நேர்காணல்: அழகிய பெரியவன்
சந்திப்பு : கமலாலயன்
“ஒரு சிறு சிமிர் போதும் அமர்வதற்கு
ஒரு சிறு கிளை போதும் கூட்டுக்கு
ஒரு சிறு இலை போதும் குழந்தைக்கு
கிட்டுமா பறவை வாழ்க்கை?”
என ஏங்கும் ஒரு மனம்தான் அழகிய பெரியவனுடையது. ஒருங்கிணைந்த வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு பகுதியில் பிறந்து வளர்ந்தவர். படித்தது பேரணாம்பட்டு, ஆம்பூர், வேலூர் மற்றும் சென்னை. பட்டப் படிப்பை நிறைவு செய்த பின் நீண்ட காலம் வேலையில்லாமல் பல சிரமங்களை அனுபவித்தவர். இப்போது ஆசிரியர் பணியில் இருக்கிறார்.
கணிசமான அளவுக்கு தன் எழுத்துகளுக்கு நூல்கள் வடிவம் தந்திருக்கிறார். ‘நீ நிகழ்ந்தபோது’ கவிதைத் தொகுதியை வாசிக்கும் எவர் ஒருவருக்கும் இவருடைய மென்மையான இயல்பு புரியும். இவருக்கு அரவிந்தன் என்று பெயர் வைத்தவர்கள் மிகவும் சரியான பெயரைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள். குறிஞ்சிமலர் நாவலில் தீபம் நா.பார்த்தசாரதி தன் கதாநாயகனுக்கு இட்ட பெயர் அரவிந்தன். அந்த நாவல் வெளியான காலத்தில், அரவிந்தன், பூரணி என்று தமது குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதை பேராவலுடன் பெற்றோர் செய்திருக்கிறார்கள். அந்தச் சொந்தப் பெயருக்கு உரியவர்தான் நமது அழகிய பெரியவனும்!
புத்தகம் பேசுது வாசகர்களுக்காக அவரை வேலூரின் இதமான(?) வெயில் நிலவிய ஒரு காலைப் பொழுதில், பேரணாம்பட்டில் இருக்கும் அவருடைய ‘அருந்தமிழ் இல்லத்தில்’ சந்தித்தேன். அவருடைய அறையின் இருபுறமும் சுவர்களின் உயரத்திற்குப் பெரிய அலமாரிகள் நிறையப் புத்தகங்கள், பத்திரிகைகள், மேசைமீது மடிக்கணினி, பேனாக்கள், பிரிண்ட் அவுட் பிரதிகள்……படைப்பூக்கம் மிக்க ஓர் எழுத்தாளரின் அறை அது என்பதற்கான சகல அடையாளங்களும் புலப்படுகின்றன. இனி, அவருடனான நேர்காணல்:
வணக்கம், அழகிய பெரியவன். உங்கள் எழுத்துகளுக்குப் பரமரசிகன் நான். தொடர்ந்து உங்களுடைய மூன்று நாவல்களையும் ஒரே மூச்சாய் மீண்டும் படித்தேன். சின்னக்குடை மட்டும்தான் படிக்க வேண்டும். வடாற்காடு அம்பேத்கர் மாவட்டத்தின் நவீன இலக்கிய முகங்கள் என்று உங்களையும், கவிப்பித்தனையுமே சொல்ல முடியும். சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை என்று நிறைய எழுதியிருக்கிறீர்கள். எண்ணிக்கையில் மட்டுமன்றி, மிகவும் காத்திரமான இலக்கியப் படைப்புகள் அவை. சமகாலச் சமூகம் எதிர்கொள்ளும் அத்தனை சிக்கல்களையும், ஒடுக்கப்பட்டோரின் பார்வையில், அவர்கள் தரப்பில், நின்று பேசும் படைப்புகள். இப்போது திரைப்படத் துறையிலும் வெற்றிகரமாக இரண்டு படங்களின் வசனகர்த்தாவாக அறியப்படுகிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?
மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உணர்கிறேன் தோழர்! தொடர் இயக்கம் என்பது எப்போதுமே சிலிர்ப்பைக் கொடுக்கக் கூடியது! என் எழுத்துகளை உடனுக்குடன் படித்து, பாராட்டி, விமர்சித்து, எங்கு போனாலும் குறிப்பிட்டுப் பேசும் மனப்பான்மையை நான் மார்க்சிய வட்டாரத்தைச் சேர்ந்த பல தோழர்களிடம் அதிகளவில் கண்டிருக்கிறேன். குறிப்பாக மறைந்த தோழர் முகில். அவர், என்னுடைய எந்தப் படைப்பை, எந்த இதழில் படித்தாலும், அதைப் பாராட்டியோ, விமரிசித்தோ மறுநாளே கடிதம் எழுதிவிடுவார். அவரைப்போலவே இன்னும் சில தோழர்கள் உண்டு. அது எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்திருக்கிறது.
அண்மையில் நீலம் இதழில் வெளிவந்த உங்களுடைய நினைவுப்பாதை சிறுகதையை ஆதவன் தீட்சண்யா பாராட்டியிருந்தார். பொற்கொடியின் சிறகுகள் கதையைப் பெருமாள் முருகன் சிலாகித்திருந்தார். இவையெல்லாம் மகிழ்ச்சி அளிப்பவை இல்லையா?
ஆமாம், தோழர்! ஒரு முறை இலக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்காக கோவைக்குச் சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த கோவை ஞானி என் கைகளைப் பற்றிக்கொண்டு ‘நன்றாக எழுதுகிறீர்கள்’ எனப் பாராட்டினார். சாகித்ய அகாதெமி நிகழ்ச்சிக்காக ஒருசமயம் மும்பைக்குப் போயிருந்தபோது அம்பையை அவருடைய வீட்டில் சந்தித்தேன். அவர் தீட்டு தொகுப்பை சிலாகித்துப் பேசினார். வ.கீதா அவர்களை முதன்முதலில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்து ஆர்வத்துடன் பேசச் செல்கிறேன், அவர் என் கதைகளைப் பாராட்டிப் பேசத் தொடங்குகிறார். இப்படிப் பல நினைவுகளைச் சொல்லலாம். நான் முதன் முதலில் இலக்கியம் சார்ந்து படிக்கத் தொடங்கிய போது, யாரையெல்லாம் வியந்தேனோ அவர்களிடமிருந்தே பாராட்டுகளைப் பெற்ற போது மிகவும் பரவச அனுபவமாக இருந்திருக்கிறது. அதைப்போலத்தான் இப்போது நீங்கள் குறிப்பிடுவதும். இப்போது, நான் யாரையெல்லாம் விரும்பி வாசித்து, தோழமை பாராட்டுகிறேனோ அவர்கள் என் படைப்பை சிலாகிக்கிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்களின் நீ நிகழ்ந்தபோது கவிதைத் தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது. தொடர்ந்து கவிதைகளை எழுதுகிறீர்களா? கவிதையுடனான அறிமுகத்தைச் சொல்லுங்கள்.
தொடர்ந்து கவிதைகளை எழுதுகிறேன். கடந்த மாதம் நீலம் இதழிலும், வாசகசாலை இணைய இதழிலும் என் கவிதைகள் வெளியாகின. நான் பதின்முன்று வயதிலிருந்தே கவிதைகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டியவன். முதலில் படித்தவை, பாவேந்தரின் கவிதைகள். சுரதா, கண்ணதாசன் போன்றோரின் கவிதைகள். பிற்பாடு பெரும் புகழ் பெற்ற வானம்பாடிக் கவிஞர்களின் படைப்புகள். நான் வசிப்பது வாணியம்பாடிக்கும், ஆம்பூருக்கும் அருகில் என்பதால் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் பணியாற்றிய கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் என்னை ஈர்த்தன. என் சித்தியின் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்தவரே கவிக்கோதான்! வாணியம்பாடியில் இயங்கிய முத்தமிழ் மன்றத்திற்கு வராத கவிஞர்களே கிடையாது. கண்ணீர்ப் பூக்கள், பால் வீதி, ஆலாபனை இப்படி அன்றைய பிரபலமான படைப்புகள் அவ்வளவையும் இளம் வயதிலேயே வாசித்திருக்கிறேன். கல்லூரிக்கு வந்த பிறகு மீரா அவர்கள் அன்னம் வாயிலாக வெளியிட்ட நவகவிதை வரிசை தொகுப்புகளின் மூலம் நவீனக் கவிஞர்கள் எனக்கு அறிமுகமானார்கள்.

