எஸ்.வி.ராஜதுரை

தமிழ்
1. 1931 அக்டோபர் மாதத்தில் அறிக்கையின் முதல் தமிழாக்கம் வெளிவந்தது. பெரியார் ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்க வார ஏடான ‘குடி அரசு’, 1931 அக்டோபர் 4 முதல் தொடர்ச்சியாக ஐந்து இதழ்களில் ‘சமதர்ம அறிக்கை’ என்னும் தலைப்பில் அறிக்கையின் முதல் பிரிவின் (‘பூர்ஷ்வாக்களும் கம்யூனிஸ்ட்களும்’) தமிழாக்கத்தை வெளியிட்டது. மொழிபெயர்ப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் முதல் பகுதி பெரியார் ஈ.வெ.ரா.வின் அறிமுகவுரையுடன் வெளியிடப்பட்டது.
அறிக்கையின் முதல் பிரிவின் தமிழாக்கத்தின் கடைசிப் பகுதியை வெளியிட்ட ‘குடி அரசு’ 1.11.1931ஆம் தேதிய இதழ், அறிக்கையின் பிற பிரிவுகளின் மொழியாக்கமும் வெளிவரும் என்று அறிவித்தது. ஆனால், அந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் நாளன்று பெரியார் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு பல மாதங்களுக்குப் பிறகே திரும்பி வந்ததால், பிற பிரிவுகளின் மொழியாக்கம் ஏதும் வரவில்லை. சோவியத் யூனியனில் அவர் 14.2.1932 முதல் 17.5.1932 வரை தங்கி, அங்கு ஏற்பட்டு வந்த சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை அறிந்து வந்தார்.
2. அறிக்கையின் முழுமையான முதல் தமிழாக்கம், எம்.இஸ்மத் பாட்சாவால் செய்யப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூல் வெளியீட்டகமான ‘ஜனசக்தி’ பிரசுராலயத்தால் 1948 ஏப்ரலில் வெளியிடப்பட்டது. பதினாறு பக்க அறிமுகவுரையுடன் கூடிய இந்த 91 பக்க மொழியாக்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை எனத் தலைப்பிடப்பட்டிருந்தது. இது எந்த ஆங்கிலப் பதிப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.
3. அதன் பிறகு என்.சி.பி.ஹெச். பதிப்பகத்தாரால் ‘கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’ என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு தமிழாக்கத்தில் 1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிப்பாளர் குறிப்பாகப் பின்வரும் வாசகங்கள் உள்ளன: சென்னை ‘ஜனசக்தி’ பிரசுராலயத்தார் தமிழில் 1948இல் இந்த நூலை முதலில் வெளியிட்டனர். எங்களுடைய இந்தப் பதிப்பு 1955–இல் மாஸ்கோ ‘அன்னிய மொழி பதிப்பகம்’ வெளியிட்ட ஆங்கில நூலிலிருந்து தோழர் ராமகிருஷ்ணன் முற்றிலும் புதிதாக மொழிபெயர்த்ததாகும்”. எனவே அது 1888ஆம் ஆண்டு சாமுவேல் மூர்-எங்கெல்ஸ் ஆங்கிலப் பதிப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரியவருகிறது.
அறிக்கையின் பல்வேறு பதிப்புகளுக்கு மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய அனைத்து முன்னுரைகளின் தமிழாக்கங்களையும் உள்ளடக்கிய இந்தப் பதிப்பில் மொழிபெயர்ப்பாளர் எழுதிய சில அடிக்குறிப்புகளும் உள்ளன. அறிக்கையின் பெரும்பாலான பகுதிகள் சிறப்பாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், ‘பூர்ஷ்வாக்களும் தொழிலாளர்களும்’ என்ற பகுதியில், ‘traditional property relations’ என்பது ‘கர்ணபரம்பரையாக வந்த உடைமை உறவுகள்’ என்றும் ‘சோசலிச இலக்கியமும் கம்யூனிச இலக்கியமும்’ என்ற பகுதியில் ‘hindquarters’ என்பது ‘பின்வீட்டில்’ என்றும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது வியப்பளிக்கிறது (ரா.கிருஷ்ணையாவின் மொழியாக்கத்திலிருந்து இதுவரை தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகளுடன் தொடர்புடைய பதிப்பகங்கள் வெளியிட்ட எல்லா மொழியாக்கங்களிலும் அச்சொல் ‘முதுகுப்புறம்’ என்றே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. என் மொழியாக்கத்தில் அது ‘புட்டம்’ என்றும், கே.சுப்பிரமணியத்தின் மொழியாக்கத்தில் ‘பின்புறத் தொடைப் பகுதி’ என்றும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1948 பிப்ரவரியில் இலங்கையில் வெளிவந்த மொழியாக்கத்தில் ‘பின்னணி’ என்றுள்ளது).
