கிரேஸ் பிள்ளை
பொதுவாக இப்பொழுது அனைவராலும் எழுதப்பட்டும் வாசிக்கப்பட்டும் வருவது கவிதை. ஒருவருக்கு சிறுகதை எழுதத் தெரிகிறதோ இல்லையோ, கண்டிப்பாக கவிதை எழுதத் தெரிந்து வைத்திருக்கிறார். சங்க காலத்திலும் பெண்பாற்புலவர்கள் கவிதைகள் புனைந்துள்ளனர் என்னும் வரலாறுகள் நம்மிடம் உண்டு. பிற மொழிகளில் உண்டோ இல்லையோ, தமிழில் நிறைய எடுத்துக்காட்டுக்களைச் சொல்ல முடியும்.
எண்பது தொண்ணூறுகளில், குறிப்பாக புத்தாயிரத்தில் நிறைய பெண் கவிஞர்கள் வலம் வர ஆரம்பித்தார்கள். அவர்கள் கவிதைகளில் காமம் அதிகம் பகிரப்பட்டது; அது அப்போது புது மோஸ்தராகப் பார்க்கப்பட்டது. அப்படி எழுதினால்தான் பெண்ணியக் கவிஞர்கள் என்று அங்கீகாரம் கிடைக்கும் என்று வரிந்து கட்டிக்கொண்டு எழுதி வந்தனர். சங்கப் பாடல்களில் நெடுநல்வாடையில் பகிரப்படாத காமம் இன்றுவரை இங்கு பகிரப்படவில்லை என்பதே நிஜம்.
சமீபத்தில் வாசிக்கக் கிடைத்த ஒரு கவிதை நூல் ‘காலம்’. அம்பிகா குமரன் எழுதித் தொகுத்து வேரல் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பு. ‘எனக்குள் இருக்கும் சொல்லப்படாத கதையைச் சுமப்பதுதான் உள்ளதிலேயே மிகப்பெரிய சோகம்’ என்று மாயா ஏஞ்சலோ கூறுவார். தமிழில் பெண் கவிஞர்கள் தங்கள் சோகத்தை எல்லாம் சொல்லி முடித்துவிட்டார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். ‘குட்டையான சவப்பெட்டி கொஞ்சம் நீண்டு படுக்கிறது’ என்னும் வரிபற்றி அய்யப்பமாதவன் கூறுகையில், இந்த வரியைப் படிக்கையில் அதிர்ச்சியில் உறையத்தான் வேண்டி இருக்கிறது. எல்லாப் பிணிகளுடனும் தொடரும் இந்த வாழ்க்கை இரக்கமற்றது. நம்மை எப்போது வேண்டுமானாலும் சவப்பெட்டிக்குள் இழுத்துக்கொண்டு போய்விடும். இது ஒரு மிகப்பெரிய நிதர்சனம் மற்றும் வாழ்வு தரும் இறுதிப் பரிசும்கூட என்கிறார்.
கவிஞர் தன் கவிதைகளுக்கு என்ன மாதிரியான சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதை பின்வரும் வரிகளில் ஒப்புதல் வாக்குமூலமாகச் சொல்கிறார்: ‘தேய்ந்து மறையும்/ ஓசையின் அடையாளத்தை/ வார்த்தைகளாக்கினேன்’. ஒரு பெண் தன் புனைவை வெளிப்படுத்துவதற்கு இப்படியான ஒரு சொல்லைத்தான் பயன்படுத்த முடிகிறது என்பது சோகம் என்று ஒரு புறம் எண்ணினாலும், அதன் வலியின் கூர்மையை வாசகன் அவதானிக்க முடியும். அதுவே அவளின் வெளிப்பாட்டின் பலமாகிறது. ஒரு பெண்ணின் முன்பகுதி தனக்கான வாழ்வைக் கொண்டதான இரட்டை உடலிகளாகக் காட்டப்பட்டுள்ளது ‘அவஸ்தை’ என்னும் கவிதை வரிகளில்: ‘உடலின் முன்பகுதி/ இரவும் பகலும்/ இரண்டென வாழ்கிறது’. நிச்சயமாக ஓர் ஆண் கவி இப்படிக் கற்பனை செய்து பார்க்க முடியுமா என்பதை நினைக்க வியப்பாக உள்ளது. இப்படியான அநேக நுட்பங்களைக் கொண்டுள்ளது இத்தொகுப்பு.
