ப்ரதிபா ஜெயச்சந்திரன்
உலகின் முதல் மொழி தமிழ் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அதே வேளையில், நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேறு சில தமிழ் கொடுத்த அறிவியலும் உலகில் முதன் முதலாகத் தோன்றியது என்றும் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். அந்த வகையில் மாற்று மருத்துவத்தில், நம் தமிழர்களின் சித்த மருத்துவம் உலகில் தோன்றிய முதல் மருத்துவம் என்று கூறும் பல நூல்கள், ஆராய்ச்சிகள் நம்மிடம் தோன்றி வளர்ந்துள்ளன. அந்த வரிசையில் சித்தர் வாழ்வியல் ரகசியத் திறவுகோல் என்னும் நூல் பல உடல், நோய், மருத்துவம் போன்ற விடயங்களை ஆராய்ந்து நம் முன் வைக்கிறது. ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சித்த மருத்துவர் டாக்டர் சாலை ஜெயகல்பனா அவர்கள் எழுதிய இந்த இந்த நூலை வெளியிட்டுள்ளது.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்/ திடம்பட மெய்ஞானஞ் சேரவும் மாட்டார்/ உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே/ உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – திருமூலர் திருமந்திரம்.
பொதுவாக மருத்துவ நூல்கள், வந்த வியாதியை எப்படி நீக்க முடியும், அதற்கான மருத்துவ முறைகள் என்னென்ன, மருந்துகளின் உபயோகங்கள், நம் வாழ்வியல் முறையில் கொண்டுவரும் மாற்றங்கள் மூலம், உணவை எவ்வாறு மருந்தாக உட்கொள்வது போன்று பல காரணிகளை நம் முன்வைக்கின்றன.
இந்த நூலில் மொத்தம் 22 கட்டுரைகள் உள்ளன. இவை அனைத்தும், நாம் வாழும் இப்பிரபஞ்சம், அதில், நாம் வாழும் நாடு, அதன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற நில அமைப்புகள், அவற்றில் வாழும் மக்கள், அங்கே விளையும் பயிர்கள், அவை அங்கு வாழும் மக்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கின்றன, நம் உடலின் மூலக்கூறுகள், (நீர், நில, நெருப்பு, காற்று, ஆகாயம்) அவை இந்தப் பிரபஞ்சத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறது, இந்த அடிப்படையைப் புரிந்துகொள்வதன் மூலம், நம் உடல் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு கூறாக எவ்வாறு இருக்கிறது, நோயின்றி வாழ நம் வாழ் சூழல் எவ்வாறு உறுதுணையாக இருக்கிறது, இப்பிரபஞ்சத்திலுள்ள பருவமாற்றங்களான இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம் இவற்றின் சுழற்சி எவ்வாறு மனிதனுக்கு உறுதுணையாக பயணிக்கிறது போன்ற பல்வேறு கருத்துக்களை ஆய்வுப்பூர்வமாக நமக்கு தெளிவுபடுத்துகிறது.

இதன் முதல் கட்டுரை, மனித உடலிகள் வாதம் (காற்றும் ஆகாயமும்), பித்தம் (நீரும் நெருப்பும்), கபம் (மண்ணும் நீரும்) ஆகிய மூன்று பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. அந்தந்த உடல் அதனதன் மூலக்கூறுகளைப் பொறுத்து எவ்வாறு நம் சூழலுக்கேற்ப இயங்குகிறது என்பதைத் தெளிவுறுத்துகிறது. மேலும் இந்த மூன்றில் ஏற்படும் ஏற்றமும் தாழ்வுமே நோய்; இந்த மூன்றில் ஒன்று நம் உடலில் மிகுந்திருக்கும், அதைப் பொறுத்தே நமது நடை, உடை, பேச்சு, குணம், விருப்பு, வெறுப்பு, வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள் என சகலமும் அமைந்திருக்கும். இந்த வாதம், பித்தம், கபம் இவற்றை முறைப் படுத்தத் தெரிந்துவிட்டால் நம் உடல் நலம் நம் கைவசப்பட்டுவிடும்.
