கமலாலயன்
சமகாலத்தில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் போன்றோரின் நேர்காணல்களைப் படிக்கும்போது அவர்கள் அனைவருமே ஒரு செய்தியைத் தவறாமல் பகிர்ந்திருப்பதைக் காண முடிகிறது. அவர்கள் எல்லாருமே தமது சிறு வயதிலிருந்தே கைகளில் கிடைத்த சிறார் இதழ்கள், வார-மாத இதழ்கள், நாளிதழ்கள் போன்றவற்றைப் படித்தே வளர்ந்தவர்கள் என்றும், அந்த வாசிப்பு அனுபவம்தான் தங்களை எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும், கலைஞர்களாகவும் உருவாக்கியது என்ற செய்திதான் அது.

ஆனால், ‘பஞ்சு மிட்டாய் பிரபுவின் அனுபவம் நேர் எதிராக இருக்கிறது. தஞ்சாவூரில் பிறந்து, படித்துப் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர் அவர். கதைகள் கேட்கும் பழக்கமோ, புத்தகம் வாசிக்கும் பழக்கமோ சுத்தமாக இல்லாதவர். பாடப்புத்தகங்களைத் தாண்டி, எந்த ஒரு புத்தகத்தின், பத்திரிகையின் வாசனையையும் நுகர்ந்தே அறியாதவர். பள்ளி, கல்லூரி கடந்து ஒரு வேலைக்குப் போகும் நாள் வரை இலக்கியம் என்ற சொல்லுக்குத் துளியும் தொடர்பே அற்ற ஒருவர்தான் பிரபு.2017-இல் மும்பையில் அவருக்கு வேலை கிடைத்தது. கைபேசிகூட அப்போது அவரிடமில்லை. வீட்டினருடன் பேச வேண்டுமென்றால்கூட எஸ்டிடி பூத்தில் போய்ப் பேச வேண்டும் அல்லது நண்பனின் கைபேசியில் பேசுவார். அந்தச் சமயத்தில்தான் சாலையோரமிருந்த பழைய புத்தகக்கடையில் ஆனந்த விகடன் இதழ்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு. அந்தப் பத்திரிகையைப் படிக்கத் தொடங்கியபோது, அது அவருக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்கிறது. அதில் வெளியாகியிருந்த இரண்டு அல்லது மூன்று பக்கக் கட்டுரைகள் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. வாரந்தோறும் மும்பை நகரத் தெருக்களில் ஆனந்த விகடனைத் தேடி அலையத் தொடங்கியிருக்கிறார். இப்படித் தொடங்கிய வாசிப்பின் நீட்சியாகத் தஞ்சாவூருக்கு வந்து திரும்பும் போதெல்லாம் புத்தகங்களுடன் திரும்பிப் போயிருக்கிறார். கல்கி, சாண்டில்யன் என்று ஆரம்பித்து மும்பையில் இவருடன் தங்கியிருந்த நண்பர்களுடன் சேர்ந்து கதைகளை வாசிக்கும் பழக்கம் வலுப்பட்டு விட்டது. நான்கு ஆண்டுகள் மும்பை வாழ்க்கை. அடுத்துப் பணியிடம் பெங்களூரு. அங்கு போன பின் சாண்டில்யனிடமிருந்து சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன் என்று இவரின் வாசிப்பு ஆர்வம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. மும்பையில் இருந்தபோதே எஸ்.ரா.வின் துணையெழுத்து புத்தகம் கிடைத்தது. அதை இவர் படித்ததுதான் இந்த மாற்றத்தின் தொடக்கம். அது பயணங்கள் மீது இவருக்குப் பெரும் ஈர்ப்பைத் தந்திருக்கிறது. அந்தத் தூண்டுதலினால் அஜந்தா – எல்லோரா குகைகளுக்குப் போய் அங்கு ஓவியங்களையெல்லாம் பார்த்து வந்திருக்கிறார் பிரபு.
