பிரபீர் பூர்காயஸ்தா
சுதந்திரத்தின்போது பிறந்தவனாக, 1975 நெருக்கடி நிலை காலத்தை மட்டுமாக கருத்திக் கொள்ளாமல், மதச்சார்பற்ற, பன்முகம் கொண்ட, ஜனநாயக, அரசியலமைப்பால் வழிகாட்டப்படும் இந்தியக் குடியரசின் 75 கால வரலாற்றையும் மனதில் கொண்டு, மாறுபட்ட இந்த இரண்டு காலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

ஊடகம்-அன்றும் இன்றும்
நெருக்கடி நிலையின் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று (கட்டாயக் கருத்தடை தவிர்த்து) பயந்து போன, சாதுவான ஊடகம். ஊடகத்தின் வாயை அடைக்கும் அதிகாரம் அரசு நிர்வாகத்திற்கு இருந்தது. பத்திரிகைகள் தாம் எழுதியவற்றை தணிக்கைக்கு அனுப்ப வேண்டும். நெருக்கடி நிலைக்குப் பிறகு அத்வானி பத்திரிகைகளைக் கடிந்துகொண்ட விதம் அனைவருக்கும் நினைவிருக்கும். ‘உங்களை வளையச் சொன்னார்கள். ஆனால், நீங்கள் தவழ்ந்தீர்கள்’ என்றார் அவர். ஆனால் பணியாது, அரசின் பிரச்சாரத்தை ஏற்காது சுயகௌரவத்தோடு நின்றவர்களையும் நினைவில் கொள்ளவேண்டும். போற்ற வேண்டும். இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்தப் புதிய கட்டுப்பாட்டிற்குள் பணியாது இயங்கியது. அதன் வெற்றுத் தலையங்கம் பத்திரிகைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக சக்திமிக்க எதிர்ப்புச் செயலாகும். சிறு அமைப்புகளும்கூட தணிக்கையை எதிர்த்தன. ரமேஷ் தாப்பர் நடத்திய செமினார் என்ற பத்திரிகை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. எனினும், அவற்றால் செய்ய முடிந்தது குறைவே.
இன்றைய ஊடகங்களின் நிலை எப்படி உள்ளது? முன்பு ஊடகம் என்றால் பொதுவாக அச்சு ஊடகம்தான் – பிரஸ் – இன்று பலவிதமான தளங்கள் உள்ளன. அனைத்தையும் கட்டுப்படுத்துவது நிச்சயமாக சிரமமானதுதான். இன்று ஊடகம் மிகவும் பன்முகத்தன்மை கொண்டதாகி விட்டது. அதற்கான செயல்திட்டம் வேறு விதமாக வடிவமைக்கப்படுகிறது. முன்பு அச்சு ஊடகம் சொல்வதுதான் செய்தி. இன்று 24×7 செய்தி சானல்களை நாம் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டே இருப்பதால், செய்தி என்பதே மாறிவிட்டது. முக்கிய நேரத்து செய்திகளின்போது ‘விவாதங்களைப்’ பார்ப்பது நமக்கு செய்திச் சுழற்சியின் முன்னோட்டத்தைக் காட்டுகிறது.
செய்தி அல்லது விளக்கம் என்று முன்பு நாம் கருதிய ஒன்றின் தளத்தை சமூக ஊடகம் இன்று முற்றிலுமாக மாற்றி விட்டது. ஊடகங்களின் செல்வாக்கும், அவற்றின் வீச்சின் எல்லையும்கூட மாறி விட்டன. எந்தப் பிரச்சனைகள் விவாதிக்கப்பட வேண்டும், பத்திரிகையாளர்கள், வாசகர்களால் விமர்சிக்கப்பட வேண்டும் என்பது உட்பட செய்தி என்பதையே சமூக ஊடகங்கள்தான் தீர்மானிக்கின்றன. இதைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினம் என்பது வெளிப்படை. அதனால்தான் பாஜக, மோடி கூட்டாளிகள் எவ்வளவு முயற்சி செய்தாலும்கூட, எதிர்ப்புக் குரல்கள் கேட்கவே செய்கின்றன. அரசும் அதன் கூட்டாளிகளும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இந்த ஏராளமான தனிநபர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பதட்டத்தில் இருக்கின்றன. இதற்காக, பழைய நெருக்கடி நிலை காலத்தில் போதுமானவைகளாக இருந்தவற்றிலிருந்து மாறுபட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.
