புவனா சந்திரசேகரன்
ஆசிரியரின் முன்னுரையைப் பார்த்தேன். எழுத்துலகத்தில் பிரபலமாக மக்கள் மனதில் நின்ற எழுத்தாளரான திரு. கு. அழகிரிசாமி கூற விட்டதை இவர் எடுத்துக் கையாண்டு இருப்பதாக, கி.ரா.வே.பாராட்டியதால்தான் இவருக்கு இந்த நாவலை எழுதும் உத்வேகம் கிடைத்ததாகக் கூறுகிறார்.
மின்னுவதெல்லாம் என்கிற தலைப்பும், முரண்நகை கதையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதையும் இணைத்து வைத்துப் பார்த்ததால், இந்த நாவலின் கரு என்னவென்று புரிந்துவிட்டது. நகை செய்யும் கலைஞர்களின் வாழ்க்கை பற்றி என்கிற புரிதலுடன் வாசிக்க ஆரம்பித்தேன்.

கல்யாண மண்டபத்தில் காவலாளியாகப் பணிபுரியும் ரத்தினம் ஆசாரி, தன்னுடைய பால்ய நினைவுகளின் உலகத்தில் சஞ்சரிக்கும் போது நம்மையும் அந்த உலகத்துக்குள் இழுத்துப் போட்டு விடுகிறார். தன்னுடைய தாய்மாமனிடம் நகை செய்யும் தொழிலைக் கற்றுக்கொள்ளும் தொழில் பழகுனனாக வாழ்ந்த நாட்கள் அவருடைய நினைவில் குதியாட்டம் போடுகின்றன. “தாய்மாமாவிடம் தொழில் பழகுறது அம்மாவிடம் தாய்ப்பால், அப்பாவிடம் அறிவுப்பால் குடிப்பதுபோல அன்பும், கண்டிப்பும் இருக்கும் என்று ஆசிரியர் சொல்லும்போது அவருடைய எழுத்து வன்மை மனதில் நச்சென்று பதிகிறது.
சொல்லவரும் கருத்தை வாசகர்களின் மனதில் அழகாகச் சேர்த்துவிடுகிறது. நகை செய்வதைக் கற்றுக்கொள்ளும் ஆரம்பகாலப் பயிற்சியில்தான் எவ்வளவு தகவல்கள் பொதிந்துள்ளன. சின்னச் சின்னத் தகவலைக்கூட வாசகர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் அழகாக விளக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக, தணலை ஊதுகுழலால் ஊதுவதில்கூட எவ்வளவு நுணுக்கங்கள் இருக்கின்றன! ஆச்சரியம் தரும் தகவல்கள்! தவறு செய்யும் ரத்தினத்திற்கு விழும் அடியின் வலியை நம்மாலும் உணரமுடிகிறது. நகை செய்யும் ஆசாரி எப்போதும் தங்கத்தில் கலப்பு செய்து மக்களைக் காலங்காலமாக ஏமாற்றி வருகிறான் என்று பரவலாக மக்களால் நம்பப்படுகிறது. அதற்காகவே உருவாக்கப்பட்ட சொலவடையும் மக்கள் மத்தியில் சுற்றி வருவதும் நாம் அறிந்ததே!
தட்டான் தன் மகளுக்குத் தாலி செய்தால் கூடக் கலப்படம் செய்யத் தவறமாட்டான் என்று எளிதாக ஏளனம் செய்துவிட்டு நகர்கிறோம். ஆனால் நகை செய்கிற அந்த ஆசாரிகள், தங்களுடைய தினசரி வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை உணரத் தவறுகிறோம். இருபத்து நான்கு கேரட் தங்கம்தான் தூய்மையான தங்கம். ஆனால் அது மிகவும் மிருதுவானது. அதை வைத்து நகை செய்வதற்கு அந்தத் தங்கத்தில் செம்பு கலந்து கடினப்படுத்த வேண்டியது அவசியம் என்பதை அழகாக ராஜகோபால் ஆசாரியின் சொற்களின் மூலம் நமக்குப் புரியும்படியாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