இந்த வலுவான வாசிப்புப் பின்னணியே உங்களின் கவிதைப் படைப்புகளுக்கு அடித்தளம் என்பது புரிகிறது. “கவிதைதான் எனக்கு மிக நெருக்கமான வடிவம்” என்று நீங்களேகூட சொல்லியிருக்கிறீர்கள். இதுவரை எத்தனை கவிதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன?
இதுவரை நீ நிகழ்ந்தபோது, அரூப நஞ்சு, உனக்கும் எனக்குமான சொல், ஞாபக விலங்கு என நான்கு தொகுப்புகள் வந்திருக்கின்றன. இப்போது அந்த நான்கையும் அண்மையில் எழுதிய கவிதைகளுடன் சேர்த்து ஒரே தொகுப்பாகக் கொண்டுவரலாம் என்று இருக்கிறேன். கவிதைகளைக் கொடுங்கள், பதிப்பிக்கிறோம் என்று என் கவிதைகளை விரும்பிடும் பதிப்பாளர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்! கவிதைக்கென்று உணர்வு மற்றும் அழகியல்பூர்வமான சில தனித்தன்மைகள் இருக்கின்றன. வெறுமனே ஒரு கருத்தை சொற்களால் சொல்லிவிட்டால் அது கவிதையாகி விடாது. எந்த விஷயத்தையும் அதன் தன்மைக்கேற்ற சில கூறுகளுடன் சொல்லும் போதுதான் வாசகர்களைக் கவரும்.
நான் எழுதிய ஏதிலிக்குருவிகள் என்ற கவிதை பதினோராம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் பாடமாக உள்ளது. அதில் மண்ணின் மார்பு சுரக்கும் காலம் அது என்றொரு வரியுண்டு. அது எளிய கவிதைதான். ஆனால், அந்த வரியைப் படிக்கும் ஒரு பதினோராம் வகுப்பு மாணவர்கூட மனம் உருகிவிடுகிறார் என்று தமிழ் ஆசிரியர்கள் பலரும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் கவிதையின் ஆற்றல். கவிதை அதன் நுட்பத்துடன் எழுதப்படுகிறபோது உங்களின் ஆன்மாவை தொட்டு விடுகிறது!
நீ நிகழ்ந்த போது கவிதைத் தொகுப்பில் மனம் பறிகொடுத்த சில நண்பர்கள்-கவிஞர்
சே.பிருந்தா உள்பட-அந்தத் தொகுப்பிலிருந்த கவிதைகள் ஒவ்வொன்றையும் ஒரு நிலாக்கால இரவில், கிணற்றடியில் உட்கார்ந்து, உரத்து வாசித்து, அசை போட்டு மகிழ்ந்தார்கள் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இதில் ஒரு கேள்வி எனக்குண்டு. மென்மையான அக உணர்வுகளை எழுதும் ஒருவர், சமூகப் பிரச்னைகளைப் பற்றி உரத்த குரலில், போர் முழக்கமிடும் தொனியில் எழுதக் கூடாது என்று நீண்ட காலமாக சிலர் சொல்லி வருகிறார்கள். பிரச்சினைகளைப் பற்றி எழுதுவது கருத்துப் பிரச்சாரம்தானே தவிர, அவை கவிதையாகா என்றும் சொல்கிறார்கள். ஆனால், நீங்கள் இந்த இரண்டு வகைக் கவிதைகளிலும் வெற்றிகரமாக பல படைப்புகளைத் தந்து வருகிறீர்கள். அது எப்படி?
இதெல்லாம் வெறும் கருத்து வன்மம்தான், வசைதான் தோழர்! இது உண்மையில்லை. ஒரு மென்மையான கவிஞனின் மனம் ஏன் கடும் உளைச்சலுக்கு ஆளாகிறது? சமூகப் பிரச்சினைகளால்தானே? அன்றாடம் இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் தானே? பிரச்சினைகளில் உழலும் கவிஞன் அவற்றுக்கு முகங்கொடுக்காமல் எப்படி விலகிப் போய்விட முடியும்? சக மனிதர்களின் பிரச்சினைகளை விடுங்கள், முதலில், தான் எதிர்க்கொள்ளும் புறவயமான சிக்கல்களைப் பாடாதவன் கவிஞனே அல்லன்.

நீங்கள் 1997 – இல் தீட்டு குறுநாவலின் மூலம் இலக்கிய உலகின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கணையாழி குறுநாவல் போட்டியில் தேர்வு செய்யப்பட்டு வெளியான கதை அது. வேலூர் கண்டோன்மெண்ட் பகுதியில் இருந்த பாலியல் தொழிலாளிகள் பற்றிய ஒரு கதையை முதன் முதலில் நீங்கள்தான் எழுதியிருந்தீர்கள். நான் வாசித்தவரை, வேறு யாரும் அந்தப் பெண்களின் அவல வாழ்க்கை பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. அவ்வளவு இளம் வயதில், பாலியல் தொழிலாளர்களின் நிலையை மையமாகக்கொண்ட ஒரு குறுநாவலை எழுதுவதற்கான உந்துதல் எப்படி ஏற்பட்டது ?
அப்போது நான் வேலூரில் படித்துக் கொண்டிருந்தேன். அரசு ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்த காலம். ஒரே அறைக்குள் பத்துப் பன்னிரண்டு மாணவர்கள் தங்கியாக வேண்டும். எல்லாருடைய பெட்டிகளை வைக்கக்கூட உள்ளே இடமிருக்காது. அதனால், நாங்கள் உள்ளே உட்கார்ந்து படிக்கவே முடியாது. அந்த விடுதி இருந்த இடம் வேலூர் கண்டோன்மெண்ட் பகுதி. பின்னால் ஓர் இரயில் நிலையம் இருக்கிறது. இரவு நேரங்களில் நாங்கள் அந்த இரயில் நிலைய நடைமேடைகளில் உட்கார்ந்து படிப்போம். இரவு பன்னிரண்டு, ஒரு மணி வரை படித்துவிட்டுத் திரும்புவோம். அங்கே பாலியல் தொழில் செய்யும் பெண்கள் நிறையப்பேர் வசித்தார்கள். அவர்கள் படித்துக்கொண்டிருக்கும் எங்களிடம் சிநேகமாகப் பழகுவார்கள், பேசுவார்கள். அவர்களின் வாழ்க்கை அவலங்கள் பற்றியெல்லாம் எங்களிடம் மனம்விட்டுப் பேசுவார்கள். தோளில் கைகளைப் போட்டுக் கொண்டு நெருங்கிய சிநேகிதர்கள்போலப் பேசுவார்கள். அங்கே நான் ஒருவரைப் பார்த்தேன். அவர்தான் என் தீட்டு கதையின் நாயகியாகப் பிற்பாடு உருவானார். அவரை நான் எங்கள் ஊர்ப்பக்கத்திலும் பார்த்திருக்கிறேன். நீண்ட நாள்களாகியும் அந்தப் பெண்ணின் முகம் மறக்கவே இல்லை.
