து.பா.பரமேஸ்வரி
2021ஆம் ஆண்டு நம் பதிப்பகத்தின் பிரசுரமாக வெளிவந்த ‘கலை இலக்கியா கவிதைகள்’, படைப்பாளி கலை இலக்கியா, தனது எழுத்தின் வழியாக ஒவ்வொரு வாசகரின் வாசிப்பிலும் இன்றும் வாழ்ந்து வருகிறார் தனது இறப்பிற்கு முன் தனது கவிதைகள் நிரம்பப் பெற்ற தொகுப்பொன்றை வெளியிட விரும்பியதும் புற்று நோயால் கடுமையாகப் பாதித்திருந்த காரணத்தால் தொகுப்பு வெளிவரும் முன்னமே இறந்துவிட்டதாக, தன் மெயிலுக்கு கலை இலக்கியா அனுப்பியிருந்த கவிதைகளைத் தொகுத்து கலை இலக்கியா கவிதைகள் என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டதாக தொகுப்பு குறித்த வரலாற்றை முன்னுரையில் காணமுடிகிறது.

ஒரு படைப்பாளி தனது வாழ்நாளில் தன்னை பாதித்த கடந்த காலத்தை இலக்கியத்தின் வழியாக ஆற்றுப்படுத்திக்கொள்வார். அவ்வாறாக இந்தத் தொகுப்பும் கலை இலக்கியாவின் ஆழ்வுணர்வுகளை மிக நெருக்கமாக அணுகுகிறது.
ஒவ்வொரு இழப்பையும் கேள்விக்குள்ளாக்கும் அவரது இந்த தனித்த பாணியே என்னை அவரது கவிதைத் தொகுப்பை ஆழமாக வாசிக்க வைத்தது. அவை வெறும் கவிதைகளாக என்னைப் பாதிக்கவில்லை. அவர் வாழ்ந்து கொண்டிக்கும் வாழ்வாகவே ஒவ்வொரு பக்கமும் என்முன் காட்சிப்படுகிறது. அவற்றின் ஒவ்வொரு கவிதையிலும் அவரின் ஜீவிதம் சுவாசிப்பதை ஒவ்வொரு வாசகரும் நுகர முடியும்.
இங்கு ஒரு கவிதை
‘உன் குரல் வந்து/முகம் காணாது மறையும் எனது அறையில்
உலகெங்கும் நிரம்பிய உன் உருவம்/என் கையில் எட்டாமலே போகுமா?’
-என காதலின் இயலாமையை கேள்வியாக்கியுள்ளார்.
’நொறுங்கி விழும் கட்டிடத்தில்/சிக்கிய குழந்தையென
உன் நினைவில் நான்’- என அதே காதலிடம் மன்றாடுகிறார்.
‘என் பேனா வழி வரும்
வார்த்தைக்கும் வரிக்கும்
நீதான் வேரும் நீரும்’ – என தனது மௌனத்தின் ஒவ்வொரு நீலத்தையும் காதலுக்கான வர்ணம் தீட்டியுள்ளார்.
காதல் இத்தனை பவ்யமானதாக இருக்குமா… இத்தனை தெளிவுடன் ஈர்க்கும் மனம் காதலுக்கு வாய்க்கப்படுமா? காதல் என்றாலே கண் தெரியாது, காது கேட்காது, சுய நினைவற்ற பித்து நிலை என்றெல்லாம் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட காதல்தான் கலை இலக்கியாவிடம் முதிர்ந்து முகிழ்கிறது. காதல் இத்தனை அனுசரணையாக இருந்துவிட்டால்தான் என்ன என்கிற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது இந்தக் கவிதை. இப்படியான புரிதல் கொண்ட காதல் சமூகத்தின் கல்லடிக்கு ஒருபோதும் சரிந்து விடாது என்பதை இந்த வரிகள் நிதர்சனமாக்குகிறது.