எஸ்.ராமகிருஷ்ணன் தந்துள்ள அடிக்குறிப்புகளில் ஒன்றைத் தவிர மற்றவை சரியாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன. ஆனால், அறிக்கையின் முதல் பகுதியிலுள்ள (‘பூர்ஷ்வாக்களும் தொழிலாளர்களும்’) ஒரு பத்தியில் உள்ள ‘Knights’ என்ற சொல், தமிழாக்கம் செய்யப்படாமல் அப்படியே ‘னைட்டுகள்’ என்று தமிழில் வைத்துக்கொள்ளப்பட்டதுடன், அதற்கான அடிக்குறிப்பும் தவறாகவே உள்ளது: “ரோமாபுரியில் னைட்டுகள் என்பவர்கள் பெரும்பாலாக லேவாதேவிக்காரர்களாகவும் வரி வசூலிப்பவர்களாகவுமே இருந்தனர்”.
4. 1960ஆம் ஆண்டில் மாஸ்கோவிலிருந்த ‘அயல் மொழிப் பதிப்பகம்’ 1888ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பிலிருந்து செய்யப்பட்ட தமிழாக்கத்தை வெளியிட்டுள்ளது. முன்பு வந்த தமிழாக்கங்களைவிடச் சிறப்பாக உள்ள இதில், அறிக்கையின் முதல் பகுதியின் தலைப்பு முதல் முறையாக ‘பூர்ஷ்வாக்களும் பாட்டாளிகளும்’ என்று சரியாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1955ஆம் ஆண்டு எஸ்.ராமகிருஷ்ணனின் தமிழாக்கத்தைப்போலவே அறிக்கையின் பல்வேறு பதிப்புகளுக்கு மார்க்ஸும் எங்கெல்ஸும் எழுதிய முன்னுரைகளின் தமிழாக்கங்களும் சேர்க்கப்பட்டுள்ளதும் ஏராளமான விளக்கக் குறிப்புகளைக் கொண்டதுமான இந்த 174 பக்கத் தமிழாக்கத்தைச் செய்தவர் பெயர் இல்லாமல் போனது வருத்தத்துக்குரியது.
5. 1888ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பிலிருந்து ரா.கிருஷ்ணையா செய்த தமிழாக்கத்தை 1969இல் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
6. ரா.கிருஷ்ணையாவின் தமிழாக்கத்தை மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் 1975இல் வெளியிட்டது. அதிலிருந்து இதுவரை கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்புடைய பதிப்பகங்கள் வெளியிட்ட தமிழாக்கங்கள் அனைத்தும் கம்யூனிஸ்டுக் கட்சியின் அறிக்கை என்றே தலைப்பிடப்பட்டுள்ளன. என்னிடம் 1979ஆம் ஆண்டில் வெளிவந்த பதிப்பு உள்ளது. அது மறுஅச்சாக்கமா அல்லது புதிய பதிப்பா என்ற விவரங்கள் ஏதும் அதில் இல்லை.
7. இதற்கிடையே, தொழிற்சங்கத் தலைவரும் கம்யூனிஸ்ட் போராளியுமான ஏ.எஸ்.கே. எழுதிய கம்யூனிசம் என்ற நூல் 1975இல் வெளிவந்தது. அதன் பின்னிணைப்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையின் தமிழாக்கம் உள்ளது. அது எஸ்.ராமகிருஷ்ணனின் மொழியாக்கத்திலிருந்து வேறுபட்டு இருக்கிறது என்றாலும், அந்த மொழியாக்கத்தைச் செய்தவரின் பெயர் ஏதும் அதில் குறிப்பிடப்படவில்லை.
8. 1983இல் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் தெரிவு நூல்களில் 12இல் முதல் நூலில் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையின் தமிழாக்கம் உள்ளது. அதிலும் மொழிபெயர்ப்பாளர் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அது சொல்லுக்குச் சொல் ரா.கிருஷ்ணையாவின் மொழியாக்கம்தான் என்பதில் ஐயமில்லை. மொழியாக்கத்துக்குத் தேவையான உசாத்துணை நூல்கள், தகவல்கள் ஆகியன கிடைப்பதற்கு அரிதாக இருந்த அந்தக் காலத்தைக் கருத்தில் கொண்டால் ரா.கிருஷ்ணையாவுக்கு நாம் தலைவணங்கியே தீர வேண்டும். மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தால் பலமுறை மறுஅச்சாக்கமோ, மறுபதிப்போ செய்யப்பட்ட ரா.கிருஷ்ணையாவின் மொழியாக்கத்தின் பிரதிகள்தான் இலட்சக்கணக்கில் விற்பனையாகியுள்ளன.
