கமலாலயன்
‘உலக நடப்புகளில் ஏராளமான விஷயங்கள் சரியாக அமைந்து போகவில்லை’’ என்ற உணர்வு, சாதாரண மனிதர்களுக்கும் இருக்கிறது, பெரிய அறிஞர்கள் – சிந்தனையாளர்களுக்கும் இருக்கிறது. ‘ஒண்ணுமே சரியில்லை’ என்று அங்கலாய்ப்பதிலும், புலம்பித் திரிவதிலுமே பெரும்பான்மையானோர் வாழ்க்கை முடிந்துபோகிறது.
சிந்தனையாளர்கள், போராளிகள் போன்ற சிலர், புலம்புவதில்லை. உலகில் எதெல்லாம் சரியாக இல்லை என்று ஒரு விசாரணையில் ஈடுபடுகிறார்கள். ஏன் சரியாக இல்லை என அடுத்தகட்ட நகர்வுக்குப் போகிறார்கள். அவற்றை எப்படிச் சரியாக்குவது என்று தீர்வுகளைத் தேடுகிறார்கள். அப்படிப்பட்ட மாமனிதர்களின் கனவுகளை அவர்களின் பால் கவரப்படும் எளிய மனிதர்களே நிறைவேற்றுகிறார்கள்… அத்தகைய ஒரு மனிதர்தான் பாவ்லோ பிரையிரே.

பிரேசில் நாட்டின் ரிசைஃப் (Recife) நகரில் 19.09.1921) அன்று பிறந்தவர் பிரையிரே. 1929-30களில் நிலவிய உலகளாவிய பொருளாதாரச் சிக்கல்களால் அவருடைய குடும்பம் Jaboatao என்ற நகருக்குப் புலம் பெயர்ந்தது. அங்குதான் பாவ்லோ பிரையிரே தன்னைச் சூழ்ந்துள்ள உலகைப் பற்றியும், சக மனிதர்களைப் பற்றியும் அறியத் தொடங்கினார். அவரின் பல நண்பர்கள் வறுமையில் துன்புற்று உழன்றனர். அதைக் கண்டபோது, ‘‘உலகத்தில் ஏராளமான விஷயங்கள் சரியாக அமைந்து போகவில்லை’’ என்றார். உணவே சுத்தமாகக் கிடைக்காமல் அல்லாடிய பையன்களுக்கும், மிக மிகக் கொஞ்சமாக மட்டுமே உணவுண்ட நண்பர்களுக்கும் நடுவே தான் ஓர் ‘இணைப்புப் பையனாக இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு உயர்நிலைப் பள்ளியில் சேரும் பொருட்டு ரிசைஃபுக்குத் திரும்பினார். ஆஸ்வா ஸ்டோக்ரூஸ் தனியார் உயர்நிலைப் பள்ளி இயக்குநரின் அனுமதியைப் பெற்ற பாவ்லோவின் தாயார், உதவித் தொகை பெறும் மாணவர் பிரிவில்தன் மகனைச் சேர்த்துவிட்டார். ஒரு புறநகர்ப் பகுதியிலிருந்து அலங்கோலமான தோற்றத்துடன் பிரையிரே வந்திருந்தார். காலங்காலமாக உயர்வர்க்க மாணவர்கள் மட்டுமே படித்து வந்திருந்த பள்ளி அது. அங்கு அவர்கள் நடுவே சமாளிப்பது அவருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
இந்தப் புதிய சூழலுக்குப் பொருந்திப் போவதில் சிரமம் இருப்பினும் தன் அயராத உழைப்பினாலும், கற்கும் ஆர்வத்தினாலும் போர்த்துக்கீசிய மொழி இலக்கணத்தில் முனைவராகத் தேர்ச்சியடைந்தார். மொழியின் சமூகவியல், தத்துவம்- ஆகியவற்றை ஆராய்வதை அப்போதே பாவ்லோ பிரையிரே தொடங்கி விட்டிருக்கிறார்.
1943-இல் சட்டம் பயின்றார், அடுத்த ஆண்டில் எல்சா மையா ஒலிவெய்ரா என்ற தொடக்கப் பள்ளி ஆசிரியையுடன் திருமணம் நடந்தது. பாவ்லோ பிரையிரே வழக்குரைஞராகி, முதல் கட்சிக்காரருக்காக வழக்காடப்போகுமுன்பே அத்தொழிலை உதறிவிடுகிறார்.