ஓர் உயிர், தான் நேசிக்கப்படுகையில் தன்னை உணரும் தருணம் ஒரு கவிதையில் இவ்வாறு மலர்கிறது: ‘அன்பை ரசிக்க வைத்திருக்கிறாய்/ வழக்கத்திற்கு மாறாக/ அடையாளம் கொண்டிருக்கிறேன்’ (பக் 21), ‘பறவைகளற்ற/ வானத்தைப்போல/ நீ இல்லாதபோதும்/ புலப்படுகிறது/ உன் இருப்பு’ (பக் 25). இப்படி அன்பின் மலர்ச்சியின் அநேக உதாரணங்களை சொல்லமுடியும். பொதுவாக இந்தத் தொகுப்பில் பெண்ணின் வலியின் ஆழங்கள் வார்த்தைகளாக வெளிப்பாடு கொள்ளும் தருணம் ஒவ்வொன்றும் வலியின் பிரசவம் என்றுதான் சொல்ல முடியும்.
‘ஊனத்தின் அடையாளக் குறியீடாக/ மனம் அடங்கிப் போகிறேன்’ (பக் 49); ‘தோற்றுப் போகும்/ அந்தரங்கம் மிகுந்த கவலைகள்’ (பக் 53); ‘சுமைகளின் கீழ்/ சகிப்புத் தன்மையுடன் நான்’ (பக் 56); ‘அநேகச் சொற்கள்/ உள்பெட்டியில் அல்லாடுகின்றன’(பக் 57); ‘ஒவ்வொரு நாளும் சந்திப்பதும்/ ஒருகட்டத்தில் பிரிவதுமாகத் தொடர்கிறது’ (பக் 62); ‘இருண்ட இரவு வானம்/ நான் செல்லும் பாதையை மறைத்தது’ (பக் 65); ‘தூக்கமற்ற இரவுகளின் மேல்/ தெறிக்கும் அமிலத் துளிகள்’ (பக் 78); இழப்பதற்கு ஒன்றுமில்லை/ உடலைத் தவிர’ (பக் 81); ‘பூமியின் ஆரம்ப காலத்தில்/ பிணத்தோடு வாழ்ந்த காலமுண்டு’ (பக் 95); விளங்கிக்கொள்ள முடியாதபடிக்கு/ பருவத்தின் பயிர்கள்/ நாசமாகிறது’ (பக் 93); ‘நோய்கள் அப்பியிருக்கிற/ உடம்பாய்/ சோகம் தாங்கிய படகாய்’ (பக் 94); ‘இவ்வாயுளின்/ பரிதாப நாட்களை/ நகர்த்த’ (பக் 98); ‘ஆறாத ரணங்கள்/ தூக்கத்தைத் தொலைக்கிறது’ (பக் 99); ‘ரணங்கள் காட்டிய பாதையில்/ செடிகள் வளர்ந்து/ உதிராப் பூக்களாய் வளர்கிறது/ நான்/ தூண்டிலில் மாட்டிக் கொள்கிறேன்’ (பக் 100). இப்படி அநேக அடிக்கோடிடச் சொல்லும் வரிகள் வாசிப்பின் வழியில் முடிச்சுகளாக நம் கால்களை இடறச் செய்கின்றன, வரிகளின் வலிகளை உணரச் செய்தபடி. வாழ்வைச் சல்லடையாகத் துளைத்த தோட்டாக்களாக வாழ் நிமிடங்கள் ஒரு பெண்ணின் வாழ்வை எப்படி ஆக்கிரமித்துள்ளன என்பதை வெளிச்சமிடுகின்றன. இப்படி பெண்மை சுமக்கும் வலிகளை வழியெங்கும் காண முடிகிறது. பொருளுக்குச் சிக்காத கேள்விகளாகி, வாழ்வுடன் கவிதை பாடுபொருளாகும்போது வாசக மனதில் எப்போதும் நிலைத்துவிடுகிற வரிகள் நிரம்பிய தொகுப்புதான் ‘காலம்’ என்று சொல்லுகிறது புதுகை கனகராஜ் வரிகள்.
