புவனா சந்திரசேகரன்
தற்காலக் கவிஞர்களில் தனக்கென்று ஒரு தனி அரியணையில் கம்பீரமாக வீற்றிருக்கும் கவிஞர் கலாப்ரியா அவர்களின் நூலைத் திறனாய்வு செய்ய நான் எடுத்துக்கொண்ட துணிச்சல் அதிகம்தான். இருந்தாலும் விதவிதமான நூல்களை வாசித்து அனுபவிக்கும் வாசகி என்ற தகுதி ஒன்றே போதுமே என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

கதைகளைப் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால், இவருடைய சாதனைகளையும், இவருடைய விருதுகளையும் பார்க்க பிரமிப்பாக இருந்தது. கலைமாமணி விருது, கவிஞர் சிற்பி இலக்கிய விருது, ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, விகடன் விருது, சுஜாதா விருது, கண்ணதாசன் இலக்கிய விருது, கவிஞர் தேவமகள் இலக்கிய விருது, கவிதைக்கணம் வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது, கலைஞன் போற்றுதும் விருது, அறிஞர் போற்றுதும் விருது, மனோன்மணீயம் சுந்தரனார் விருது, ஜெயகாந்தன் விருது, புதுமைப்பித்தன் நினைவு விருது, பாலகுமாரன் விருது, தமிழரசி அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது போன்றவை இவர் வாங்கியுள்ள விருதுகளில் சில.
சமகால எழுத்தாளர்களில் நாம் போற்றிக் கொண்டாட வேண்டிய எழுத்தாளர் என்பது மட்டும் எனக்கு நன்றாகப் புரிந்தது. இனி கதைகளுக்குள் செல்லலாம். இந்த நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பு. மண்ணின் மணம் கமழும் நடையில், வாழ்க்கையின் யதார்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டும் முத்து முத்தான கதைகளின் தொகுப்பு. சிறுகதை எனும் போதே நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்களைப் பற்றி நம் நினைவுப் பெட்டகத்தில் பூட்டி வைத்திருக்கும் சில நினைவுகள், அந்தச் சிறுகதைக்குள் உரிமையோடு உலா வருகின்றன. நாம் சந்திக்கும் சில வினோதமான மனிதர்கள், நம் கதைகளில் வலுக்கட்டாயமாக வந்து கதாபாத்திரங்களாக அமர்ந்து கொள்கிறார்கள்.
சிறுகதைகள் நிச்சயமாக நமது அனுபவங்களின் ஊர்வலமாக இலக்கிய வீதியில் கம்பீரநடை போடுகிறது. இதையே இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியரும் கூறியுள்ளார். வாழ்க்கையில் அந்நியர் என்று யாரும் கிடையாது, இதுவரை சந்தித்திராத நண்பர் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்று டபிள்யூ. பி. யேட்ஸை மேற்கோள் காட்டும்போதே நமக்குப் புரிந்து விடுகிறது. இவருடைய கதாபாத்திரங்களில் இவர் சந்தித்த மனிதர்களையே புகுத்தியுள்ளார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அடுத்ததாக அழகியல் என்றால் என்னவென்று வரையறுக்கிறார். “அழகியல் என்கையில் இரசிக்கத்தக்க, வியக்கத்தக்க என்பது மட்டும் பொருளல்ல. எது ஒன்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை உண்மை மாறாமல், பாசாங்கு இல்லாமல் சொல்லுவதே அழகியல். வாழ்வின் குரூரத்தை அதன் வலி மாறாமல் தர முடியுமானால் அதுதான் அதற்கான அழகியல். ஒரு போராட்டத்தை அதன் ரௌத்திரம் குறையாமல் சொல்ல முடியுமானால் அதுதான் அதன் அழகியல். வாழ்க்கையை அதன் அரசியலுடன் சொல்வதுதான் அழகியல். அழகை அழகாகச் சொல்ல முடிவதும் அப்படித்தான்.” இதைப் படித்ததுமே, இந்தச் சிறுகதைகள் நிச்சயமாக அதே அழகியலோடுதான் சொல்லப் பட்டிருக்கின்றன என்று எனக்குப் புரிந்துவிட்டது.