‘‘ஒரு வழக்குரைஞராக என்னால் ஆகவே முடியாது. ஏனென்று உனக்குத் தெரியுமா?’’ என்று தன் மனைவியிடம் அவர் கேட்கிறார்.
‘‘இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்… நீங்கள் ஒரு கல்வியாளர்’’ என்கிறார் எல்சா. 1940 முதல் 1950 வரை கல்வி குறித்த பரந்த வாசிப்பிலும் தன் வாசிப்புகளை வரிசைப்படுத்திப் பட்டியலிடுவதிலும், குறிப்புகள் எடுப்பதிலுமே பிரையிரே காலத்தைச் செலவிட்டார். மதம், கடவுள் நம்பிக்கைகளுக்கு அப்பால், சக மனிதர்களைப் பற்றி பாவ்லோ பிரையிரே ஆழமாகச் சிந்தித்திருக்கிறார். அது பற்றிய அவரின் பார்வை இது:
‘‘சக மனித உயிர்களைச் சுரண்டுவதையும், கிறித்துவைப் பின்பற்றுகிற ஒருவனாக இருப்பதையும் எப்படி ஒரே கணக்கில் நேர் செய்வது என்று எனக்கு ஒருபோதும் புரியவேயில்லை. அல்லது, கிறித்துவின் மீது அன்பு காட்டுவதையும், இன, பாலின, வர்க்க அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதையும் எப்படி ஒரே கணக்கில் நேர் செய்வது என்பதையும் ஒரு போதும் புரிந்து கொள்ள முடிந்ததில்லை…’’
இதே அளவுகோலில், இடதுசாரிகள் முன் வைக்கிற விடுதலை வாதத்தையும், இன, பாலின, வர்க்க அடிப்படைகளில் அவர்களே பாரபட்சம் காட்டுவதையும் என்னால் ஒரு போதும் நேர் செய்யவே முடியாது. ஒரே சமயத்தில் ஒருவர் ஓர் இடதுசாரியாகவும், இனவெறியராகவும் இருக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய, அதிர்ச்சியூட்டும் முரண்பாடு?’’
1963-ஆம் ஆண்டில் தொலைதூரக் கிராமமொன்றில் வயது வந்தோர் கல்விக்கான தனது புதிய கற்பித்தல் முறையைப் பயன்படுத்திக் கரும்பு வெட்டுபவர்களான 300 தொழிலாளர்களுக்குப் பிரையிரே எழுத்தறிவைக் கற்பித்தார். அன்றைய பிரேஸிலின் அப்போதைய குடியரசுத் தலைவர், பிரையிரேவைத் தேசிய வயதுவந்தோர் எழுத்தறிவு இயக்கத்திற்குத் தலைமை வகித்து நடத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறார். அன்றைய பிரேசிலின் சட்டப்படி ஓரளவு எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பவர்களால் மட்டுமே அந்நாட்டுத் தேர்தல்களில் வாக்களிக்க முடியும். ஓராண்டிற்குள் சுமார் ஐம்பது இலட்சம் பேருக்கு எழுத்தறிவும் அரசியல் விழிப்புணர்வும் வழங்குவதே தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் இலட்சியம். பிரேசிலின் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள், அதிகாரிகள் – அத்தனை பேரும் ஈடுபடுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட மாபெரும் பணி இது.
இப்படி பிரேசிலின் ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் கல்வியும், அரசியல் விழிப்புணர்வும் பெறுவதை அங்குள்ள நில உடைமையாளர்கள் விரும்பவே இல்லை. 1964, மார்ச் 31 அன்று அங்கு மக்கள் எழுச்சி முடக்கப்பட்டு இராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்தது. பிரையிரே கைது செய்யப்பட்டு இரண்டு மாத சிறைவாசம் அனுபவித்தார். பின் பொலிவியாவிலும் சிலியிலும் அரசியல் தஞ்சம் அடைந்தார். இப்படியே பதினாறு ஆண்டு காலம் நாடோடி வாழ்க்கை.