தீட்டு குறுநாவல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கண்டோன்மெண்ட் என்ற பகுதிகள் நாட்டின் பல இடங்களில் இருக்கின்றன. அவை இராணுவத்தினர் தங்குவதற்காக உருவாக்கப்பட்டவை. 1857-இல் பிரிட்டிஷார் ஒரு சண்டையில் தோற்றுப்போன பிறகு நாட்டின் பல இடங்களில் இப்படியான குடியிருப்புகளை உருவாக்கினர். அவை இரயில் நிலையங்களோடு இணைந்தே அமையும். முதன் முதலில் கல்கத்தாவிலும், பின்னர் பெங்களூரிலும் கண்டோன்மெண்ட்டுகள் அமைந்தன. இப்படி இராணுவத்தினர் தங்கும் பகுதிகளில் அவர்களின் தேவைகளுக்காகவே பாலியல் தொழிலாளர்களும் உடன் வசிக்கிற மாதிரியான குடியிருப்புகள் உருவாகியதாகச் சொல்கிறார்கள்.
என் மரியாதைக்குரிய வாசகர் லிங்கம் அவர்கள் தீட்டு குறுநாவலை குப்ரினின் பலிபீடம் கதையுடன் ஒப்பிட்டுப் பேசுவார். தமிழில் அதுவரை ஜி.நாகராஜன், ஜெயகாந்தன் போன்றோரால் எழுதப்பட்ட, பாலுறவு தொழிலாளர்களைப் பற்றிய கதைகள் எல்லாமே அவர்களுடைய உடலையும், காமத்தையும் மட்டுமே பேசின. தீட்டு குறுநாவல் மட்டும்தான் முதன்முதலில் அவர்களின் வலியையும் துயரத்தையும் வாழ்கையையும் பேசியது என்பார் லிங்கம். சமூக அவலங்களை, அவலங்களாக உணர்வதற்கு ஒரு பார்வை வேண்டும். அது அமைந்து விட்டால், நிச்சயம் உங்களை அவை எழுதச் செய்துவிடும்.
சுமார் நூறு கதைகளுக்கு மேல் எழுதிவிட்டீர்கள். இவற்றில் உங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமான, மிகவும் பிடித்த கதைகள் என்று சில இருக்குமல்லவா? அவற்றைப் பற்றிச் சொல்லுங்கள்.
நான் எழுதிய எல்லாக் கதைகளுமே என் மனதிற்கு நெருக்கமானவைதாம்! (சிரிக்கிறார்). என்றாலும், வாசகர்களால் மிகவும் பாராட்டப் பெற்ற அல்லது விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த கதைகளைப் பிடித்த கதைகளாகச் சொல்ல மாட்டேன். மாறாக, என் சுயத்தைப் பிரதிபலித்த, என் ஆளுமையை வெளிப்படுத்திய, என் வாழ்க்கையை, உணர்வுகளைப் பிரதிபலித்த கதைகளையே எனக்குப் பிடித்தமான கதைகளாகச் சொல்வேன். இன்னும் சொல்லப் போனால் நான் எழுதிய அதிகம் கவனிக்கப்படாத கதையே எனக்குப் பிடித்தமான கதை!
உங்கள் கதைகள் பற்றி விமர்சகர்கள் பலரும் பலவிதமாக மதிப்பீடுகளை முன்வைத்து இருப்பார்கள். அப்படிப்பட்ட விமர்சனங்களில் உங்களுக்கு வியப்பளித்த அல்லது புதிராகத் தோற்றமளித்த விமரிசனங்கள் உண்டா? இருந்தால் அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.
அண்மையில் மலேசியாவில் வசிக்கும் செல்வம், என்னுடைய வனம்மாள் சிறுகதையை சதுரங்க விளையாட்டுடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். இது என்னை ஆச்சர்யப்பட வைத்தது. நிறைய விமரிசனங்களை எதிர்கொண்டு வளர்ந்தவன் நான். அவற்றில் பெரும்பாலானவற்றை மறந்து விடுவது வழக்கம். என் படைப்புகளைப் பற்றிய ஒரு கருத்தரங்கில் ஒரு விமர்சகர், என் கதைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க சிலவற்றைச் சொல்லி அவற்றின் முடிவுகள் சினிமாட்டிக் என்று சொன்னார். அது எனக்கு மிகவும் ஆச்சரியம் தந்தது. வேறு சில நண்பர்கள் ‘உங்களின் கதைகள் எதிர்பாராத முடிவுகளைக் கொண்டவையாக அமைந்து விடுகின்றன’ என்றும் சொன்னதுண்டு. ஆனால், சினிமாட்டிக் என்பதெல்லாம் வழக்கொழிந்துபோன, பொருத்தமில்லாத ஒப்பீடு. ஒரு கதையை ஒருவர் உள்வாங்குவதற்கே வாழ்க்கை அனுபவமும், திறந்த மனதும் தேவைப்படுகிறது. அதனால் தான் வாசிப்பு என்பது எழுத்தாளனின் உழைப்பில் சமபங்கு கொண்டது என்றார்கள். வாசிப்பில் தானே ஒரு கதை நிறைவடைகிறது? எனவே பொறுப்புணர்ச்சியில்லாத விமரிசனங்கள் வெற்றுச் சொற்கள்தான்.
என் கதைகளின் முடிவுகளை நான் திட்டமிட்டு அமைத்ததில்லை. இன்னும் சொல்லப் போனால், நான் நினைத்திராத வகையில் கதைகள் வளர்ந்து கொண்டே போய், தமக்கான முடிவுகளை இயல்பாக அமைத்துக்கொண்டுள்ளன! சூழல் அறிவியலில் Ecological niche என்று ஒரு பதம் உண்டு. அதாவது ஒவ்வொரு சிற்றினமும் தனக்கேற்ற ஒரு சூழல் பகுதியை வாழ்விடமாகத் தகவமைத்துக் கொள்கிறது என்பது இதன் பொருள். கதைகளும் அப்படித்தான். அவை ஒவ்வொன்றும் ஒரு Fictional niche! ஒரு கதை, ஒரு சூழலை தனக்குள்ளேயே உருவாக்கிக் கொள்கிறது. அந்தக் கதையின் உள்ளுறை காரண-காரியத்தைப் பொருத்தே அதிலிருக்கும் பாத்திரங்கள் இயங்குகின்றன. முடிவெடுக்கின்றன என்பேன் நான்.
இதற்கு எடுத்துக்காட்டாக வாகனம் பூத்திடும் சாலை என்ற என் கதையைக் குறிப்பிட முடியும். ஒரு மெக்கானிக் பட்டறைக்கு வழக்கமாகப் போவேன். டூவீலர் பழுது பார்க்கும் வேலைகளுக்காகப் போய் அங்கு உட்கார்ந்திருக்கையில், அந்த மெக்கானிக்குடன் நிறையப் பேசுவேன். அந்தப் பையன் தன்னுடைய பிரச்னைகளை – காதல் உள்பட – என்னிடம் பகிர்ந்துகொள்வது வழக்கம். அந்த மெக்கானிக் தம்பி ஒருமுறை சொன்னான். “என் வாழ்க்கைல எங்க அப்பா செஞ்ச ஒரு காரியத்தால் என் வாழ்க்கையே வீணாப் போயிடுச்சு, சார்!”
அவனுக்குப் படிக்கவேண்டுமென்று ஆர்வம். அவனுடைய அப்பாவோ, ஒரு மெக்கானிக் கடையில் கொண்டு போய் அவனை வேலைக்குச் சேர்த்துவிட்டிருக்கிறார். அவன் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு படிக்க வைத்திருந்தால் அவனுடைய வாழ்க்கை முற்றிலும் வேறுவிதமாக ஆகியிருக்கும். இந்த விஷயம் என் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. அதை ஒரு கதையாக எழுதிக்கொண்டிருந்தேன். முடிவை என்ன மாதிரி அமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், அதுவே ஓர் இயல்பான, ஆனால், எதிர்பாராத முடிவைத் தேர்வு செய்து கொண்டது!