இந்த வாதம், பித்தம், கப உடம்புக்காரர்கள், தங்கள் உடல் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளும் முறையைத் தெளிவாக வரையறை செய்து, ஒவ்வொருவரும் தாங்கள் எந்த வகையான உடலமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதைக்கண்டு அதற்குத் தகுந்தாற்போல், எந்த வகையான உணவு முறைகளைக் கைக்கொள்ளலாம், எந்தெந்தப் பருவ காலங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எந்தெந்த உடல் அமைப்பு உள்ளவர்கள் தங்கள் குணம், குறிகளைப் பார்த்து அதற்குத் தகுந்தாற்போல தங்கள் வாழ்க்கை முறையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் போன்ற அரிய தகவல்களைத் தாங்கியுள்ள கட்டுரைகள் அவற்றுக்கான விளக்கப்படங்களுடன் தெளிவுறுத்தப்படுகின்றன. அக்குபங்க்சர், ஹோமியோபதி, மலர் மருத்துவம், ரெய்க்கி, இயற்கை மருத்துவம், பச்சைக்காய்கறிகள் மூலம் மேற்கொள்ளப்படும் மருத்துவம் இன்னும் இதுபோன்ற மாற்று மருத்துவ முறைகளில், கண்டிப்பாக ஒரு மருத்துவர் உதவியின்றி ஒரு நோயாளி குணமடைதல் சாத்தியமே இல்லை; மாறாக இந்த சித்த மருத்துவ முறையில், நம் கை விரல்களில் உள்ள பஞ்ச பூத தத்துவத்தை உணர்ந்துகொண்டால், பிறர் உதவியின்றி, தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக்கொள்வதன் மூலம் எவ்வாறு நோய் நொடியின்றி வாழலாம் என்னும் செயல் முறை விளக்கங்களுடன், உதாரணங்களுடன் தெளிவாகத் தரப்பட்டுள்ள விளக்கங்கள் மருத்துவரில்லாத இடங்களில்கூட தன்னால் எவ்வாறு ஓர் ஆரோக்கியமான வாழ்வைக் கட்டமைத்துக்கொள்ளலாம் என்று இந்த நூலில் கூறப்பட்டுள்ளது சிறப்பு.
மேலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு வகைகள், பானங்கள், சிறுதானிய வகைகள், பயறுவகைகள் ஆகியவற்றில் யார் யார் என்னென்ன வகையானவற்றை, எவ்வெவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் கூறியிருப்பது, உணவுகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த சரியான புரிதலை நமக்கு ஏற்படுத்துகிறது இந்நூல்.
நம் வாழ்வின் அனைத்து வகையான தேடல்களும், கடைசியில், நான் யார்? என்பதில்தான் முடிகிறது. ஆன்மிகத் தளத்தில் தேடல் ஒருவகையாக இருக்கையில், உடல்தளத்தில், அதன் தேடல் வேறுவகையாக இருப்பினும், நம் உடல்தன்மையைப் புரிந்துகொண்டால், நம் அனைத்துத் தேடல்களுக்கும் பதில் கிடைத்துவிடும். நாம் யார்? திறவுகோல் பகுதியில் ஓர் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையைப் புரிந்துகொண்டால், நம் உடல் வகைமை என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதாவது, நம் உடல் எடை அமைவு, நடை மற்றும் பேச்சு, வானிலையை உடல் எதிர்நோக்கும் விதம், வியர்த்தல் தன்மை, பசியின் தன்மை, நம் தோலின் அமைப்பு, நம் கூந்தலின் அமைப்பு, உதடுகளின் அமைப்பு, கண்களின் அமைப்பு, நம் உடலின் பொதுப் பண்புகள் மற்றும் நகங்களின் அமைப்பு, நமது ஞாபக சக்தி, நம் சிந்தனை முறை, செயல் திறன், தூக்கம், உணர்வுகள், கனவு போன்ற நமது உடலின் இயல்புகளை அலசி, நம் உடல் எத்தன்மையிலானது என்பதைக் கண்டுகொண்டால், நம் உடலின் வகைமையைக் கணித்துவிடலாம். இந்த அனைத்து வகையான கேள்விகளுக்கும், மூன்று விடைகள் கொடுக்கப்பட்டு, அந்த விடைகளைத் தொகுத்துப் பார்க்கும்போது, நம் உடலின் வகைமையைக் கண்டறியலாம். இந்த வகையில், மனித உடல் வகைகளை வாத உடல், வாத பித்த உடல், வாத கப உடல், பித்த உடல், பித்த வாத உடல், பித்த கப உடல், கப உடல், கப வாத உடல், கப பித்த உடல், வாத பித்த (அல்லது) முக்குற்ற உடல் என பத்து வகையாகப் பிரிக்க முடியும். இப்படிப்பட்ட உடல் தேகியினரின் உடல் பண்பு எவ்வாறு அமைந்திருக்கும் என்ற விளக்கமும் தரப்பட்டுள்ளது.