வேறு வார்த்தைகளில் சொன்னால் பத்திரிகைகளின் வாயை அடைக்க முன்பிருந்த வழிமுறைகளிலிருந்து மாறுபட்ட ஒன்றை உருவாக்கும் விதமாக ஒரு தொழில்நுட்ப மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் வாயை அடைக்க அந்தப் பழைய நெருக்கடி நிலை உத்தியை பயன்படுத்த முடியாது. அது நேரடித் தணிக்கை முறை. புதிய தணிக்கையாளர்கள்- அதிகாரபூர்வமானோரும், அதிகாரபூர்வமற்றோரும்- என்ன செய்கிறார்கள்? ஒரு நடுங்க வைக்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு சிலரை வைத்து ஓர் உதாரணத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் மக்களை அச்சமடைய வைக்கிறார்கள். எஃப்.ஐ.ஆர்., போட்டு தொடர்ந்து தொல்லை செய்வார்கள். இதை சட்ட இம்சை என்று குறிப்பிடலாம்.
lawfare ஓவியர் எம்.எஃப். உசேன் பிரச்சனை நினைவிருக்கிறதா? கிட்டத்தட்ட இந்தியா முழுக்க அவர் மீது வழக்குகள் போடப்பட்டன. தனது ஓவியங்கள் மூலம் இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக எல்லா இடங்களிலும் அவர் மீது வழக்குகள் போடப்பட்டன. தனது ஓவியங்கள் மூலம் இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக எல்லா இடங்களிலும் அவர் மீது வழக்குகள். விஸ்வ இந்து பரீஷத், பஜ்ரங்தாரர் போன்றவை அந்த 90 வயது ஓவியருக்கு மிரட்டல்கள் விடுத்தன. கடைசியில், இவற்றையெல்லாம் தாங்க முடியாது, உசேன் இந்த நாட்டைவிட்டு வெளியேறி, தன் மரணம் வரை சுய நாடு கடத்தலில் வாழ்ந்தார்.
நிறைய சமீபத்திய உதாரணங்கள் சில அம்சங்களில் இன்னும் அச்சுறுத்துவதாக உள்ளன. அரசு அல்லது இந்து மேலாதிக்க முயற்சிகளை விமர்சிப்பதுபோல் தெரிந்தால், அந்தப் பத்திரிகையாளர் ட்ராலிங், வன்முறைத் தாக்குதல், தகவல் தொழில்நுட்பச் சட்டங்களின்கீழ் வழக்கு, தேசதுரோக, தீவிரவாதத் தடை சட்டங்களின்கீழ் கைது என எல்லாவற்றையும் சந்திக்க நேரிடும். இந்தத் தாக்குதல் பட்டியலில் தனியார் செய்தி நிறுவனங்கள் கண்டிப்பாக இருக்கும். குறிப்பாக அவர்களுக்கு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றின் தாக்குதல் அதிகமாக இருக்கும். ட்வீட் செய்ததற்காக செய்தியாளர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஃபேஸ்புக்கில் பிறரது பதிவை பகிர்ந்தவர்கள் மீதும் வழக்குகள். கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை உற்சாகமூட்டிய மாணவர்கள் மீது ராஜதுரோக வழக்குகள் போடப்பட்டன. விளம்பரங்களில் முஸ்லிம் தொடர்பானவையாகக் கருதப்படும் பொருட்களை, குறியீடுகளைக் காட்டிய விளம்பதாரர்கள் புறக்கணிப்புகளுக்கு ஆளானார்கள். ஓர் ஒத்திசைவுக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விளம்பரங்களை திரும்பப் பெறுமாறு மிரட்டல்கள் எழுந்தன. ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குல்கள், கட்டுப்பாடுகள் குறித்த பட்டியல் மிக நீண்டது. அது தினமும் வளர்ந்துகொண்டே செல்கிறது.