அந்த மெக்கானிக்கின் அப்பா எப்படி அவனைக் கொண்டு போய் மெக்கானிக் ஷாப்பில் வேலைக்குச் சேர்த்துவிட்டாரோ அதேபோல், ஒரு சிறுவன் தன் அப்பாவுடன் அவனிடம் வேலை கேட்டு வருவான். இவன் அந்தச் சிறுவனிடம் பேச்சுக் கொடுத்து அவன் படிக்கத்தான் விரும்புகிறான் என்பதைப் புரிந்து கொள்வான். பிறகு அந்தச் சிறுவனின் பெயரைக் கேட்பான். அவன், இவன் பெயரையே சொல்வான். உடனே அந்த மெக்கானிக், தானே ஒரு சிறுவனாகி தன் முன்னே நிற்பதாக அதிர்ச்சியடைவான்! உடனே, தனது கடைக்கு எதிரே உள்ள பள்ளியின் தலைமையாசிரியரிடம் – அவர் இவனுடைய வாடிக்கையாளர் என்ற உரிமையில் – அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டுபோய் நிறுத்தி, அவனைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளுமாறு ஏற்பாடு செய்து திரும்புவான். இப்படிப் பலகதைகள். ஒரு நல்ல கதை தன்னுடைய முடிவை, தானே தீர்மானித்துக் கொள்ளும்.
இதையொட்டி நான் இன்னொன்றைச் சொல்ல வேண்டும். இங்கே ஓர் எழுத்தாளன் ஏதாவது ஓர் அரசியல் அமைப்புடன், களப்பணிகளில் ஒரு போராளியாக இருக்கிறான் என்றால் அவனைக் கட்டங்கட்டி ஒதுக்கி விடுகிறார்கள். ஓரங்கட்டுகிறார்கள். புறக்கணித்து, விலக்கி வைக்கிறார்கள். தமிழ்ச்சூழலில் இது மிகவும் இயல்பாக நடக்கிறது. அதேபோல் இப்போது இலக்கிய விமரிசனப் பார்வையுடன் பாரபட்சமில்லாமல் படைப்புகளை மதிப்பீடு செய்யும் விமர்சகர்கள் என்று யாருமில்லை. ஓர் இலக்கியப் பிரதியைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு ஒரு வாழ்க்கை அனுபவம் இருந்தாக வேண்டும். படிப்பதற்கே அப்படியென்றால், படைப்பவருக்கு இருக்க வேண்டிய வாழ்க்கை அனுபவம் பற்றிச் சொல்லவே வேண்டாம். நான் என் வாழ்க்கை அனுபவங்களிலிருந்துதான் உருவாகி வளர்ந்து மேலெழுந்து எழுத வந்திருக்கிறேன்.

உங்கள் அனுபவங்களையே கதைகளாக மாற்றும்போது அவற்றில் உண்மையும், உயிர்ப்பும் இருக்கவே செய்யும். அந்த மெக்கானிக் போன்று, நீங்கள் சந்திக்கிற மனிதர்களிடம் இயல்பாகக் கலந்துரையாடுவது உங்கள் படைப்புகளுக்கு அடித்தளமாக அமைகிறது, இல்லையா?
ஆமாம், தோழர்! எந்தக் கதையையும் நான் அவசரமாக எழுதுவதில்லை. ஆரம்ப காலத்தில் ஒரு கதையைப் பத்துமுறைகூட திருத்தி எழுதியிருக்கிறேன். இப்போது லேப்டாப்பிலேயே டைப் செய்து விடுவதால் பலமுறை அதிலேயே திருத்தங்கள் செய்து விடுகிறேன். அதையும் நிதானமாகத்தான் செய்வேன். நான் பழகும் மனிதர்களின் மனங்களை, வாழ்க்கை அனுபவங்களை அவர்களின் சொற்கள் வழியாக ஊடுருவி அறிகிறேன். அந்தச் சொற்களே என் கதைகளில் உரையாடல்களாக அமைகின்றன. இயல்பான ஓர் உந்துதலுக்குப் பிறகுதான் நான் கதைகளை எழுதுகிறேன். என் கதைகளுக்காக சலிக்காமல், மெனக்கெடுவது என் வழக்கம்.

என் மனதில் நீண்ட நாள்களாக இருக்கும் ஒரு கேள்வி இது. இங்கே வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு தொடங்கி, ராணிப்பேட்டை வரை நூற்றுக்கணக்கான தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அந்தத் தொழிற்சாலைக் கழிவுகள், இரசாயனக் கரைசல்களால்தான் பாலாறு சீர்கெட்டுப் பாழாறாகப் போய்விட்டது. சுற்றுச்சூழல் நோக்கில் பாலாறு நதியை மீட்கும் இயக்கங்கள் இங்கே பல உண்டு. ஆனால், இங்கேயே பிறந்து, பாலாற்றங்கரையிலேயே வளர்ந்து, படைப்பாளியாக மாறிய நீங்கள் இன்னும் இந்தப் பிரச்னைகளை மையமாக வைத்து நாவலோ, குறுநாவலோ எழதவில்லைதானே? அதேபோல ஒருங்கிணைந்த வடஆற்காடு மாவட்டம் முழுவதுமே இருந்து வரும் பீடித்தொழில் பற்றியும், அதில் ஈடுபட்டிருக்கும் மக்களின் வாழ்க்கை பற்றியும்கூட நீங்கள் இன்னும் எழுதவில்லைதானே? யாம் சில அரிசி வேண்டினோம், வல்லிசை நாவல்களில் இந்தத் தோல் பதனிடும் தொழில், பீடித்தொழில் பற்றிய சில பதிவுகள் இருக்கின்றன. ஆனால், அவற்றையே மையமாகக்கொண்டு எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். சரிதானா?
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை. இந்த அம்சங்கள் என் வாழ்க்கையில் பிரிக்கவே முடியாதவை. என் அப்பாவே பீடித்தொழிலும், தோல் பதனிடும் தொழிலும் செய்த ஓர் உழைப்பாளிதான். சில சமயங்களில் நமது வாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதிகளைப் பற்றி நாம் எழுதாமலே போய்விடுகிறோம் அல்லது போதுமான அளவுக்கு எழுதுவதில்லை. புதுமைப்பித்தனுக்குக் காசநோய் இருந்தது. அந்த நோயினால்தான் அவர் இறந்தும் போனார். அதேபோல கி.ராஜநாராயணனும் காசநோயினால் பாதிக்கப்பட்டார். ஆனால், புதுமைப்பித்தன் அதை எழுதவில்லை. கி.ரா., மட்டும் அந்த அனுபவங்களைக் கரிசக்காட்டுக் கடுதாசி நூலில் எழுதியிருக்கிறார்.
நான் பீடி சுற்றுவேன். புண்ணி மூடுவேன். அம்மா எங்களைக் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டு, பீடி இலைகளை சீவித்தர கேட்பார். அதை முடித்துவிட்டு அவசரமாகப் பள்ளிக்கூடம் போவோம். மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும், அப்பா சுற்றி வைத்திருக்கும் பீடிகளில் புண்ணி மூடுவோம். அப்பா தோல் பதனிடும் வேலையை செய்துகொண்டிருந்த சமயத்தில் அவருக்கு மத்தியானச் சாப்பாடு கொண்டுபோவேன். ஒரு கட்டத்தில், அப்பா இவற்றிலிருந்தெல்லாம் என்னைத் தடுத்து விட்டார். “நீ படிக்கிறவன். உன் படிப்பை மட்டும் பார். போதும்” என்று சொல்லிவிட்டார்.
