பிரேமா இரவிச்சந்திரன்
இந்து தமிழ் திசை போன்ற முன்னணி நாளிதழ்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகின்ற இந்நூல் ஆசிரியரின் அரசியல் ஆர்வமும் பொதுநல நோக்கும் எத்தகையது என்பதைக் குறிப்பிட வேண்டுமென்பதில்லை. சர்ச்சையான செய்திகளுக்கும், மக்களோடு உரையாட வேண்டுமென தன்னை உறங்கவிடாமல் செய்த தலைப்புகளுக்கும் தெளிவான பார்வை கொண்டு சரியான விளக்கம் கொடுத்து முழுமையான கட்டுரைகளைப் படைத்து பத்திரிகைகளுக்கு அனுப்பியவற்றில் சிலவற்றைத் தொகுத்து அளித்ததே, தமிழணங்கு என்ன நிறம்? என்கிற இந்தப் புத்தகம்.

இணையத்திலும், முகநூலிலும், புலனத்திலுமென கருப்பொருளாகும் ஒரு செய்தியை, பொதுமக்கள் அவரவர் விரும்பிய வண்ணம் கூடுதல் செய்திகளையும் இணைத்து கூச்சல்களுக்கு மத்தியில் சர்ச்சைகளாக அல்லல்படும் சிக்கலான தகவல்களை மையமாக வைத்து, முன்பின் அலசி ஆராய்ந்து இறுதியில் தன் பார்வையை எதிர்ப்பாளர்களும் ஏற்கும்படி இணைத்து முழுமையாக வடிவம் கொடுத்த கட்டுரைகளும், எளிய மக்களோடு உரையாடிய போது எழுந்த எண்ணங்களும், நீண்டதூரப் பயணங்களும், ஐநா சபையில் எடுத்துரைக்க வேண்டிய உரிமைகளுமெனத் தொடரும் பன்முகத்தன்மை கொண்ட ஒவ்வொரு கட்டுரையும் வாசிக்கப்பட வேண்டியவை.
நூலுக்கு அணிந்துரை வழங்கிய பழ. அதியமான் அவர்கள் முக்காலத்தையும் ஓரிடத்தில் நிறுத்திவைத்துக் காணும்படி படைத்த இந்த நூலினை, வரிக்கு வரி வாசித்து உள்வாங்கி நூலாசிரியரின் பணிக்கு இணையானதொரு முகப்பை வழங்கியிருக்கிறார். சமூகம், கொரோனா, புலம்பெயர் தொழிலாளர், அரசியல், தேர்தல், பெண், அதிகாரம் என ஏழு தலைப்புகளில் உருவாக்கிய 29 கட்டுரைகளும் நூலாசிரியரது தனித்துவமான எழுத்துகளால் வடிவம் பெற்றிருக்கின்றன. தனக்கே உரிய தமிழ் நடையிலும், எவரையும் புண்படுத்திவிடாத தொனியிலும், சொல்ல வந்தக் கருத்தில் மாற்றமில்லாமலும், வாசிப்பவர்கள் புன்னகைக்கும்படியான நகைச்சுவை உணர்வோடும் உருவான படைப்புகள் யாவும், சிலவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்து பிறிதொரு சொல்லை எழுப்பவிடாமல் தவிர்க்கும்படியும், பலவற்றிற்கு தொடர்புள்ளிகளையிட்டு செயல்படுத்தத் தூண்டும்படியும் அமைந்திருக்கின்றன.