பழைய நெருக்கடி காலமோ அல்லது அதைவிட மோசமான இன்றைய பெயரிடப்படாத நெருக்கடி காலமோ, ஊடகத்தின் வாயை அடைப்பது, எப்போதும்போல கதைகளின் ஒரு பகுதி மட்டும்தான். திரும்பும் திசையெல்லாம் பயங்கரமான ஒடுக்குமுறையை தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஆனால் அதே சமயம் மக்களின் வீரமான எதிர்ப்பையும் பார்க்க முடிகிறது. மிகச் சமீப காலத்திலும், தற்போதும் இந்த வீரத்தை நம்மைச் சுற்றிப் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு ஊடகத்தை எடுத்துக் கொள்வோம். இணைய செய்தி நிறுவனங்கள் மட்டுமின்றி, அனைத்து செய்தி நிறுவனங்களிடமும் நாம் விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு குஜராத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் முன்பு அரசு ஆதரவாக இருந்த செய்தித்தாள்கள் மறைக்கப்பட்ட கோவிட் 19 மரணங்களை வெளிக்கொணர்ந்தன. எனினும் இந்த மீறலுக்கான அவை வருமானவரிச் சோதனை என்ற விலையைத் தந்தன.
மற்றொரு அம்சம் இன்றைய முக்கிய செய்தித்தாள்கள் போடும் இரட்டை வேடம். அவை அரசு தரும் செய்தி, சற்று பூசி மெழுகப்பட்ட உண்மைச் செய்தி இரண்டையும் தருகின்றன. வாசகர்கள் அந்தப் பத்திரிகையை படிப்பதை ஒட்டுமொத்தமாக நிறுத்துவதற்கு முன், எந்த அளவு ஏற்றுக்கொள்வரோ அந்த அளவிற்கு அந்த இரு செய்திகளின் சதவிகிதம் கூடும், குறையும். தொலைக்காட்சிகளிலும் இப்படித்தான். முக்கிய செய்தி நேரங்கள் எல்லாம் ஏதோ கிளேடியேட்டர் போட்டிபோல உள்ளன. செய்தித் தொகுப்பாளர்கள் சர்க்கஸ் ரிங்மாஸ்டர்போல் எதிர்ப்புக் குரல்களை மிரட்டுகிறார்கள். ஆனாலும் முக்கிய ஊடகங்களிலும்கூட, சில விமர்சனப் போக்குகள் தொடரவே செய்கின்றன. ஆனால் இங்கும் சில முக்கிய மாற்றங்களை கவனமாகத் தவிர்க்கிறார்கள். இவ்வாறு நான் குறிப்பிடுவது மக்கள் போராட்டங்கள், இயக்கங்கள் குறித்த செய்திகளைத் தவிர்ப்பதைத்தான்.
இன்றைய ‘தேசிய’ அல்லது ‘முக்கிய’ ஊடகங்களைப் பார்த்தால், அவற்றில் உழைக்கும் வர்க்கம் எங்கே இருக்கிறது? தொழிற்சங்கங்கள் எங்கே? விவசாயிகள்? தொழில்கள் குறித்த செய்திகளை கவனிக்கும் பிரிவு தொழிலதிபர்களைப்பற்றி மட்டுமே பேசும். நீங்கள் அதில் நிர்வாகத்தின் குரலைக் கேட்க முடியும். நிறுவனங்களின் நிதி நிலை குறித்த விவாதங்கள் இருக்கும். தொழிற்சாலையில் வேலை பார்ப்போரிடமிருந்து, அதன் முதலாளி நோக்கி கவனம் திரும்பி விட்டது மிக வெளிப்படையாகத் தெரிகிறது. அதேபோலத்தான் பேஷன், வாழ்க்கை முறை ஆகியவை பற்றிய செய்திகளை வெளியிடும் சமூகம் குறித்த பக்கத்தின்-பக்கம் 3-வளர்ச்சியும். முழுபக்கமும் பிரபலங்கள் குறித்த செய்திதான். சமயங்களில் முதல் பக்கத்திலும்கூட.
