அன்பாதவன்
வரலாறு மிக மிகக் கடுமையான விமர்சனத்துள்ளாகி இருக்கும் நூற்றாண்டு இது. இதுகாறும் நம்மிடையே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் புராணங்கள், புனைவுகள், இதிகாசங்கள் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுப் புதிய வெளிச்சம் பாய்ச்சி, அலசி, தரம் பார்க்கும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்துவதில் வெற்றி கண்ட வேதியத்தத்துவமும் காந்திய நடைமுறையும் கைகோத்தபோது அதன் ஆவேசமான எதிர்வினையாக எழுந்தது தலித் அரசியல்.

சாதிய அமைப்பின் வளர்ச்சியைப் புரிந்து கொள்வதற்கு, அன்று நிலவியிருந்த நிலைமைகளின் ஒரு பகுதியாகத்தான் சாதி இருந்ததாகக் கருத வேண்டும் என்பதை உணர்ந்த டாக்டர் அம்பேத்கர், “பிரச்சாரம் செய்வதாலேயே சாதிய அமைப்பை உருவாக்கிவிடவோ, அழித்துவிடவோ இயலாது” என்று குறிப்பிடுகிறார். சோலைமாயவனின் நான்காவது கவிதைத் தொகுப்பாக ‘வெயில் மேயும் நீர்ப்புலி’ கவிதை நூல் வாசகனுக்கு புத்தகனுபவத்தைத் தருவதாக,பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வழியாக வழங்கப்பட்டுள்ளத
சோலைமாயவன், தமிழாசிரியர். ஆனாலும் தன் வேர்களில் விவசாயத்தின் பாசி பிடித்த கவிஞர். ‘மீன்களைப் பிடித்து விளையாடிய ஏரிகளில்தான் பந்தைப் பிடித்து விளையாடுகிறார்கள்! –என உழுகுடிக் கவிஞனால் மட்டுந்தான் உணர்ந்தெழுத முடியும். இருவேறு காட்சிகளைக் காட்டி முரண்களால் வாசகன் மனதுக்குள் முழுதுமாய் நுழைய முடியும். “கள்ளம் கபடமற்ற நிலையில் எழுத்தைக் கையாளும் நிலைமை இனியும் சாத்தியமில்லை. தற்காலத்தின் ஒவ்வொரு எழுத்தாளனையும் கடந்த காலம் கட்டுப்படுத்துகிறது. பல நேரங்களில் பயமுறுத்திக் கொள்ளை அடிக்கிறது. இதிலிருந்து விடுபட வேண்டுமானால் புது எழுத்து முயற்சியில் ஈடுபடும் இன்றைய கவிஞன் ஓர் எழுத்து வன்முறையாளனாக மாறவேண்டிய அவசியம் நேர்கிறது என்பார் இந்திரன்.

இந்தியாவில் பொதுவழிகள், பொதுக்கோவில், பொதுக்கிணறு, பொது மயானம் இவையனைத்தும் தாழ்த்தப்பட்டவர் அல்லாதவர்களுக்கே உரிமையுடையதாகப் பார்க்கப்படுகிறது. இப்பகுதிக்குள் பிறர் உரிமையற்ற நிலையிலேயே தான் பலநூறு ஆண்டுகளாய் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். எனவேதான் சாதித் தீண்டாமைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டே வந்துள்ளது. சோலைமாயவனின் கவிப்பார்வை விரிவானது, வெகுண்டெழுவது, விமர்சனரீதியிலானது.
‘கடல் நடுவே பாதையை உருவாக்குகிறோம்/ மலைகளைக் குடைந்து கால்வாய் அமைத்து /அரை நூற்றாண்டாகிவிட்டது/ ஒரு செய்தியை நொடியில் உலகெங்கும் வியாபித்துவிடுகிறோம்/ ஆள்காட்டி விரல் நகம் அளவே /அறிவியல் தொழில்நுட்பம்/ சுருங்கிவிட்டதென சிலிர்க்க சிலிர்க்கப் பேசுகிறோம்/ நீண்டதூரத்திற்கு அப்பால் இருப்பவரிடம்/ முகத்திற்கு நேரே உரையாடிவிடுகிறோம்/ விரல்களால் தொட்டுத் தொட்டு உலகின் திசைகளின்/ பூட்டுகளைத் திறக்கிறோம்/ உடம்பிலிருத்து பிரிக்க முடியாத மூச்சுக்காற்றாக/ அறிவியல் நுட்பத்தில் வாழ்வைத் தொலைத்துவிடுகிறோம்/
அந்தரங்கங்களைக் கண்காணிக்க கேமரா/ கண்ணிவெடிகளைப் புதைத்திருக்கிறோம்/ எல்லாம் மாறிவிட்டது இப்பொழுதும்/
இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய/ சுடுகாட்டிற்குப் பொதுப்பாதை கேட்டுப்/ போராடுகிறோம்’.