இந்த நூலில், “தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்?” என்ற கேள்வியையே தலைப்பாக்கி முதல் விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். பெயருக்குப் பின்னால் ஜாதியை இணைத்துக்கொள்ளும் வழக்கத்தை முதலில் தூக்கியெறிந்த துணிச்சலான தந்தையில் ஆரம்பித்து, இன்றளவும் விமானம் ஏறும் தமிழர்களிடம் குடும்பப் பெயரைக் கேட்டு குழப்பமாக்கும் நிலையை நகைச்சுவையாக விவரித்திருந்தாலும், தீர்வு காணவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. நீங்கள் யார் பக்கம்? என்கிற கட்டுரையில் எதிரியாக நாம் யாரை நிறுத்துகிறோம் என்பதில்கூட ஒருவரது நிலை நிர்ணயிக்கப்படுவதாக ஒரு புரிதலைக் கொடுக்கிறது. “கடவுள் ஏன் சைவரானார்?” என்பதில் நமக்குப் பிடித்தமான உணவை உண்ணாமல் விடுகின்ற நாளையே விரதமிருக்கும் நாளாகக் கொள்ளப்படுவதாகவும்,சைவம் அசைவம் என்று பிரித்துப் புழங்குகிற முறை உலக நாடுகளில் வேறெங்கிலுமில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். “மனிதர்களின் பற்களின் அமைப்பு தாவரங்களை உண்ணுவதற்கு ஏற்றதாகவே அமைந்திருக்கின்றன.
விலங்குண்ணிகள் போல உயிரிகளைக் கடித்துக் கிழிக்கும் பற்களின் அமைப்பு நம்மிடமில்லை” என்று வைத்த விவாதங்களெல்லாம் இவ்விடத்தில் நினைவிற்கு வருகின்றன. புலால் உண்ணாமை பற்றிப் பேசினாலும், உலகம் முழுவதும் மனிதர்கள் உண்கின்ற உணவில் அவை இல்லாமல் இல்லை. மாமிசமும் மனிதர்கள் உண்ணும் உணவுதான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்ற நாள் என்னாளோ? அதுவரை இப்படியான விவாதங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்குமென கருத வைக்கிறது.
ஆவணப்படுத்துவதில் அலட்சியம் என்னும் தலைப்பிலான கட்டுரையில், “ஆவணம் என்பது தமிழ்ச் சொல்லாக இருந்தாலும் ஆவணப்படுத்துதல் என்பது ஆங்கிலத்திலிருந்துதான் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஆவணப்படுத்துவதில் நமக்கு அக்கறை மட்டு.” என்று குறிப்பிட்டிருக்கிறார். “சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற ஆவணங்கள் நமது வரலாற்றை தொடர்ச்சியாகப் புரிந்துகொள்ளவும்தான்” என்பதோடு, “நம் நாட்டின் கட்டிடங்களும், கலைப்பொருட்களும், ஓவியங்களும், செப்புத் தகடுகளும், தொல்லியல் துறையில் அகன்றெடுத்த பல்லாயிரக்கணக்கான பொருட்களும், வாய்மொழியாகக் கடந்து வந்த மக்களின் வாழ்க்கை முறைகள் பதிந்த சங்க இலக்கியங்களும் ஆவணங்களாகவே அடையாளம் கொள்கின்றன.
அவற்றைக் கையாண்ட பெரியோரையே நாம் “ஆவணமாக்கல்” என்கிறோம்” எனும் பொருள்பட இத்தலைப்பில் சமீபத்தில் உரையாற்றிய ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது கருத்தையும் இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது. ஆவணப்படுத்த வேண்டுமென்று முறைப்படி நம் தமிழர்கள் முயன்றிருக்காவிட்டாலும், ஆதியிலிருந்தே வளமாக வாழ்ந்த அவர்களது வாழ்க்கையின் கடந்த கால எச்சங்களே ஆவணங்களாக உயர்ந்து நிற்கின்றன. ஒவ்வொன்றையும் ஆவணப்படுத்தி இருந்தோமென்றால் நம் பலத்தை நாம் உணர்ந்தவர்களாக ஒற்றுமையோடு வாழ்ந்து இடைக்காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருக்க மாட்டோம்தான்.