அடுத்ததாக நகை செய்யும் கலைஞர்கள் நகரத்தில் வாழ்வதற்கும் கிராமங்களில் வாழ்வதற்கும் நடுவில் என்ன வித்தியாசம்? எந்த வாழ்க்கை அவர்களுக்கு உகந்தது? நம்பிக்கை, செயல்படும் சுதந்திரம், வாடிக்கையாளர்கள் தரும் மதிப்பு, மரியாதை இவற்றை வைத்து ஒப்பீடு செய்திருந்த விதம் அழகு. சரி, கதையின் போக்கு என்னவென்று சுருக்கமாகப் பார்க்கலாம். ரத்தினம் ஆசாரியின் கடந்த கால நினைவுகளோடு கதை தொடங்குகிறது. ராஜகோபால் ஆசாரியின் வாழ்க்கையைப் பற்றி நாமும் தெரிந்துகொள்கிறோம். அதிக வருமானம் வரும் என்கிற அனுமானத்துடன் கரூர் நகரத்துக்குக் குடியேறும் ராஜகோபால் ஆசாரிக்கு அவர் திறமைக்குத் தகுந்த வேலைகள் முதலில் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. ஆனால், அரசாங்கத்துடைய சில திட்டங்கள் அவருக்கு ஏற்பாக இல்லை. முதலில் குலக்கல்வித் திட்டம். அடுத்ததாக வந்த தங்கக் கட்டுப்பாடு போன்றவைதான் அவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உண்டுபண்ணுகின்றன.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மக்களின் இயல்பான வாழ்க்கையை எப்படிப் பாதித்தது என்பதையும், தமிழ்நாட்டில் பஞ்சம் வந்தபோது பாமர மக்களின் திண்டாட்டங்கள் பற்றியும் தெரிந்துகொண்டபோது மனம் வருந்தியது. முழுக்க முழுக்க ராஜகோபால் ஆசாரி, ரத்தினம் ஆசாரி போன்ற நகைக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றிய நாவல்தான் இது என்றாலும், ரத்தினம் ஆசாரியின் நினைவுகளின் மூலமாக நாமும் தெரிந்துகொள்கிறோம். முக்கியமாக தங்கக் கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்படும்போது ராஜகோபால் ஆசாரியுடைய தொழில் நலிவடைகிறது. சிலசமயங்களில் திடீரென அரசு அதிகாரிகள், பொற்கொல்லர்களின் வீடுகளில் மற்றும் பட்டறைகளில் சோதனை செய்ய வருகை தரும்போது நடக்கும் களேபரங்கள் விளக்கப்பட்டுள்ளன. தனது வாடிக்கையாளர்கள் தந்த தங்கத்தை ஒளித்து வைக்க அவர்கள் என்னவெல்லாம் தகிடுதத்தம் செய்யவேண்டி இருக்கிறது! பயந்து பயந்து செய்யும் தொழிலில் சுதந்திரம் போய் வருமானமும் குறைந்து போவதால் தினசரி வாழ்க்கையே தள்ளாடுகிறது. ஆனாலும் உறுதியாகக் குழந்தைகளைத் தன் தொழிலில் வரவிடாமல் படிக்க வைக்கிறார்.
அவருடைய மனைவியும் செலவைச் சமாளிக்க, ஜின்னிங் மில்லில் வேலைக்குப் போகிறார். அதுவும் நின்று போக, ஆடுகளை வாங்கி வளர்க்கிறார்கள். ஆடுகளும் மின்னல் தாக்கி இறந்துபோவதால் வாழ்க்கையின் இன்னல்கள் தொடர்கின்றன. வயிற்றுக் கோளாறால் இறந்தும் போகிறார் ராஜகோபால். மனைவியையும், மகனையும் நட்டாற்றில் விட்டு விட்டு வீட்டின் தலைவர் இறந்துபோனாலும் மூத்த மகனான ரவி, படிப்பைத் தொடர்கிறான். இளைய மகன் ஏற்கெனவே சிறுவயதில் அம்மை வார்த்து இறந்து போயிருந்தான்.
“காலண்டர் மாட்டறதுக்குச் சுவத்தில் ஆணியடிக்கக்கூடச் சுத்தியலைக் கையில் எடுக்கக் கூடாது” என்று சொல்லிச் சொல்லித் தன் மகனைக் கல்வி கற்க வலியுறுத்திய தந்தையின் வார்த்தையைக் காப்பாற்றுவதற்காக அத்தனை கஷ்டத்திலும் படிப்பைத் தொடர்கிறான் ரவி. எங்கிருந்தோ விடிவெள்ளியாக வருகிறது தூரத்து உறவினரான பங்காரு மாமாவின் உதவி. ஒருவழியாகப் படிப்பை முடித்து வேலையிலும் அமர்ந்து, பங்காரு மாமாவின் மகளையே மணந்து வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான் ரவி.
