மயிலம் இளமுருகு
சினிமா சார்ந்த செய்தியை, விமர்சனத்தை இப்படியும் எழுத முடியுமா ? என்று யோசிக்க வைத்த நூலாக இந்நூல் இருக்கிறது. அதெப்படி, காதலை இப்படி அணு அணுவாக உற்றுநோக்கி எழுத முடிந்தது என்று தெரியவில்லை. அவருக்கும் அப்படிப்பட்ட நண்பர்கள் அமைந்திருப்பதைச் சற்று ஆழ்ந்தே பார்க்க முடிகின்றது. தி இந்துவில் தொடராக வந்தவற்றை நூலாக்கித் தந்துள்ளமை தொடர் படிக்காதவர்களும் படிக்கத் தூண்டுவதாக இந்நூல் அமைகின்றது. ஒரு நல்ல முன்னுரையைச் சரா அவர்கள் எழுதியுள்ளமை ஆகச்சிறப்பு. இந்த முன்னுரையே படிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

சினிமா கண்ணோட்டம், ஒப்பீடு நடப்பு நிகழ்வுகள் எனப் பலவற்றை இந்நூல் பேசிச் செல்கிறது. நூலாக்க முயற்சிக்கு வித்திட்ட அனைவரையும் கூடுதல் சிரத்தையோடு நன்றியும் கூறியுள்ளார். நாம் பார்த்து, சிரித்த, ரசித்த, சிந்தித்த படங்களை, கதைகளை விரிவாக ரசிக்கத்தக்க முறையில் நூலாக்கியுள்ளமை ஆகச்சிறப்பு. இந்நூலில் மொத்தம் 19 தொடர், இல்லை 19 கதைகள் அமைந்துள்ளன என்றே கூறலாம். வடிவ நேர்த்தி, புதிய முறை, எழுத்து நடை என மிக இயல்பாகவே அனைவருக்கும் புரியும் வண்ணம் உள்ளது இப்புத்தகம். வாழ்க்கை, படிநிலைகளின் பயணத்தை இந்நூல்வழி ஏற்படுத்துகின்றார் ஆசிரியர்.
மணி என்ற நண்பனின் நிகழ்வுகளைச் சொல்வதில் தொடங்கி, ஹன்டர் இந்தித் திரைப்படம் குறித்த பார்வையினை மிக இயல்பாகவே சொல்லிப் புரிய வைத்தது அருமை. அழியாத கோலங்கள் திரைப்படத்தைக் குறிப்பிடும்போது தன்னுடைய நண்பர்களோடு திரையரங்கிற்குச் சென்று, அவர்கள் செய்த சேட்டைகளையும் தெளிவாக நாம் உணரும் வகையில் மனதில் பதியும் வண்ணம் குறிப்பிட்டுள்ளார். பாலுமகேந்திரா திரை ஆளுமை மீது இன்னும் மெருகேறி வருவதை மறுப்பதற்கில்லை. ஒரு படத்தைக் குறிப்பிட்டு அப்படம் தொடர்புடைய மற்ற மொழிப்படங்கள், தமிழ்ப்படங்கள் என ஒப்பீடு செய்து விளக்கியுள்ளமை சிறப்பாக உள்ளது. புருஷோத் காதலை, அட்டகத்தி திரைப்படத்தோடு அறிமுகப்படுத்தி வெகு இயல்பாக மனதைச் சஞ்சலப்படுகின்ற நிலையை ஏற்படுத்துகிறார். அதேபோல் யதார்த்த நடையில் எழுதியுள்ளமை கூடுதல் பலம். அகிலன், திவ்யா என அவர்களுடைய காதல் கதையினை (ஹேமா, கீதா, திவ்யா) குறிப்பிட்டு அதனைப் பிரேமம் படத்தின் கதையினை விளக்கிக் காட்டும் திறம் சிறப்பு.
மலர், ஆனந்த் நண்பர்களைக் குறிப்பிட்டுக் காதல் கொண்டேன் படம் குறித்துக் கூறிப் பிறகு மறுபடியும் மலர், ஆனந்த் இன்று எப்படி உள்ளார்கள் எனச்சொல்லி, தான் சொல்ல வந்த செய்தியினை விளக்க உவமைகள், நடப்பியல் கதை எனப் பலவற்றை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளதை வாசகர்கள் உணரமுடிகின்றது. சில இடங்களில் ஆலோசனை கூறியும் தன் நிலைப்பாட்டினை விளக்கியுள்ளார். குறிப்பாகத் தோழி காதலியாவது ஆகச் சிறந்த வரம் என்று குறிப்பிட்டுள்ளார். தன் காதலைக் குறித்துக் குறிப்பிட்டுக் கவிதை, ஆசிரியர் பயிற்சி, எழுத்து, வேலை, தற்போதைய நிலை என்பதினூடாகச் செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தையும் விளக்கி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றார். ஆர்வத்தைத் தூண்டும் விதமாக ஒவ்வொரு தொடரையும் முடித்துள்ளமை கவனிக்கத்தக்கது. இயக்குநர் வஸந்த் திரைப்படம் குறித்துக் குறிப்பாக ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே என்ற திரைப்படத்தை அழகாக விமர்சித்துள்ளார். மேலும் இப்படத்தோடு தமிழ், யாழினி காதல் கதையையும் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். இறுதியில் அவர்களை வாழ்த்துமாறு ஆலோசனை கூறியே முடித்துள்ளார்.