9. ஆர்.பார்த்தசாரதி (ஆர்.பி.எஸ்.) எழுதி, சென்னையிலுள்ள அறிவுப் பதிப்பத்தால் 2001இல் மார்க்சியம்-எதிர்காலம் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை ஒட்டி) என்னும் நூலில் அறிக்கையின் பகுதிகள் ஆர்.பி.எஸ்.ஸால் சுயமாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
10. கி.இலக்குவன் செய்த தமிழாக்கம், சென்னை ‘பாரதி புத்தகாலயம்’ 2007 செப்டம்பரில் வெளியிட்டது. இதில், 1888ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையின் தமிழாக்கம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
11. தேவ.பேரின்பனின் மொழியாக்கத்தை சென்னை ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ 2008 ஜனவரியில் வெளியிட்டது. இதில் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் 1872ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கும், எங்கெல்ஸ் 1883ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பு, 1888ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பு ஆகியவற்றுக்கும் எழுதிய முன்னுரைகளின் தமிழாக்கங்களும், அறிக்கை பற்றி தேவ.பேரின்பன் எழுதிய அறிமுகவுரையும் இடம் பெற்றுள்ளன.
கி.இலக்குவன், தேவ.பேரின்பன் ஆகியோரின் இரு மொழியாக்கங்களும் பெரிதும் ரா.கிருஷ்ணையாவின் மொழியாக்கத்தை ஒட்டியவையாகவே உள்ளன.
12. விரிவான விளக்கக் குறிப்புகள், வரலாற்றுத் தகவல்கள் ஆகியவற்றுடன், எங்கெல்ஸால் மேற்பார்வையிடப்பட்ட சாமுவேல் மூரின் மொழியாக்கத்திலுள்ள பாடபேதங்களைச் சுட்டிக்காட்டியும் ஹால் ட்ரேப்பர், டெர்ரெல் கார்வெர் முதலியோரின் புதிய ஆங்கில மொழியாக்கங்களைப் பயன்படுத்தியும் எஸ்.வி.ராஜதுரை செய்துள்ள தமிழாக்கத்தின் இரு பதிப்புகள் 2014இல் வெளிவந்தன.
13-14. ரஷியப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நூறாவது ஆண்டு நிறைவையொட்டி,1983இல் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் தேர்வு நூல்களின் 12 தொகுதிகளை பாரதி புத்தகாலயமும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸும் மறுவெளியீடு செய்துள்ளன. மாஸ்கோ பதிப்பில் இருந்த மொழியாக்கங்களில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளதாக இரு பதிப்பாளர்களும் கூறியபோதிலும் அத்திருத்தங்கள் மேலோட்டமானவையே. இந்த இரு பதிப்பாளர்களின் வெளியீடுகளிலும் தொகுதி 1இல், கார்ல் மார்க்ஸின் ஃப்யர்பாக் பற்றிய ஆய்வுரைகள், எங்கெல்ஸின் கம்யூனிசத்தின் கோட்பாடுகள், மார்க்ஸ் எங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஆகியவற்றின் தமிழாக்கங்கள் உள்ளன.
பாரதி புத்தகாலயப் பதிப்பில் இவை மு.சிவலிங்கம் என்னும் தோழரால் புதிதாக செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், மாஸ்கோ பதிப்பிலுள்ள தமிழாக்கங்களே சில மேலோட்டமான மாற்றங்களுடன், புதிய மொழியாக்கங்களாக நமக்கு வழங்கப்பட்டுள்ளன. இது நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் வெளியீட்டுக்கும் பொருந்தும். அறிக்கையின் மூன்றாவது பகுதியின் சில பத்திகளை மொழியாக்கம் செய்வதற்கு இம்மானுவேல் காண்ட், ஃபயர்பாஹ் ஆகியோரின் கருத்துகளுடனான அறிமுகம் இன்றியமையாதது. அது இல்லாமல் போனால், புதிய மொழியாக்கத்திற்கு உரிமை கொண்டாடுபவர்களால் வார்த்தைக்கு வார்த்தை நேரடியாக மொழியாக்கம் செய்வதற்குமேல் வேறெதையும் செய்ய இயலாது.
