நிகழ் அய்க்கண்
இந்நூலில், சென்னை நகரம் குறித்து 1990 களின் இறுதியில் துவங்கி, பல்வேறு கட்டங்களில் தீக்கதிர்’ மற்றும் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்ட ஐம்பத்தொரு கட்டுரைகளானது ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இடம் பெற்றிருக்கின்றன. இக்கட்டுரைகளில் ஆசிரியர் கூறியுள்ள கருத்துக்களை மிகச்சுருக்கமாகக் காணலாம்.
ஊரும் பேரும் :
1879 பிப்ரவரியில் இந்தியாவிற்கு வந்து பம்பாயை தலைமையகமாகக்கொண்டு செயல்பட்டுவந்த பிரம்மஞான சபையினர், 1882ல் சென்னை அடையாறு பகுதிக்கு தங்களது தலைமையகத்தை மாற்றினர். பிரம்மஞான சபையின் தலைமைப் போதகர், மாநாட்டில் கலந்துகொண்ட தனது பிரதிகளுக்கு எழுதிய கடிதத்தில் மக்களனைவரும் பல்வேறு தேசிய இனங்களை, மதங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்களனைவரையும் சகோதரர்களாகப் பாவிக்கவும்; சகிப்புத்தன்மையுடன் அணுகவும் வேண்டிக்கொண்டார். அதற்கிணங்கவே பிரம்மஞான சபையின் நிறுவனர்களாக இருந்த ப்ளாவட்ஸ்கி அம்மையாரும், ஹென்றி ஆல்காட்டும் செயல்பட்டு வந்ததை அறியமுடிகிறது. அதேபோல், ஆதியில், நகரத்தெருக்களின் பெயர்கள் தனிநபர்களின் பெயர்களைக்கொண்டு அழைக்கப்பட்டு வந்ததையும், அதன்பிறகான காலத்தில், ‘சிட்டி இம்ரூவ்மெண்ட் ட்ரஸ்டால்’ உருவாக்கப்பட்ட நகர்களில் பெயருக்குப் பதிலாக எண்கள் இடம் பெற்றதையும் கவனத்திற்கு உட்படுத்துகிறது. மேலும் நீர்நிலைகள் , விளக்குகள், குடிநீர்க்கிணறு, நீர்தேக்கத்தொட்டி, கடைகளின் பெயரை அடையாளப்படுத்தி அழைக்கப்பட்டு வந்ததையும் காணமுடிகிறது.
‘தீவிங் பஜார்’ என்பது ‘குஜிலி பஜார்’ என மாறியதும், அப்பஜாரில் 40க்கும் மேற்பட்ட புத்தக விற்பனையாளர்களும், பதிப்பாளர்களும் கடை வைத்திருந்ததும் அதன்பின்னர் அப்பகுதி இரும்பு மற்றும் இதரக்கடைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. 1900 வாக்கில் ‘மூர் மார்க்கெட்’ செயல்படத்துவங்கி பிரசித்திப்பெற்ற வர்த்தகமையமாக மாறியது பற்றியும் அறியமுடிகிறது. அக்காலத்தில் இராயப்பேட்டை முழுவதுமே தோட்டங்களாக இருந்ததையும், அப்பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்ததையும், அப்பகுதியில் கோலக்காரன்பேட்டையென்பது கொலைகாரன்பேட்டையென மாற்றிய கதையையும் விவரிக்கிறது.
1763ஆம் ஆண்டில் அன்றைய பிரிட்டிஷ் அரசின் கட்டுமானப்பொறியாளராக இருந்த ஜேம்ஸ் ஸ்டிங்கரின் பெயரிலான ‘ஸ்டிங்கர் தெரு’ தற்போது சிங்கர் தெருவாக மாறியிருப்பதையும், இதேபோல, சாலைகள், வணிக வளாகங்களுக்குச் சூட்டப்பட்டுள்ள சிறப்புவாய்ந்தவர்களின் தமிழ்ப்பெயர்களை சுருக்கி ஆங்கில மொழியில் அழைப்பதன் மூலம் அப்பெயர்களின் தனித்துவ அடையாளங்கள் அழிக்கப்படுவதாக இருப்பதையும் கூறுகிறது. மதராஸ் ராஜதானியில் மதுவிலக்கிற்கு ஒரு வரலாறு இருக்கிறது. எனினும் மதுபானங்களின் பெயரால் பட்டணத்தில் தெருக்களுக்கும், மையங்களுக்கும் இருந்துவருவதற்கு வரலாறு ஏதுமில்லை. மேலும், மதராஸ் பட்டணம் என்றில்லாமல் எந்த ஒரு பட்டணத்திலும் அல்லது ஊரிலும் உள்ள அதன் பகுதிகளும், வீதிகளும், கிராமத்தில்கூட அங்குள்ள தெருவின் பெயர்கூட வரலாறு, பண்பாட்டுடன் தொடர்புடையது என்கிறது.