‘பொறுப்புகளை உணர்ந்து/தவறாமல் செய்து கொண்டிரு
உன்னைப் பற்றி நினைத்து/கவலை கொண்டு விடாதபடி
என்னைத் தகுதிபடுத்து/உன் நினைவே என்னுள் மிகுந்திருந்தால்
என் செயலில் தெளிவிருக்க முடியாது/என் செயலை செம்மைப்படுத்து
நேசம்/இழையோடத் துவங்கும் போதே/ஒருவருகொருவர்
தடையாகிவிடக்கூடாதென்னும்/உறுதியும் வேண்டும்
உனக்கான நான் என்பது/உன் செயல் சிறக்க/நான் உதவுவது என்னக்காக நீ என்பது/என் செயல் சிறக்க/நீ உதவுவது இது காதல், மற்றதெல்லாம் சும்மா.
கலை இலக்கியாவின் ஒவ்வொரு கவிதையும் கண் முன் நடக்கும் அநீதிகளுக்கெதிரான இலக்கியப் போராட்டம்.
‘எவ்வளவு முடியுமோ/கொள்ளையடியுங்கள்/உங்கள் தூண்டிலில்சிக்கிய மீனும்/புழுக்களும்/ஒரு நொடியில்/கழுத்தைக் கவ்வும்
முதலையாகும் வரை’
என்று ஓலமிடுகிறார். அது மட்டுமா? குற்றம் செய்யும் சமூகத்தை அவர் அணுகும் விதமே வேறு. ஒரு பேனா மட்டும் கொடு… ஒட்டுமொத்த யுகத்தையே நிமிர்த்தி விடுகிறேன் என்று அறைகூவலிடுகிறது கலை இலக்கியாவின் கவிதைகள். “நீ” கள் என்றொரு கவிதையில் பெண் பிள்ளைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை சமரசமின்றி சாடுகிறார்.
இன்று பிறந்த/குழந்தை மீது/வந்து விழும்/முரடர் போல/என் நினைவுகளில் நீ கள் விழும் வலியை/எப்படித்தான் எழுதித் தீர்ப்பேன்?
-சமூகத்தை மட்டுமல்ல, கையாலகாத அரசாங்கத்தையும் அதற்கு ஜால்ரா போடும் கையூட்டுகளுக்கும் அவரது மைக்கோல் விட்டு வைக்கவில்லை, குத்திக் கிழிக்கிறது. பெண் சிசுக் கொலைக்கு சாம்பிராணி போடும் தூபங்களை ஊதி அணைக்கிறார். அனைத்திற்கும் நானே கர்த்தாவாகவும் காரியமாகவும் இருப்பேன் என்று மேலாண்மை பேசும் இறையாண்மைக்கு சூடு போடுகிறார்.
காயாத தொப்பூழ்கொடியோடு/தொண்டைக்குழிக்குள்/மரணம் விழுங்கும் பெண் சிசுக்களுக்குள்/எனது உயிரிருப்பு ஏளனப்படுகிறது.
கொன்று வீசப்பட்டு/ கவ்வி இழுக்கும்/பிஞ்சுப் பிணங்களில்
நாறுகிறது உலகத்து இறையாண்மை/பிணமாக்கும் காட்டு மிராண்டிகளுக்கு உதவி செய்து/அதை நியாயப்படுத்தும்/பேய்களின் நாட்டில்.
பாலியல் வன்புணர்வு செய்யும் ஆணின் திமிர்த்தனத்தில் ஆத்திரம் கொள்ளும் தாயாகவே இங்கு கவிஞர் கதறுகிறார். ஆண் வக்கிரத்தில் தன்னை அடக்கிக்கொள்ள முடியாமல் தினவு எடுத்துத் திரியும் இந்த வர்க்கத்திற்கு கலை இலக்கியா சிம்ம சவாலாகவே இருக்கிறார். தனது கூர்தீட்டிய ரேகைகளில். நிறுத்தி அறைகிறார் தனது கவிதை வரிகளில்…
திமிறெடுத்த குறிகள்/நிரம்பிக் கிடக்கும் பூமியில்/பெண் குழந்தைகளை மடியில் ஒளித்தபடி/எந்தப் பதுங்குகுழிக்கு நாங்கள் போவது?/என் அண்ணனும் தம்பியும்/அப்பாவும் ஆருயிர் நண்பா/நீயிருக்கும் இந்தப் பூமியை விட்டு?