அழகியல் என்பது, வாழ்க்கையின் யதார்த்தத்தை அதன் உண்மையான பின்னணி மாறாமல், அதன் உணர்ச்சிகளை அப்படியே வடிப்பது என்று தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொண்டேன். இந்த உண்மை புரிந்த பிறகு கதையின் பாத்திரங்கள் அதே அழகியலோடு எப்படிப் படைக்கப்பட்டிருக்கின்றன என்று பார்க்க என் மனம் துடித்தது. என்னுடைய எதிர்பார்ப்பு நிச்சயமாக எனக்கு ஏமாற்றம் தரவில்லை. முதல் கதை, தனுக்கோடி என்கிற பெண்ணின் கதை. அரங்கு வீடு, அச்சலாத்தி, தென்னை வாரியல் போன்ற மண்ணின் மணம் கமழும் சொற்களை அசை போட்டுக்கொண்டே வாசிக்க ஆரம்பித்தேன். நடுநடுவே நையாண்டியாக நகைச்சுவை. எதையும் மறந்து போகும் தாய், சேலையில் முடிச்சுப் போட்டு வைத்துக்கொள்வதைப் பற்றி மகன் நினைத்துப் பார்க்கும் வரிகள், எனக்குள் சிரிப்பை வரவழைத்தன. யார் இந்தப் பெண்? சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டவளா? இல்லை, இவளால் சமூகம் வஞ்சிக்கப்படுகிறதா என்கிற சந்தேகம் எனக்குள் எழுந்தது. அவள் கூறும் வாக்குகள் பலிப்பதும், ஒரு சித்தரைப்போன்று அவள் தனிமையில் வாழவேண்டிய கட்டாயம்தான் என்ன? கேள்விகள் மனதில் எழுகின்றன. கதையின் முடிவு மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பெண் என்பவள் ஒரு கேள்விக்குறியாக மனதில் நின்று போகிறாள். பெண்மை என்பதன் அர்த்தம் இது மட்டும் தானா என்று மனம் சஞ்சலம் அடைகிறது.
இரண்டாவது கதை கனவெளி. இசக்கி என்கிற மனிதனைப் பற்றிய கதை. அவனுடன் நெருக்கமாகப் பழகும் பெருமாள் மற்றும் அவனுடைய மனைவி மனோன்மணி இவர்களின் பார்வையில் கதை நகர்கிறது. இந்தக் கதையிலும் சித்தர்கள் வந்து போகிறார்கள். நரிக்குறவர்கள் வாழ்க்கை, வௌவால் பற்றிய கருத்துகள், மின்கம்பியில் உயிரிழந்து தொங்கும் குரங்கு பற்றிய உரையாடல் ஆகியவை சிலீரென்று மனதிற்குள் புகுந்து குடைகின்றன. ஒரு தரமான த்ரில்லர் கதைபோன்ற நகர்வு. கதாபாத்திரங்களுடன் நாமும் சேர்ந்து கதைக்குள் வாழ ஆரம்பித்து விடுகிறோம். கதையை வாசிக்கும்போது இசக்கி வசிக்கும் அதே கிராமவாசியாகவே நானும் மாறிப் போயிருந்தேன். இதுதான் அந்த எழுத்தின் தாக்கம். இந்தக் கதையிலும் முடிவு என்னை மிகவும் பாதித்தது.
