ஸ்ரீதர் மணியன்
மரிச்ஜாப்பியின் உண்மையான சித்திரம் இன்று வங்காள மக்களுக்குத் தெரியவில்லை. இடதுசாரிகளுக்கு எதிரான சக்திகள் மக்களைத் தவறாக வழிநடத்தி, தவறான கருத்துகளை உருவாக்கி வருகின்றனர். மரிச்ஜாப்பி பற்றி எதுவும் தெரியாத புதிய தலைமுறையினரிடம் இடதுசாரிகளை மனிதாபிமானவற்றவர்களாக, அகதிகளுக்கு எதிரானவர்களாகக் காட்ட முயல்கின்றனர். ஓர் இடதுசாரியாக இதுபோன்ற பொய்கள் கட்டமைக்கப்படுவதைக் கேள்விக்குட்படுத்தி, உண்மையையும், யதார்த்தத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு வந்துவிட்டது. அந்தப் பொறுப்பின் விளைவே இந்நூல்… (முன்னுரையில்
ஹரிலால் நாத்).
கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா நதிகள் வங்காளக் கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் அமைந்திருக்கும் உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடுகளைக் கொண்ட சுந்தரவனத்தில் உள்ள சிறிய தீவு மரிச்ஜாப்பி. இது தொடர்பான வரலாறு நெடியது. இந்திய விடுதலையில் இருந்து துவங்கப் பெற்றது. சிக்கலான, பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னர் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த மக்கள் அனைவருமே அகதிகளாக்கப்பட்டனர். இன்றைய பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகள் ஹரியானா, தில்லி ஆகிய பகுதிகளில் தஞ்சமடைந்தனர். இவர்களுக்கு முழுமையான மறுவாழ்வுத் திட்டங்களை அமல்படுத்திய காங்கிரஸ் அரசு, கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த மக்களை கைவிட்டது. இதனை மரிச்ஜாப்பியின் தொடக்கப் புள்ளியாகக் கொள்ளலாம்.
வங்க இந்து சாதி அமைப்பில் கீழான நிலையில் வைக்கப்பட்டிருந்த நாமசூத்திரர்கள் எனும் பிரிவினர் வகுப்புவாதக் கலவரங்களுக்கு இலக்காயினர். இதன் விளைவாக இந்தியாவிற்குள் அவர்கள் குடியேறத் தொடங்கினர். 1950களில் கடவுச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. 1962களில் மேற்கு வங்கத்தில் குடியேறும் நோக்கத்துடன் வந்தோரை அன்றைய ஆட்சிப் பொறுப்பிலிருந்த மாநில காங்கிரஸ் அரசு இதனை ஏற்க மறுத்தது. அவர்களை வெளியேற்ற வேண்டுமென மத்திய காங்கிரஸ் அரசிடம் முறையிட்டது. இவர்களுக்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், 1964க்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பல போராட்டங்களை முன்னெடுத்ததை நூலாசிரியர் விரிவாகக் கூறுகிறார்.

காங்கிரஸ் அரசு இந்த அகதிகளை ஒரிசா, சத்தீஸ்கர், ஆந்திராவின் சில பகுதிகளை உள்ளடக்கிய தண்டகாரண்யத்தில் வலுக்கட்டாயமாகக் குடியேற்றியது. இது மிக வறண்ட பகுதியாகும். இதனை அறிந்த கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைமையில் செயல்பட்ட யூ.சி.ஆர்.சி.யின் செயல்பாடுகளையும் மிகத் தெளிவாக விளக்குகிறார் ஹரிலால் நாத். பல முறை தண்டகாரண்யத்திலிருந்து மே.வங்கத்திற்கு குடியேற முயற்சித்து, காங்கிரஸ் அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளான அகதிகள், தங்களது உண்மைத் தோழர்களான இடதுசாரிகள் ஆட்சி அமைத்ததும் அவர்களது நம்பிக்கை வலுப்பெற்றதும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. அரசும் இவர்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம் போன்ற கட்டமைப்புகளை உண்டாக்கிக் கொடுத்தது. ஆனால், உபாஸ்து உன்னயன்சீல் சமிதியின் தலைவர்களது நோக்கம் மரிச்ஜாப்பியில் குடியேறுவதே என்பதும், அவர்கள் தங்களுக்கு எந்த அரசியல் கட்சிகளுடனும் தொடர்பில்லை என அறிவித்துக் கொண்டாலும், காங்கிரஸ், ஜனதா மற்றும் பங்க் நாகரிகச்சங்கம் போன்றவற்றுடன் தொடர்பில் இருந்ததை தெளிவாக இந்நூல் விளக்குகிறது.
மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசு பொறுப்பேற்ற பின்னர் தண்டகாரண்யத்திலிருந்து வந்த அகதிகளை எவ்வாறு கையாண்டு, அவர்களது தலைவர்களுடன் மட்டுமல்லாது, அவர்கள் அனைவருடனுமே பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக இருந்ததும் தெளிவாக விளக்கப்படுகிறது. பிரச்சினையின் ஆணிவேரைப் புரிந்துகொள்ளாது இடதுசாரி அரசின் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி பொறுப்பாக்கும் நிலையையும் இப்புத்தகம் விளக்குகிறது. இணை அரசாங்கம், அகதிகளின் ஆதரவுப் பின்னணி போன்ற தலைப்புகள் கொண்ட பகுதிகள் குறிப்பிடத்தக்கவையாகின்றன. மக்களின் அறியாமை, பொருளாதாரத் தேவைகள், வியாபாரிகளின் பேராசை என இப்பகுதி நீள்கிறது. சமிதியின் தலைவர்கள் இவர்களை எவ்வாறு பயன்படுத்தி வந்தனர், அவர்களது அணுகுமுறை அகதிகளிடம் எத்தகையதாக இருந்தது? என்பது குறித்தும் ஹரிலால் கூறுகிறார். மரம் வெட்டுதல், அரசு நிலங்களை விற்றல் போன்ற செயல்கள் வெற்றிகரமாக நடந்து வந்தன என்பது குறித்தும், சுந்தரவனத்தின் இயற்கை சமநிலை பாதிக்கப்படும் அளவிற்கு இது மோசமானதாக மாறியது குறித்தும் நூலாசிரியர் கூறுகிறார். ஒரே சமயத்தில் நூறிலிருந்து இருநூறு படகுகள் வரை மரக்கடத்தலில் ஈடுபடும் எனவும் ஹரிலால் குறிப்பிடுகிறார்.
இது குறித்து அமியசாமந்தின் கருத்தினை ஹரிலால் பதிவிடுகிறார். “ஒரு முப்பதாயிரம் பேரால் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தினை நிறுத்தமுடிகிறது, அரசு நிலங்களை தாங்களே விநியோகித்துக்கொள்ள முடியும்போது, நில உரிமையாளர்களாக வெளிநாட்டுக் குடிமக்கள் இருக்கும்போது, நாட்டின் சட்டங்களைப் புறக்கணித்து அவர்களுடனே பரிவர்த்தனை, தொழில் வணிகம் செய்யும்போது அதனை இணை அரசாங்கம் என்று அழைப்பதில் தவறென்ன?
அகதிகளுக்கான ஆதரவின் பின்னணி என்ற பகுதியும் குறிப்பாக வாசிக்கத்தக்கது. இப்பகுதி காங்கிரஸ் அரசின் தந்திரங்கள் குறித்து விரிவாக அலசுகிறது. ஏறக்குறைய மறக்கப்பட்டுவிட்ட மரிச்ஜாப்பி எதற்காக 1990களில் தோண்டியெடுக்கப்பட்டது என ஹரிலால் விளக்குகிறார். கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகளை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்பட்டது. இது ஓர் ஆழமான திட்டத்தின் பகுதியாக செயலாக்கப்பட்டது. இடது முன்னணி அரசை அகற்றுவதற்காக மிக இரகசியமாகத் திட்டமிடப்பட்டு, தெளிவாகக் கட்டமைக்கப்பட்ட சூழ்ச்சியின் ஒரு பகுதியே மரிச்ஜாப்பி என ஹரிலால் குறிப்பிடுகிறார். திரிணாமூல் காங்கிரஸ் எவ்வாறு, எந்த சூழலில் துவக்கம் கண்டது என்பதும் நூலில் விவரிக்கப்படுகிறது. அன்றைய எதிர்க்கட்சிகளும், அவற்றிற்கு ஆதரவான ஊடகங்களான ஆனந்தபஜார், யுகாந்தர் போன்ற நாளிதழ்களின் பொய்ப் பிரச்சாரங்களும், ஆர்.எஸ்.எஸ்., செல்வாக்கு பெற்ற நிகில்பங்க நாகரிகச் சங்கம், ஆனந்தமார்க் தலைமையிலான அம்ரா பங்காளியுடன், பல அறிவுஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் இதற்குத் துணை போயினர் என்பது குறித்தும் நூல் பேசுகிறது. இருப்பினும். இடதுசாரிகள் நடத்திய எண்ணற்ற பேரணிகளாலும், மாபெரும் பொதுக்கூட்டங்களாலும், மக்களின் ஆதரவு அவர்களுக்கு இல்லாததாலும் மேற்கூறப்பட்ட எதிர்க்கட்சிகள் தொடர் தோல்விகளையே அடைந்தன. மேலும், வியப்பூட்டும் விதமாக மரிச்சாப்பியிலிருந்த 1,50,000க்கும் மேற்பட்டோர் தங்களது இருப்பிடமான தண்டகாரண்யத்திற்கு திரும்பிச் சென்றனர். 10,000லிருந்து 12,000 அகதிகளே மரிச்சாப்பியில் எஞ்சியிருந்தும் மேற்பத்தியில் குறிப்பிடப்பட்ட எதிர்க்கட்சியினர் தாங்களே அவர்களைப் பாதுகாப்பதான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திரும்பிச் சென்ற 1,50,0000 பேர் குறித்தும், அவர்களுக்கான மீள்வாழ்க்கை குறித்தும் கவலையேதுமின்றி தங்களது எதிர்ப்பினை தொடர்ந்தனர்.