கொரோனா பிடியில் உலக நாடுகளே சிக்கியிருந்தபொழுது, ஒவ்வொரு பகுதியிலும் பலவிதமான அவலங்களை நாம் எதிர்நோக்கி மீண்டு வந்திருக்கிறோம். இக்காலங்களில் பிறந்த கவிதைகளும் கட்டுரைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தனது அனுபவமாக எழுதிய கட்டுரைகளும் வரலாற்றுப் பதிவாக இருப்பதோடு, நமது மருத்துவ பொது சுகாதார நிலையையும், நாம் இன்னும் மேம்படுத்த வேண்டிய கடமைகளையும் குறிப்பிட்டு விழிப்புணர்வுக் கட்டுரைகளாகப் பதிந்திருக்கின்றன. அடுத்ததாக அரசியல் பேசுகின்ற தலைப்பில், இந்தியாவில் மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பாராளுமன்றத்தில் இடம் ஒதுக்கப்படுவதைக் குறிப்பிட்டு, இருவருக்கு ஒருவர் எனும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் பெரும்பாலும் வெற்றியடைந்த தென்னிந்தியாவை, சட்டத்தில் மாறுபாடுகளைக் கொண்டு வந்து, பாராளுமன்றத்தில் நாம் பெறும் இடங்களை குறைக்கின்ற சதியை மத்திய அரசு கையில் வைத்திருக்கிறது எனும் எதிர்காலக் கணிப்பு நமக்கு அச்சத்தைக் கொடுத்து விழிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழணங்கு என்ன நிறம்? எனும் தலைப்பிலான கட்டுரை, ‘சமூகம்’ எனும் தலைப்பில் இடம் பெற்றிருந்தாலும், “அவளுக்கு சில வேலைகள் இருக்கின்றன; அதுவரை அவள் அப்படித்தான் இருப்பாள்” எனும்போது, அரசியல் எனும் தலைப்பிலேயே அவள் இடம் பெற்றிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. நமது இந்திய நாடு குடியரசு நாடாக உருவெடுப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே இந்தியத் தேர்தல் ஆணையம் உருவாகிவிட்டது. சுதந்திரப் போரில் ஏராளமான பெண்கள் பங்கு பெற்று, மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்த நம் நாட்டில், முதல் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும்பொழுதே, வேறெந்த நாடுகளிலும் இல்லாத முற்போக்காக, பெண்களும் ஓட்டுரிமையைப் பெற்றிருந்தார்கள்.
அன்னியனுக்கு அடிமைப்பட்டபோது, அறப்போரிட்டு விடுதலையடைந்து இன்றைய ஜனநாயகத்தைக் கட்டமைத்திருக்கிறோம். பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளைக்கொண்டு பிரிந்திருக்கும் நம் மக்களிடையே ஊழலும் மிகுந்திருக்கிறது. அஸ்திவாரத்தைத் தோண்டி மண்ணை அள்ளிக் கட்டிடத்தை எழுப்புவதைப்போன்ற இச்செயலை, இல்லாமல் செய்வது இன்றைய காலங்களில் சவாலாக இருக்கிறது. அதனை இயல்பானதாக ஏற்றுக்கொள்கின்ற மக்களின் மனப்போக்கு மாற வேண்டுமெனும் அடிப்படையில் ஊழலை நாம் இயல்பாக்கிக் கொண்டோமா? எனும் தலைப்பு பேசுகிறது.
பெண் எனும் முதன்மையான தலைப்பிற்குள் அவர்களுக்கு இன்றைய அரசு அளிக்கும் உரிமைத் தொகை பற்றியும், அவர்களது உடையைத் தீர்மானிப்பது யார் என்பது பற்றியும், சமையலறைக்குள் நீளும் ஆதிக்கக் கரங்கள் குறித்தும் தனித்தனியான உபதலைப்புகளில் பேசியிருக்கிறார். தனது பார்வையில் நேர்மறையாக எழுதியிருந்தாலும் பெண்ணாக எனது அனுபவத்தையும் பகிரத் தோன்றுகிறது. தென்னிந்தியாவில் பெண்களின் பாரம்பரிய உடையான புடவை, அவர்களுக்கு அழகுதான் என்றாலும் அது அவர்களை தரை அதிராமல் நடந்து செல்கின்ற பொறுப்பை எடுத்துக் கொள்கிறது. பள்ளியில் பயிலும்பொழுது விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்ந்தவள், திருமணமான பிறகு தனது உடைக்குள்ளும் உறைவிடத்திற்குள்ளும் அடங்கி விடுவதை இயல்பாகக் காண்கிறோம்.