அதுமட்டுமின்றி இந்த இரண்டு பதிப்பாளர்களின் வெளியீடுகளில், ஆங்கிலப் பதிப்புகளிலுள்ள பல வாக்கியங்கள் மிகத் தவறாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக கம்யூனிசத்தின் கோட்பாடுகளின் தமிழாக்கத்திலுள்ள சில வாக்கியங்களைக் காண்போம்:
(அ). Finally, in Germany the decisive struggle between the bourgeoisie and the absolute monarchy is still to come (MECW 6:356) என்பது ‘இறுதியாக, ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதேச்சாதிகார முடியாட்சிக்கும் இடையிலான போராட்டமே இன்றைக்குத் தீர்மானகரமான போராட்டமாகும்’ என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அந்தப் போராட்டம் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் எழுதப்பட்ட 1847ஆம் ஆண்டில் நடக்கவில்லை. 1848இல்தான் மேற்சொன்ன இரு சக்திகளுக்கும் இடையிலான போராட்டம் நடந்தது. ஆனால், அது தீர்மானகரமானதாக இருக்கவில்லை என்பதும் பூர்ஷ்வா வர்க்கம் வரம்பிலா முடியாட்சியுடன் சமரசம் செய்துகொண்டதும் வேறு விஷயங்கள்.
(ஆ). ‘The only advantages which the victory of the bourgeoisie will provide for the Communists will be: 1. various concessions which make easier for the Communists the defence, discussion and spreading of their principles and thus the unification of the proletariat into a closely knit, militant and organised class’ என்பது பின்வருமாறு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது:
“முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றியிலிருந்து கம்யூனிஸ்ட்கள் தருவித்துக்கொள்ளக்கூடிய சாதகமான கூறுகள் கீழ்க்கண்டவற்றை மட்டுமே உள்ளடக்கியிருக்கும்: 1.(கம்யூனிஸ்ட்களுக்குக் கிடைக்கும்) பல்வேறு சலுகைகள், பாட்டாளி வர்க்கத்தை ஒரு கச்சிதமான, போர்க்குணம் கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்டுள்ள வர்க்கமாக ஒன்றிணைக்கக்கூடிய வாய்ப்பினை நல்கும்.
சரியான மொழியாக்கம்:
(அ) ‘இறுதியாக, பூர்ஷ்வா வர்க்கத்துக்கும் வரம்பிலா முடியாட்சிக்கும் இடையிலான தீர்மானகரமான போராட்டம் இனிமேல் வரவிருக்கிறது’.
(ஆ) ‘பூர்ஷ்வா வர்க்கத்தின் வெற்றி பாட்டாளி வர்க்கத்திற்குத் தரக்கூடிய அனுகூலங்கள் கீழ்க்கண்டவையாக மட்டுமே இருக்கும்:
- பாட்டாளி வர்க்கம் தனது கருத்துகளை நியாயப்படுத்திப் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும், தனது கோட்பாடுகளைப் பரப்புவதற்கும் இதன் மூலம் தன்னை நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட, போராட்ட குணமிக்க, ஒழுங்கமைக்கப்பட்ட வர்க்கமாக ஐக்கியப்படுத்துவதற்குமான பல்வேறு சலுகைகள்’.
புதிய மொழியாக்கத்தைச் செய்துள்ளதாக உரிமை கொண்டாடுபவர், 1983ஆம் ஆண்டில் வெளிவந்த பதிப்பிலுள்ள மொழியாக்கத்தையாவது அப்படியே எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். அந்த மொழியாக்கம் பின்வருமாறு:
(அ) ‘இறுதியாக, ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதேசாதிகார முடியாட்சிக்கும் இடையிலான தீர்மானகரமான போராட்டம் இன்னும் அருகே காணப்படுகிறது’.
(ஆ) ‘முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றி கம்யூனிஸ்ட்களுக்கு வழங்கக்கூடிய சாதகங்கள் இவை மட்டுமே:
- கம்யூனிஸ்ட்கள் தங்கள் கோட்பாடுகளை தாங்கி ஆதரிக்கவும், விவாதிக்கவும், பரப்பவும் செய்யும் பணிகளை எளிதாக்க உதவும் பல்வேறு சலுகைகள். இதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தை ஒரு கச்சிதமான, போராடும் திறனுடைய சிறந்த அமைப்புத் திரட்சியுள்ள வர்க்கமாக ஒன்றிணைக்க முடியும்’.