1964-69ம் ஆண்டுகளில் சிலியின் சாண்டியாகோவில் வயது வந்தோர் கல்வி, விவசாய மேம்பாடு, நிலச்சீர்திருத்த நிறுவனங்களுக்காகப் பணியாற்றினார். 1969-70இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பணி நிமித்தம் ஹார்வர்டிலும், ஜெனிவாவிலும் பத்துமாத காலம் தங்கியிருந்தார். பின் 1970-79ஆம் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் இருந்தபடி உலக முழுவதிலும், குறிப்பாக மூன்றாமுலக நாடுகளில் வயது வந்தோர் கல்வித் தூதுவராக, வழி காட்டியாக முன்னோடி ஆலோசகராக அரும்பணியாற்றி வந்தார்.
1980- இல் நாடு திரும்பினார். ‘பிரேசிலைக் கற்பதற்கு’ என்ற கனவுடன் சென்றார். 1988-இல் பிரேசில் தொழிலாளர் கட்சி நகராட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றதும் அந்நாட்டின் கல்வித்துறைச் செயலராகிறார். புதிய ஒரு கல்விமுறையைப் பயன்படுத்திப் பரிசோதனை முயற்சியாகப் பத்து இலட்சம் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டும் பணியை நிறைவேற்றச் செய்தார். இரண்டாண்டுகள் சலியாத உழைப்பிற்குப் பின், மீண்டும் கற்பித்தல், எழுதுதல் பணிகளுக்கே திரும்பினார். 1997, மே-2-ம் நாளன்று பாவ்லோ பிரையிரேவின் வாழ்க்கைப் பயணம் நிறைவடைந்தது.
1979, பிப்ரவரியில் இந்தியப் பயணத்தின்போது டெல்லிக்கு வருகை தந்து அங்கு விஸ்வ யுவகேந்திரா நடத்திய ஒரு நிகழ்வில் பங்கேற்றுச் சுருக்கமான உரையாற்றினார். கேள்விகளும், மறுமொழிகளுமாகப் பிரையிரே அன்று நிகழ்த்திய உரை ‘Reading and Writing Reality’ என்ற சிறு நூலாக வெளியிடப்பட்டது. தமிழில் அது ‘எதார்த்தத்தை வாசித்தலும், எழுதுதலும்’ என்ற நூலாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழாக்கியவர் கமலாலயன். ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விமரிசன விழிப்புணர்வுக் கல்வி’ என்ற தலைப்பில் பிரையிரேவின் மற்றொரு நூலும் தமிழில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டது. தமிழில் மொழி பெயர்த்தவர் ‘ஆயிஷா’ இரா. நடராசன். அ.மார்க்ஸ், பிரையிரேவின் கல்விக் கோட்பாடுகளைப் பற்றி ‘பாவ்லோ பிரையிரே சொல்வதென்ன?’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.
‘‘ஜனநாயகத்தை நோக்கிய கல்விச் செயல்பாடு மனிதரைப் பற்றிய அல்லது மனிதருக்கான செயல்பாடாக நடக்கும் வரை முழு நிறைவடையாது. மனிதர்களுடன் சேர்ந்ததாக அந்தச் செயல்பாடு நடந்தால் மட்டுமே அது வெற்றியடையும்!’’ என்றார் பாவ்லோ பிரையிரே. இந்தியாவெங்கும் 1990 முதல் 2010 வரை பிரையிரே வகுத்துத் தந்த வயது வந்தோர் எழுத்தறிவுத் திட்ட அடிப்படையில் ஒரு பெரும் மக்கள் இயக்கமாகக் கற்பிக்கும் பணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் அறிவொளி இயக்கம், கேரளத்தில் ‘அட்சர கேரளம்’ எனப் பல பெயர்களில் முழு எழுத்தறிவு. வளர் கல்வி தொடர்கல்வி ஆகிய பெயர்களில் மூன்று கட்டங்களாக இப்பணி நடந்தது. சுமார் 30,000 முழு நேரத் தொண்டர்களும், பத்து வயது வந்தோருக்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் இலட்சக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களும் மேற்கண்ட பணியில் ஈடுபட்டிருந்தனர். மிகப் பெரிய உத்வேகமளித்த பணி அது. அந்த அனுபவங்களைப் பேரா.ச.மாடசாமி, ச. தமிழ்ச் செல்வன், ஆர்.நீலா, வெங்கடேஷ் ஆத்ரேயா-ஷீலாராணி சுங்கத் ஐ.ஏ.எஸ்., ஆற்காடு பன்னீர் செல்வம், ஆம்பூர் கருணாநிதி உள்படப் பலரும் நூல்களாக எழுதியுள்ளனர்.
இன்னும் எழுதப்படாமலிருக்கிற அனுபவங்கள் ஏராளம்!