கிரேஸ் பிள்ளை
மொத்தம் 47 கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ்க் கவிதை உலகிற்கு ஒரு வித்தியாசமான வரவு என்றே சொல்லலாம். பாரதியில் தொடங்கி, ந. பிச்சமூர்த்தியில் நிலைவரப்பட்டு, அறுபதுகளில் வீச்சோடு, “பழைமையில் காலூன்றி புதுமையில் சிறகு விரிக்கிறோம் என்னும் பிரகடனத்தோடு ”வானம்பாடிகளால்” வலம்வந்த புதுக்கவிதை இயக்கம் ஒரு கட்டத்தில் “மின்னல் பூச்சி ஜாக்கெட்டு மேலே பறக்குது ராக்கெட்டு” என்று கவிதைகள் மலினப்பட்டு எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்ட பின், பத்திரிகைச் செய்திகளைப் படித்துவிட்டு கவிதை எழுத நிறையப்பேர் வந்திறங்கிவிட்டனர் என்றே சொல்லவேண்டும். இப்போதும் ஒரு சில குழுக்களின் பிடிகளுக்குள் சிக்கித் தவிக்கிறது இன்றைய புதுக்கவிதை என்றே சொல்லலாம்.
ஒரு எழுத்தாளனுக்கு குறைந்தபட்சம் ஒரு ஐம்பதாண்டுகால இலக்கிய வரலாறாவது தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சூழலில், தமிழ் புதுக்கவிதை உலகில் இன்று தனித்து தனக்கென இடதுசாரி அடையாளத்துடன் நிலைத்து நிற்பவர் தோழர் நா.வே. அருள்.

சமீபத்தில் வெளிவந்த அவருடைய “கிராம்சி புரண்டு படுக்கிறார்” என்னும் கவிதைத் தொகுப்பு அவருக்கான அரசியல் நிலைபாட்டையும், சமூகப் புரிதலையும், கவித்துவமும் எளிமையும் கொண்ட அவரின் ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
“மனிதர்களின் அக உலகைப் புத்தாக்கம் செய்வது ஒருவகை அழகியல் என்றால், புற உலகைத் திறனாய்வுச் சிந்தனையுடன் அணுகி, அக உலகின் அழகியலில் உள்ள பொய்மைகளை அம்பலப்படுத்துவது மற்றொரு வகை. கவிதை வெறும் அழகுசாதனப் பொருள்போல மனித உணர்வுகளுக்கு ஒப்பனை போடுவதாக அமையாமல், சமூகத்தின் ஒப்பனையற்ற நிலையை அரசியல் அறத்துடன் பேச வேண்டுவதும் அவசியம். அத்தகைய கவிதைகளில் ஒன்றாக அமைவதையே “சமூக உணர்வு சார்ந்த கவிதைகள்” என்று தோழர் ஜமாலன் தனது அணிந்துரையில் கூறியிருப்பார். தோழர் நா. வே. அருள் அவர்களின் கவிதைகளை அப்படிப்பட்ட சமூக உணர்வு சார்ந்த கவிதைகள் என்ற வரையறைக்குள் கொண்டு வந்துவிடலாம். இக்கவிதைகள் அனைத்தும் ஒரு அழகியல் தளத்தில் வெளிப்பட்டிருப்பது கவிஞரின் கவியாளுமை என்று கூறலாம்.
“உழவனின் தோளில் கலப்பையாய்/ பாட்டாளி கையில் ஸ்பேனராய்/ தொட்டுத் தொட்டு எழுத இதயமே மைக்கூடாய்/ எழுத்துக்கள் காதலர்களின் கண்களாய்/ கடையக் கடைய கவிதாமிர்தம் தரும்/ ஆழ்கடலாய்/ அப்படியான ஓர் எழுதுகோலுக்காகத்தான் தவமிருக்கிறேன்” என்ற தவம் என்ற கவிதையின் கடைசி வரிகள், கவிஞரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும்.