இவ்வாறு திரும்பிச் சென்றோர் அவர்களுக்கு தேவையற்றவர்களாகவும், தொடர்பற்றவர்களாகவும் மாறிப் போயினர். எஞ்சியிருந்த சொற்பமானோர் அவர்களது அரசியல் கணக்குகளுக்கு பயனுள்ளவர்களாக அமைந்தனர். இவ்வாறாக, எதிர்க்கட்சிகளின் இவர்கள் மீதான அனுதாபம் மரிச் ஜாப்பிலேயே மையம் கொண்டிருந்தது. இத்துடன் ஆர்எஸ்பியின் அணுகுமுறையினையும் ஹரிலால் சுட்டிக்காட்டுகிறார் ஆர்எஸ்பிக்கு நெருக்கமான சில தொழிலதிபர்கள் அகதிகளுடனான சட்டவிரோத வர்த்தகத்திற்கு மறைமுக உடந்தையாக இருந்ததனையும் அவர் விளக்குகிறார். இதே தருணத்தில் ஆளும் இடதுசாரி அரசின் தெளிவான நிலைப்பாடு, நடைமுறையில் அரசு சந்தித்த சவால்கள், நிதிச்சுமை என அனைத்துக் கூறுகளையும் ஹரிலால் தனது நூலில் விளக்கியுள்ளார். தார்மீகக் கோட்பாட்டின் அடிப்படையிலும், சட்டங்களின்படியும் மத்திய அரசு எதிர்கொண்டு, கையாள வேண்டிய அகதிகள் பிரச்சினையினை எவ்வாறு ஒரு மாநில அரசின் பொறுப்பாக்கி, மலிவான அரசியலாக்கினர் என்பது நூலினை வாசிக்கும் அனைவருக்கும் புரியும் விதமாக ஹரிலால் நாத் இப்புத்தகத்தை அளித்துள்ளார். ஹரிலால் நாத் மரிச்ஜாப்பி தொடர்பான நிகழ்வுகளை அது துவங்கிய நாளிலிருந்து, அதாவது 1947ஆம் ஆண்டு முதல் 1979 மே மாதம் 17ஆம் தேதி வரையிலான அட்டவணையையும் நூலில் வாசகனுக்கு அளித்துள்ளார்.
அவ்வாறே இருபது தலைப்புகளில் நூலின் தரவுகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளார். இதுவே நூலின் ஆக்கத்திற்கான அவரது அர்ப்பணிப்பினை, ஈடுபாட்டினை நமக்கு உணர்த்துகிறது. இந்நூலின் உண்மைத் தன்மையினைத் தீர்மானிக்கும் பொறுப்பினையும் அவர் வாசகனுக்கு அளிப்பதாகவும் குறிப்பிடுகிறார். நூல் பல்வேறு தரவுகளுடன் 328 பக்கங்களுக்கு நீண்டுள்ளதே இதற்குத் தக்கதொரு சான்றாகிறது. தோழர். ஜோதிபாசு மற்றும் இடதுசாரி அரசின் மீது அபாண்டமாக, திட்டமிட்டுப் பழி சுமத்தப்பட்ட சூழலில், அதனைத் துடைத்தெறிந்து குற்றச்சாட்டுகளைக் களைந்து, உண்மையினை உணர்த்திட வேண்டுமென்ற உந்துதலால் ஹரிலால் நாத் இப்புத்தகத்தினை உருவாக்கியுள்ளார்.
குடும்பச் சூழல் காரணமாக இடதுசாரி அரசியல் வட்டத்துக்குள் வளர்ந்தவர் ஹரிலால். ஊடகத்துறையில் தனது பணியினைத் தொடங்கிய பின்னரே மரிச்ஜாப்பி குறித்த தனது தேடலைத் தொடங்குகிறார். தனது அயராத முயற்சியினால், அர்ப்பணிப்பினால் பல்வேறு தரவுகளைக் கண்டடைந்து அதனைத் தொகுத்ததன் வெளிப்பாடே மரிச்ஜாப்பி.- உண்மையில் என்ன நடந்தது?’ என்ற நூல். பல்லாண்டுகள் கடந்து இது வெளிவந்தாலும் உண்மை எப்போதும் உரைக்கப்பெற்று நிலைபெறும் என்பதனை உணர்த்திடும் நூலாகிறது. இந்நூலின் தொனி மாறாது மொழிபெயர்த்திட்ட தோழர். சத்தீஸ்வரன், பதிப்பித்த பாரதி புத்தகாலயம் இப்பணியில் தங்களை இணைத்துக்கொண்டது சிறப்புடையது.