உதாரணமாக, பித்த கப உடல் பண்புகளாக சொல்லப்படும் செய்திகள்: உடல் வெளிறிய நிறத்துடன் இருக்கும், இனிமையான குரல் வளம் இருக்கும், கற்றோரை ஆதரிக்கும் நல்ல எண்ணம் இருக்கும், நடுநிலையான மனப்பக்குவம் இருக்கும், முதியோரைப் பேணும் குணம், புளிப்பு, இனிப்பு சுவையுள்ள பண்டங்களில் விருப்பம், இவைதவிர, அளவு கடந்த மோகம் உள்ளவர்களாக இருப்பார்கள், தர்மசிந்தனையும் நல்ல மனத்திடமும் நல்லறிவும் வாய்க்கப் பெற்றிருப்பார்கள்.
இவைதவிர, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை நிலங்களில் வாழும் மனிதர்களுக்கு பொதுவாக எந்தவகையான நோய்கள் வரும் என்ற குறிப்புகளும் உண்டு. அதாவது, குறிஞ்சி நிலத்தில் வாழ்பவர்களுக்கு, கப நோய்கள், இரத்தத்தை உறிஞ்சும் ஜுரம், வயிற்றில் கட்டிகள் தோன்றுதல் போன்ற நோய்களும்; முல்லை நிலத்தில் வாழ்பவர்களுக்கு பித்தநோய், மற்றும் வாதநோய்களும்; நெய்தல் நிலத்தில் வாழ்பவர்களுக்கு வாதநோய், ஈரல் பெருக்கம், குடல் வாயு உண்டாதல், யானைக்கால் நோய் உண்டாவதுடன், மெலிந்த உடல் உள்ளவர்கள் உடல் பருப்பார்கள்; பாலை நிலத்தில் வாழ்பவர்களுக்கு வாத, பித்த, கப அனைத்து நோய்களும் வரும், இது வாழ்வதற்கேற்ற நிலம் அல்ல; மாறாக, மருத நிலத்தில் வாழ்பவர்களுக்கு வாத, பித்த, கப நோய்கள் இருந்தாலும் நீங்கி விடும், இதுதான் மனிதர்கள் வாழ்வதற்கேற்ற நிலம் என்று சித்தர்கள் வரையறை செய்து வைத்திருக்கிறார்கள்.
மிக முக்கியமாக, கழிவுகளின் தேக்கமே நோய் என்னும் கோட்பாட்டை இன்றைய விஞ்ஞானமும், உலக சுகாதார நிறுவனங்களின் ஆய்வும் இன்றுதான் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால் சித்தர்களின் கோட்பாடு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இதனைக் கூறியுள்ளது. சித்தர்கள் அதற்காக, கழிவுநீக்க விதிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதன்படி, வாரம் ஒருமுறை உண்ணாநோன்பு இருத்தலும், ஆண்கள் சவரம் செய்தலும்; மூன்று நாட்களுக்கு ஒரு முறை பெண்கள் அஞ்சனம் இடுதலும்; நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய்க் குளியலும்; மாதம் ஒருமுறை புணர்ச்சி அல்லது போகமும்; இருமாதங்களுக்கு ஒருமுறை நசியம் செய்தலும் (மூக்குச் சொட்டுமருந்து இடல்); நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விரேசனமும் (பேதிக்கான மருந்து உட்கொள்ளல்); ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வமனமும் (வாந்திக்கான மருந்து) உட்கொண்டு உடல் கழிவுகளை நீக்க வேண்டும் என்றும் சித்தர்கள் விதி செய்திருக்கிறார்கள்.
இந்நூலில் சில நோயாளிகள் எந்தெந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்து, பின்னர் இந்தச் சிகிச்சையின் மூலம் எவ்வாறு அற்புத சுகத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்னும் இந்நூலை எழுதிய மருத்துவரின் இருபது ஆண்டுகால அனுபவப் பகிர்வுகளும் உள்ளன.
இதுபோன்று இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை இந்தப் புத்தகம் தாங்கியிருக்கிறது. தமிழர்கள் அனைவரும் தங்கள் உடல்நலனைப் பேணிக்கொள்ள, இந்த நூலை ஆரோக்கியக் கையேடாக வைத்துக்கொள்வது நல்லது. இந்த நூல் வாழ்தல் குறித்த மேலதிகப் புரிதலை உண்டாக்கி நலமுடன் வாழ வழிவகை செய்யும் என்பது நிச்சயம்.
