ஜெயபால் இரத்தினம்
மனித மனம் வினோதமானது. ஒருபுறம் சமுதாயத்தின் பக்கம் நின்று அதன் வரையறைகளைப் பேணிக்காக்கத் துடிக்கும் காவலாக செயல்படும்; மற்றொரு புறம், தனிப்பட்ட தன் தேவைக்காகவோ அல்லது ஆழ்மனதின் தாக்கத்தினாலோ சமுதாய வரையறைகளை எளிதில் புறந்தள்ளத் தூண்டும் புரட்சியாளனாக செயல்படும். இந்த இரண்டு எதிரெதிர் நிலைகளின் போராட்டங்களது களமாகவே பலரது வாழ்க்கை நகர்கிறது. உணர்ச்சிக்குவியல்களாக வரைவு செய்யப்பட்ட ஐந்து குறுநாவல்களின் தொகுப்பாக, மரக்குரல் என்ற தலைப்பில் மலர்ந்திருக்கிறது இந்நூல். அகராதி என்னும் புனைபெயர் கொண்ட, கவிதா என்னும் இளம் கவிதாயினியின் படைப்புக்கள் இக் குறும்புதினங்கள். இது இவரது மூன்றாவது படைப்பு. ஏற்கெனவே, ஒரு கவிதைத் தொகுப்பும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். கவிதை, சிறுகதை என்று தனது படைப்புக்களுடன் பல்வேறு இலக்கிய இதழ்கள் வாயிலாக வாசகர்களுடன் தொடர்ந்து உறவாடிக் கொண்டிருப்பவர் இவர்.

தினசரி வாழ்வில் சிரத்தை கொள்ளத்தவறிய சுவாரசியங்களும் உறவுப் பாலங்களும் சிக்கலும் மனப்பரிதவிப்பும் பாத்திரங்களின் கோணங்களாக விரியும் கதைகள் எனவும், நிறைந்துகொள்ள விரும்பும் மனதின் நீட்சியை கோடுகளுக்குள் சிறைப்படுத்தாத நாவல்களின் தொகுப்பு எனவும், தனது படைப்புக்களைப் பற்றிய ஒரு பொதுவான அறிமுகத்தைப் பின் அட்டையிலும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள குறுநாவல்களது கதைச்சுருக்கத்தை ஒருவரிக் கதையாக நூலின் துவக்கமாக அமைந்துள்ள ‘என்னுரை’யிலும் அளித்துள்ளார் நூலாசிரியர். இத்தொகுப்பில், ‘நனவிலி’ ‘மரக்குரல்’ ‘தாழ்ப்பாள்’ ‘ஹெலன்’ மற்றும் ‘பன்னீர் ரோஜா’ என்னும் தலைப்புக்களில் மொத்தம் ஐந்து குறுநாவல்கள் இடம் பெற்றுள்ளன. முதல் கதையின் தலைப்பு. ‘நனவிலி’. முதலில் கண்ணில்படும், சட்டென்று புரிதலுக்கு உட்படாத அத்தலைப்பைப் புறந்தள்ளி கதைக்குள் புகுந்தால், அது பள்ளி/கல்லூரித் தோழிகளான திலோத்தமா, சாந்தினி ஆகிய சிநேகிதிகளைச் சுற்றிச் சுவையாகப் பின்னப்பட்ட ஒரு சாதாரணக் கதையாகத்தான் விரிகிறது. ஆனால், கதையின் தலைப்புக்கான பொருள் என்னவாக இருக்கும் என்ற உந்துதலில், அது பற்றி நாம் தேடத் துவங்கும்போது, எவ்வித நேரடி விளக்கமும் இன்றி, தலைப்பு என்ற பெயரில் நூலாசிரியர் நம் கண்ணில் ஓர் உளவியல் கண்ணாடியை மாட்டிவிட்டிருப்பது புரியும். இந்தக் கண்ணாடி, பல மாயாஜாலங்களை நிகழ்த்தி, கதையின் முழுப் பரிமாணத்தையும் வேறு கோணத்திற்கு மாற்றிவிடுகிறது. சிக்மண்ட் ஃப்ராய்டின், மனிதமன உளவியல் பகுப்புகளில் ஒன்று ‘நனவிலி மனம்’. இந்த நனவிலிமனம்தான் இங்கே சுருக்கமாக நனவிலி. மனிதனின் ஆழ்மனத்தில் தேங்கி நிற்கும் அவனது நிறைவேறாத ஆசைகள், உணர்வுகள் உள்ளிட்டவை அவ்வப்போது அவனின் அன்றாட வாழ்க்கையில், அவனையும் அறியாமல் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதுதான் நனவிலி மனதின் கருத்தாக்கம். இந்த உளவியல் கருத்தாக்கத்தின் அடிப்படையில் கதைகள் அவ்வப்போது வருவதுண்டு. அப்படி வந்ததில் நாமறிந்த எளிய அடையாளம், அந்நியன் ‘ரெமோ’. இக்கதையில் வரும் ‘நனவிலி’ ‘ராதாக்கா’. மனித உடலை அணுஅணுவாக ரசிக்கத் தூண்டும் நனவிலி. சாந்தினியின் நனவிலி மனம் ராதாக்காவாக உருவெடுத்து சாந்தினியின் மனப்போக்கில் மட்டுமல்லாது, திலோத்தமாவின் மனநிலைகளிலும் ஏற்படுத்தும் தாக்கங்களே காட்சிகளாக விரிகின்றன.