இப்படியாக நான்கு வருட மும்பை, பெங்களூரு வாழ்க்கைக்குப் பின் திருமணம், பின் அமெரிக்கப் பயணம் போன்ற நிகழ்வுகள். வாசிப்பும் இன்னொரு தளத்திற்கு நகர்கிறது. சிகாகோவில் தனியே இருக்க நேர்ந்த சூழலில், அங்கிருந்த நகர நூலகத்தில் பிரபுவின் வார இறுதி நாள்கள் கழிந்துள்ளன. அந்த நூலகத்திலிருந்த தமிழ் நூல்கள் பகுதியை அதிகபட்சம் பயன்படுத்தியிருக்கக்கூடியவர் பிரபுவாயிருக்கலாம். மின் புத்தகங்களை வாசிக்கக்கூடியவர்தான்; எனினும் அச்சு நூல்களுக்கே முன்னுரிமை கொடுத்துப் படித்திருக்கிறார். பெரியார் களஞ்சியம் படிக்க நேர்ந்தது, இவரைப் பெரியாரியக் கருத்துகளை உள்வாங்கிக்கொள்வது, அவருடைய நூல்களை வாசிப்பது என்று நகர்த்தியிருக்கிறது. அப்போதுதான் இவரின் முதல் சிறு நூலான ‘எனக்குப் பிடிச்ச கலரு’ உருவாகியிருக்கிறது.
அமெரிக்காவில் ஆறு மாதங்களே இருந்து விட்டுப் பெங்களூருவுக்குத் திரும்பிய பின், அங்கிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் வேலைகளைத் தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து பிரபு செய்திருக்கிறார். அப்படி அங்கிருந்த 20-30- குடும்பங்கள் அவ்வப்போது சிறிய, இரவு நேர உணவுச் சந்திப்புகளை நடத்தியிருக்கின்றன. அந்த நேரத்தில் குழந்தைகளின்பால் இவரின் கவனம் திரும்பியதன் விளைவு, ‘கதை சொல்லி’ ஆவதற்குத் தன் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் பிரபு. ‘பஞ்சு மிட்டாய்’ என்ற பெயரில் அந்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. வெறும் நீதிபோதனைக் கதைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருக்காமல், சிறார்களின் மனமகிழ்ச்சிக்கு வகை செய்யும் வேடிக்கைக் கதைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தக் கதை சொல்லலுக்காகச் சிறார் இலக்கியங்களைத் தீவிரமாக வாசிக்கவும் தொடங்கி இருக்கிறார் அவர். இன்னொரு பக்கம், அந்த நிகழ்வுகளில் கதைகளைத் தாண்டிப் பாடல்கள், பாரம்பர்ய விளையாட்டுகள், ஓவியங்கள் தீட்டுதல் என்று செயல்பாடுகளோடு அவை நிகழ்ந்திருக்கின்றன. இப்படியாகத் தொடங்கி 100 நிகழ்வுகள் நடந்து முடியும் வேளையில், நூறாவது நிகழ்வில் எழுத்தாளர் பாவண்ணன் அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறார். அந்த அனுபவத்தைப் பற்றி அவர் ஒரு கட்டுரையையே எழுதிப் பாராட்டியிருந்தது பிரபுவின் முயற்சிகளுக்குக் கிடைத்த ஒரு முதல், சிறப்பு அங்கீகாரமாக அமைந்தது.