புதிய தலித் அரசியலின் சில குறிப்பிட்ட பண்பினைத் தனக்குள் கொண்டு இருக்கின்றன. இந்த செல்நெறிகளைப் பின்பற்றியே சோலைமாயவன் பல கவிதைகளை இந்நூலில் படைத்துள்ளார்.
‘ஊரின் வழியாக வீடு போய்ச்சேரணும்/ ஊரில்தான் தபால் நிலையம் இருக்கிறது/ ஊரில்தான் பள்ளிக்கூடம் இருக்கிறது./ ஊரில்தான் மாட்டு ஆஸ்பத்திரி இருக்கிறது/ ஊரில்தான் ஏரி இருக்கிறது/ ஊரில்தான் பேருந்து நிறுத்தம் இருக்கிறது / ஊரில்தான் புகழ்பெற்ற கோவில் இருக்கிறது / ஊரில்தான் ரேசன் கடை இருக்கிறது/ ஊரில்தான் ஓட்டுச்சாவடி இருக்கிறது/ ஊரில்தான் நிலம் நிறைய இருக்கிறது/ ஊரில்தான் படித்தவர்கள் இருக்கிறார்கள்/ எங்க ஊரு பேரு சாத்தனூர்/ எங்கள் ஊரின் பெயரிலும் ஊர் இருக்கிறது/ எங்கள் ஊர் பெயரைச் சொன்னால்/ சட்டென்று கேட்டுவிடுகிறார்கள் / காலனியாவென்று’[பக் 24].
தலித் இலக்கியங்களிலுள்ள அழகியல் என்பது வெறுமனே காணக்கிட்டும் இன்பச்சூழ்நிலை அல்ல. அது அவலச்சுவை. வலி, வேதனை, அவமானம் ஆகியவற்றைக் கடந்து கட்டியெழுப்பும் கல் கோட்டை ஆகும். சோலைமாயவன் சந்திக்கும் சமூகப் புறக்கணிப்பு அவரின் கவிதைகளின் வழியாகப் பீறிடுகிறது:
“ஊர் இல்லை போடா என்றீர்கள்/ சேரியாய்த் திரண்டு எழுந்தோம்/
நிலம் இல்லை போடா என்றீர்கள்/ உடலையே நிலமாக்கினோம்
/கோயில் எதற்கு உனக்கு/ போடா என்றீர்கள்/ எங்கள் முப்பாட்டனை வீச்சரிவாளுடன்/ முன்நிறுத்தினோம்/ கல்வி கற்பதற்காகக்/
கட்டை விரலையே காவு கேட்டீர்கள்/ சுதந்திரம் இல்லை போடா என்றீர்கள்/ காற்றாய் நெருப்பாய் உலகெங்கும்/ பத்து விரலையும் எழுதுகோலாக்கினோம்” [பக் 25].
இன்றையச் சூழலில் புறம் என்பது எதிர்ப்பிலக்கியங்கள். இத்தகைய கவிதைகளைப் புரிந்துணர்ந்து எதிர்வரும் இளைய தலைமுறை அந்தக் கோப ஜோதியை தொடரோட்டமாக எடுத்துச் செல்லவேண்டிய சமூக நிர்ப்பந்தம் இன்றைக்கும் உண்டு என்பதை மறுக்க இயலாது.
‘அதிசயமாய்ப் பெய்த மழையில் முளைத்த புற்களை/ ஆடு, மாடுகளோடு சேர்ந்து வெயிலும் மேயும் கூரையில்/ அடை காக்கும் அவ்வெயில்/ இரவெல்லாம் நட்சத்திரங்களை முட்டையிடும் வெயிலுக்கு/ தாகம் தீர்க்க முடியாத வருத்தத்தில்/ பசித்த குழந்தையின் வயிறென வற்றிக்கிடக்கின்றன/ எங்கள் ஊரின் கிணறு குளம் குட்டைகள்/
எங்கள் ஊரில்/ பேருந்து நிறுத்தம் இரண்டு/ நியாய விலைக்கடை இரண்டு/ பால்வாடி இரண்டு/ ஏன்/ செத்தால் புதைக்கும் சுடுகாடும் இரண்டு/ வஞ்சனையில்லாமல் படரும் வெயில் மட்டும் ஒன்று/.