அடுத்து வருவது ‘மரக்குரல்; நூலின் தலைப்புக்கான கதை. ஒரு மரநாற்காலி சொல்லும் கதை இது. ஒரு வீட்டிலுள்ள தேக்குமரத்தாலான பழைய நாற்காலி ஒன்று, அவ்வீட்டில் உள்ளவர்களின் கதையைத் தன்போக்கில் வாசகர்களிடம் பேசிப் பகிர்ந்துகொள்கிறது. பேசுவது நாற்காலியாக இருப்பினும் அதுவும் உளவியல் பார்வையிலேயே பேசுகிறது. மூன்றாவது கதை ‘தாழ்ப்பாள்’. கல்யாணமான மூன்று குழந்தைகளுக்குத் தாயாகவும் அவர்களின் குழந்தைகளுக்கு பாட்டியாகவும் விளங்கும் பார்வதி, தனது கணவன் இறப்புக்குப்பின், இளமைக்காலத்தில் தன்னை விரும்பிய ஆனால் திருமணம் செய்துகொள்ள முடியாமல் போன மற்றும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வரும் ஏழுமலையுடன் சேர்ந்து வாழ்கிறாள். அவளின் குழந்தைகள் தாயின் முடிவை ஏற்றுக்கொண்டு இணக்கமாகச் செல்கின்றன. சட்டரீதியாகவே இணையும் அவர்கள் வேறு ஊருக்குக் குடிபெயர்ந்து அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில் இவர்களைப்பற்றி அறியாமல் இருந்த ஊர்க்காரர்கள் மத்தியில் இவர்களைப் பற்றிய தகவல் பரவும்போது, இவர்களது உறவு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக விமர்சனத்துக்கு உள்ளாகிறது. அதை இவர்கள் கண்டுகொள்ளாதபோது சில பெண்கள் நேரிலேயே, பார்வதியிடம் வந்து, தங்களுடைய ஆட்சேபனையைத் தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு அமைதியாக சமாதானம் கூறுகிறாள் பார்வதி. தங்களின் விமர்சனம் எளிதில் புறந்தள்ளப்படுவதை ஏற்காத பெண்களின் வாக்குவாதப் பேச்சு ஒருகட்டத்தில் அருவருப்பு உணர்வாகத் தகைந்து ‘ஓ இந்த வயசிலேயும் சுகம் தேடுது உடம்பு’ என்று காமம் தோய்ந்த அஸ்திரத்தை வீசுகிறாள் ஒரு பெண். நிலைகுலையாத பார்வதி ‘ஆமா, அதுக்காகவும்தான்’ என்று, ஓங்கியடித்தாள். வந்தவர்கள் கருத்த முகத்துடன் திரும்பினார்கள். அந்த ஓங்கியடிப்புதான், ஊராரின் பேச்சுக்களுக்கான தாழ்ப்பாள். நான்காவது கதை ‘ஹெலன்’ நூலாசிரியர் தனது என்னுரையில் ‘மனதில் கொண்ட ஹெலன் என்னும் தேவதைக்கான பக்கங்களை எழுதி மாளாது என்று தெளிந்த மெய்மையில் மிகச் சுருக்கி பகிர்ந்திருக்கிறேன்’ என்று ஹெலன் பாத்திரத்தின் கனத்தை முன்னோட்டமாகக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும், மிகச் சுருக்கத்தின் பரப்பு ஐம்பத்துநாலு பக்கங்கள், மொத்த நூற்பரப்பின் பெரும்பகுதி. ஹெலன், டெல்லியிலுள்ள புகழ்மிக்க மருத்துவக்கல்லூரி ஒன்றில் இதயம் சார்ந்த மருத்துவத்தில் முதுமுனைவர் பட்டம்பெற ஆய்வு மேற்கொண்டு வரும் மூத்த மருத்துவர் மற்றும் மாணவி. இதய மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். இதய மருத்துவத்தில் பெரும் சாதனைகள் புரியவேண்டும் என்ற வேட்கை உள்ளவர்.

