருந்த இருள் விலகிச் செல்வதையும், மேகங்களைப் புரட்டிக் கொண்டு மெல்ல எழும் சூரியக் கதிரென நெஞ்சில் உதித்துச் சுடர்விடும் எண்ணங்களால் பெரும் பரவசமொன்று வந்து படிவதை உணரவைக்கின்றன.

ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கும் முன்பு இருக்கும் நாம் வேறு வாசித்து முடித்த பிறகு இருக்கும் நாம் நிச்சயம் வேறானவராகத்தான் இருக்கிறோம். இவ்வாறான கருத்தின் வழியாக ஒரு புத்தகத்திலிருந்து மற்றொரு புத்தகத்தை நோக்கிச் செல்லும் பயணத்தை மிகவும் இயல்பாக நிகழ்த்துகிறார் பாவண்ணன். புதிய புத்தகம் பேசுது மாத இதழில் புத்தகங்கள் குறித்து இவர் எழுதிய கட்டுரைத் தொடரின் தொகுப்பே இந்த நூல்.
ஐநூறு வண்டிகளின் சத்தம் கட்டுரையில் ‘தீகநிகாயம்‘ புத்தகம் பற்றியும் அதில் ஒவ்வொரு சூத்திரத்திற்கும் உரையாடலின் வழியாக புத்தர் தரும் விளக்கத்தையும் விவரித்துச் செல்கிறார். மகா நிர்வாண சூத்திரத்தின் உரையாடலில், ஒரு துறவி ஒரு காட்டின் பாதையில் பிரயாணம் செய்கிறார். களைப்பின் காரணமாக வழியில் ஒரு மரத்தடியில் அமர்கிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு ஐந்நூறு வண்டிகள் அவ்வழியே கடந்து செல்கின்றன. பிறகு சிறிது நேரத்துக்குப் பிறகு யாரோ ஒரு வழிப்போக்கன் அந்த வழியில் எதையோ தேடியபடி வருகிறான். மரத்தடியில் துறவியைப் பார்த்து, இந்த வழியாக வண்டிகள் சென்றதைப் பார்த்தீர்களா? என்று கேட்கிறான். துறவி ‘பார்க்கவில்லை‘ என்று பதில் சொல்கிறார். வழிப்போக்கன் ‘வண்டி சென்ற சத்தத்தையாவது கேட்டீர்களா?‘ என்று மீண்டும் கேட்கிறான். அவர் அதையும் கேட்கவில்லை என்று சொல்கிறார். ‘தூங்கிவிட்டீர்களா?‘ என்று கேட்கிறான் வழிப்போக்கன். துறவி இல்லை என்கிறார். ‘விழித்திருந்தீர்களா?‘ என்னும் கேள்விக்கு ‘ஆமாம்‘ என்று பதில் சொல்கிறார்.
வழிப்போக்கனுக்கு துறவியின் சாந்தநிலை ஆச்சர்யம் அளிக்கிறது. எதையும் பார்க்காத, எதையும் கேட்காத விழிப்புநிலையின் சாத்தியப்பாட்டை அவன் உணர்ந்து கொள்கிறான். வாசிக்கும் போக்கில் புத்தரின் ஒவ்வொரு உரையாடலும் நம்மிடம் நிகழ்த்தப்படும் உரையாடலைப்போலவே தோன்றுகிறது.புத்தரின் போதனைகளை பொறுமையாகக் கேட்கும் அஜாதசத்ரு தலைகீழாகக் கிடந்ததை நிமிர்த்தி விட்டதுபோல் தன் ஐயம் விலகி விட்டதாக மிகழ்ச்சியுடன் தெரிவிக்கிறான். புத்தர் நம்முடன் பேசுவதாக உணரும் பேரனுபவம் மத்தானது என்பதை முன்வைக்கிறது கட்டுரை.
பறவைகள் குறித்தான ஆய்வுக்காக, பறவைகளைப் பற்றிய தகவல்களைத் தொகுப்பதற்காக வாழ்நாள் முழுக்க பறவைகளின் பின் ஒரு பறவையாக அலைந்து திரிந்து தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்த சாலிம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூல் பறவைகளைப்போலவே தனித்துவமானது.பறவைகளைப் பின் தொடர்ந்து ஆராய்ந்து எழுதிய குறிப்புகளும், மன்னர் மகாராவ் விஜயராஜ்ஜி சாலிமுக்கு அலைந்து திரிந்து செய்து தரும் கணக்கீட்டுப் பணி வித்தியாசமானது. சாலிம் அலியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து முடித்த பிறகு வானத்தில் காணும் ஒவ்வொரு பறவையுட்ம அவரை நினைவூட்டியபடி இருக்கிறது என்று சொல்கிறது ஒரு மானுடப் பறவையின் பயணம் கட்டுரை.