இவற்றில் முக்கியமாகப் பஞ்சு மிட்டாய் நிகழ்வுகளில் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லத் தொடங்கி ஒரு கட்டத்தில் குழந்தைகளிடமே கதைகள் சொல்லுமாறு கேட்கத் தொடங்கியிருக்கிறார் பிரபு. “கதைகள் என்றாலே அவை நீதிபோதனைக் கதைகள் மட்டும்தாம் என்று கதைகளின் எல்லைகளைப் பெரியவர்கள் சுருக்கி விட்டார்கள். அதனால் ‘moral of the story is… என்று முடிந்தால் மட்டுமே அவை கதைகள் என்று குழந்தைகள் நம்புகின்றனர். நீதிபோதனைகளுக்காக மட்டுமே கதைகள் என்றில்லாமல், அக மகிழ்விற்காகவும் ஒரு குழந்தை கதைகளைத் தொடர்ந்து கேட்கும்போது, அவர்களின் கற்பனை உலகம் என்பது இதுவரை பெரியவர்கள் கண்டிராத, கண்டுகொள்ளாத ஓர் உலகம் என்று பிரபு குறிப்பிடுகிறார். அப்படி நிகழ்வுகளின் வழியே கேட்ட குழந்தைகளின் கற்பனையுலகைக் குழந்தைகளின் மொழியிலேயே பஞ்சு மிட்டாய் இதழில் பதிவு செய்து வருகிறார் பிரபு. பஞ்சு மிட்டாய் இதழ் முதலில் கையெழத்து இதழ் ஆக வெளியானது. அது மெல்ல மெல்ல வளர்ந்து ஐந்தாவது இதழில் இருந்து அச்சுப் பத்திரிகையாக வெளியானது. தற்போது காலாண்டு இதழ் ஆகப் பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ் உலகெங்குமுள்ள தமிழ்க் குழந்தைகளின் கற்பனை உலகைப் பதிவு செய்து வருகிறது. இந்த இதழில் இரண்டு, ஐந்து வயதுக் குழந்தைகள் சொன்ன கதைகள்கூட இடம் பெற்றுள்ளன. இந்த இதழை ‘வானம்’ மணிகண்டன் அழகுற வடிவமைக்கிறார் என்பது கூடுதல் தகவல். இதுவரை 14 இதழ்கள் வெளியாகியுள்ளன. குட்டித்தோசை மற்றும் ஏழும் ஏழும் பதினாலாம் (அழ. வள்ளியப்பா சிறார் பாடல்களின் தொகுப்பு) -ஆகிய இரண்டு சிறார் நூல்களையும் பஞ்சு மிட்டாய் வெளியிட்டுள்ளது. இதனிடையே பிரபுவின் பணி நிமித்தம் இலண்டன் நகரில் வாழ நேர்ந்து விட்டது. அங்கும் புத்தக மதிப்புரைகள், சிறார்களுக்கான நிகழ்வுகள் எனத் தொடர்ந்து இயங்கியிருக்கிறார். தமிழில் சிறார் உலகம், இலக்கியம் பற்றிய உரையாடல்களுக்காகப் பஞ்சு மிட்டாய் என்ற இணையதளத்தையும் தொடங்கி அதை விரிவுபடுத்தியிருக்கிறார். இலண்டனில் 2020-இல் இவர் முதலில் தனியே இருக்க நேர்ந்த போதுதான் கொரோனா தாக்குதல் உலகையே கலக்கியது. அப்போது இணையவழியில் பஞ்சு மிட்டாய் நிகழ்வுகளை வாரந்தோறும் நடத்தியிருக்கிறார் பிரபு.
அடுத்த கட்டமாக ஓங்கில் கூட்டம் என்ற பதிப்பகம் தொடங்கி, முதலில் சிறார்களுக்கான நூல்களை மின் நூல் வடிவில் வெளியிடத் தொடங்கினார். இப்போது அவை அச்சு-ஒலி வடிவங்களிலும் வெளியாகி வருகின்றன.
பஞ்சு மிட்டாய் இணையதளத்தில் மிக முக்கியமான பல தொடர்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பிடப்பட வேண்டிய சில தலைப்புகள்:
என் வாழ்வின் புத்தகங்கள் – பாவண்ணன்
எனக்குப் பிடித்த மலையாள நூல்கள் – பி.வி.சுகுமாரன் தமிழில்: விஷ்ணுபுரம் சரவணன்.