எங்கள் ஊரின் சிறப்பு கேட்கும் நண்பர்களுக்குச் சொல்வேன்
எங்கள் ஊரின் பெயர் வெயில்’ [பக். 40]
“இன்றைக்குத் தலித் கவிதையில் இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அடிமை, தன்னை அடிமை என்று உணரும் தறுவாயில் தன் வாழ்வு பற்றிய அருவருப்பும் அவமானமும் வேதனையும் இவற்றுக்கெல்லாம் காரணமானவர்கள் மேல் ஏற்படும் கோபத்தினையும் நிலைநிறுத்தப்பட்ட எல்லாவற்றிற்கும் எதிராகக் கலகம் செய்வதைத் தவிர வேறு ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை என்ற விழிப்புணர்வும் தலித் கவிதையின் நோக்கங்களாக வெளிப்படுகின்றன” எனும் பேரா.க., பஞ்சாங்கம் அவர்களின் சொற்களுக்கு சோலைமாயவன் உயிரூட்டுவதை வாசகன்
உணர முடியும்.
நவீன வாழ்வின் பல்வகைத் தாக்குதல்களிலும் பாதிக்கப்படும் மனித வாழ்வின் அவலங்களை, அவஸ்தையை, வலியை, புதிய மொழியில் புதிய சொல்லாடல்களோடு புரியும்படிச் சொல்வதும், வாசகர் உணரச் செய்வதும் நவீனத் தமிழ் படைப்புலகின் கடமை என்கிற நிதர்சனத்தை ஏற்றுணர்ந்து தலித் படைப்பாளிகளும் இந்த நெடுஞ்சாலையில் இணைவதும், நீரோட்டத்தில் கலப்பதும் தவிர்க்க இயலாத அம்சமாகும். காரணம் “தீண்டத்தகாதவர்கள்” எனச் சொல்லப்படுபவர்களின் வாழ்நிலையும் சூழ்நிலையும் மிகவும் வெட்கத்திற்குரியதாக இருந்தன. அவர்களுக்கு உழுவதற்கு நிலமோ, செய்தவற்கு வேறு தொழிலோ இருந்ததில்லை. காலங்காலமாய்த் தொடர்ந்த கொடுமைகளுக்கு எதிராகவும், சமூக, பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகவும் இந்து மத ஆதிக்கத்தை எதிர்த்துப் பண்பாட்டுக் கலகங்களாகவும் தலித் படைப்பாக்கங்கள் வேர்விடத் தொடங்கின.
எழுத்துக் கலையின் செய்நேர்த்தி அதற்குச் சமதையான அளவுக்கான கருப்பொருள் கொண்டதாக இல்லாது போவது என்பது ஒரு மோசடி என்பார் காஸ்டின் ஃபீடின். இங்கே, படைப்புக்கலை என்பது தலித் படைப்பாளிகள் அனுபவங்களின் ஆழ, அகலங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திகைத்து நிற்கிறது.
தலித் படைப்புகள் வசதியாகச் சாய்வு நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு படிப்பவர்களின் உள் உலகங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவர்களின் மனசாட்சியைத் தொட்டு, ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக நியாயம் கேட்கிறது. தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தக்க தி.க.சி. இலக்கியத்துக்கான பஞ்சசீலக் கொள்கை ஒன்றை அறிவித்தார்.
தமிழியம், மார்க்சீயம், தலித்தியம், பெண்ணியம், சூழலியம் இவற்றுள், தமிழியம், மார்க்சீயம் இரண்டை தற்காலிகமாக தள்ளிவைப்போம். மற்ற மூன்றும் மிக முக்கியமானவை. குறிப்பாக சூழலியம் இன்றைய சூழலில் மிக மிக அவசியமானது : அவசரமானது. வனங்களையும், நதிகளையும், நீர்நிலைகளையும் ஆக்கிரமித்துக் கொள்ளையடிக்கும் கூட்டமொன்று இருப்பதை நாமறிவோம். மரங்களும் வனங்களும் இல்லையெனில் ஏது மழை?