இந்தியாவிலுள்ள எல்லா ஆறுகளையும் ஓடியோடி பார்த்து காகா காலேகர் எழுதிய ஜீவன் லீலா புத்தகம் குறித்தான வாசிப்பு அனுபவம் இந்திய ஆறுகளின் மீது பித்துப் பிடித்துப் போகச் செய்கிறது. ஜீவன் லீலா என்பது தண்ணீரின் பலவிதமான லீலைகளை அடையாளப்படுத்துவதாய் அர்த்தம். பாயும் இடங்களை எல்லாம் குளிர்விக்கும் வல்லமை தண்ணீருக்கு மட்டுமே உண்டு. இமயம் முதல் குமரி வரைக்கும் உள்ள பல முக்கியமான ஆறுகளையும், அருவிகளையும், ஏரிகளையும் தேடித் தேடி பதிவு செய்திருக்கும் விவரத்தை அறியும்போது நம்மையும் மீறி ஒரு பரவசம் ஒட்டிக்கொள்ளவே செய்கிறது. கங்கையும் யமுனையும் (பிரயாகையில் சங்கமிக்கும் முன்) சந்திப்பதுபோல் நெருங்கி பிறகு சங்கமிக்காமலேயே விலகியோடிப் போய்விடும் தண்டால் மலைப்பகுதி குறித்தும், அப்பகுதியில் இன்றளவும் உலவும் தொன்மக்கதை குறித்தும் அறியும்போது ஆச்சர்யம் மேலோங்குகிறது.
இந்தியா முழுமைக்கும் பல்வேறு நதிகளின் கரைகளில் எத்தனையோ தான தர்மக் காரியங்களை செய்திருந்தபோதும், நதிகளை வலம் வருவது பற்றி எந்தப் புராணங்களிலும் குறிப்புகள் இல்லை. விதிவிலக்காக இருப்பது நர்மதா நதி. அந்த நதியை வலம் வருவது (பரிக்கமா என்று பெயர்) இன்றளவும் ஒரு சடங்காக இருந்து வருகிறது. நர்மதை உற்பத்தியாகும் இடத்திலிருந்து துவங்கி, தென்கரை வழியாக கடலில் சங்கமமாகும் இடம் வரை சென்று, பின் படகு மூலம் வடகரையைத் தொட்டு, அங்கிருந்து கால்நடையாக அமர்கண்டக் செல்கிறார்கள். வலம் வரும்போது வேறு எங்கும் நதியைக் கடக்கக்கூடாது. நீர் அருந்த வேண்டும் என்றால் நதியிலேயே அருந்த வேண்டும் என்று குறிப்பிடுவது புதுத்தகவலாக வந்து சேர்கிறது.
நதி குறித்த ஒவ்வொரு செய்தியும் அவற்றை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. அதையே முன் வைக்கிறது கட்டுரை.
வில்லியம் சரோயன் எழுதிய என் பெயர் ஆரம் சிறுகதைத் தொகுப்பு குறித்தான கட்டுரை ஒரு பெரிய நாவலின் தனித்தனி அத்தியாயங்களைப்போலவே அமைந்திருப்பதை குறிப்பிடுகிறது. சரோயனின் ஒவ்வொரு சிறுகதையும் பால்யத்தின் பார்வையில் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் சென்று குடியேறி வசிக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், மகிழ்ச்சி, மோதல்கள், நம்பிக்கைகள், நடிப்புகள் அனைத்தும் பால்யத்தின் பார்வையில் பதிவு செய்திருப்பதாய் சொல்லப்பட்டிருப்பது வசீகரிக்கிறது. ஒவ்வொரு கதையிலும் புதுப்புது மனிதர்களையும் புதுப்புது பின்னணியையும் அறிமுகப்படுத்துவதையும், ஒவ்வொரு கதையிலும் இடம்பெற்றிருக்கும் பால்யத்தின் சித்தரிப்புகளுடன் கூடிய அடித்தளத்தின் மீது நின்றிருப்பது ஒரு நூற்றாண்டை நெருங்கும் நிலையில் இன்னும் விரும்பிப் படிக்கக்கூடிய கதைகளாக இருப்பதற்கான காரணங்கள் என்று சொல்வது அர்த்தப்படுத்துவதாக இருக்கிறது.