வரலாற்றுச்சுவடுகள் :
கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றியபோது, முதல் தலைமைத் தபால் அலுவலகம் 1784ல் கல்கத்தா; 1794ல் பம்பாய்; 1796ல் சென்னையில் துவக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இவ்வலுவலகம் கோட்டை வளாகத்திலேயே இருந்திருக்கிறது. பின்னர் 1856ல் பிராட்வேக்கு மாறியிருக்கிறது. சென்னை மவுண்ட்ரோட்டில் பழைய ஸ்பென்சருக்கு சற்று எதிரே இருப்பதுதான் கலீல் பில்டிங். இது காஸிம் கலீலுக்குச் சொந்தமானது. தேசப்பிரிவினைக்குப்பிறகு காஸிம் பாகிஸ்தானுக்குச் சென்றதால் அந்தக் கட்டடமானது மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் நிறுவனர் அகர்சந்த் வசமாகியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் கல்லூரிகள் சாதி, மத, இன, பேதமின்றி அரசு நிலத்தையும், கோயில் நிலத்தையும், ஆறுகளையும், ஆற்றுப்படுகைகளையும், ஏரிகளையும் ஆக்கிரமித்துதான் கட்டடங்கள் எழுப்பியுள்ளதையும் இந்நூல் விரிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
மதராஸ் பட்டணத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே 1600களின் இறுதிவாக்கில் 12 தெருக்களில் 126 வீடுகளும், இரண்டு கிட்டங்கிகளும் இருந்திருக்கின்றன. அன்றைய மதராஸின் கேந்திரமான பகுதியாக கிட்டத்தட்ட 850 ஏக்கர் நிலப்பரப்பில் ஜார்ஜ் டவுன் விளங்கியது. அத்தருணத்தில்தான் கடைத்தெருக்கள் உருவாகியிருக்கின்றன. 1782ல்தான் கொத்தவால்சாவடி உருவாகியிருக்கிறது. அதன் பிறகான காலத்தில் நகரம் விரிவடையும்போது பல்வேறு பகுதிகளில் தனியார் மார்க்கெட்டுகளும் திறக்கப்பட்டுள்ளன. மே தினம் பற்றி இந்தியாவில் பெரும்பாலானோர் அறியாத காலகட்டத்தில் 1923 மே தினத்தன்று மதராஸ் கடற்கரையில் (உழைப்பாளர் சிலையிருக்குமிடத்தில்) கொடியேற்றி, விவசாயிகள் தொழிலாளர் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, மேதின உரையாற்றியிருக்கிறார் சிங்காரவேலர். தொழிற்சங்க இயக்கங்கள் மட்டுமின்றி, 1919ல் ரெளலட் சட்டத்திற்கு எதிராக காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டம், அந்நியர் ஆட்சிக்கு எதிராக பல்வேறு இயக்கங்கள் நடத்திய போரட்டங்கள் யாவும் பட்டாளம் பார்க்கில் நடந்ததை அறிய முடிகிறது.
