ஸ்ரீதர் மணியன்
சாதி ஒழிப்பில் இடதுசாரிகளின் களப்பணி, இரண்டாயிரம் ஆண்டுகளாக நீடித்திருக்கும் பெரும் வன்மச் சுவரின் ஓரிடத்தில் உடைக்கப்பட்ட சிறு விரிசல் அளவுதான் என்றாலும், இந்த விரிசலை உண்டாக்கவே களப்பணி செய்கிறவர்கள் பல்லாயிரம் இடதுசாரித் தோழர்கள், களப்பலியானோர் ஆயிரம், ஆயிரமாவர். இந்நாவலை வாசிக்கும்போது சட்டென நினைவுக்கு வருவது அதுதான்… (முகப்புரையில் புலியூர் முருகேசன்).

வட்டார வழக்கு தழுவிய படைப்புகள் என்றென்றும் மாறா சுவையுடையவை. மனித வர்க்கம் தனது எண்ணங்களை வார்த்தைகளாக கடத்தத் தொடங்கிய கணம் முதல் அவை கதைகளாக வடிவங்கொள்ளத் தொடங்கின. தங்களது அனுபவங்களை உருமாற்றி சுவைக்காக அதனுடன் சம்பவங்களைக் கலந்து வளரும் தலைமுறைகளுக்குக் கூறியவையே கதைகளாக உருவெடுத்தன. நரவேட்டை என்னும் இக்கதை இரு தளங்களில் இப்புனைவு பயணிக்கிறது. எளிய மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைகள், சடங்குகள், நடைமுறைகள் எனவும், அவற்றினூடாக தங்களது உரிமைகளை மீட்டெடுக்க இயக்கத் தோழர்களது போராட்டம் எனவும் புனைவு விரிகிறது. சூர்யா எளிய மக்களின் நம்பிக்கைகளை விமர்சிக்காது, தனது கதையினை நகர்த்திச் செல்கிறார்.
எந்தக் குழந்தையும் பிறப்பால் நல்ல குழந்தையே, அவை கள்ளமற்று வெள்ளை உள்ளங்களுடனேயே பிறக்கின்றன. சாதி, மதம் என்ற பாகுபாடுகள் இப்பிஞ்சு மனங்களில் தோன்றுவதில்லை. அவை பெற்றோர் மற்றும் உற்றோரால் விதைக்கப்படுகிறன என்பதை இப்புனைவு ஆணித்தரமாக வாசகன் முன்வைக்கிறது. சமகாலத்தில் கல்வியறிவு, நாகரிகம், தொழில்நுட்ப முன்னேற்றம் என பல அம்சங்களிலும் வளர்ச்சி மேம்பட்டதாக இருப்பினும் அவையனைத்தும் போலிகளாகவே இக்கதையில் இடம் பெறும் சம்பவங்களை நோக்கும்போது அவையாவும் இத்தருணம் வரை பல்லிலித்து நிற்கின்றன என்பதே எதார்த்தம். எவ்வாறெனில் நிகழ்ந்தேறும் சம்பவங்கள் இன்று வரை மாறாது தொடரும் அவலம் இதனை மெய்ப்பிக்கிறது.
மக்களின் மனங்கள் மேம்பட்டதாகவும், முதிர்ச்சி பெறாமல் மேற்கூறப்பட்ட முன்னேற்றங்களால் எவ்விதப் பலனும் இல்லை, மனமாற்றங்களும், அதனையொட்டிய முதிர்ச்சியான செயல்பாடுகளுமே உண்மையான மாற்றம் எனப் பொருள்படும். தனது பால்யகால நிகழ்வுகளை அடிநாதமாகக்கொண்டு இக்கதையினை நூலாசிரியர் புனைந்துள்ளார். முயல் வேட்டையில் துவங்கும் இப்புனைவானது உணவுக்காக அவற்றை வேட்டையாடும் புள்ளியில் தொடக்கம் கொள்கிறது.
இது ஒரு குறியீடாகவே இறுதிவரை தொடர்கிறது. உணவிற்காக விலங்குகளையும், பறவைகளையும் துரத்திச் செல்லும் மனிதன் கிடைத்தவற்றை வேட்டையாடி வீடு திரும்புகிறான். ஆனால், தன்னையொத்த மனிதனை வேட்டையாடி அழிப்பதில் அவன் திருப்தி கொள்ளாது அதனை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறான். பகுத்தறிவற்ற விலங்குகளே பசித்தால் மட்டுமே உணவிற்காக வேட்டையாடுகின்றன. ஆனால் சிந்திக்கத் தெரிந்த ஆறறிவு பெற்ற மனிதன் தனது அந்தஸ்து, சாதிப் பெருமை, குலப்பெருமை என்ற பொருளற்ற குறுகிய வட்டத்துக்குள் தன்னைப் பொருத்திக்கொண்டு தன்னையொத்த மனிதனை வெட்டிச் சாய்க்கிறான்.