கெளதம்மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற திரைப்படம் குறித்தும் கெளதம், ப்ரீத்தி கதை குறித்து விளக்கி, நம்மை அந்த உணர்நிலைக்கு ஆட்படுத்துவது அருமை. இப்பகுதியில் உரையாடல் முறையைப் பயன்படுத்தி உள்ளார். ஜான், ஜெனி காதல் கதையைக் கூறி அதனூடாகக் காதலுக்கு மரியாதை படக்கதையினையும் நம்முள் பயணிக்க வைக்கின்றார். ஒவ்வொன்றும் படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகின்றது. பத்மினி, பகவதி காதல், அப்பா இல்லாத பெண்ணின் காதல், சமூகம் சார்ந்த கருத்து, தற்போது நண்பனின் நிலை எனப் பலவற்றை நாம் அறிகிறோம்.
இன் தி மூட் ஃபார் லவ் படம்போலத் தன் நண்பனின் காதல் கதை இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தன் நண்பன், தேவி, ஆனந்தி இவர்கள் வாழ்க்கை குறித்தும் விவரித்துக் கூறியுள்ளார். கூடுதலாக மனைவிக்குப் பிடிக்காமையால் வரும் வலி, தன் ஆசையைத் தடுக்கும் கணவர் தடையாக இருப்பது தவறு என்றும் எனப் பலவற்றை விவரித்து அவரவர்களின் பார்வையில் இயல்பாகச் சொல்வது நமக்கு இன்பம் தருகின்றது. மணிகண்டன், சரண்யாவின் காதல் கதையோடு அழகிய தீயே படம் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. சரண்யாவின் சினிமா குறித்த ஈடுபாடு, மாற்றம், அன்பு எனப் பல நவரசச் செய்திகளை நாம் காண்கிறோம். பழைய படத்தோடு ஒப்பீடு செய்யப்பட்டுக் குறிப்பாக நீதிக்குத் தலைவணங்கு படம் பிசாசுவாக (படம்) மாறிய நிலை, தம்பிக்கு எந்த ஊரு படம், சுந்தர பாண்டியன், தென்மேற்குப் பருவக்காற்று, குட்டிப்புலி மற்றும் ஆசை, வாலி பல படங்களின் மீதான விமர்சனத்தை முன்வைத்து வாசகப் புரிதலை ஏற்படுத்துவது நன்றாக உள்ளது.
காதல் திரைப்படத்தின் கதையும் அப்படியே தன் நண்பன் கணேசன், ஆர்த்திக்குப் பொருந்தி வருவதையும், சமூத்தில் காதல் சார்ந்த நிலைப்பாடு எப்படி உள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. நாயகப் பிம்பம், ஹீரோவிஸம் காட்சிப்படுத்தல் என்பதில் தற்போது சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பொன்ராமின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் குறித்தான செய்தியையும் குறிப்பிட்டுள்ளதை நாம் அறிகின்றோம். ஆண் மையம் சார்ந்த கதை ஏற்படுத்திய தாக்கம், கெளதம் மேனனின் செயல்பாடுகள், காதல் பற்றிய திரைப்படங்கள், ரெட்டைவால் குருவி போன்ற திரைப்படங்களின் நீட்சியையும் ஆட்டோகிராப் போன்ற திரைப்பட வரிசையில், ஏன்? பெண் சார்ந்த பார்வை இன்னும் எடுக்கபடவில்லை, அதனை ஏற்கின்ற சூழல் உள்ளதா என்பது கேள்விக்குரியது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையினை, சீனுராமசாமி நீர்ப்பறவை படம் குறித்த தன் பார்வையினை எடுத்துரைத்துள்ளார்.