சர்வாதிகாரத்தின் ஒப்பனைக்கூடம் என்னும் தலைப்பின் கீழ் உள்ள 12 கவிதைகளும் சர்வாதிகாரத்தின் பன்முகத் தன்மையை அழகியலுடன் பேசுகின்றன. இக்கவிதைகளின் சில வரிகள்:1. “மதச் சின்னங்களுடன் சாம்பலாக்கப்பட்ட சடலங்கள்”, 2.“அஹிம்சையின் வெண்கொடிகளாய் நடிக்கும் முரட்டு ஆயுதங்கள்”, 3. “நியாயங்களின் துண்டிக்கப்பட்ட தலைகள் போர்ச் சின்னங்கள்”, 4. “எப்போதும் அழலாம்/ கண்ணீர்விடத் தடையில்லை/ சுவைக்கத் தகுந்த மாமிசமாக இருப்பதில்/ பிரஜைகளுக்குப் பெருமை”, 5. “மலிவு விலையில் கிடைக்கும்/ உதிரி உறுப்புகள்”, 6. “கருகிய மார்பகத்தின் விலை/ குழந்தையின் விலையை விடக்/ கொஞ்சம் கூடுதல்”, 7. “ஜன்னலில் / தேசத்தின் மரணம் ஒரு பூனையைப் போல/ எட்டிப்பார்க்கும்”
இன்றைய இந்தியாவின் நிலையை எடுத்துவைக்கும் சில கவிதை வரிகள்:
“மருத்துவமனையை/ மார்ச்சுவரியாக மாற்றும் மார்க்கம்/ ஜனநாயகத்தின் கடைசிச் சங்கு”; “ஆன்மீகப் படங்கள் மாட்டிய/ அறிவியல் கூடம்”; “அழுகாச்சி சீரியல்களின்/ சதியாலோசகர்கள்/ மருமகள் மற்றும் மாமியார்”; (முற்றிப் பழுத்த பொழுதுபோக்கு) – “நவீன கணினி விசைப்பலகையில்/புராதன சதுரங்கம்/ தொழில்நுட்ப அலைவரிசைகளில் தொன்ம விளையாட்டுக்கள்/ வட்ட, முக்கோண எண்கோண எல்லைகளாலான/ செறிவூட்டப்பட்ட நரகம்./ அங்கே கேள்வி கேட்கலாம்/ பதில் கிடைக்காது/ காட்சி ரூபமாக இருக்கும்/ அனுபவிக்க முடியாது/ வரவேற்கலாம்/ உள்ளே வர முடியாது/ அந்த விநோத நரகத்திற்கு/ ‘தொடர்பெல்லைக்கு அப்பாலிருக்கும் சொர்க்கம்’ என்ற/ பெயர் சூட்டுவிழா” (தொழில்நுட்ப அகதிகள்) இப்படி தொகுப்பு எங்கிலும் முத்தாய்ப்பான வரிகளைக் காண முடியும்.
பொதுவாக கவிஞர்கள் நெகிழ்ந்த மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள்தான் மனிதநேயமுள்ள கவிதைகளைப் படைக்க முடியும். மனிதத்தின்பால் நம்பிக்கையுள்ளவர்களால் மாத்திரமே மனிதநேயமுள்ள கவிதைகள் படைக்க முடியும். கவிதைகள் வாழ்வில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். அதற்கு கவிஞனுக்கு வாழ்க்கை லபிக்க வேண்டும். ஒரு சமுதாயத்தில் மனிதர்களுக்காக கவிஞன் சிந்திக்கிறான். கவிஞன் வார்த்தைகளில் போராட்டம் நடத்துகிறான். அதில் வெற்றி பெறுகிறானா இல்லையா என்பதல்ல கேள்வி. வெற்றியை நோக்கி, நம்பிக்கையை நோக்கி சமுதாயத்தை நகர்த்துகிறான். இன்றைய சமுதாயத்தில் அவலங்கள் மலிந்து கிடக்கின்றன. அதைப்பார்த்து கவிஞன் கோபமடைகிறான்.