People’s Archive of Rural India (PARI) வின் நிறுவனர் பத்திரிகையாளர் பி.சாய்நாத், மும்பையில் பேஷன் நிகழ்ச்சிகளுக்குச் சென்று எழுத 40 பத்திரிகையாளர்கள் இருந்தால், கிராமப்புற மஹாராஷ்டிரா, விவசாயத் தொழிலாளிகள், சிறு விவசாயிகள் மரணம் ஆகியவற்றைப்பற்றி எழுத ஒரே ஒரு பத்திரிகையாளர் மட்டுமே இருப்பார் என்று சுட்டிக்காட்டினார்.
மாற்றத்திற்கான எந்த ஓர் உந்துதலுக்கும் முக்கியமான மக்கள் இயக்கங்கள் பொதுவாக இந்த சமூக ஊடகங்கள் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதில்லை. இன்றைய தலைமுறை ஊடகங்களைப் பயன்படுத்தும் விதங்களும் அவற்றிற்குப் புதியது. அச்சில் எது வந்தாலும், அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று என் பாட்டியின் தலைமுறை சொல்வது எனக்கு நினைவிருக்கிறது. அதைப்போலவே, இன்றைய வயதான மக்கள் வாட்ஸ்அப்பில் எது வந்தாலும் அது உண்மை என்று நினைக்கிறார்கள். இளைஞர்கள் ஓரளவிற்கு பகுத்தறிந்து பார்ப்பவர்களாக இருக்கக் கூடும். எவ்வாறாகினும், இளைஞர்களோ, முதியவர்களோ, சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் திறனைப் பெற நமக்கு சிறிது காலம் ஆகும்.
துரதிர்ஷ்டவசமாக, தமது பணபலத்தால் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் பல பிரிவுகளும்,
சமூக ஊடகங்களை தமக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் வேலையை சற்று முன்னதாகவே ஆரம்பித்து விட்டார்கள். சமூக ஊடகப் பயன்பாடு பற்றிய அறிவை நாம் எப்படி அதிகரித்துக்கொள்வது? இயக்கங்களின் சமூக ஊடகத்திறனை எப்படி அதிகரிப்பது? இது ஒரு மிகப் பெரிய சவால். ஆனால் உங்களது எண்ணிக்கை அதிகம் என்றால் இது நடக்கும். இதைத்தான் நாம் விவசாயிகள் போராட்டத்தில் பார்த்தோம். அவர்கள் தமது சொந்தக் குரலைக் கண்டுபிடித்தார்கள். தமது சொந்த ஊடகத்தைக் கண்டுபிடித்தார்கள். ஆம், நியூஸ்கிளிக் உள்ளிட்ட ஆதரவான செய்தித் தளங்களை அவர்களால் அடைய முடிந்தது. ஆனால், அவர்களது பேரணி பற்றிய செய்தியோ, அவர்களது இசையோ, நேரடி அனுபவம் குறித்த செய்தித் தொகுப்போ, எதுவாகினும், அவர்களது உள்ளடக்கம் பெரும்பாலும் நகைச்சுவையோடு பல குரல்களில் கூறப்பட்டன. அவை யூடியூபோ, ஃபேஸ்புக்கோ, வாரமிருமுறை அவர்கள் வெளியிட்ட நான்கு பக்க ட்ராலி டைம்ஸோ எதுவானாலும் அவர்கள் நேரடியாக உருவாக்கிய தளங்களில் வெளியாகின. இது ஒரே ஒரு உதாரணம் மட்டுமே.
முந்தைய நெருக்கடி நிலைபோல செய்தித்தாள் நிறுவனத்திற்கான மின்சாரத்தை தடை செய்து, செய்தியை இன்று நிறுத்திவிட முடியாது. இது மின்யுகம்.
சமூக ஊடகம் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களையும் மூடுவது இன்று மிகவும் கடினமானதாகி விட்டது.
– போராட்டம் தொடர்கிறது புத்தகத்திலிருந்து… l