சமீபத்தில் அரிசோனாவில் வசிக்கும் எனது மகனைக் காண்பதற்காகச் சென்றிருந்தபொழுது, அங்கு மலை ஏறுவதற்கும் சவாலான ஏற்றமிகு பாதைகளில் பயணம் செய்வதற்கும் அதற்கேற்ற முழு கை, கால் சட்டையையும் அதற்கான காலணியையும் அணிந்துகொண்டு நாள் முழுக்க நடந்திருக்கிறேன். மணிப்பாறைமலை (Bell Rock Mountain) என்று சொல்லப்படுகின்ற கரடு முரடான மலையில் ஏறியபொழுது திடகாத்திரமான இளைஞர்களால் மட்டுமே இயலுமென்கிற முடிவினை, புடவை அணிந்திருந்திருந்தால் எண்ணியிருந்திருப்பேன். எளிதாகப் பற்றி ஏறுவதற்கு வசதியாக இருக்கும்படி, எனது ஆடை இருந்ததால் மட்டுமே என்னிடமிருந்த பலத்தை என்னால் உணர முடிந்தது. எழுபது வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் எனக்கு இணையாக நடந்து சென்றதையும் கண்களால் கண்டு அசந்து விட்டேன்.
“வயது என்பது வெறும் எண்கள்தான்” என்பதை கண்கூடாகக் கண்டபொழுது நம் மக்களின் மனநிலை நிறைய மாறவேண்டுமென்ற எண்ணமே எழுந்தது. ஆடை என்பது அவரவர்களுக்கானது. குறுகுறுக்கும் பார்வையில் பெண்களை அடக்குவதற்கு எவருக்கும் உரிமையில்லை. ஆசிரியரின் கருத்தாக, “சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் ஈட்டித் தருகின்ற நாகரிகத்தின் சின்னமான நமது உடை, அவரவர் செய்யும் பணிக்கு உகந்ததாக அமைந்து, அதனைத் தேர்ந்தெடுக்கின்ற சுதந்திரத்தையும் அணிபவர்கள் கொண்டிருக்க வேண்டும்”என்பது இளைய தலைமுறையினருக்கு விளக்குவதாக அமைந்திருக்கிறது. அதிகாரம் எனும் இறுதித் தலைப்பில் இடம் பெற்றிருக்கின்ற கருத்துகள் யாவும் அயலகத்தைக்கண்டு நம் அரசு அதிகாரிகள் மாற்றிக்கொள்ள வேண்டிய மனப்போக்கை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறது.
கணினிமயமான இக்காலங்களில் கதவுகளைத் திறந்துவிடவும், வாகனங்களில் எரிபொருளை நிரப்பவும், அதிகாரிகளின் கோப்புகளை சுமந்து வருவதற்கும், அவர்களுக்கு அலுவலக இடைவேளையில் தேநீர் தயாரித்துக் கொடுப்பதற்கும் மனித ஆற்றலை விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம். இதனை மடைமாற்றம் செய்யவேண்டுமென்றும், மேலதிகாரிகள் தனது மேட்டிமைக் குணத்தைக் கைவிட வேண்டுமென்றும், உதவியாளர்கள் சுயமரியாதையை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டுமென்றும் மாற்றங்களை வெளியிலிருந்தும் மேலிருந்தும் கீழிருந்தும் கொண்டுவர வேண்டுமென்றும் நூலின் ஆசிரியர் பகிர்ந்த கருத்துக்களையே இக்கட்டுரையின் முடிவாக வைத்து நிறைவு செய்கிறேன். வாசிக்க வேண்டிய நூல் தமிழணங்கு என்ன நிறம்?.