இதுபோல நான் என் வாழ்க்கையில் நேரடியாகப் பார்த்த, அனுபவித்த சில விஷயங்களைப்பற்றி இன்னும் எழுதாமலேயே இருக்கிறேன். நீங்கள் மட்டுமல்ல, பல நண்பர்கள் இந்த விஷயங்களை எழுதுமாறு சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். கோலார் தங்கவயல் பகுதியில் பிறந்த வெற்றிச்செல்வன், கே.ஜி.எப்., வாழ்க்கையை நான் எழுத வேண்டுமென்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அதேபோல, மறைந்த தோழர் டி.செல்வராஜ் அவர்களை ஒருமுறை திண்டுக்கல்லில் அவர் வீட்டில் கவிஞர் பூர்ணாவுடன் சந்தித்தபோது, என் அப்பா தோல் பதனிடும் தொழிலாளி என்று அறிந்த அவர், “நான் தோல் நாவலை எழுதியிருக்கிறேன். ஆனால் அதை எழுதுவதற்கு பொருத்தமானவர் நீங்கள்” என்று சொன்னார்.
ஒன்றின் உள்ளே இருக்கும்போது பெரும்பாலும் உங்களுக்கு அதை எழுதத் தோன்றுவதில்லை! உங்களின் வாழ்க்கை அனுபவத்தை நீங்கள் புதிய ஒன்றாக உணராத போதோ அல்லது அதைக் குறித்த சலிப்பையும், வெறுப்பையும் உருவாக்கிக்கொள்ளும்போதோ, அது உங்களின் எழுத்துக்குள் வராது. வெளியிலிருந்து நிதானத்தோடு அணுகும் தன்மையே நல்ல எழுத்தைப் பிறப்பிக்கும். விரைவில் பீடி, தோல் பதனிடுதல் ஆகியவற்றை மையமாகக்கொண்ட நாவல்களை நான் எழுதுவேன். அதற்கான வேலைகளை தொடங்கியும் விட்டேன்.

என் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும், தொழிற்சாலையில் பணியாற்றிய அனுபவங்களின் அடிப்படையிலும் ஏற்பட்ட கேள்வி இது. தொழிற்சங்கங்களை உருவாக்கி கோரிக்கைகளை முன்வைக்கிறோம். ஒவ்வொன்றாக அவை நிறைவேறத் தொடங்கும்போது, உற்சாகம் ஏற்படுகிறது. மேலும் கோரிக்கைகள், மேலும் போராட்டங்கள் என்று வளர்கின்றன. ஒரு கட்டத்தில், நிர்வாகம் திருப்பித் தாக்கும்போது, அவற்றின் விளைவுகளை நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. பல இடங்களில் நிர்வாகம் கதவடைப்பு செய்து அறுபது, எழுபது நாட்கள் வரையிலும்கூடத் தொழிலாளர்களை வேலைக்கு அனுமதிக்காமல் பட்டினி போடுகிறது. கடைசியில் தொழிற்சங்கமும், தொழிலாளர்களும் பணிந்துபோகிற நிலை உருவாகிறது. இந்த நிலையை எதிர்கொள்ள தொழிற்சங்கங்கள் எந்த முன் தயாரிப்புடனும் இருப்பதில்லை. இந்த அனுபவங்களை எப்படிப் புரிந்துகொள்வது?
எங்கள் ஊரில், ஒருமுறை உயர் நீதிமன்ற உத்தரவால், ஒரே நாளில் 90-க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதிக்கு வந்து விட்டார்கள். அவர்களுக்கு வேறு எந்த மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை. அப்படிச் செய்யச் சொல்லி நீதிமன்றமும் உத்தரவிடவில்லை. வேறு வேலை தெரிந்து வைத்திருந்தவர்கள், அந்த வேலைகளுக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். வேறு எதுவும் தெரியாதவர்கள், பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். என் அப்பா, பீடித்தொழில் செய்துகொண்டிருந்தவர். பிறகுதான் தோல் ஷாப்புக்குப் போனார். எனவே அவர் சட்டென்று முறத்தில் பீடி இலைகளை நிரப்பிக் கொண்டு பீடி சுற்ற உட்கார்ந்து விட்டார்!
இன்னோர் அனுபவம். ஆம்பூரில் காலணி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் – சுமார் ஆயிரம் பேருக்கும் மேல் – ஒரு முறை தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடுவது என்ற திட்டத்துடன் சென்னைக்குப் போனார்கள். அவர்கள் சென்ற நீலகிரி எக்ஸ்பிரஸ் சென்ட்ரலில் நுழைந்ததுமே போலீசார் அவர்களைத் தடுத்து அங்கேயே உட்கார வைத்துவிட்டார்கள். அதேபோல, வேறுவழிகளில் கோட்டையை நோக்கிப் போனவர்களையும் வழியிலேயே தடுத்து திருப்பி அனுப்பி விட்டார்கள். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான பெண்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்கள். இந்தப் போராட்டம் தொடர்பான உண்மையறியும் குழுவில் நானும் இருந்தேன். அந்த அறிக்கைக்காக நாங்கள் விசாரிக்கப் போனபோது காவல் துறை அதிகாரிகள் பலரையும் சந்திக்கவே முடியவில்லை. சிலரைச் சந்திக்க முடிந்தாலும் அவர்கள் எந்தக் கேள்விக்கும் சரியான பதிலைச் சொல்ல மறுத்தார்கள். நிர்வாகத்தின் பிரதிநிதி என்று ஒருவர்கூட வரவில்லை. கடைசியில், அந்தத் தொழிலாளர்கள் தாங்கள் முன்வைத்த கோரிக்கைளை எல்லாம் கை விட்டுவிட்டு முன்பு கொடுத்த சம்பளத்தையே கொடுத்து வேலைக்கு அனுமதித்தால் போதும் என்ற நிலைக்கு இறங்கி வரும்படி ஆகி விட்டது. சிலர் வழக்கையும் சந்திக்க நேர்ந்தது.
இது போன்ற நிலைமைகள் ஏற்படும் என்பதை நாம் முன்பே விளக்கி, முடிந்தவரை அந்தத் தொழிலாளர்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு மாற்று வேலைத்திறன்களில் பயிற்சி கொடுக்கவும் வேண்டும். இது மிகவும் சவாலான ஒரு பணிதான். போரட்டங்களால் வேலை இழந்தவர்களுக்கு தொழிற்சங்கங்கள் இணைந்து ஒரு பொது நிதியத்தை ஏற்படுத்தலாம். இடதுசாரி அரசியல் அமைப்புகள் கூட்டணியில் ஆட்சி அமைக்கும்போது, இதை வலியுறுத்தி நிவாரணம் பெற்றுத்தரலாம். இதையெல்லாம் செய்யாமல், நாம் கோரிக்கைகளை மட்டும் முன்வைத்து போராடிக்கொண்டே போனால், கடைசியில் வாழ்க்கையை இழந்திடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். எப்போதுமே போராட்டத்தில் மாற்று என்பதும், இழப்புகளை எதிர்கொள்கிற முன்தயாரிப்பு என்பதும் இணையான அல்லது பக்கவாட்டுச் சிந்தனைகள் என்பதை மறக்கக்கூடாது.

உண்மை தோழர்! நான் வேலூரிலிருந்த 22 ஆண்டுகளில் பீடித்தொழில் செய்யும் ஏராளமான பகுதிகளில் சைக்கிளிலேயே சுற்றித் திரிந்திருக்கிறேன். எனக்கும் ஏராளமான அனுபவங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் ஒன்று கூட இன்னமும் என்னுடைய எழுத்தில் பதிவாகவில்லை! இதையொட்டி நானும் நிறைய சிந்திக்க வேண்டியிருக்கிறது!