தன் மாமாவைப்போலப் படிக்க வைக்காமல் குலத்தொழிலையே பிள்ளைகளுக்குக் கற்றுத் தந்ததை எண்ணி நொந்து போகிறார் ரத்தினம் ஆசாரி. தனது பொருளாதார நிலைமையே சரியில்லாத நிலையில் மாமாவின் குடும்பத்திற்கு எதுவும் உதவி செய்ய முடியவில்லையே என்றும் வருந்துகிறார் ரத்தினம். ரத்தினத்தின் மகன்கள் இரண்டு பேரும் வங்கியில் தங்கத்தின் தரத்தை அறிந்து கூறும் வேலை பார்க்கிறார்கள். அவர்களுடைய வாய்மொழி மூலமாக வாசகர்களுக்கும் சில முக்கியமான தகவல்கள் பகிரப்படுகின்றன. பெரிய பெரிய பிரபலமான நகைக்கடைகளில் ஷோகேஸ்களில் அலங்கரிக்கப்பட்டு மக்களின் சிந்தையைக் கொள்ளையடிக்கும் நகைகள் எல்லாம் உண்மையில் எப்படிப்பட்ட நகைகள் என்கிற விழிப்புணர்வை நம் மனங்களில் விதைப்பதில் வெற்றி பெறுகிறார் ஆசிரியர்.
நகை செய்யும் ஆசாரிகளின் வாழ்க்கைப் பிரச்சினைகளை இரண்டு ஆசாரிகள் அதாவது ரத்தினம் மற்றும் இராஜகோபால் ஆசாரி இருவரைப் பற்றிய தகவல்களால் நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நகைத் தொழில் செய்தவர்கள் காலத்தின் கொடுமையால் வசதியான வாழ்க்கையை இழந்து அடிமட்டத்திற்குத் தள்ளப்படும் அவலம் இந்த நாவலின் ஊடே சிறப்பாகப் பின்னப்பட்டுள்ளது. ரத்தினம் ஆசாரி, கல்யாண மண்டபத்தின் காவலாளியாக அறிமுகமாகும்போதே இந்த உண்மை, முகத்தில் அறைந்தாற்போல நச்சென்று நம் மனங்களில் பதிந்து விடுகிறது. இறுதியில் நம்பிக்கையின் துளி மின்னுவதோடு கதையை முடித்திருக்கிறார் ஆசிரியர்.
இதைக் கதை என்பதைவிட, ரத்தினம் ஆசாரியின் சுயசரிதையாகவே நாம் கருதலாம். இந்த நாவலை வாசிக்கும்போது ஆங்காங்கே என்னைக் கவர்ந்த சில விளக்கங்களையும், நிகழ்வுகளையும் பட்டியலிட விரும்புகிறேன். முதலில் கம்மாளர் என்ற பெயரை எனக்கு அறிமுகப்படுத்தியது இந்த நூல். இதைச் சில இடங்களில் பிரயோகம் செய்த விதம், எனக்கு இதனை நன்றாக நினைவில் சேகரித்துக்கொள்ள உதவியது. முதலில் ஒரு சொலவடை.
“கார்த்திகை மாதம் கம்மாளச்சி மஞ்சத் தேச்சுக் குளிச்சாளாம்” என்கிற சொலவடை.நகை செய்யும் கலைஞர்கள் பொருளாதார ரீதியில் மேம்பட்டு நின்ற காலத்தின் நினைவுகளைச் சிறப்பாக எடுத்துக் காட்டியது. அடுத்ததாகத் தங்கக் கட்டுப்பாடு சட்டம் வந்த சமயத்தில், “கம்மாளர் கையில் இனி நகைத்தொழில் இல்லை” என்று இராஜகோபால் மாமா சொன்னதை இரத்தினம் நினைவுகூரும் இடம். அதற்கேற்ப நகைத்தொழில் கலைஞர்களின் வாழ்க்கை நசிந்துதான் போகிறது. அடுத்ததாக இரத்தினத்தின் மனைவி அன்னகாமு ஓர் உணவகத்தில் வேலை செய்யும் சமயம், தன்னுடன் வேலை பார்க்கும் இளம்பெண்ணுக்கு நிகழும் அநீதியைத் தட்டிக் கேட்கும் சம்பவம் மனதைத் தொட்டது. வறுமையில் வாடினாலும், நற்பண்புகளைக் கைவிடாத அன்னகாமுவின் செயல் மனதை நெகிழ வைத்தது. வங்கிக் கடன் மற்றும் தனியார் நிறுவனம் கொடுக்கும் கடன் பற்றிய ஒப்பீடு, நல்ல விழிப்புணர்வைத் தருகிறது. அதிகப்பணம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், தனியார் நிறுவனத்தில் நகையை அடகு வைத்துவிட்டு அவர்களுடைய மறைமுகமான விதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு, நகையையே இழக்கும் ஏழைகள் ஏராளம்.