விரலில் ஈரம்’ [பக் 111]-சோலைமாயவனின் சூழலியல் பார்வை. இது மட்டுமல்ல, இன்றைக்கும் ‘தண்ணீர் இல்லாத/ மணல் இல்லாத ஆற்றில்/ உன் பெயர் ஆறென்று எழுதினேன்’ எழுதுபவர்களுக்கு வழிகாட்டுகிறது கோவை ஞானியின் வரிகள். “ஒரு படைப்பாளி அவன் காலத்து நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றை அவன் அறிந்துகொள்ள, புரிந்துகொள்ளப் பாடுபட்டிருக்க வேண்டும். புரிதல் என்பதும் ஆழ்ந்த அகன்ற படிப்பு விவாதம், சிந்தனை, செயல் ஈடுபாடு முதலியவற்றின் வழியே சிறப்புறும்” (புதுக்கவிதையும் புதுப்ரக்ஞையும்) கோவை ஞானியின் வரிகளை உள்வாங்கி சோலை மாயவன் உருவாக்கிய காட்சியொன்று பல கேள்விகளை எழுப்புவது:
‘ஏரியின் உடலின் மீது/ தவளையின் பிணம்/ மழையின் பாடலை யார் பாடுவது?’[பக் 112].
சூழலியல் என்பது பஞ்சபூதங்களின் வினையாலானது. அணுக்கழிவுகளாலும் வேதிக்கழிவுகளாலும் நீராதாரங்கள் மாசுபட, வாகனப் பெருக்கமும், தொழிற்சாலைகளின் கழிவுப்புகையால் காற்று மண்டலம் கறுப்பாகின்றது. ஏரிகள், குளம், குட்டைகள் மனைகளாகி மறைய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அரசு, கட்டங்களை எழுப்பிவிட்டு மழைநீர் சேமிக்கச் சொல்லும் முரண் நமக்கே உரியது. வனங்கள் அழிவு நதிகளின் மறைவாய்ப் போனதை உணர்ந்தோமா நாம்? குட்டிப்பையனின் வெடிப்பும், செர்னோபில் விபத்தும் நமக்குள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையென்பதையே கூடங்குளம் காட்டுகிறது.
கடலில் கழிவுகளைக் கொட்டிவிட்டு கரைகளை அழகுபடுத்த ஆசைப்படுபவர்களை என்ன செய்யலாம்? நாம் செய்கிற காரியங்கள் சூழல் பாதிப்பை உண்டாக்கி நமக்குத்தான் ஊறு விளைக்குமெனத் தெரிந்தும் தொடர்ச்சியாக பல சூழல்கேட்டினைச் செய்துகொண்டே இருக்கிறோம் ‘படைப்பிலக்கியம் என்பது ஒரு தனி மனிதனுக்காகவோ அல்லது ஒரு சிறு தனி மனிதக் குழுவினதற்கானதாகவோ இருக்க முடியாது. அப்படி இருக்குமானால் அது மானுட வளர்ச்சிக்கான இலக்கியமாய் இராது. அது பொதுவான தன்மையை நோக்கிச் செல்ல வேண்டும். அவற்றின் சமூகப் பயன்பாடு என்பது பொதுமை நிறைந்தவையாக இருந்தால்தான் இலக்கியமும் வெற்றிகொள்ளும் முகமாக அமையும்’-என்று தீர்க்கமான பாதையைக் காட்டும் படைப்பிலக்கிய முன்னோடி
விழி.பா.இதயவேந்தனின் வழிகாட்டலில் வெற்றிகரமாகத் தொடர்கிறது.
சோலைமாயவனின் கவிதைப் பயணம் “ஒரு பொறுப்புமிக்க படைப்பாளியாக தொகுப்பில் கம்பீரமாக வெளிப்படும் சோலைமாயவனின் கவித்துவம் பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது. சொற்களின் அழகும் ஆழமும் தெரிந்து, தெளிந்து பயன்படுத்தும் ஆற்றல் கவிஞரின் தனிச்சொத்து. வெயில் மேயும் நீர்ப்புலி நம் உள்ளத்தை அணுவணுவாய்க் கவ்விக்கொள்கிறது”என அணிந்துரைக்கும் ‘பத்மஸ்ரீ’ கவிஞர் சிற்பி அவர்களின் வாழ்த்து சோலைமாயவனுக்கு வரம், உரம். ஒற்றை வரியில் கூறவேண்டுமானால் ஆழியாறு அருகிலிருந்தோர் ஆழிப்பேரலை, வாசியுங்கள் மூழ்கிப்போவீர்கள்.