இந்தியாவில் இலக்கியத்தைப் பார்க்கும் நம் பார்வை முறையிலேயே பெரிய மாற்றம் தேவை என்று நினைக்கிறேன். நீங்கள் இந்தியத் தத்துவம் சார்ந்து பார்த்தாலும் சரி, பிற கோட்பாடுகளின் படி பார்த்தாலும் சரி. அடிப்படையிலேயே நமது பார்வையில் இந்திய மரபு சார்ந்த ஒரு சிக்கல் வந்துவிடுகிறது. ஏனென்றால் இங்கு கலை என்பது சரஸ்வதி கடாட்சம். அதனால் நீங்கள் மேன்மைகளையே எழுத வேண்டும்! மேலை நாடுகளில் உழைக்கும் மக்கள் சார்ந்த, எளிய மக்களின் வாழ்க்கப்பாடுகள் சார்ந்த, தொழிலாளர்கள் சார்ந்த இலக்கியப் பிரதிகள் கொண்டாடப்பட்டிருக்கின்றன. அங்கிள் டாம்’ஸ் கேபின், பார் ஃபிரம் த மேடிங் கிரவுட், லே மிஸரபிள், ஸ்பார்ட்டகஸ், ரூட்ஸ், தாய் என்று பல நாவல்கள் கொண்டாடப்பட்டுள்ளன. ஆனால், இங்கே இந்த வகையான எழுத்துகள் கொண்டாடப்படவே இல்லை. இங்கே கொண்டாடப்படும் பிரதிகளைப் பாருங்கள். மீண்டும் மீண்டும் பௌராணிக மரபு சார்ந்த, தத்துவ தரிசனம் சார்ந்த, பார்ப்பன மேட்டுக்குடி வாழ்க்கை சார்ந்த எழுத்துகளே கொண்டாடப் படுகின்றன. புராண இதிகாசங்களை மீள்புனைவு செய்கிறவர்கள் மீதே வெளிச்சங்கள் பாய்ச்சப்படுகின்றன. இவற்றைப் பார்க்கிறவர்கள் அப்படி எழுதுவதையே முதன்மையான வேலையாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். தமிழில் எடுத்துக்கொள்ளுவோம், இங்கே ‘தி பெஸ்ட்’ என்றால் மோகமுள் நாவலைத்தானே முன்வைக்கிறார்கள்?
இன்னொரு பக்கம் முற்போக்கு முகாம்களிலிருந்து திடசித்தத்தோடு வருகிறவர்களின் எழுத்து நடைமுறையையும் நாம் விமர்சிக்க வேண்டியுள்ளது. மேலவளவு, திண்ணியம், வேங்கைவயல், வாச்சாத்தி சம்பவங்களைப் பற்றி எத்தனை இலக்கியப் பிரதிகளை நாம் காட்ட முடியும். கவிதைகள் இருக்கின்றன. வெண்மணி சம்பவம் பற்றி சோலை சுந்தரப் பெருமாளின் இரண்டு நாவல்கள், பாட்டாளியின் நாவல், மீனா கந்தசாமியின் ஆங்கில நாவல் தவிர வேறு என்ன பிரதிகள் இருக்கின்றன? குருதிப்புனல் நாவலும் தாளடி நாவலும் வெண்மணி நிகழ்வை வேறு பார்வைகளில் பார்த்து எழுதப்பட்டவை. இந்த இரண்டு நாவல்களுக்கும் கிடைத்த புகழ் வெளிச்சமும், விவாதங்களும், வரவேற்பும் மற்ற நாவல்களுக்கு கிடைக்கவில்லையே? சமகாலத்தைக் குறித்து எழுதுவதற்கும், கவனத்தை ஏற்படுத்துவதற்கும் நாம் ஓர் இலக்கிய முகாமையோ அல்லது ஓர் இலக்கிய இயக்கத்தையோகூட கட்டமைக்கலாம் என்று நான் சொல்ல விரும்புகிறேன்.

நிச்சயமாகச் செய்யவேண்டும். உங்கள் நாவல்கள் பற்றி நாம் நிறையவே பேசி இருக்கிறோம். வல்லிசை நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு, யாம் சில அரிசி வேண்டினோம் நாவலுக்குக் கிடைக்காமல் போய்விட்டதோ என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. அது சரியா என்று தெரியவில்லை.
இல்லை, தோழர்! நான் எழுதிய நாவல்களில் மிகவும் அதிக அளவுக்குப் பாராட்டுப் பெற்ற நாவல் யாம் சில அரிசி வேண்டினோம் தான். அந்த நாவல் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வெளியானது. வெளியே பொது வெளியில் கூட்டங்கள் போட முடியாத சூழல். ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது கூட்டங்கள்வரை கூகுள்மீட், ஜூம் போன்ற இணையவழியில் அதற்கு நடந்திருக்கின்றன. தவிர தனிப்பட்ட முறையிலும் நிறையப் பேர் பேசிய இணையப் பதிவுகளும் உண்டு. அண்மையில் ஒருவர் அலைபேசியில் அழைத்து அந்த நாவலைப் பற்றிப் பேசியபோது, அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு நானே என்னுடன் பேசிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவர் சொல்லும்போது “வீட்டில் மாடியறையில் நான் இருக்கிறேன். கீழ் வீட்டில் அம்மாவும், தங்கையும் உட்கார்ந்து பீடி சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். நானுமே பீடி சுற்றித்தான் படித்து ஓர் ஆசிரியராக இப்போது இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். இப்படி நிறையப் பேர் அந்த நாவலைப் படித்துப் பாராட்டியிருக்கிறார்கள். அந்தப் பதிவுகள் இப்போதும் இணையத்தில் கிடைக்கின்றன.

உங்கள் கட்டுரை நூல்கள் பல வந்திருக்கின்றன. அவற்றுக்கு என்னவிதமான எதிர்வினைகள் வந்திருக்கின்றன?
கட்டுரைகளை நான் எழுதத் தொடங்கியது நான் கல்லுரிப் படிப்பை முடித்துவிட்டு மக்கள் நல அமைப்புகளுடன் தொடர்புகொள்ளத் தொடங்கியபோதிருந்துதான். அதற்கு முன்பே என் மாணவப்பருவத்திலிருந்து தினமணி நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரைகளையும், புரிகிறதோ, இல்லையோ தி ஹிந்து ஆங்கில நாளிதழ் கட்டுரைகளையும் விடாமல் படித்து வருவேன். அந்த வாசிப்பு அனுபவம் கட்டுரைகளின் பக்கம் என் கவனத்தைத் திருப்பியது. கல்லூரிக் காலத்திலேயே பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துக்களும், பெரியாரின் எழுத்துகளும் என்னை ஆக்ரமித்தன. மண்ணின் மைந்தர்களும் மறைக்கப்பட்ட வரலாறும் என்ற நூல்தான் தமிழில் நான் முதன்முதலில் வாசித்த பாபாசாகேபின் எழுத்து. அது உலுக்கிய உலுக்கு இருக்கிறதே… விவரிக்க முடியாது! முதன் முதலில் கட்டுரைகளை எழுதுவதில் என்னைப் பெருமளவுக்கு உந்தித்தள்ளியவர்கள் இன்குலாப், இளவேனில், பிரபஞ்சன், அ.மார்க்ஸ் ஆகியோர் தான். பின்னர் இவர்களுடன் எஸ்.வி.ஆர்., இணைந்து கொண்டார்.