அருள், கமலா காதலோடு ஒப்பிட்டு அந்த உணர்வைப் பெறுகின்ற அனுபவத்தை இப்படம் தந்துள்ளது என்றும் குறிப்பிடுகிறார். கடல் எல்லை, இஸ்லாமியர்கள் குறித்த பொதுப்புத்தி, மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுதல், இந்திய மீனவர்கள் என்றுகூடச் சொல்லாமல் தமிழக மீனவர்கள் என்று சொல்லப்படுகின்ற சூழலை நாம் தெரிந்துகொள்கின்றோம். பூ படம் குறித்துச் சொல்லி அதனோடு சோழவேந்தன், வேணி இருவரின் காதல் வாழ்வினைப் புலப்படுத்தியமை நன்று. தங்கராசு, மாரி கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கம் மனதில் இருக்க, அதனை மிக அழகாக எழுத்தில் கொடுத்துள்ளார் நூலாசிரியர். அந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் பக்கம் 129இல் உள்ள மாரிகளின் தீராக் காதலால் வாடா பூ வுலகு என்ற பகுதியின் மூலம் அறிந்துகொள்ள முடியும். மேலும் பெண்ணை மையப்படுத்தி அவள் காதலின் மகோன்னதத்தைக் கவுரப்படுத்திய படம் பூ என எடுத்துரைக்கிறார். தன் நண்பர் சராவுடன் பேசிய உரையாடல், மெளனராகம் எப்படிப்பட்ட புரிதலை ஏற்படுத்துகிறது, கதைத்தளம், மாற்றம் எனப் பல்வேறு கூறுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு படத்தை எப்படி அணுக வேண்டும் என்ற புரிதலை நம்முள் இத்தொடர் ஏற்படுத்துவது நிதர்சனம். ஒவ்வொரு பருவத்திற்கேற்ப படம் வெவ்வேறான புரிதலைத் தருவதாக மெளனராகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கார்த்திக்கின் நடிப்பு, ரேவதியின் தவிப்பு, மோகனின் பொறுமை போன்றவையும் மிக அருமை. இதனை ஆண்டாள், சிவராஜ் என்ற இருவரின் நிலையையும் படத்தோடு ஒப்புக்காட்டி காதல் மலர்ந்து ஒன்று சேர்ந்த நிலையினைக் குறித்துள்ளார். மெளனராகம் ராஜா, ராணியாகப் பரிணமித்திருக்கின்றது. தாண்டவம் என்ற படமும் அத்தகையதே என ஒப்பீடு செய்துள்ளார். படங்களின் நிறைகளை அதிகமாகச் சொல்லி, குறைகளைக் குறைவாகவே இந்நூல் முன்வைக்கின்றது.
குமார், கலா காதல் குறித்தும் அவர்களின் காதல் கடிதங்களைப் படிக்கும்போது ஒரு நல்ல அனுபவத்தைப் படிப்பவர்கள் பெற முடிகின்றன. மேலும் இப்பகுதி அப்படியே சேரன், பத்மப்ரியா நடித்த பொக்கிஷம் திரைப்படம் சார்ந்த செய்திகளைப் பகிர்ந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இன்றைய நவீன உலகில் கடிதம் தருகின்ற இன்பத்தைத் தவறவிடுகின்ற சூழலை இப்பகுதி நமக்கு ஏற்படுத்துகிறது.
இந்த நூலில் தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமின்றி, பிற மொழிப்படங்களும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் லஞ்ச்பாக்ஸ் கதையினை அப்படியே தன் நண்பர் குணசேகரன், முகநூல் தோழி சித்ரா இருவரின் அன்பினை அழகாகக் குறிப்பிட்டுள்ளார். இர்பான்கான் அலுவலகத்தில் வேலை செய்கிறார். இலா என்பவள் தன் கணவருக்கு டப்பாவாலாக்கள் (கேரியர்) மூலம் உணவினை அனுப்புகிறார். ஆனால் அது சாஜனிடம் செல்கிறது. அவர் சாப்பிட்டுவிட்டுப் பாராட்டி டிபன்பாக்ஸில் கடிதம் எழுதி அனுப்புகிறார், இப்படியாகக் காதல் தொடர்கிறது. இருவரும் இணையவில்லை. இருந்தாலும் இடையில் நடக்கின்ற திரைக்கதை அருமையாக உள்ளது எனப் படம் பார்த்த அலாதியை இப்பகுதி தருகிறது.
சுவைபட சினிமா செய்திகளை, மனித மனங்களை நுகர்ந்து வாசகர்களுக்கு இனிய விருந்து அளித்தது போன்று எழுதிய நாகப்பன் அவர்களுக்குப் பாராட்டுகள்! மேலும் இது போன்ற நூல்களை எழுத வாழ்த்துகள்! இப்படி ஒரு நல்ல தொடரை நூலாக்கி, தரமான தாளில், சிறப்பாக வெளியிட்ட தோழமை வெளியீட்டிற்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.