மேலும், ‘absolute monarchy’ என்பது எதேச்சாதிகார முடியாட்சியோ, சர்வாதிகார முடியாட்சியோ அல்ல ‘முடியாட்சி’ என்றாலே ‘சர்வாதிகாரம்’ அல்லது ‘எதேச்சாதிகாரம்’தான்.) மாறாக ‘வரம்பிலா முடியாட்சி’ என்பது முடியாட்சியின்கீழ் உருவாக்கப்பட்ட ‘ஆலோசனை அவைகள்’, ‘நாடாளுமன்றம்’ போன்ற நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்கு அடங்காத அதிகாரத்தைக் கொண்டதாகும்.
16. ‘மார்க்சியம் இன்றும் என்றும்’ என்னும் தலைப்பில் கோவை ‘விடியல்’ பதிப்பகம் 2018இல் வெளியிட்ட மூன்று தொகுதிகளிலொன்று அமெரிக்க மார்க்ஸிய அறிஞர் ஃபில் காஸ்பெரின் நூலின் (The Communist Manifesto – A Road Map to History’s Most Important Political Document) (சில பகுதிகளைத் தவிர்த்த) தமிழாக்கம். கம்யூனிஸ்ட் அறிக்கை எனத் தலைப்பிடப்பட்டுள்ள இதில் ஃபில் காஸ்பரின் விளக்கரைகளுடன் கூடிய அறிக்கையின் ஆங்கில மொழியாக்கம் (எங்கெல்ஸ்-மூர் மொழியாக்கம்), எங்கெல்ஸின் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் ஆகியவற்றின் தமிழாக்கங்கள் உள்ளன. பில் காஸ்பரின் நூலிலுள்ள சில பகுதிகள் நீங்கலாக தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள இந்தப் பதிப்பில் Karl Marx & Friedrich Engels, The Communist Manifesto என்ற தலைப்பில் இலண்டனிலுள்ள ‘விண்டேஜ்’ பதிப்பகம் வெளியிட்டுள்ள பதிப்புக்கு கிரேக்க இடதுசாரி பொருளியலாளர் யானிஸ் வரூஃபாகிஸ் (Yanis Varoufakis) எழுதியுள்ள விரிவான முன்னுரையின் மொழியாக்கம் சேர்க்கப்பட்டுள்ளது.
கே.சுப்பிரமணியன், இந்திய வரலாற்றில் பகவத் கீதை நூலைச் சிறப்பாக மொழியாக்கம் செய்தவர். தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் நல்ல புலமை உடையவர். தனித் தமிழ் ஆர்வலர். ஆனால் அவருக்கு மார்க்ஸியப் படிப்பு ஏதும் இல்லை. அதன் காரணமாகவோ, தனித்தமிழ் பற்றின் காரணமாகவோ அவர் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள, எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய கலைச் சொற்களைக்கூடத் தவறான பொருள் தரும் வகையில் மொழியாக்கம் செய்துள்ளார். அவற்றில் சிலவற்றை எடுத்துக்காட்டும் முன், எங்கெல்ஸின் பெயரை நூல் முழுக்க ‘ஏஞ்செல்ஸ்’ என்றே எழுதியுள்ளார் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சில கலைச்சொற்களுக்கான அவரது தமிழாக்கம்:
Capitalism: மூலதன முதலாளியம் (மூலதனம் இல்லாத முதலாளியமும் இருக்கும்போலும்!)
Means of Production: பொருள் உருவாக்கக் கருவிகள்
Instruments of Production: பொருள் உருவாக்கத் துணைக் கருவிகள்
Productive Forces: பொருள் உருவாக்கத் திறம்
Relations of Production: பொருள் உருவாக்க உறவுகள்.
(பொருள்) உற்பத்திக்கும் பொருள் உருவாக்கத்திற்குமுள்ள வேறுபாட்டை விளக்கத் தேவையில்லை.
‘பொருள் உருவாக்கத் திறம்’ (Productive Forces) என்பதற்கு அவர் தரும் விளக்கம்: திறம் –உள்ளடங்கிய பொருள்கள் எனப் பன்மை சுட்டும் சொல். பொருள் உருவாக்கத் தொழில்முறையில் பெருமளவு விளைச்சல் பெறுவதற்கான உள்ளடங்கிய பொருள்கள். அவைதாம் பொருள் உருவாக்கக் கருவிகள், மனித உழைப்பாற்றல், மனிதப் பட்டறிவாற்றல் ஆகியன.
ஆனால், உற்பத்தி சக்திகள் (Productive Forces) என்று மார்க்ஸியம் கருதுவது பின்வருவனவற்றை: அனைத்துவகை உழைப்பு (தனிமனித உழைப்பு, கூட்டு உழைப்பு); உற்பத்திக் கருவிகள் (Instruments of Production): கட்டடங்கள், இயந்திரங்கள்; பொருளுற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள், உழைப்பு.
