பத்துப்பாட்டில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் தமிழ்ப்புலவர் கபிலர் நம் மண்ணின் 99 மலர்களை அறிமுகம் செய்கிறார். இன்று அதில் ஏழு மலர்களே உள்ளன. இந்த மலர்களுக்குப் பதிலாக அயல்நாட்டு மலர்கள் சில புகுந்துவிட்டன. இன்று வர்த்தகம் என்கிற பெயரில் உலகமயமாக்கல் பூச்சிக்கொல்லிகளை நம் மீது திணித்து தேனீக்களை பெரும்பாலும் அழித்து விட்டது. தேனீக்களின் அழிவில் நம் மலர்கள் அழிந்தன. பயனுள்ள பூச்சிகளும் சேர்ந்தே அழிவதால் வேளாண்மையும் மெல்ல இனி சாகும் என்று உயிரியல் விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்கள்.
2014ல் மோடி அரசு வந்தபின் காடழிப்பு இந்தியாவில் 80% அதிகரித்துப் பெருங்(கார்ப்பரேட்)கொள்ளை நடந்திருப்பதை அயல்நாட்டு பத்திரிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இன்று இந்தியத் தாய்திரு நாடு ஐந்து மிகப்பெரிய சூழலியப் பேரழிவுகளை சந்திக்கிறது.
காற்றுமாசு
இன்று இந்தியா உலகின் மூன்றாவது பெரிய காற்று மாசாளர். 2.65 பில்லியன் மெட்ரிக் டன் கரியமில மாசு நமது- ஊழல்- அதானி குழும ஏமாற்றுக் கொள்ளையான மோசமான கரிக்கொள்கையால் ஏற்பட்ட விளைவாக தொடர்கிறது. இது போக்குவரத்து மாசு, தொழிற்சாலை மாசு, கட்டிடத்துறை மாசு என விரிவடைகிறது. சென்னை உட்பட ஆறு பெரு நகரங்கள் உலகக் காற்றுமாசு எல்லை அளவை மும்மடங்கு கடந்து விட்டதை என்ன சொல்ல? தில்லி நகரம் உலக எல்லைகளவைவிட பத்து மடங்கு மாசாகி கலக்கத்தைத் தந்தாலும் அரசின் கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டு தொடர்கிறது. உலகின் 100 மோசமான காற்று மாசு நகரங்களில் 63 இந்தியாவில் உள்ளதாக சர்வதேசக் காற்றுமாசு (ஐ.நா.)அமைப்பு எச்சரிக்கிறது.
நீர்மாசு
உலகிலேயே மனிதக் கழிவு முதல் சூளைக் கழிவு வரை கொட்டப்பட்டதால் 14 நதிகள் பத்தாண்டுகளில் முற்றிலும் மரணித்த நாடு இந்தியா. இதனால் நம் விவசாயம் 19 சதவிகிதம் குறைந்தது – 40 மில்லியன் இந்திய மக்கள் நீர் மாசு நோய்களான டைஃபாய்டு காய்ச்சல், காலரா, டெங்கு, மஞ்சள்காமாலை என்று உடலியல் பேராபத்துகளை சந்திக்கின்றனர்.
தண்ணீர் மேலாண்மையை பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் கார்ப்பரேட் கொள்ளைக்கு உட்படுத்திய அரசு நிலத்தடிநீரை சட்டத்திற்குப் புறம்பாக திருட அனுமதிக்கிறது என்பது மிகப்பெரிய சதி. நீர்ச்சுழற்சியை பேணிக்காக்கவும் கண்காணிக்கவும் தீவிரமான சட்டங்கள் நம்மிடம் இல்லை. நீர்ப் பாரமரிப்பின் அப்பட்டமான சமரசம் வெள்ளம் சூழும் அதீத நரகமாக நம் நகரங்களை மாற்றிவருகிறது.
புவிவெப்பமாதலும்
அதிதீவிர திடீர் பெருமழையும் தட்பவெப்பப் பிரச்சனையாகி வருவதை அரசு கண்டுகொள்ளவில்லை. 115 டிகிரி வெப்பம் தகிப்பது ஒரு புறம், கொடிய திடீர் வெள்ளப்பெருக்கு மழை மறுபுறம். நம்மிடம் மக்கள் பாதுகாப்பு – தட்பவெப்பக் கொள்கை துளி கூட கிடையாது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த மரண’ அழிவு சூழலிய சிக்கல் பேசும் பொருளாகக் கூட இல்லை.
கழிவு மேலாண்மை
கழிவுகளால் மாசடைய வைப்பதில் இன்று இந்தியா இரண்டாவது மிகப்பெரிய வில்லன். நாம் ஆண்டு ஒன்றிற்கு 277 மில்லியன் டன் முனிசிபல் திடக் கழிவு (MSW) களை உற்பத்தி செய்கிறோம். அதில் 5% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. 25,000 டன் பிளாஸ்டிக் கழிவு – ஒரு நாளைக்கு கொட்டப்படுகிறது. தடைசெய்ய ஒரு சட்டம், உற்பத்தி செய்ய ஒரு சட்டம் என இரண்டுமே அமலில் உள்ள உலகின் ஒரே அவலட்சண அரசு மோடி அரசுதான்.
காடழிப்பு
இமயமலை, மேற்குத்தொடர்ச்சி மலைகள், அந்தமான் நிக்கோபர் உட்பட நிலக்காடுகள் – வன டூரிசம், வனப் பயன்பாடு எனும் பெயரில் பேரழிவுக்கு உட்பட்டது. காஷ்மீர் நிலமே சிறைச்சாலை, மணிப்பூர் பேரழிவு யாவுமே திட்டமிட்டு கார்ப்பரேட் அம்பானி, அதானி கும்பலுக்கு வனங்களைத் தாரைவார்க்க நடந்தவைதான் என்று நாம் சொல்லவில்லை, உலக சூழலியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.
எனவே புதிதாய் பொறுப்பேற்கும் அரசு இந்த ஐந்து சூழலியல் சிக்கல்களுக்கும் நிரந்தரத் தீர்வுகாண முன்வரவேண்டும் என எதிர்பார்ப்போம். நம் வருங்காலச் சந்ததிகளுக்கும் வாழும் சூழலில் இந்தியாவை விட்டுச்செல்ல இந்த சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தில் உறுதிநெறியேற்பம்.