பெண்களுக்கான தனது தீக்க குரலில் முழங்குவது கலை இலக்கியாவின் இலக்கிய மையம் என்பேன். இதழ்களில் பிற நூல்களில் வெளி வந்த அவரது பெண்ணடிமை ஆதங்கக் கவிதைகள் ஒவ்வொரு பெண்ணின் ஆவேசத்தின் வெளிப்பாடு. இந்தத் தொகுப்பும் பெண் இனமாகப் பிறவியெடுக்கும் ஒவ்வொரு நாழிகையிலும் அவள் படும் சமூகத் துயரத்தின் விளிம்பில் ஒரு பெண்ணாக கலை இலக்கியா தன்னையே வருத்திக்கொள்கிறார்.
பெண்ணியம் பேசாத கவிஞர் உண்டோ இலக்கியத்தில் எனக் கேள்வி எழலாம். ஆனால் கலை இலக்கியாவின் ஆண்சமூகக் கோவம் ஒட்டு மொத்த சமூகத்தையே முச்சந்தியில் நிற்க வைத்து கேள்வி கேட்கிறது. அதில் ஓர் ஆதங்கம் தெரிகிறது. ஆவேசம் உச்சம் பெறுகிறது. மனதின் அழுகை கோவமாகத் தெறிக்கிறது. நொண்டியாகிப் போன சமூகத்தின் விளைவாக பெண்ணடிமை இருப்பதை ஒருகாலும் சமூகம் உணராது.
களை வெட்டப் போனாலும்/கலெக்குட்டரு ஆனாலும்/கடவுளாகவே இருந்தாலும்/பொம்பள வீடு வந்ததும்/எந்த ஆணும் அடித்துப் பிடித்து/வீட்டுக்கு வந்ததை/யார் கண்டார்?
ஆண் சமூகத்தின் மேட்டிமைப் போக்கை இதை விட யார் அதட்டிக் கேட்பது? மற்றொரு கவிதையில்,
கொன்று தொங்கவிட்டவர்கள்/எரித்தவர்கள்/நடுவீதியில் குத்தியவர்கள் என/அத்தனை பேருக்குமே/இளம் மனைவிகள் கிடைத்து விடுகிறார்கள்/சொத்தோடு சுகத்தோடு.
கணவன் இழந்த பெண் கைம்பெண்.கைகளையும் காமத்தையும் கட்டிப்போட்டு அடக்க ஒடுக்கமாக குடும்பமே கோயிலாக வாழ்ந்து விட்டு மடிய வேண்டியதுதான் காலம் முச்சொட்டிலும். அதே மனைவியை இழந்த ஆண்கள் எப்போதும் புது மாப்பிள்ளைகள். மணமண்டபமும் பூமாலையும் அவர்களுக்காக எப்போதும் தயாராக இருக்கும். அபலைப் பெண்களின் சார்பில் போராடவும் கண்ணீர் விடவும் ஆண் மமதையை துடைத்தெறியவும் ஒரு பெண்ணால் மட்டுமே அதிலும் பேனா பிடிக்கும் கரங்களால் மட்டுமே சாத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் கவிஞர் தனது ஆக்ரோஷ வரிகளில்.
ஒரு சிங்கத்தின் காட்டில் புழுக்கையாய் இருப்பதைவிட/ ஒரு தூக்கணாங்குருவிக் கூட்டில் /மின்மினியாய் இருந்து சாகலாம்.
என்கிற வரிகள் ஏழை பாழைகளுக்கு ஒளி விளக்காக இருப்பதில் கிடைக்கும் சுயமரியாதையும் உள்ளாழ்ந்த திருப்தியும் அடுக்குமாடி அடிமை வாழ்வு ஒருகாலும் இட்டுத்தராது. ஆதிக்கம் இருக்கும் இடத்தில் அன்பும் மனிதர் மீதான கருணையும் தங்காது. கலை இலக்கியாவின் இறுதிக் காலங்கள் மிக உபாதையானது. உள்ளுக்குள் ஊடுருவிய புற்று அவரின் உடலை மட்டுமல்ல மனதையும் அரித்து நரகமாக்கியது என்பதை கண்ணீர் சொட்டச் சொட்ட கவிதையாக்கியுள்ளார். மரணத்தைவிட வதையானது நோயுற்ற காலங்கள். படுக்கையில்கூட பாசமான அம்மாவின் அன்பிற்காகப் பரிதவிக்கிறது புற்றுஅரித்துக் கொண்டிருந்த இதயக்கூடு சென்ற இந்த வைகாசி நாட்களில்.