‘காலம்’ என்னும் தலைப்புக் கவிதை அற்புதமான நினைவுகளைக் கிளறிச்செல்வதாக உள்ளது. இக்கவிதையை முழுமையாகவே வாசகர்களுக்கு முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது: 1.‘நினைவுகள் விடை தேடுகின்றன/ உறவுகளின் பிடியில் காலத்தின் தடம்/ அலைபாயாத மனதின்/ பக்கத்தைப் புரட்டிப் பார்க்கிறேன்/ 2.பொருள் தேடும்/ உறவுகளின் உண்மைகளை/ வார்த்தைகளாக்குகிறேன்/ 3.ஒரே முகம்தான் வார்த்தைகளுக்கு/ மெல்லிய காற்றின் நிழலில்/ செத்து மடியும் சொற்கள்/ மனம் முன்னும் பின்னும் புறம் தள்ளுகிறது/ 4.சாயம் பூசாத எழுத்தின் வரம்/ காலம் மாறாத பூக்களாகிறது/ 5.ஆகாயப் புல்வெளிகள் நட்சத்திரங்களோடு/ உரையாடுகின்றன/ 6. காற்றின் கண்கள்கொண்டு/ வானை அயர்ந்து ரசிக்கிறேன்/ 7.வயதின் புன்னகையால்/ புதிய வரிகளை எழுதுகிறேன்/ நினைவுகளைச் சுமந்தபடியே/ நகர்கிறது காலம்.
ஏழு பத்திகளால் ஆன இந்தக் கவிதையின் ஒவ்வொரு பத்தியும், தான் வாழ்ந்த வாழ்வின் ஒவ்வொரு அனுபவங்களைச் சொல்லிச் செல்கிறது. ஒவ்வொரு கணமும் வாழும் வாழ்வும், விடை தேடும் விழைவில் இருக்கையில், காலம் தன் தடத்தை உறவுகளின் பிடியில் விட்டுச்செல்கிறது. கடந்துவந்த இந்த வாழ்வை கவிஞரின் அலைபாயாத மனது புரட்டிப் பார்க்கிறது. அப்படிப் புரட்டிப் பார்த்துப் பொருள் தேடுகையில் உறவுகளில், தான் கண்ட உண்மைகளை வார்த்தைகளாக்கி படைப்பாக்க முயல்கிறது மனது. வாழ்வின் வழியில் கண்டெடுத்த வார்த்தைகளுக்கு ஒரே முகம்தான் இருக்கிறது. ஒவ்வொரு உறவுக்கும் ஒரு முகம். இப்படிதான் சந்தித்த உறவுகளை ஒவ்வொரு முகமாகப் பார்க்கிறது கவி மனசு. தன் எழுத்திற்கு, தான் வாழ்ந்த வாழ்வின் படிமமாகிப் போகாத தன்மை கிடைக்கிறது. அந்த எழுத்திற்கு சாயம் இல்லை. சாயத்தை கால ஓட்டத்தில் கரைத்துவிடுகிறது; தான் அனுபவித்துக் கடந்த மெல்லிய காற்றில் செத்து மடிகின்றன சொற்கள்.
அதோடு முடிந்துவிடுவதில்லை வாழ்க்கை; கவி மனதின் மேல்நோக்கிய பயணங்கள், நட்சத்திரங்களோடு உரையாடி உறவாடுகின்றன; அந்த ஆகாயப் புல்வெளிகளில். ‘காற்றின் கண்கள்’ என்னும் இந்தப் பிரயோகம் நம்மை வாழ்வின் இண்டு இடுக்குகளிலெல்லாம் தேடலைத் துரிதப்படுத்துகின்றன. இந்தப் பிரபஞ்சத்தை ரசிக்கும் மனது லபிக்கிறது.
இப்போது காலங்களைத் தன் இயல்பாகக் கடந்து வந்த வயது புன்னகைத்துப் புதிய கவியை எழுத ஆரம்பிக்கிறது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, மனித மனத்தில் எஞ்சியிருக்கும் நினைவுகளைச் சுமந்துகொண்டு காலம் நகர்ந்து செல்கிறது.