பண்பாட்டு வடிவங்கள் :
மதராஸ் பட்டணத்தில் பிரெஞ்சுப் படையெடுப்புக்குப்பின்னர் பாதுகாப்புக்கருதி உள்ளூர் மக்கள் வாழும் பகுதி தகர்க்கப்பட்டதோடு, ‘கறுப்பர் நகரம்’ என்ற பெயரையும் பெற்றது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டும் விழாவின்போதுதான் அது ‘ஜார்ஜ் டவுனாக’பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது. இப்பகுதியில்தான் அச்சுக்கூடங்களும், புத்தக நிலையங்களும், நூற்பாலைகளும், துறைமுகமும், மின்னுற்பத்தி நிலையங்களும் உருவாகியிருக்கின்றன. இதுதவிர முதல் ரயில் நிலையம், தபால் நிலையம், முதல் தொழிற்சங்க இயக்கமும் தோன்றியிருக்கின்றன. காந்தியடிகள் மதராஸுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்ததைப்போன்று, வேதாந்த மூளையுடனும், இஸ்லாம் என்ற உடலுடனும் கூடிய விவேகானந்தரை உலகுக்கு அறிமுகப்படுத்தியதே மதராஸ் மாகாணந்தான் எனவும், பெரும் திருவிழாவாக, உற்றார் உறவினர் கூடும் நிகழ்வாக நடந்துவந்த ‘கவுனி தாண்டும் குடை’ நிகழ்வானது, மெல்ல மெல்ல வலதுசாரி அடையாள அரசியலுக்குள் சிக்கியுள்ளதையும் விவரிக்கிறது. அண்ணாசாலையெனும் மவுண்ட்ரோடுதான் பட்டணத்தின் மிகப்பழைமையான சாலையாகக் கருதப்படுகிறது. இதுவே 1796ல்தான் கிண்டிமுதல், கோட்டைவரை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 1874ல்தான் பட்டணத்தில் ‘டிராம்’ ஓடத்தொடங்கியிருக்கிறது.
விடுதலை இயக்கத்தவரின் தொடர்புமொழியாக ஆங்கிலமே முதலில் இருந்துவந்திருக்கிறது. அதன்பின்னர் வெகுமக்களின் பங்கேற்புக்குப் பின்னர் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழியின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. புதிய சூழலில் பிராந்திய மொழியில் நிகழ்த்தப்படும் உரைகள் அந்தந்த மொழியில் அப்படியே சுருக்கெழுத்தில் எழுதி அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ‘பிட்மென்’ சுருக்கெழுத்து முறை பரவலாகுவதற்கு எம். சீனிவாசராவ் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். பட்டணத்தில் புகழ்பெற்ற மனிதர்கள் பெயரால் தெருக்கள் இருப்பதுபோன்று, பெருந்தெய்வங்கள், சிறுதெய்வங்கள் பெயரால் ஏராளமான தெருக்கள் இருக்கின்றன. பட்டணத்தில், பெரும்பாலான பஜனைக் கோவில்களும், பக்த ஜனசபைகளும் வெறும் வழிபாடு என்ற அளவில் மட்டும் இல்லாது சமூகச் செயல்பாடுகளைக்கொண்டு, செயல்பட்டும் வந்திருக்கிறது.
1975களுக்குப் பின்னர் ‘ஹிக்கின் பாதம்ஸ்’ பத்மநாபன் மற்றும் பார்த்தசாரதி ஆகிய இருவரும் சேர்ந்து தேங்கிக்கிடக்கும் பல்வேறு பதிப்பாளர்களின் நூல்களை விற்கும் முகமாய் ஒரு புத்தகக் காட்சியை மவுண்ட்ரோடு வி.ஜி.பி., கூடம் எதிரில் பழைய பாட்டா கடையின் முதல் மாடியில் புத்தகக் காட்சியை நடத்தியிருக்கின்றனர். 1976 அவசரநிலை முடிவுக்குப்பிறகு, ஒரு டிசம்பரில் காயிதேமில்லத் கல்லூரி வளாகத்தில் புத்தக விற்பனையாளர் அமைப்பானது தங்களது முதல் புத்தகக் காட்சியை நடத்தியிருக்கிறது. கிழக்கிந்தியக் கம்பெனியார், 1626ல் துர்கராயப்பட்டணம் எனுமிடத்தில் தளங்களைக் கொண்டிருப்பினும் வணிகத்திற்கு உரிய இடமாக சென்னைப் பட்டணம் நோக்கி நகர்ந்தனர். அப்போது, விஜயநகர சாம்ராஜ்யத்தின் தென்பகுதி ஆளுநராக இருந்த வெங்கடாத்திரி என்பவரால், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு 1639 ஜூலையில் அளிக்கப்பட்டதிலிருந்துதான் சென்னை நகரின் வரலாறு துவங்கியிருக்க முடியும்.கிழக்கிந்தியக் கம்பெனி சென்னப் பட்டணத்தில்தான் முதன்முதலில் சொந்தமாக கோட்டை கொத்தளங்களை உருவாக்கியுள்ளனர். அப்பகுதியே ‘ஒயிட் டவுனாக’ அழைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் நவாப், அவுரங்கசீப், ஆகியோரிடமிருந்த கிராமங்களைப் பெற்றுத்தான், (1672ல் திருவல்லிக்கேணி; 1693ல் எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை; 1708ல் திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, எண்ணுர்; 1742ல் வேப்பேரி, பெரம்பூர், பெரியமேடு, சாந்தோம், மயிலாப்பூர்,) ஒரு புதிய சென்னப்பட்டணம் உருவாகியிருக்கிறது.