அடுத்த கதையின் தலைப்பு, “அப்பாவின் சிநேகிதர்கள்”. அழகான தேன்சிட்டு பற்றிய வர்ணனையுடன் மென்மையாக ஆரம்பித்த கதை, வேலாயுதத்தின் அப்பாவின் நினைவுகளோடு அழகாக நகர்ந்தது. அப்பா இருந்த நாட்களில் வேலாயுதம் அனுபவித்த பொருளாதாரக் கஷ்டங்கள், அப்பா இறந்தபோது அப்பா விட்டுவிட்டுச் சென்ற கடன்களைத் பற்றிய தகவல்கள் என்று படுயதார்த்தமாகச் சென்ற கதையில் திடீரென வந்து குதித்தார் துரைசாமி. அவர் இறந்த செய்தியைப் பார்த்ததும் வேலாயுதத்தின் மனதில் அவரைப் பற்றிய நினைவுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்று சட்டென்று முடிவு செய்து கிளம்பியும் விடுகிறான். துரைசாமியின் மனைவி அருணாவைப் பற்றிய நினைவுகளும் மனதில் எட்டிப் பார்க்கின்றன. இறுதியில் பளாரென்று முகத்தில் அறைவதுபோன்ற ஓர் உண்மை தெரிய வரும்போது பகீரென்ற உணர்வு. படித்துப் பார்த்தால் மட்டுமே நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது வாசகர்களுக்குப் புரியும்.
அடுத்த கதை குறளி. இளம் வயதில் ஓர் ஆணுக்கு ஏற்படும் வக்கிரமான உணர்வுகள். வக்கிரம் என்று சொல்ல முடியாது. இயல்பான உணர்வுகள் என்றுகூடக் கூறலாம். பாலியல் வேட்கை, பெண்களைக் காணும்போது மனதில் தோன்றும் ஆர்வம், எதையோ எதிர்பார்க்கும் தேடல், அதைப் புரிந்துகொள்ளாத அம்மாவின் செயல்கள் என்று இளவயது ஆண்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடாகக் கதையைக் கொண்டு போயிருக்கிறார் ஆசிரியர். சரியான வழிகாட்டுதல் கிடைக்காத குணமணியை வெறுக்கத் தோன்றவில்லை. பரிதாபம்தான் வருகிறது மனதில். காமத்தைப் பற்றி ஆபாசமில்லாமல் நேர்மையாக எழுதப்பட்ட கதை என்று எனக்குத் தோன்றியது. குறளி என்ற தலைப்பு வெகுவாகப் பொருந்துகிறது.
அடுத்ததாக, சிஸ்டர் என்கிற கதை. இந்தக் கதைக்கான விமர்சனத்தை எப்படி எழுதுவது என்று என்னைக் குழம்ப வைத்த கதை. கஸ்தூரி என்கிற பெண், ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்க்கும் பெண். ஸிஸ்டர் என்று அழைக்கப்படும் இவள்தான் இந்தக் கதையின் நாயகி. சென்ற கதையைப்போலவே இதிலும் நாயகியின் நியாயமான பாலியல் உணர்வுகள் பற்றியே பேசப்படுகிறது. திருமணமாகியும் இல்லற இன்பத்தைத் தராத கணவன், தென்கரை முத்து. ஆட்டக்காரரான இவன் அவ்வப்போது காணாமல் போக, பெட்டிக்கடை வைத்திருக்கும் பாண்டியுடன் உறவு வைத்துக்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறாள் கஸ்தூரி. கஸ்தூரியின் மாமியாருக்கு அவளுடைய உறவு பற்றித் தெரிய வரும்போது அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. கற்பு, தகாத உறவு, கள்ளத் தொடர்பு இவை எல்லாம் வெறும் வார்த்தைகள்தான். யாரோ, எங்கோ, எதற்காகவோ பயன்படுத்தும் இந்தச் சொற்களுக்கு சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் மகத்துவம் எதுவுமே இல்லை என்கிற யதார்த்தம் முகத்தில் அறைகிறது.
பற்றுக்கோடு அடுத்த சிறுகதை. நிச்சயமாக ஒரு முத்திரைக் கதையாகத்தான் இருக்கப்போகிறது என்று தோன்றியது. இந்தத் தொகுப்பிற்குத் தலைப்பில் தனியுரிமை பெற்று ஆக்கிரமித்துக் கொண்டதால் நிச்சயமாக நம் மனதையும் இந்தக் கதை ஆக்கிரமிக்கப் போகிறது என்று நான் நம்பியது வீண் போகவில்லை. ஒரு வினோதமான முக்கோணக் கதை. விசித்திரமான கதாபாத்திரங்கள். வித்தியாசமான கதைக்களமாக இருந்தது. இசக்கி என்ற பெயரை இஷா என்று மாற்றிக்கொண்ட இந்தப் பெண்ணின் புரட்சிகரமான, பாசாங்கு இல்லாத வாழ்க்கை பற்றிய கதை. சிறுகதை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற எல்லைக்கோடுகளைத் தகர்த்தெறிந்து கம்பீரமான நேர்மையுடன் மிளிர்கிறது இந்தக் கதை.