இப்புனைவு விவரித்துச் சொல்லும் நிலவமைப்புக் காட்சிகள் அற்புதமானவை. முயல்வேட்டை, புதர்களில் முட்டைகளை எடுத்தல், தேனெடுத்தல், எருமைகளோடு கண்மாய்களில் மூழ்கிக் கிடத்தல் என அன்றாட வாழ்வின் சுவைகளை சுவைபட விவரிக்கிறார் படைப்பாளி. கடலைக் காட்டில் காவலுக்கு இருக்கும் சமயம் அவற்றை சுட்டுச் சுவைப்பதும் இடம் பெறுகிறது. இத்தகைய சிறு சிறு மகிழ்வுகள் இன்றைய தலைமுறைகளுக்கு கற்பனையிலும் கைககூடாததாக இருப்பது சற்று வருத்தத்தினையும் உண்டாக்குகிறது. புவியெங்கும் காங்கிரீட் கலவையாக மாற்றம் கொண்டு, மாற்றம் கண்டுவரும் சமகாலத்தில் அவர் கூறும் கரிசல் காடுகளும், கண்மாய்களும் தரிசுப் புஞ்சைகளும் அதன் மொழிச் சுவையும் வாசித்திட மனம் லயித்துப் போவது நிதர்சனம். வரும் தலைமுறைகளுக்கு அவை இத்தகைய வட்டார வழக்குக் கதைகளில் மட்டுமே காணக் கிடைக்கும் என்பதும் உண்மை.
வாழ்வின் பல தருணங்களில் சாதி குறித்த பேச்சுகளால், சம்பவங்களால் அவமானத்தையும், சிறுமைகளையும் அனுபவிக்கும் செந்தில் தனது தம்பியிடம் கல்வி மட்டுமே நமது இருப்பினை உயர்த்தும், அதனால் கல்வி கற்பதில் எதனை முன்னிட்டும் கைவிட்டுவிடக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்.
கல்வியின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி படித்தால்தான் இங்கு ஜெயிக்க முடியும் எனவும் அவர் தனது தம்பியிடம் கூறுகிறார். அதனை வாசகனுக்கும் கூறுவதாகவும் கொள்ளலாம். மற்றொருபுறம் தனது வகுப்புத் தோழியான பொன்னியை எவ்வாறு அழைப்பது, எதிர்கொள்வது என்று குழம்பித் தவிக்கும் கண்ணனின் மனத்தவிப்பு கவனிக்கத்தக்கது. அது எத்துணை ஆழமாக தாழ்த்தப்பட்டட மனங்களில் பதியப்பட்டுள்ளது என்பதை விளக்கும் தவிர்க்கவியலாத சித்திரமாக படைப்பில் இடம் பெறுகிறது. அவர்களது திருமணம் முடிந்து தனித்திருக்கும் வேளையில் கூட அவனால் இயல்பாக இருக்கவியலாத சூழலை நயமாக, ஆழமாகப் பதிவாக்கியுள்ளார் சூர்யா.
தான் நாட்டைக் காக்கும் பெருமைமிக்க பொறுப்பில் இருந்தாலும் தனது வீடேறி வந்து தாக்குவோரைத் தடுக்கும் திரணற்றவனாக இருக்கும் நிகழ்வை மனக்குமுறலுடன் கண்ணனின் சகோதரரான செந்தில் மனக்குமுறலுடன் விவரிப்பது வலியினை அளிக்கிறது.கருப்பனை விடக்காடன் பெரியது, காடனைக் காட்டிலும் மாடன் பெரியது, அவனைவிட காளியாத்தா பெரிது, மாரியாத்தா சக்தி வாய்ந்தது என தங்களது தெய்வங்களுக்கு மனிதனே வீரத்தையும், மகிமையையும் உண்டாக்கித் தருகிறான்.
இத்தனை நூற்றாண்டுகளாக நீடித்துவரும் இழிநிலைகள் இந்த சாமிகளுக்களுக்கெல்லாம் சம்மதமாயிருக்கத்தானே வேண்டும் அல்லது இத்தகைய சாமிகளே இல்லாமல்தான் இருக்கவேண்டும் என பலவாறாகக் குழம்பித் தவிக்கும் கண்ணனது மனநிலையினையும் சிறப்பாக விவரிக்கிறார் சூர்யா. மேலும், சாமிகளே இல்லையென்றாலும், சாமிகளைத் திட்டுவோரும் வழக்கம்போல் பிழைக்கிறார்களே எனும் வினாவும் அவன் உள்ளத்தில் எழுகிறது. அதுபோன்றே படிப்படியாக மிகத்தீவிரமான இடதுசாரி இயக்கத் தோழராக மாறும் முருகனது பரிணாம மாற்றத்தினையும் அருமையாகக் கூறுகிறார். அதே தருணத்தில் தனது தீவிரமான செயல்பாடுகளுக்குத் தடையாக சங்கத்தில் உறுப்பினர்களைச் சேர்த்து இயங்குவதற்குமான இடைவெளியும், சாதி, மதம், சுயநலம் எனும் தவிர்க்கவியலாத தடைகளையும் கண்டு அவன் மனம் புழுங்கிக் குமைவதையும் சூர்யா அழகாகக் கூறுகிறார்.