நகர்க் கட்டமைப்பு :
மதராஸ் பட்டணத்தின் ஒரு சில தெருக்கள் அல்லது பகுதிகள் பிரத்தியேக வர்த்தக நடவடிக்கைகளைக் கொண்டதாக இருந்து வந்திருக்கின்றது. இதுவே பாரம்பரியம் மிக்க நகரங்களின் குணப்பாங்காகும். காகிதத்திற்கு மலயப்பெருமாள் தெரு, பழங்களுக்கு பந்தர் தெரு, துணிமணிக்கு கோடவுன் தெரு, நாட்டு மருந்துகளுக்கு ராசப்பச்செட்டி தெரு, அலோபதி மருந்துகளுக்கு தாதா முத்தியப்பன் தெரு, ரசாயனங்களுக்கு நைனியப்பன் தெரு, விதேசிப்பொருட்களுக்கு காசிச்செட்டி தெரு, மளிகைப்பொருட்களுக்கு ஆதியப்ப நாயக்கன்தெரு, கண்ணாடிக்கும் வண்ணப்படங்களுக்கும் தேவராஜமுதலி தெரு, மின் கருவிகளுக்கு கோவிந்தநாயக்கன் தெரு, மின்மோட்டார்கள், இயந்திரங்கள் தொடர்பானவைகளுக்கு எர்ரபாலு செட்டித்தெரு ஆகிய பகுதிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. அதுபோல், ஜெனரல் ஹாஸ்பிட்டல், ‘தினத்தந்தி’ துவங்கி அமைந்தகரை வரையிலான பூந்தமல்லி சாலையானது மருத்துவமனைகள், அது சார்ந்த சேவை மையமாக திகழ்ந்திருந்திருக்கின்றது. 1660களில், கோட்டைக்குள் இருந்துவந்த காரிஸன் மருத்துவமனையும், நேவல் மருத்துவமனையும் உருவாகின. 1912 இராயப்பேட்டை மருத்துவமனையை மதராஸ் கார்ப்பரேஷன் துவக்கி நிர்வகித்து வந்தது. 1920ல் பொது மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது. ஸ்பர்டாங்க் சாலையில் உள்ள காசநோய் மருத்துவமனை ஏழாவது எட்வர்ட் மன்னர் பெயரால் துவக்கப்பட்ட ஆய்வு நிறுவனமாகும். மதராஸ் பட்டணத்தில் அலோபதி சேவை மட்டுமின்றி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி சேவைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அந்நாளில் நகர மக்களின் நல்வாழ்வின் பிரதான அம்சங்களாக இருக்கக்கூடிய வாழ்விடம், கல்வி, உணவுப்பண்டங்கள், குடிநீர், குளிப்பிடம், கழிப்பறை ஆகியவைபற்றி முறையான திட்டமிடல் மாநகராட்சிக்கு இருந்திருக்கிறது. மாகாணத்தின் நவீனக் கல்வி முறைக்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர் சர் தாமஸ் மன்றோ ஆவார். இவர் கவர்னராக இருந்த காலத்தில் (1820-1827) மாகாணம் முழுக்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, மாகாணத்திலிருக்கும் பட்டணத்தில் 305 சாதாரணப் பள்ளிக்கூடங்களும், 17 தர்ம ஸ்தாபனங்கள் நடத்தக்கூடிய பள்ளிகளும் இருந்ததை அறிய முடிகிறது. 1894ல், பிரம்மஞான சபையின் நிறுவனர்களில் ஒருவரான ஆல்காட்டின் முயற்சியில் பஞ்சமருக்கென நான்கு பள்ளிகள் சென்னப்பட்டணத்தில் துவக்கப்பட்டிருக்கின்றன.
சென்னை நம்ம ஊரு :
மதராஸ் எனும் சென்னப்பட்டணத்தின் வரலாற்றினைப்பற்றி பல நூல்கள் இருந்தாலும், பி.வி.ஜகதீச ஐயரின் ‘ஜில்லா சரித்திரம் சென்னப்பட்டணம் மா.சு. சம்பந்தனின் ‘சென்னை மாநகர்’ ஆகிய நூல்கள் தனித்துவமிக்கதாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