சிலுவைப் போர்கள் என்பன புதிய நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவதற்காகவும், தங்கள் ஆட்சியெல்லைகளை விரிவுபடுத்துவதற்காகவும் ஐரோப்பிய முடியாட்சிகள், நிலமானிய சக்திகள் ஆகியன போப்பின் ஆசியுடன் மதத்தின் பெயரால் நடத்திய போர்கள் என்று மார்க்ஸியம் கருதுகிறது. ஆனால் இதற்கு கே.சுப்பிரமணியன் கிறிஸ்துவ சார்பு விளக்கம் கொடுக்கிறார்: “இறைத் தூதர் முகமது அரேபியப் பகுதிகளில் இசுலாமியப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
அவரது வழித்தோன்றல்கள் இசுலாமியப் புரட்சியை மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் எடுத்துச்சென்றவர்களாகத் தங்கள் போர் வலிமையால் பல நாடுகளைக் கைப்பற்றினர். கிறிஸ்து பிறந்து, இறைப்பணி ஆற்றி, இறந்து, உயிர்த்தெழுந்த பாலஸ்தீனா (இன்றைய இஸ்ரேல்) நாட்டையும் உரோமையர்களிடமிருந்து இசுலாமிய சராசன்கள் கைப்பற்றிக்கொண்டனர். எனவே கிறிஸ்துவ நினைவுச் சின்னங்கள் நிறைந்த எருசலேம் நகரையும் பாலஸ்தீனா நாட்டையும் சராசன்களிடமிருந்து மீட்பதற்காக ஐரோப்பிய கிறிஸ்துவ நாடுகள் பாலஸ்தீனா மீது படை கொண்டு சென்று பல போர்களைத் தொடர்ச்சியாக நடத்தின. அவை சிலுவைப் போர்கள் என அழைக்கப்படுகின்றன.”
தனித்தமிழில் எழுதும் ஆர்வம் கொண்ட இந்த மொழிபெயர்ப்பாளரால் ஏராளமான பிற மொழிச் சொற்களைத் தவிர்க்க முடியவில்லை என்பதோடு எளிதில் புரியவைக்கக்கூடிய கருத்துகளை விளங்கா வண்ணம் மொழிபெயர்த்துள்ளார்.
எங்கெல்ஸின் கம்யூனிசத்தின் கோட்பாடுகளில் உள்ள சில வாக்கியங்கள் சுப்பிரமணியத்தால் தவறாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு ஃபில் காஸ்பெரும் காரணம். அதாவது, காஸ்பெர், எங்கெல்ஸின் இந்தப் படைப்பின் பழைய ஆங்கில மொழியாக்கத்தைப் பயன்படுத்தியுள்ளார். மிக அண்மைய ஆங்கில மொழியாக்கத்திலுள்ள வரிகளே மேலே காட்டப்பட்டுள்ளன. பழைய ஆங்கில மொழியாக்கத்தில் உள்ள ‘In Germany, finally, the decisive struggle now on the order of the day is that between the bourgeoisie and the absolute monarchy’ என்ற வரிகளும்கூட ‘இறுதியாக, ஜெர்மனியில் நடக்கவிருக்கின்ற தீர்மானகரமான போராட்டம் பூர்ஷ்வா வர்க்கத்துக்கும் வரம்பிலா முடியாட்சிக்கும் இடையிலானதாகும்’ என்றே மொழியாக்கம் செய்யப்பட வேண்டுமேயன்றி, கே.சுப்பிரமணியன் செய்துள்ளதுபோல ‘ஜெர்மனியின் இன்றைய நாட்களில், நல்லதொரு சமூகத் தீர்வுக்கான போராட்டம் மூலதன முதலாளிகள் மற்றும் சட்ட ஆட்சிக்குக் கட்டுப்படாத முடியரசு ஆகியவற்றுக்கு இடையிலானதே’ என்றல்ல.
ஃபில் காஸ்பெர் பயன்படுத்தியுள்ள பழைய ஆங்கில மொழியாக்கத்தில் உள்ள ‘The sole advantages which the proletariat would derive from a would consist (1) in various concessions which would facilitate the unification of the proletariat into a closely knit, battle-worthy, and organized class’ என்பதும்கூட ‘மூலதன முதலாளியம் பெறும் வெற்றியானது, பாட்டாளி வகுப்புக்குப் பெற்றுத் தரும் பயன்களாக இருக்க வேண்டியவை: பாட்டாளிகள், நெருக்கமாக ஒன்றிணைக்கப்பட்ட, போராட்ட வலிமை பெற்ற, ஒழுங்குடன் கட்டமைக்கப்பட்ட ஒரு வகுப்பாக உருவாவதற்கு உதவுவனவாக இருக்க வேண்டும்’ என்று தவறாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது (அடிக்கோடுகள் என்னால் இடப்பட்டவை-எஸ்.வி.ஆர்.)