கூடுதல் தரவாக புளிச்சி குளம், சிட்டவண்ணாங்குளம் பகுதியில் தேவர் சாதிப்பிரிவைச் சேர்ந்தவர்களே இல்லையென்பதும், பெரும்பான்மையோர் தேவேந்திர குலத்தவரும், கம்பளத்தாருமே அங்கு வசிக்கின்றனர் என்பதற்கான காரணமும், அவர்கள் முத்துராமலிங்கத் தேவருக்கு ஏன் சிலை வைத்து பூசனை செய்கின்றனர் எனும் காரணமும் ஆச்சர்யத்தையும், சிலிர்ப்பையும் ஏற்படுத்துகிறது. பொன்னியின் கதாபாத்திரம் பெண்களுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது சிறப்பானது. தயங்கித் தடுமாறும் கண்ணனை சீரமைத்துச் செதுக்குவதாக மட்டுமல்லாது, தனக்கான வாழ்க்கையினை துணிவுடன் தெரிவு செய்பவளாகவும் அவள் கட்டமைக்கப்பட்டு இருக்கிறாள். இருப்பினும், இறுதியாக அவர்களிருவரும் ஆணவக் கொலையால் உயிரிழப்பது அறிவுடைமையும், துணிவும்கூட காதலர்களுக்குப் பாதுகாவலில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. தனித்திருக்கும் வேளையில் மனிதன் மனச்சாட்சியின் குரலைக் கேட்கிறான். பகுத்தறிவின் துணை கொண்டு சூழலைப் பார்க்கிறான்.
அதே மனிதன் குழுவாகக் கூடும் தருணத்தில் பொங்கிப் பெருகும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி மிருகமாகிறான். இதுவே இந்நாவல் வாசகன் முன் வைக்கும் பேசு பொருளாகிறது. பத்திரிகையாளராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றி வரும் நூலாசிரியர் சக்தி சூர்யா கவிதைத் தொகுப்பினையும், ஒரு கட்டுரைத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். இது இவரது முதல் நாவல் என்பது சற்றே வியப்புக்குரியது. கரிசல் காட்டு மாந்தர்களின் வீரம், ரோஷம், காதல், நட்பு, வன்மம், ஆணவம் உள்ளிட்ட நவரசங்களையும் குழைத்து நல்ல படைப்பினை அளித்துள்ளார். மேலும், தனது நிலம் சார்ந்த படைப்பினை நடுநிலையுடன், அறம் சார்ந்து மிக்க செறிவுடன் படைத்துள்ளார். உபதலைப்புகள் கருத்தாழத்துடன் மட்டுமல்லாது, இலக்கிய நயத்துடன் பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. நாவலின் நிறைவு குறிப்பிடத்தக்கது.
நிறைவாக்கிட தோழரும், படைப்பாளியுமான புலியூர் முருகேசனின் அணிந்துரை கூர்ந்து வாசிக்கத்தக்கது. மனுசாத்திரத்தின் வரிகளை ஆழமாக விரித்துச் சொல்லும் பாங்கு இப்படைப்புக்கு கூடுதலாக வலு சேர்க்கிறது. இப்பகுதியினை ஒவ்வொரு வாசகனும் கண்டிப்பாக வாசித்தல் வேண்டும். இன்றுவரை மாற்றமற்றுத் தொடரும் ஆணவக் கொலைகளைத் தடுத்திட பொதுவுடைமை இயக்கங்களும் மற்றும் தலித்திய இயக்கங்களும் தழைத்து வளர்ச்சி பெற்று தொடர் போராட்டங்களைத் தொடர்வதுமே சிறிய ஆசுவாசத்தை அளிப்பதாக உள்ளது. இவ்வியக்கங்கள் ஆதிக்க சாதிகள், அதிகார வர்க்கம் என்ற இரட்டை எதிரிகளை எதிர்கொண்டே இவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய சூழல் இன்று வரை நீடிக்கிறது. மேல் சாதியினம் தங்களது சாதி வெறி, குலப் பெருமை எனப் பேசி இளம் உள்ளங்களை இன்றுவரை கொன்றொழிக்கிறது.
இத்தகைய இழிவினை மாற்றிட தொடர் போராட்டங்களை இடையறாது நடத்திவரும் இயக்கத் தோழர்களை சிறப்பித்து பெருமைப்படுத்தும் விதமாக தோழர் சூர்யா இப்படைப்பினை உருவாக்கியுள்ளார். இதனைப் பதிப்பித்ததன் வாயிலாக பாரதி புத்தகாலயமும் இப்பெருமையில் பங்கெடுக்கிறது.