நிறையச் செய்திகளை உண்மையான தரவுகளின் அடிப்படையில் கட்டுரைகள் கொடுக்கின்றன. அதுமட்டுமன்றி, ஒருதரப்பு நியாயத்தை ஆற்றலுடன் அவை சொல்கின்றன. பல தீவிர வாசகர்கள் புனைவிலக்கியத்தைக் குறைவாகத்தான் படிக்கிறார்கள். கட்டுரை நுல்களைத்தாம் அவர்கள் பெருமளவுக்கு வாசிக்கிறார்கள். நடிகர் சத்யராஜ் அவர்கள் எனக்கு நல்ல நண்பர். கூட்டங்களில் நங்கள் சேர்ந்து பேசியிருக்கிறோம். என் கட்டுரை நூல்களையும், புனைவிலக்கியங்களையும் அவரிடம் தந்தபோது அவர், “தோழர்! தவறாக நினைக்க வேண்டாம். நான் புனைவிலக்கியங்களில் அவ்வளவாக ஆர்வமில்லாதவன். கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன்“ என்றார். அதே போல என் கட்டுரைத் தொகுப்புகளைப் படித்து விட்டு, கைபேசியில் அழைத்து விரிவாகப் பேசினார்.
கட்டுரைகள் ஆற்றல்மிக்க எழுத்து வடிவம் என்று நான் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். நான் தலித் முரசு இதழில் இணைந்தபின் அதிகளவில் கட்டுரைகளை எழுதிவந்தேன். அவற்றை எழுதுவது மிகவும் கடுமையான உழைப்பைக் கோரும் செயல். ஏராளமான தரவுகளுடன், தர்க்க ரீதியான நியாயங்களுடன் உங்கள் தரப்புக் கோரிக்கைகளை வலியுறுத்தி எழுதவேண்டும். நமது வாதங்கள், ஆதாரங்களின் அடிப்படையில், உண்மையின் பின்பலத்துடன் முன்வைக்கப்பட வேண்டியது மிக முக்கியம். லாஜிக்கலாக, ரேடிக்கலாக, பொருத்தப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதற்கு நான் படித்துக் குறிப்பெடுக்கும் நூல்கள், பத்திரிகைச் செய்திகள் மிகவும் பயன்பட்டன. தவிர ஆசிரியர் புனித பாண்டியன் சில நூல்களை அவ்வப்போது குறிப்பிட்டுப் படிக்கச் சொல்வார். இவையெல்லாவற்றுடன், ஓர் இலக்கியவாதி கட்டுரைகளை எழுதினால் எப்படியிருக்குமோ அப்படியான தன்மையில் நான் அவற்றை எழுதினேன். அவை மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
சில செய்திகளை நான் இங்கு குறிப்பிட வேண்டும். மலம் அள்ளும் தொழிலாளர்கள் பற்றிய வெட்கங்கெட்ட நாடு என்ற ஒரு கட்டுரை. அது தலித் முரசு இதழின் அட்டைப்படக் கட்டுரையாக வந்தது. அதைப்பற்றி இயக்குனர் பா. ரஞ்சித் விரிவாகப் பேசியிருக்கிறார். அந்தக் கட்டுரை வெளியான அந்த இதழைக் கையில் வைத்துக்கொண்டு, உணவை சாப்பிட்டு, அசூயையை நீக்கி, மனதை பக்குவப் படுத்தியதாகச் சொல்லியிருக்கிறார். கலை இதழின் விருது அந்தக் கட்டுரைக்குக் கிடைத்தது. ஆயிரம் ரூபாய்ப் பரிசைக் கவிஞர் காசி ஆனந்தன் அப்போது எனக்கு வழங்கினார். அதே கட்டுரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் குடியரசுத் தலைவராக அப்போதிருந்த கே.ஆர்.நாராயணன் அவர்களின் கவனத்திற்குப் போயிருக்கிறது. அவர் அதைப் படித்துவிட்டு மிகவும் பாராட்டியதாக அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்.
நான் எழுதிய மீள்கோணம் தொடர் அதிகளவில் வாசிக்கப்பட்டது. கே.வி.குப்பத்தில் நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அமைச்சர் துரைமுருகன் வந்திருந்தார். அந்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பிதழில் பல்வேறு தலைவர்களின் புகைப்படங்கள் வரிசையாக அச்சிடப்பட்டிருந்தன. பாபாசாகேப் அம்பேத்கரின் புகைப்படம் கடைசியில் போடப்பட்டிருந்தது. இதைக் குறித்து நான் மீள்கோணம் தொடரில் ஒரு பத்தியில் கண்டித்து எழுதினேன். அதைப் படித்த அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள், அக்கட்டுரையை அடிக்கோடிட்டு கட்சியின் அமைப்புத் தலைவர்களுக்கு அனுப்பி, இனிமேல் இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தியிருந்தாராம். இந்தத் தகவலை அண்ணா அறிவாலயத்தின் நூலகர் சொன்னதாகப் புனிதப் பாண்டியன் என்னிடம் தெரிவித்தார்.
இதுபோல என் கட்டுரைகள் பலராலும் மிகுந்த கவனத்துடன் பார்க்கப்படுகின்றன என்று நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்து மகிழ்ந்திருக்கிறேன். நமது கட்டுரைகள், நியாயத்தின் பக்கம் நிற்பவையாக, உரிய தரவுகளின் அடிப்படையில் அமைந்தவையாக இருந்தால் அவற்றுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என நான் உணர்ந்தேன். அடுத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையப் பக்கத்தில் அண்மையில் தொடர்கட்டுரைகள் எழுதி வந்தேன். அவை அன்லிமிட்டெட் காலம் என்ற தலைப்பில் உயிர்மை வெளியீடாக தொகுப்பாக வந்திருக்கின்றன. கட்டுரைகள் எழுதுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விஷயம்தான். ஆனால், அவை நிறைய நேரத்தையும், கடும் உழைப்பையும் கோருகின்றன. ஏராளமாகப் படித்துத் தரவுகள் சேகரித்துச் செய்தாகவேண்டிய வேலை அது

பஞ்சமி நிலங்கள் தலித் மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலங்கள். அவற்றில் 90% நிலங்கள் தலித் அல்லாதவர்களிடம்தாம் இருக்கின்றன என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. அதற்காக தலித் அமைப்புகள் ஏதேனும் இயக்கங்களை நடத்துகின்றனவா அல்லது சட்டரீதியாக வழக்குத் தொடுப்பது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளுகின்றனவா? அகில இந்திய அளவிலேயே இப்போது தலித் இயக்கங்கள் எழச்சி பெற்று வரும் சூழலில், இது இயல்பாக நமக்கு எழும் கேள்வி.
பஞ்சமி நிலங்கள் பற்றிய கோரிக்கையை முதன்முதலில் தமிழ்நாட்டில் முன்வைத்தவர் அயோத்திதாசப் பண்டிதர். அவர் 1891-இல் நடத்திய ஆதிதிராவிடர் மகாஜனசபைக் கூட்டத்தில்தான் முதன்முறையாக – ஆதிதிராவிட மக்களுக்கு நிலங்களை ஒதுக்கித்தர வேண்டும் – என்பது உள்ளிட்ட பத்துக் கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது தலித் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை. அந்தக் கோரிக்கையை அதற்குப் பின் வந்தவர்கள் பலரும் வலியுறுத்தினார்கள். அன்றைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜே.ஹெச்.ஏ.திரெமென்ஹீர் என்பவர் பறையர்கள் பற்றிய அறிக்கை என்று ஓர் அறிக்கையை அனுப்புகிறார். அதைத் தொடர்ந்து ஓர் அரசாணை போடப்படுகிறது. அரசாணையில் ஆதிதிராவிட மக்களுக்கு நிலங்களை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. டி.சி. லேண்ட் அதாவது டிப்ரஸ்ட் க்ளாஸ் லேண்ட் என்று மூன்று இலட்சத்து முப்பதாயிரம் ஏக்கர் அளவுக்கு நிலங்களைத் தலித் மக்களுக்கு ஒதுக்கித் தருகிறது வெள்ளை அரசு. அவற்றை பிரிட்டிஷ் அரசு எப்படி விநியோகம் செய்தது என்பது மிக முக்கியமான விஷயம்.