அழ. வள்ளியப்பாவின் நினைவுப் பதிவுகள் – பல்வேறு எழுத்தாளர்களின் நினைவுப் பதிவுகள்.
ஓரிகாமி – தியாக சேகர்
தமிழ்ப் பாரம்பரியக் கலைகள்
இந்தியாவில், தமிழ்நாட்டில் கல்வி வரலாறு – கமலாலயன்.
நேர்காணல்கள்- உதயசங்கர், வேலு சரவணன், விஜயகுமார், இனியன்.
தமிழில் குழந்தை இலக்கியம்- அழ. வள்ளியப்பாவின் புத்தகம் (மீள் பதிவு).
குழந்தை மனம் – பெ. தூரன் (மீள் பதிவு)
ஆட்டிசம் – எஸ்.பாலபாரதி (மீள் பதிவு)
இவை தவிர, தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் செயல்பாடுகள், புதிய கல்விக்கொள்கையைப் பற்றிய விவாதங்கள் ஆகியவற்றையும் ஆவணப்படுத்தியிருக்கிறது பஞ்சு மிட்டாய் இணையதளம்.
ஓங்கில் கூட்டம் வெளியிட்டுள்ள சுமார் 30 நூல்களுள் விஷ்ணுபுரம் சரவணனின் ‘கயிறு’, இ.பா.சிந்தனின் ‘கரும்புப் பெண்மணி ஜானகி அம்மாள்!, முக்தா சால்வேயின் மொழியாக்க நூல்களான ‘மகர்கள் மற்றும் மாங்கர்களின் அவல வாழ்க்கை’ மற்றும் ‘சுல்தானாவின் கனவு’ ஆகியவை முக்கியமானவை. கடைசி இரு நூல்களையும் மொழிபெயர்த்திருப்பவர் திவ்யா – பிரபுவின் துணைவியார்! பிரபுவின் தீவிர ஆவணத்தேடலின் விளைவாகக் கறுப்பின அடிமைகளின் துயரம் மிக்க கப்பல் பயணத்தைப் பற்றிய நாவல் – ஒலாடா- இது நூலாக வெளியாகி விட்டது. ஓங்கில் கூட்டப் புத்தகப் பயணத்தில் பிரபுவுடன் உதயசங்கர், கமலாலயன், கொ.மா.கோ.இளங்கோ, விஷ்ணுபுரம் சரவணன், எஸ்.பாலபாரதி, ஆதி வள்ளியப்பன், ஹேமபிரபா, இ.பா.சிந்தன், நாராயணி சுப்ரமணியன், ந.பெரியசாமி ஆகிய பல சமகாலப் படைப்பாளிகளும் பெரும் பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர். இந்தப் புத்தகங்களின் வடிவமைப்பு, ஓவியங்கள் ஆகியவை தனித்தன்மை வாய்ந்தவை. பார்த்தவுடனே கைகளில் எடுத்துக்கொண்டு புரட்டிப் பார்க்க வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்துகிற ஓவியங்கள்! சமீப மாதங்களில் பஞ்சு மிட்டாய் இணையதளக் கட்டமைப்புக்குள் இவர் மேற்கொண்டு வரும் ஒரு பணி மிக முக்கியமானது. இங்கிலாந்தில் உள்ள நீண்டகாலச் சிறார் இலக்கியப் படைப்புகள்- போக்குகள் பற்றிய மிக சுவாரஸ்யமான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். அவற்றின் தலைப்புகளைப் பார்த்தாலே அவை சொல்லும் வரலாற்றையும், அந்தப் புனைவுகளின் தீவிரத் தன்மையையும் நன்றாக நாம் உணர முடியும்:
உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும், தெரியுமா?
எல்லா நிறங்களும் எல்லாருக்கும்தானே?