2014க்குப் பிறகு வெளிவந்த தமிழாக்கங்களில் கே.சுப்பிரமணியத்தின் மொழியாக்கம் ஒன்றில் தவிர எஸ்.வி.ராஜதுரையின் தமிழாக்கங்களின் இரு பதிப்புகள் குறிப்பிடப்படுவதில்லை.
இலங்கையில் வெளிவந்த தமிழாக்கம்
17. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்ப்பாண கமிட்டியால் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிக்கையின் நூறாவது ஆண்டையொட்டி அதன் தமிழாக்கம் கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அறிக்கைக்கு மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய முன்னுரைகளின் தமிழாக்கங்கள் ஏதும் இல்லாத அந்தத் தமிழாக்கத்தில், அது எந்த ஆங்கில மொழியாக்கத்திலிருந்து செய்யப்பட்டது என்ற விவரம் இல்லை. மேலும், அறிக்கையின் முகப்புரையின் முதல் பத்தியில் ஜெர்மன் மூலத்திலோ அல்லது 1888ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பிலோ இல்லாத சொற்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக: அறிக்கையின் முகப்புரையில் உள்ள போப், ஜார், மெட்டெர்னிஹ் ஆகிய பெயர்களுக்கு பெயரடைகள் சேர்க்கப்பட்டுள்ளன – முறையே மத ஸ்தாபனத்தின் தலைவர், ருஷ்ய சக்ரவர்த்தி ஜார், ஆஸ்ட்ரிய பிரதம மந்திரி.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க காலத்தில் முன்னணிச் செயல்வீரர்களாக இருந்த எஸ்.ராமசாமி ஐயர், எஸ்.கே.கந்தையா ஆகிய இருவரால் இந்தத் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது (எஸ்.கே.கந்தையாவின் துணைவியார் வேதவல்லியும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்து பெண்ணுரிமைக்காகவும் தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டிருக்கிறார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் புலமை பெற்றிருந்திருக்கிறார்.) எஸ்.ராமசாமி ஐயரும் எஸ்.கே.கந்தையாவும் வர்க்கப் பிரச்சினைகளோடு சாதி, தீண்டாமைப் பிரச்சினைகளையும் கருத்தில்கொண்டு செயல்பட்டவர்களாக இருந்திருக்கின்றனர்.
இத்தமிழாக்கத்திலுள்ள அடிக்குறிப்புகள் பயனுள்ளவையாக இருப்பினும், ‘Knight’ என்னும் ஆங்கிலச் சொல் ‘னைட்’ என்றே தமிழாக்கம் செய்யப்பட்டு, அதற்கான தவறான விளக்கம் தரப்பட்டுள்ளது:‘புராதன ரோமாபுரியில் லேவாதேவி செய்பவரும் பெரிய வியாபாரிகளும் ‘னைட்டுகள்’ என்றழைக்கப்பட்டனர்’.
‘சோசலிச மற்றும் கம்யூனிச இலக்கியம்’ என்னும் பகுதியைப் பொருத்தவரை, அந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு இம்மானுவேல் காண்ட், ஃப்யர்பாஹ் போன்ற ஜெர்மன் தத்துவவாதிகளின் கருத்துகளோடு பரிச்சயம் இருக்கவில்லை என்பது புலப்படுகிறது. மேலும், ‘பாட்டாளிவர்க்கம்’, ‘தொழிலாளிவர்க்கம்’ என்ற பதங்களுக்குப் பதிலாக ‘புரொலிடேரியட்’ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், என் மொழியாக்கம், கே. சுப்பிரமணியனின் மொழியாக்கம் ஆகிய இரண்டைத் தவிர, தமிழ்நாட்டில் வெளிவந்துள்ள மொழியாக்கங்கள் எல்லாவற்றிலுமே அறிக்கையின் கடைசி வரி ‘உலகத் தொழிலாளிகளே, ஒன்றுசேருங்கள்’ என்றிருக்க, இலங்கை மொழியாக்கத்தில் ‘எல்லா தேசத்துத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அந்தத் தமிழாக்கம் வெளிவந்த காலகட்டத்தைக் கருத்தில்கொள்கையில் அது மிகவும் போற்றத்தக்க முயற்சி என்றே கொள்ள வேண்டும்.