கடித வடிவத்தில்கூட ஒரு புத்தகத்தை எழுத முடியும் என்ற புதுமையான அம்சத்தை எடுத்துக்காட்டும் கடித இலக்கிய வகையை (இன்றைய கால கட்டத்தில் வழக்கொழிந்து வருகிறது வேதனை) விவரிக்கிறது மனைவி எனும் மகாசக்தி கட்டுரை. தன் மனைவி பிரிந்த துயரத்தையும், பாரத்தையும் நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் அவரோடு சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையனுபவங்களை கடிதங்கள் வழியாக முன்வைத்துத் தொகுத்துக் கொள்வதன் வழியாக கரைத்துக்கொள்ளலாம் என்னும் நோக்கத்துடன், தன்னுடைய பதிப்பாசிரியரும் உற்ற நண்பருமான சொக்கலிங்கம் அவர்களுக்கு எழுதும் பாணியில் கடிதம் எழுதப்பட்ட விவரத்தையும், மனைவிக்கு வெ.சாமிநாதசர்மா எழுதிய பத்து கடிதங்களையும் அதில் குறிப்பிடப்பட்ட தன்மைகளையும் விவரிப்பது தனிமனித மேன்மையையும், கணவன், மனைவிக்கு இடையே ஆன நெருக்கத்தை பறைசாற்றுகிறது.

பத்து கடிதங்களையும் பல காலம் பாதுகாத்து வைத்திருந்த பதிப்பக நண்பர் பிறிதொரு சமயத்தில் அவற்றைத் தொகுத்து வெ.சாமிநாதசர்மாவின் ஒப்புதலோடு புத்தகமாக கொண்டு வருவது பதிப்பாளர்- எழுத்தாளரின் உயரிய பண்பைக் குறிக்கிறது. வாழ்க்கைத் துணையின் பிரிவு அளிக்கும் துயரம் ஆழமானது என்றபோதும், அத்துயரக் கடலில் ஆழ்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்துடன், அம்மையாரின் சூட்சும இருப்பையே உற்ற துணையாகக்கொண்டு தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும தொடர்ந்து இயங்கத்தக்க வாழ்க்கையை தகவமைத்துக்கொண்ட குறிப்பு நம்பிக்கைக்கான அஸ்திவாரமாக இருக்கிறது.
பதினேழு வயது வரைக்குமான வாழ்வியல் கதையை ‘நிலாக்கள் தூரதூரமாக’ என்னும் தலைப்பில் பாரத தேவி தன் வாழ்வு குறித்து எழுதிய புதினத்தை விவரிக்கிறது ‘இவை குறுஞ்சத்திரங்கள் மட்டுமல்ல, கட்டுரை. நாவல் முழுக்க காணப்படும் எண்ணற்ற சிறு வயதுக் குறும்புகளின் சித்தரிப்புகளையும், தன் வரலாற்றுப்புதினம் என்றபோதும் எல்லா இடங்களிலும் தன்னையே முன்வைக்காமல், தன் கூட்டாளிகளாக வாழ்ந்தவர்களைப் பற்றியும் ஊருக்கு வந்து போன பரதேசிகள், பிச்சைக்காரர்கள், வியாபாரிகள், மனம் பிறழ்ந்தவர்கள், காமத்தால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், இல்லறத்தின் சமநிலையைக் குலைத்தவர்கள் என ஏராளமான மனிதர்ளைப் பற்றி நாவல் முழுக்க பற்பல சித்திரங்களையும் பாரத தேவி முன்வைத்திருக்கும் அழகை அழகாக வெளிப்படுத்துகிறார். குறுஞ்சித்திரங்களின் தொகுப்பின் வழியாக நாவலுக்குக் கிடைத்திருக்கும் கலைவெற்றி மிக முக்கியமானது என்பதை அடிக்கோடிடுகிறார். இந்த மண்ணின் வாழ்க்கையை உய்த்துணரும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் நாவல் தமிழ் வாசகர்கள் ஒவ்வொருவரும் தேடிப் படிக்க வேண்டிய முக்கியமான படைப்பாகும் என பரிந்துரைக்கிறார்.
புத்தகங்கள் வழியே அறிமுகமாகும் ஒவ்வொரு கட்டுரையிலும் நிதானம் குலையாத அமைதியும், சக மனிதர்கள் மீதான வற்றாத அன்பும், மதிப்பு மேலோங்கிய வண்ணம் இருக்கிறது. புத்தகங்களின் வழியாக ஒவ்வொருவருக்கும் தேவையான ஏதோ ஒரு குறிப்பு எதிர்பட்டுக் கொண்டே இருக்கும். அது எது என்பதை பதினேழு கட்டுரைகளின் வழியாக அடையாளப்படுத்துகிறார் பாவண்ணன். கதவு திறந்தே இருக்கிறது என்ற தலைப்பிலான தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் திறந்த வாசல் வழியே நுழைந்து வசீகரிக்கும் சொல்லோவியமாக எதிர்பட்டு நிற்கிறது.