சீயெம்எஸ் என்ற பெயருடன் கதை முழுவதும் பொருளாதார நிபுணர், ஞானரிஷி என்கிற எழுத்தாளர், இஷா என்கிற இளம்பெண் இவர்கள் மூவரின் நட்பையும், உறவையும் பேசுகிற கதை. இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் சொற்களை வைத்துக்கொண்டு, தான் சொல்ல வந்த கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு. நித்யா என்கிற சாமான்யப் பெண்ணும், சீயெம்எஸ்ஸைப் பிரிந்துபோன அவருடைய முன்னாள் மனைவியும் கூட அற்புதமான கதாபாத்திரங்கள். கிராமத்தில் வளர்ந்தாலும் நகரத்தின் வாழ்க்கை முறையை எளிதாக ஏற்றுக்கொண்டு நவீனயுகப் பெண்ணாக நிற்கும் இஷா மனதைக் கவர்கிறாள். பொதிகை மலை அருகில் வசிப்பதாலோ என்னவோ, கதாசிரியருக்கு சித்தர்கள் பேரில் அதிகப் பற்று இருக்கிறது.
அடுத்த கதையான, “நோய் நாடி”யிலும் சித்தர் வருகிறார். மகேசுவரி என்கிற அழகான பெண், நோய்வாய்ப்படும் கணவன் லிங்கத்துக்கு அவன் மீது எழும் சந்தேகம் இவற்றைச் சுற்றி நகரும் சம்பவங்கள். மீசை வைத்தியர் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரம். பாண்டி மூப்பரும் கூட. இறுதியில் மகேசு எடுக்கும் முடிவு, நம்மை சபாஷ் போட வைக்கும். அடுத்து வாசித்த ஒட்டுவாரொட்டி கதை இலக்கியவாதிகள் பற்றியது. முன்னாள் தோழியான கீதாநந்தினியின் நட்பு பற்றியும், புதிய சந்திப்பைப் பற்றியும் கதை சொல்லி, தன் நடையில் கூறுகிறார். தாயீ என்றும் பாப்பா என்றும் விளிப்பதற்கான விளக்கம் புன்சிரிப்பை வரவழைத்தது. எதிர்பாராத முடிவு கணவன், மனைவி உறவின் யதார்த்தத்தைப் புரிய வைத்தது. அடுத்து வந்த இரண்டு சிறுகதைகளுமே சிறப்பான கதைக் களங்களில் பின்னப்பட்ட அருமையான கதைகள். சித்திர புத்திரன் கதை குயவர்களைப் பற்றியது. அய்யனார் சிலை செய்வதைப் பற்றிய தகவல்கள் சிறப்பு. சித்திர புத்திரன் என்கிற அவர்களுடைய மகன் பற்றிய கதை. மனதைத் தொட்டது. அதை அடுத்துவந்த பிள்ளைப்பூச்சி கதையில் வந்த கோவிந்தன் கதாபாத்திரம் மனதை நெகிழ வைத்தது.
அனைத்துக் கதைகளுமே விதவிதமான வண்ண வண்ண மலர்கள். ஒவ்வொன்றிற்கும் தனி மணம். அதுவும் மண்ணின் மணம் அதிகம். கதை வாசிப்பதுபோல இல்லாமல், நாமே கதாபாத்திரங்களாக மாறிக் கதைக்குள் ஒன்றிப்போக வைத்த அனுபவத்தால் கதாசிரியரின் எழுத்து ஜாலத்தை அனுமானிக்க முடிந்தது. இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் திரு. கலாப்ரியா அவர்களுக்கு என்னுடைய பணிவான வாழ்த்துகள்.