தனிமனிதனுக்கு உணவில்லை என்னும்போது தன் கவிதை வாளால் உலகை கேள்விக்குள்ளாக்குகிறான். இந்தப் பிரச்சினைக்கான புறக்காரணிகள் பல இருக்கின்றன. அவற்றை சமுதாயத்திற்கு புரியும்படி எடுத்துக் கூறுவனது அவனது கடமையாகும். அவைகளை ஒன்றுகுவித்து கூர்மைப்படுத்தும் வேலைகளை அவன் செய்ய வேண்டும். அதை அழகியலோடு அணுகவேண்டும். அதில்தான் கவிதைக்கான வெற்றி இருக்கிறது.
ஒரு பழைய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. எழுத்தாளர் கொ.மா. கோதண்டம் அவர்கள் எழுதிய அந்தச் சின்னக் கவிதை, ஒரு தொழிலாளியின் அவலநிலையை உணர்வுப்பூர்வமாக வாசகனை யோசிக்க வைக்கிறது. அதாவது, ஒரு தொழிலாளி அழுக்கான வேட்டியைக் கட்டியிருக்கிறான். அழுக்கான பகுதியை மறைத்து வேட்டியைத் திருப்பிக்கட்ட வேண்டியதுதானே என்று எதிராளி கேட்கிறார். அதற்கு, அந்தத் தொழிலாளியின் பதில்தான் நம்மை உறைய வைக்கிறது:
“ஒரு தொழிலாளியின் வேட்டிக்கு மூன்று பக்கங்களா இருக்கிறது?” இது ஒரு க்ளாசிக் உதாரணம். வாசித்த மாத்திரத்தில் புரியாமல் கொஞ்சம் யோசிக்கும்போது அதன் முழு ஆழம் புரியும்போது, அடடா என்று எண்ண வைத்துவிடுகிறது. இதுதான் கவிதையின் மகத்துவம். ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டு அதை முழுமையாக உணரவைப்பது, லயிக்கவைப்பது கவிதை. இப்படிப்பட்ட கவிதைகளை தமிழ்க் கவிதை உலகம் 75 ஆண்டுகளுக்கு முன்பே பார்த்து விட்டது. இப்போது நம் கவிதை உலகம் நம் கவிஞர்களிடம் வேறுமாதிரியான நவீன சிந்தனைப் போக்குகளை எதிர்பார்க்கிறது.
வேறுசிலமாதிரியான அதிநவீன கவிஞர்களும் இப்போது எழுதுகின்றனர். அது அவர்களுக்கும் புரியாது, வாசகனுக்கும் புரியாது. மலையாளக் கவிதை உலகம் இந்த இருவேறு துருவங்களையும் சமன் செய்யும் விதமாக முழுவீச்சில் போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் மலையாளத்திலிருந்து தோழர் நிர்மால்யாவினால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியான பழங்குடிக் கவிதைகளின் தொகுப்பு பழங்குடி வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக எடுத்து வைக்கிறது. இப்படி ஒருபுறம் பிறமொழிக் கவிதைகளின் தாக்கம் தமிழில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
நாம் பார்த்துக்கொண்டிருக்கும் “கிராம்சி புரண்டு படுக்கிறார்” என்னும் கவிதைத்தொகுப்பு, அரசியல் கவிதைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. நன்றாகவே இருக்கிறது என்றாலும், கவிஞர் இன்னும் நேர்மறையாக அனைத்துக் கவிதைகளையும் அணுகியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இக்கவிதைகளில் வேகம் கோபம் ஆதங்கம் அனைத்துமே இருக்கிறது. நல்லது இன்னும் கொஞ்சம் நேர்மறை அகவலில் இருந்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். சில கவிதை வரிகளை நாம் பார்க்கலாம்:
“தடித்துப்போன நாக்குகளில்/ வறண்டுபோன வார்த்தைகள்/ உறவுகள் வெறும் ஒப்பந்தங்கள்” (மழைக்காலத்தில் மரணிக்கும் கொசுக்களும் காணாமல்போன மனிதர்களும்); “பொய்களின் உலைக்களத்தில்/ சடலங்கள் நக்கும்/ நச்சு நாக்குகள்” (புனிதம் = பாவம்); “தினசரிப் பொழுதுபோக்கு/ பிணத்தைக் கடவுளாக்கியபின்/ கடவுளைப் பிணமாக்குதல்” (நிஜத்தினும் மோசம் நிழல்); “கால மாற்றத்தில்/ எல்லாமே/ கழற்றி எறிகிற/ கம்ப்யூட்டர் செருப்புகளாகிவிட்டன” (கால் ரேகை ஓவியம்); “ஆயுதக் கிட்டங்கியில்/ ஒவ்வொரு ஆயுதத்திலும்/ அகிம்சையின் முத்திரைகள்” (ஒற்றை நாணயம்);
மேற்கண்ட கவிதைகளின் இரண்டிரண்டு வரிகள் மேலோட்டமாகப் பார்க்கையில் எதிர்மறையான விவரணைகளைக் கொண்டிருந்தாலும், கவிதையின் மொத்தமும் இன்றைய யதார்த்தத்தின் மீதுள்ள கோபமாக வெளிப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
உலகின் மிகச் சிறந்த இலக்கியவாதியாக அறியப்படும் எமர்ஸன் கூறுகையில், ஒரு இலக்கியப் படைப்பில் எந்த வார்த்தையை வெட்டி எடுத்தாலும் அங்கே ரத்தம் வரவேண்டும் என்பார். பல ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லப்பட்ட கருத்தாக இருந்தாலும் இன்றைக்கும் அது கவிதையின் உள்ளுறையாக இருக்கிறது.
இத்தொகுப்பில் அவரது மிகச் சிறந்த கவிதையான மேல்நிலைத் தொட்டி என்னும் கவிதையை முழுதாக இங்கே தரலாம் என்று நினைக்கிறேன்:
“எனது கவிதை இறந்து கிடந்தது/ இப்படியொரு சாவு/ எதிர்பார்க்கவில்லை/ மலம் கலந்த குடிநீரில்/ மூச்சுத் திணறி உயிர் போயிருக்கிறது/ தண்ணீரிலேயே ஊறி/ உப்பிப் போயிருந்த கவிதையின் உடல்/ சதியின் விறகுகள் அடுக்கித்/ தயாராயிருந்தது/ சாதிச் சிதை/ அரசு மரியாதையுடன் எரியூட்டப்படுமென்று அறிவிப்பு/ அம்பேத்கர் சுடுகாட்டில்/ தகனம்/ இறுதி மரியாதை செலுத்தும் நாள் – 21.12.2022/ இடம் – வேங்கை வயல்/ வழி – திண்ணியம்/ பேருந்து நிறுத்தம் சனாதனம்.
இப்படிப்பட்ட நல்ல கவிதை எழுத முடிந்த கவிஞர் நா. வே. அருள் அவர்களால் இன்னும் நிறைய நல்ல கவிதைகளை எழுதிச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை நிறைய உண்டு, அவர் எழுத வேண்டும். தொகுப்பு வெளியிடுமுன் ஒருமுறை பிழைதிருத்தம் (எடிட்டிங்) செய்திருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஒரு நாவல் அல்லது சிறுகதையில் சிறுசிறு எழுத்துப் பிழைகள் இருக்கலாம், தவறில்லை; ஆனால் கவிதைத் தொகுப்பு வெளியிடும்போது மிகுந்த கவனம் தேவை.