நாகங்களின் தொகைப்புற்றிற்குள்/நழுவி விழுந்திருந்தது இதயம்/அந்த இரும்பை காந்தம் கொண்டு/கவர முயன்றேன்/என் இதயத்தை மசித்து பாம்புகளின் உரைக்கு/வாசனையாக்கியிருந்தார்கள்/அம்மாவின் கிழிந்த நூல் சேலையில்/ஒத்தி எடுத்து விடத் துடித்தேன்/அதை நீல விஷமாக்கி என்/உதடுகளிலடித்தார்கள்/அதே வைகாசியில் இன்று/அந்த இதயம் மகுடியாகியிருந்து/நான் கரையானாகியிருக்கிறேன்.
பெண்களுக்குத்தான் எத்தனை வேதனைகள். விடுப்பு ஓய்வு, பொழுதுபோக்கு, மனமகிழ்ச்சி என எதுவும் வாய்க்காது. நாளும் பொழுதும் நலிந்தவருக்கு இல்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை என்கிற ஒரு கவிஞரின் ஓய்வின்றி குடும்பத்திற்காக உழைத்து சலித்த பெண்மன வெதும்பல்களை இதைவிட வேறு எப்படி எடுத்துக் கூற முடியும்.. கலை இலக்கியாவும் ஓய்வுக்காக ஏங்கும் பெண்களின் மனதைப் படம்பிடித்து புடமிடுகிறார். அடுக்களையும் புழக்கடையும் பெண்களின் நிரந்தர வசிப்பிடமாகி விடுகிறது. அவர்களுக்காக இந்த ஆணவ சமூகத்திடம் வாதிடுகிறார்.
ஒரு ஆறு மாத காலத்திற்கு என்னை/தனிமைச் சிறையில் அடையுங்கள்/நான் ஓய்வெடுத்துக் கொள்ளப்போகிறேன்/செய்யத் தொடரும்/மதிப்பற்ற வேலைகளால்/அலுத்துச் சலித்த என்/ஆயிரங்காலங்கள் ஓய்வு கேட்கின்றன.
இந்தக் கவிதை பல கோணங்களில் நம்மை அணுகுகிறது. கற்பு சூறையாடப்படும் காதலியின் ஆத்மீக வேதனையில் தவிக்கும் ஓர் உயிரின் ஆதங்கமாகவே இந்த வரிகள் என்னை அமிழ்த்துகின்றன. தொகுப்பின் கவிதைகள் பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகளுக்கான நீதி கேட்டு மன்றாடவில்லை. பெண்களின் தரப்பில் நின்று கொண்டு பெண்ணியப் புரட்சி செய்கிறது. மிரட்சி கண்ட ஆண்களின் ஆதிக்க வக்கிரத்திற்கு அமிலமிடுகிறது. எப்போதுமே காத்திரம் மிக்க எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரான கலை இலக்கியாவின் கவிதை மொழி.
தமிழின் கனத்த ஆற்றல் சக்தி. துரித மாற்றத்திற்கான திறவுகோல். கண்முன் நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்காத சமூகம் விளைவுகளைச் சந்திக்கும் என்பதற்கு கலை இலக்கியாவின் கவிதை நிரூபணங்கள், அடங்காத ஆண்களுக்கும் அநீதிக்கு துணை போகும் மனிதர்க்குமான சூலமாக விழுகிறது. ஒட்டு மொத்த அபலைகளுக்கான போராட்டங்களுக்கு கலை இலக்கியாவின் இந்த ஒற்றைத் தொகுப்பு போதுமானது என்பதில் எனக்கு நம்பிக்கையுள்ளது. நீதி கேட்டு நிற்கும் பெண்ணினத்திற்கு தீர்ப்பு வழங்கும் நீதித் தராசாக நிற்கிறது கலை இலக்கியாவின் ஆதங்கங்கள்..