எப்படியிருப்பினும் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் மொழியாக்கம் இதுதான். இது 1948 பிப்ரவரியில் வெளிவந்தது. இஸ்மத் பாட்சாவின் மொழியாக்கம் அவ்வாண்டு ஏப்ரலில்தான் வெளிவந்தது. மேற்சொன்ன தமிழாக்கங்களில் சில கம்யூனிஸ்ட்டுக் கட்சி அறிக்கை என்றும் வேறு சில கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்றும் இரு தமிழாக்கங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கை என்றும் தலைப்பிடப்பட்டுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் குழுக்களின் முக்கிய மையங்களாக இருந்த இடங்களில் அறிக்கையின் இந்திய மொழிப் பதிப்புகள் முதன்முதலில் வெளியிடப்பட்டன என்பதும், இந்திய மொழியாக்கங்களில் எஸ்.ஏ.டாங்கே, ஜி.எம்.அதிகாரி, பி.சுந்தரையா, ஈ.எம்.எஸ். போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டுமின்றி, அபுல் கலாம் ஆஸாத் போன்ற காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் இடதுசாரிப் பிரிவாக இருந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, பெரியார் ஈ.வெ.ரா., இலக்கிய அறிஞர் இடப்பள்ளி கருணாகர மேனன் ஆகியோரும் தமது பங்களிப்புகளை வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கன. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, மார்க்ஸியம் இந்தியாவில் சிந்தனையாளர்கள் கவனம் குவித்த முக்கிய புள்ளிகளிலொன்றாக அமையத் தொடங்கியது என்பதையே இந்த விவரங்கள் காட்டுகின்றன.
மாஸ்கோவில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பதிப்பகங்கள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உள்ளிட்ட கம்யூனிஸ்ட் இலக்கியங்களை உலகின் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிட்டதைப்போலவே, முக்கிய இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் மொழியாக்கம் செய்து வெளியிட உதவின. பீகிங்கிலிருந்த (பெய்ஜிங்) ‘அந்நிய மொழிகள்’ பதிப்பகமும் (Foreign Languages Press), ‘பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்’ பதிப்பகமும்கூட அறிக்கை உள்ளிட்ட பல்வேறு கம்யூனிஸ்ட் படைப்புகளின் ஆங்கில மொழியாக்கங்களை வெளியிட்டுள்ளன.
இலண்டனில் உள்ள ‘வெர்ஸோ’ பதிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு, எரிக் ஹாப்ஸ்பாம் எழுதிய முன்னுரை, ஃபில் காஸ்பர் பதிப்பித்துள்ள அறிக்கையில் அவர் எழுதியுள்ள விளக்கக் குறிப்புகள் ஆகியவற்றில் 1888ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பிலுள்ள சில சொற்கள் தவறாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், அறிக்கையின் ஜெர்மன் மூலப் பதிப்புக்கும் 1888ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்குமுள்ள பாடபேதங்களை விரிவாக எடுத்துக்காட்டியுள்ளவை ஹால் ட்ரேப்பரின் புதிய மொழியாக்கமும் (The Adventures of the Communist Manifestoவில் உள்ளது), ஃப்ரெடெரிக் எல். பெண்டெர் பதிப்பும்தான்.
பெண்டெர், இத்தாலிய ஆராய்ச்சியறிஞர் பெர்ட் ஆண்ட்ரியாஸ், மாஸ்கோ மார்க்ஸ்-எங்கெல்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த டேவிட் ரையாஸனோவ் ஆகியோர் சுட்டிக்காட்டிய பாடபேதங்களுடன், 1888ஆம் ஆங்கிலப் பதிப்பில், தான் கண்டறிந்த தவறுகளையும் எடுத்துரைத்துள்ளார். அறிக்கையின் ஆங்கில மொழியாக்கங்களில் குறிப்பிடத்தக்கவை, புதிய மொழியாக்கங்கள் என எனக்குத் தெரிந்தவற்றின் விவரங்கள் இந்தப் புதிய பதிப்புக்கான முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேற்சொன்ன ஆங்கிலப் பதிப்புகளில் சில பிரெடெரிக் எங்கெல்ஸின் ஜெர்மன் மூலப் பெயரையும் (Friedrich Engels) பெரும்பாலானவை அவரது ஆங்கிலமயமாக்கப்பட்ட பெயரையும் (Frederick Engels) கொண்டுள்ளன.
மார்க்ஸ், எங்கெல்ஸ் – கம்யூனிஸ்ட கட்சி அறிக்கை (மேம்படுத்தப்பட்ட தமிழாக்கம், விளக்கக் குறிப்புகள், கட்டுரைகள்) என்ற நூலிலிருந்து…