அதேபோல தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்கும் நடிகையே ஏமாற்றப்படுவது தனியார் நிறுவனங்களின் உண்மையைப் புடம் போட்டுக் காட்டியது. நகைச்சுவை என்று சொல்லப்பட்டிருந்தாலும், நகைச்சுவைக்குப் பின்னே பொதிந்திருந்த கசப்பான உண்மை சுடுகிறது. தெலுங்கர்கள் தமிழகத்தில் குடியேறிய வரலாறு சுவாரஸ்யமாகக் கதையினூடே தரப்பட்டுள்ளது. இராஜேந்திர சோழன், பத்தாம் நூற்றாண்டில் கிழக்குக் கடற்கரை வழியாக ஆந்திராவின் ஊடே இமயம் வரை சென்றபோது ஆந்திர வீரர்கள் ஆயிரக்கணக்கில் அவனுடைய படையில் சேர்ந்து கொண்டார்கள். பின்னர் கடாரம், சுமத்திரா தீவுப்பகுதிகளுக்கு இராஜேந்திர சோழன் படையெடுத்துச் சென்றபோது இவர்களையே கடற்படை வீரர்களாகவும் அழைத்துச் சென்றிருக்கிறான்.
இன்றும் இந்தோனேஷியா, அங்கோர்வாட், கம்போடியா, இலங்கைப் பகுதிகளில் வசிக்கும் தெலுங்கர்களின் முன்னோர்களான இவர்களே இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களைக் கொண்டுசென்றதால் அந்தக் காவியங்கள் அங்கே இன்றும் கர்ணபரம்பரைக் கதைகளாக உலவுவதாகக் கூறுகிறார் ஆசிரியர் மற்றும் கம்ஸலவார், ஓஜலவார் என்று அழைக்கப்படும் ஆசாரிமார்கள், தச்சு, கொல்லு, தட்டார் கன்னார் என்னும் பாத்திர வேலை செய்பவர்கள், சிற்பிகள், நாயக்கர், மாதிவார் என்ற சக்கிலியர், போயர், ஒட்டர், தொம்பர், வண்ணார், நாவிதர், குயவர், பத்மசாலியர், கோமுட்டிச் செட்டியார், தேவாங்கர், வொக்காலிகர், கன்னட பிராமணர், தெலுங்கு பிராமணர், பலிஜ, கம்ம, கவரா நாயுடு, ரெட்டியார்கள் ஆகியோர் எப்படி தமிழகத்தில் குடிபுகுந்து தங்களுடைய உணவும், உணர்வும், தொழிலும், கலையும், இலக்கியமும் தமிழகத்தில் இருந்த அம்சங்களோடு ஒத்துப்போனதால் தமிழர்களோடு எப்படி ஒன்றாகக் கலந்து போனார்கள் என்பதையும் ஆசிரியர் கூறிய விதம், இவருடைய ஆழ்ந்த அறிவையும், ஆராய்ச்சியையும் தெளிவாகக் காட்டுகிறது. தெலுங்கர்களைப் பற்றிப் பேசும்போது கரிசல் இலக்கியப் பிதாமகரான கி.ரா.வைப் பற்றி இவர் தரும் குறிப்பு சுவாரஸ்யமானது. தனது கோபல்ல கிராமம் நாவலில் கி.ரா. அவர்கள் பயன்படுத்திய தெலுங்குச் சொற்கள் மிகவும் தூய சொற்கள் என்று தெலுங்கர்களே வியப்பதாகக் கூறுகிறார். அவர்களே மறந்துபோன பழஞ்சொற்களை
கி.ரா.அவர்கள் பயன்படுத்தியதைப் பாராட்டிய தெலுங்கர்கள், தாங்கள் இன்று பேசுவது நமது சென்னைத் தமிழ்போலக் கலப்படமானது என்றும் மலைத்துப் போய் நிற்பதாக இவர் கூறியுள்ளார்.
யதார்த்தமான நடையில், ஏராளமான தகவல்களுடன், நகைத்தொழில் நசிந்து போன வரலாற்றைப் படித்து முடித்தபின் மனம் கனத்துப் போகிறது. என் மனதில் பெருமளவில் தாக்கம் ஏற்படுத்திய இந்த நாவலை எழுதிய ஆசிரியர் திரு. ஜனநேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இதுபோன்ற நிறைய யதார்த்தமான புதினங்கள் படைத்து ஆசிரியர் நீண்ட நாட்கள் இலக்கியப் பணியாற்ற வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் ஆசிரியரை வாழ்த்துகிறேன்.