அன்றைக்கு கடுமையாக உழைத்தவர்கள் அனைவருமே தலித் மக்கள்தாம். அவர்கள் வேலைகளைத் தேடி பர்மா, மலேஷியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா எனக் கடல் கடந்து சென்றார்கள். இந்தியாவுக்குள்ளேயே பல இடங்களுக்குப் புலம்பெயர்ந்தார்கள். ரயில் பாதைகள் அமைப்பது, கட்டுமானங்களை நிறுவுவது போன்ற கடுமையான உடல் உழைப்புப் பணிகளை மேற்கொண்டார்கள். இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கின்ற எண்ணற்ற நவீனத் தொழில்நுட்பக் கட்டுமானங்களின் அடித்தளத்தில் புதைந்துக் கிடப்பவை தலித் மக்களின் வியர்வையும், கண்ணீரும், இரத்தமும்தாம் என்பதை மறுக்கவே முடியாது. அங்கேயும் அவர்கள் சொகுசாக இருந்துவிடவில்லை. எட்டுக்கு எட்டு அளவில் பெட்டிகளைப் போன்று அமைந்த கொட்டடிகளில்தாம் அடைபட்டுக் கிடந்தார்கள். இந்த நியாயங்களை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு நிலங்களை ஒதுக்கித் தந்தது.
அடிமைகளிடம் நிலங்கள் இருப்பதா என்று பொருமிய ஆதிக்கச்சாதிகள் அவற்றைக் குத்தகைக்குத் தருமாறும், மிரட்டியும், ஏமாற்றியும் வாங்கிக்கொண்டார்கள். விழிப்புணர்வு இல்லாதநிலையில், நிலமதிப்பைப் பற்றி உணராதநிலையில், உயிருக்கும் உடைமைக்கும் அஞ்சி தமக்கு உரிமையான டி.சி.நிலங்களை ஆதிக்கச் சாதியினரிடம் தலித் மக்கள் இழந்தனர். இப்போது விழிப்புணர்ச்சி பெற்று நிலங்களை தலித் மக்கள் கேட்கும்போது நீண்ட காலமாக அவற்றை அனுபவித்தவர்கள் தர மறுக்கிறார்கள்.
இதெல்லாம் முடிந்த கதை என்று சொல்ல முடியாது. அரசு தன் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்களைப் பிரித்து தலித் மக்களுக்கு இழப்பீடாகத் தரவேண்டும். இதற்குத் தலித் அமைப்புகள் மட்டுமின்றி, பிற அரசியல் அமைப்புகளும் சட்டரீதியிலும், களப்போராட்டங்கள் அடிப்படையிலும் செயல்பட வேண்டும். சாதியம் நிலைகொண்டு அதிகாரம் செலுத்துவதில் பொருளாதாரம் முக்கிய இடம் பெறுகிறது. பஞ்சமி நில மீட்புக் கோரிக்கைக்குத் தலித் அமைப்புகள் போராடி பலர் உயிரிழப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஜான்தாமஸ், ஏழுமலை ஆகிய இரண்டு தோழர்கள் பஞ்சமிநில மீட்புக்காகவே துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்தனர். இந்தக் கோரிக்கைக்கு தலித் மக்கள் மட்டும்தான் போராடவேண்டு என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. மார்க்சிய இயக்கங்கள், திராவிட அமைப்புகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் போராட வேண்டும்.
உங்கள் கதைகள், குறுநாவல்கள் திரைப்படங்களாகக் குறும்படங்களாக எத்தனை வந்துள்ளன? திரைப்படத் துறையில் இப்போது எலக்சன், தங்கலான் ஆகிய இரு படங்களில் வசனங்கள் எழுதியிருக்கிறீர்கள். அந்த அனுபவங்களைப்பற்றி சொல்லுங்கள்.
இயக்குநர் பாலுமகேந்திரா, தங்கர்பச்சான், அறிவுமதி, நா.முத்துக்குமார், யுகபாரதி, பாஸ்கர் சக்தி உள்ளிட்ட பலருடன் எனக்கு நட்பு உண்டு. ஆனால் நான் குறும்படங்கள் வாயிலாகத்தான் திரைப்படத்துறைக்குள் நுழைந்தேன். என் குறடு சிறுகதை நடந்த கதை என்ற தலைப்பில் வந்து மிகவும் வரவேற்பு பெற்றது. பின்னர் அரிகரசுதன் இயக்கத்தில் கண்காணிக்கும் மரணம் என்ற குறும்படம் வெளியானது. அது என்னுடைய கதையிலும், திரைக்கதையிலும் வெளியான குறும்படம். அம்ஷன்குமார் எடுத்த மனுசங்கடா படத்தில் திரைக்கதையை எழுதுவதில் பங்காற்றினேன். அதுமட்டுமின்றி, லீனா மணிமேகலை, தம்பி சோழன், தானுகுமார் உள்ளிட்ட பலருக்கும் திரைக்கதையை எழுதியிருக்கிறேன். அவற்றில் பெரும்பாலானவை இன்னும் எழுத்து வடிவத்திலேயே உள்ளன!
பெருமாள் முருகன் சொல்லி என்னிடம் வந்த இயக்குநர் தமிழ் எலக்சன் என்ற படத்துக்கு வசனம் எழுதச் சொல்லிக் கேட்டார். வசனங்கள் வட்டாரத் தன்மையுடன் இயல்பாக இருந்தால் போதும் என்றார் இயக்குநர் தமிழ். அப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் சுற்றுவட்டாரத்தில் நடந்தது. பல உள்ளுர்த் தம்பிகளை நான் இதில் இணைத்தேன். ஒரு படம் எப்படி உருவாகிறது என்று இந்தப்பட உருவாக்கத்தில் நேரடியாக என்னால் அறிய முடிந்தது. அந்த வகையில், எனக்கு எலக்சன் வெற்றிகரமான திரைப்பட நுழைவு என்று சொல்ல முடியும். தங்கலான் படம் இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களின் பீரியட் பிலிம். அதற்கு நான் வசனம் எழுத வேண்டும் என்று பா. ரஞ்சித் விரும்பினார். தங்கலான் திரைப்படம் கருத்தியல் ரீதியாகவும் முக்கியமான அம்சங்களைக் கொண்டிருக்கும்.
நீங்கள் ஓர் ஆசிரியர். கல்வித்துறையில் உங்களுக்கு நிறைய அனுபவங்கள் இருக்கும். அவற்றை இன்னும் நீங்கள் இன்னும் எழுதவில்லைதானே?
ஆமாம், தோழர்! ஆனால், அந்த அனுபவங்களைப் புனைவாக மாற்ற நான் விரும்பவில்லை. எட்டாம் வகுப்பு அ’ பிரிவில் ஒரு தமிழ் ஆசிரியர், ஓர் இலையின் வயது, தொலைவு போன்ற சில சிறுகதைகளில் அவற்றை நான் எழுதியதுண்டு. ஆனால் என் கல்வித்துறை அனுபவங்களை கட்டுரைகளாகவே எழுதிட விருப்பம். ஆசிரியர்-மாணவர், ஆசிரியர்-நிர்வாகம், அதிகாரிகள்-அரசு, ஆசிரியர்-பெற்றோர்-சமூகம், கல்வித் திட்டம் என்று எழுதுவதற்கு நிறைய உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் இடையே நிலவும் முரண்களையும், இயங்கியல் அனுபவங்களையும் நிறைய தெரிந்து வைத்திருக்கிறேன். சாதிகளை ஒழிக்க, சமத்துவ மனோபாவத்தை, அறிவியல் மனப்பான்மையை, மதச்சார்பற்ற தன்மையை வளர்க்க இந்தியாவில் ஒரு சிறந்த கல்வித் திட்டமும், அதை முழுமையாக ஏற்று நடத்துகிற ஆசிரியர் இயக்கமுமே தேவைப்படுகின்றன.