க்ரெபெல்லோ: அனைவரும் விரும்பும் பூதம்
பன்முகத்தன்மையின் அடையாளம்-எல்மர் யானை.
மாக் பூனையும், தேநீர் அருந்த வந்த புலியும்
பிங்க் நிற முயலை ஹிட்லர் திருடியபோது…
ஓடிப்போ ஒர்ரி மான்ஸ்டர்!
சிறார் இலக்கியத்தின் பொற்காலங்கள்
தடை செய்யப்பட்ட சிறார் நாவல் (Beverley Naidoo அவர்கள் எழுதிய Journey to jo’burg: A South African Story).
படக்கதைகளின் கதை
யார் இந்த விண்ட்ரஷ் தலைமுறை?
ஜேக்கி கே-யின் தவளைப் பாடகி
குழந்தைகளும் டப் கவிதையும்
இங்கிலாந்தின் சிறார் நாடோடிக் கதைகள்
ஈனி மீனி மைனி மோ (சிறார்களின் தெரு விளையாட்டுகளை ஆவணப்படுத்தும் முயற்சி)
மேற்கண்ட தலைப்பைப் பற்றிய குறிப்பை மட்டும் பாருங்கள் : “ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டுமென்றால் குழந்தைகள் உடனே பாடும் பாடல்களில் இன்க்கி பிங்க்கி போங்கி போன்றே Eeny Meeny Miny Moe பாடலும் பிரபலமானது. இவை போன்ற வாய்மொழிப் பாடல்களையும், விளையாட்டுகளையும் பெரியவர்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால், இவை முறையான கற்பிக்கும் முறைகளோ, ஆவணப்படுத்துதலோ இல்லாமலேயே பல நூற்றாண்டுகளாக அந்தந்தக் காலங்களில் குழந்தைகளால் மட்டுமே அடுத்த டுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டு வந்திருக்கின்றன. தெருக்களில் குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்றால் உலகின் பழைமையான ஆடுகளங்களில் அவர்கள் ஆடுகிறார்கள் என்று பொருள். அது மட்டுமல்ல; உலகின் பழைமையான, சுவராஸ்யமான விளையாட்டுகளை- பல நூற்றாண்டுகளாக மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்த விளையாட்டுகளை அவர்கள் ஆடுகிறார்கள் என்று பொருள்.
தெரு என்பது குழந்தைக்கானது; அதில் தெரு விளையாட்டு என்பது மகிழ்ச்சியின் குறியீடு. இந்தத் தொடரின் ஒவ்வொரு கட்டுரையும் படிக்கப் படிக்கப் பேராச்சரியம் ஏற்படுத்துகிறது. சாவித்திரியின் பள்ளி என்ற பெயரில் சாவித்திரிபாய் புலேவின் வரலாற்று நூல், சிறார்களுக்காகக் ‘குட்டித் தோசை’, ‘எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம்’, ‘நவீன தமிழ்ச் சிறார் இலக்கியம்’ என்ற ஓர் ஆவணத் தொகுப்பு நூல் உள்பட பல நூல்களின் பதிப்பாளர், ஆசிரியர் பிரபு. பஞ்சு மிட்டாய்’ பத்திரிகையின் 14 இதழ்கள் இதுவரை வெளியாகியுள்ளன. குட்டித்தோசை, ஏழும் ஏழும் பதினாலாம் ஆகிய இரண்டும் சிறார் நூல்கள். சிறந்த கதைசொல்லி; இதழ் ஆசிரியர்; பதிப்பாளர்; நாவலாசிரியர்; ஆவணத் தொகுப்பாளர் – எனப் பன்முகத் திறமைகளின் ஒட்டுமொத்த வடிவம் பிரபு. தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் என்ற முறையில் அந்த அமைப்பின் பணிகளில் இலண்டனில் இருந்துகொண்டே மிகவும் செயலூக்கமுள்ள பங்களிப்பைச் செய்து வருபவர் இவர்.