இப்படி ஒருவர் இக்கவிதைக்குப் பொழிப்புரை எழுத முடியும், வேறு ஒருவர், தன் அனுபவங்களோடு வேறு ஒன்றாகப் பொருள் கொள்ள முடியும். இப்படியாக ஒவ்வொருவர் மனதிலும் தன் அனுபவங்களோடு தோன்றும்படியாக வெவ்வேறு பொருள்கொண்டு அவரவர் தனக்குத் தோன்றியபடி பொருள்கொண்டு ரசிக்க முடியும். இதனைச் சாத்தியப்படுத்துவதுதான் அசல் கவிதை. எல்லாவற்றுக்கும் மேலாக, எத்தனை வாசகர்கள் இக்கவிதையை வாசிக்கிறார்களோ அத்தனை பேருடைய புரிதலுக்கும் நடுவே ஓர் ஊடிழையாக கவிஞரின் வாழ்க்கை சமத்காரமாக ஓடிக்கொண்டிருக்கும். இப்படியான கவிதைகள்தான், மனித மனங்களில் எப்போதும் குடிகொண்டிருக்கக் கூடியதாகும்.
வேறு பல நுட்பமான விடயங்களையும் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் பேசிச் செல்கின்றன. இக்கவிதைகள் எவற்றைப் பேசவில்லை? அரசியலைப் பேசுகின்றன; அன்னையின் அன்பைப் பேசுகின்றன; ஆண், பெண் உறவுகளிலுள்ள சிக்கலைப் பேசுகின்றன, இன்றைய நவீன வாழ்வின் காதலின் எச்சங்களாக உள்ள புறக்கணித்த, புறக்கணிக்கப்பட்ட வாழ்தலைப் பேசுகின்றன, இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றுக்கு உதாரணமாக, சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன: ‘இந்த உலகிற்கு/வெளியிலிருந்து உள்ளே/ வாழத் தொடங்கியிருக்கிறான்/இப்போது/ அவனுக்கென்றும் ஒரு காதலி (பக். 19); ‘பரவச உலகின்/பார்த்திராத கடவுளை/ மதிப்பிழந்த தாள்களில்/காண்கிறேன்’ (பக்.28); ‘மனதின் ஓசைகள்/ புதிய விலாசத்தை உறுதிப்படுத்த/நான் விடை பெறுகிறேன்’ (பக்.36); ‘உள்படிந்த சுவாசத்தின்/ ஈரமாக மிஞ்சுகிறது/ நினைவுகள்’ (பக் 42); ‘அளவில்லா ஆசையையும்/ பரவச நாட்களையும்/ அலைகள் தின்னும்/ கடலெனப் பார்க்கிறேன்’ (பக் 50); ‘இப்போது/ மறுபடியும் தயாராக இருக்க வேண்டும்/ மீண்டுமொரு காதல்/ மீண்டுமொரு கலவி/ மீண்டுமொரு கவிதை’ (பக் 70); ‘இத்தனைக்குமிடையேதான்/ நொடிக்கொருமுறை/ சகிக்கச் சொல்லும் உன் திமிர்/ஏய் போதும் விடு/போர் அடிக்குது ப்ளீஸ்’ (பக் 77) பதில்கள் இல்லாத/மொழிகள் உடைத்த/ ஊனக் குவியலாய் மௌனம்’
(பக் 98);‘நிரந்தரமற்ற இரவைக் கடக்க/ நிமிடங்களில் ஆற்றாமையைக்/ கொட்டுகிறேன்’ (பக் 99).
இப்படி நிறைய மணி வரிகளை நிதானமாக உண்டு செரித்துக் கடந்து செல்லச் செய்யும் கவிதைகள் அடங்கிய தொகுப்பில் மிகவும் கவர்ந்த முத்தாய்ப்பான வரியாக ‘நீ என்னைப் போன்றவன்/ நான் உன்னைப் போன்றவள்/ நாம் இரட்டையர்கள் அல்ல/ ஒவ்வொருவரும் தனிப்பட்ட முழுமை’ என்று ஆணை தனக்கு நிகராக நிறுத்தி வைக்கும் இந்த வரி வேறு எந்தப் பெண் கவிஞரும் தம் எழுத்தில் வடித்ததாக ஞாபகம் இல்லை. பெண்ணை, பெண்மையைத் தலை நிமிரச்செய்யும் கவிதைகள்
அடங்கிய தொகுப்பு ‘காலம்’. கவிஞருக்கு அன்பும் வாழ்த்துகளும்.