தனது தோற்றம், ஆழமான துறை அறிவு மற்றும் நாகரிகமான செயல்பாடுகளால் கல்லூரி டீன் முதல் முதலாமாண்டு மாணவிகள்வரை அனைவராலும் விரும்பப்படும் தனித்துவமிக்க ஆளுமையாக, அனைவரையும் நேசிக்கும் ஒரு தேவதையாக வலம் வருகிறார் ஹெலன். மோனா அம்மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவி. இதய மருத்துவத்தில் சாதனை செய்யவேண்டும் என்ற ஆசை உள்ளவள். மோனாவின் ஆதர்ச நாயகி ஹெலன். ஆதர்சம் ஈர்ப்பாகி, ஹெலனையே சுற்றி வரச்செய்கிறது. இருவருமே தமிழர்கள் என்பது நெருக்கத்தைக் கூட்டுகிறது. என்னதான் தனித்துவம் மிக்க ஆளுமையாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே; அவர்களிலும் மனதளவில் காயம்பட்டவர்களும் இருக்கத்தானே செய்வார்கள். ஹெலன் விதி விலக்கல்ல. மோனாவின் தூண்டுதலால், தான் நம்பியவனால் காயப்படுத்தப்பட்டு தன்னுள் புதைத்துக்கொண்டிருக்கும் வலிகளின் வேதனையையைக் கொட்டித் தீர்க்கிறார், ஹெலன்.
ஹெலனுடன் தன்னுடைய வாழ்க்கையை இணைத்துக்கொள்ளவும், ஒரு பெண்குழந்தையை இருவரும் தத்தெடுத்துக்கொண்டு வளர்க்கவும், அதே நேரத்தில் இதய மருத்துவத்தில் பெரிய பெரிய ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் மோனா விரும்புகிறாள். இந்த முடிவை, அவளது சகோதரன் எதிர்க்கிறான்; ஆனால் தாய் ஏற்றுக்கொள்கிறாள். மனித மனம் மற்றும் உடல் சார்ந்த உளவியல் விவாதங்கள், விவரிப்புகள் என கதைநாயகியான மோனாவின் அளவுக்கே கதாசிரியரும் ஹெலனுடன் கரைந்து கிடக்கிறார். ஐந்தாவது கதை ‘பன்னீர்ரோஜா’. ரகு என்னும் அப்புவின், சிறு வயது தோழமை லக்ஷ்மி அக்கா, அவனின் மனதுக்கு நெருக்கமான அவளை சிறு வயதிலேயே அவன் பிரிந்துவிட நேர்கிறது. பலகாலம் கழித்து கண்டுபிடித்து பாசத்தைத் தொடர்கிறான். அவனது வாலிப வயது தோழமை ஸ்வாதி, வாழ்க்கைச் சுழலில் அடிபட்டு, வாடிய பன்னீர்ரோஜாவாக காட்சியளிக்கும் இந்த இரு பெண்களையும் ஒன்றிணைந்து வாழச்செய்கிறான் ரகு. மரபுசாராத ஆனால் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சில எதார்த்தங்களின் சித்தரிப்பு இக்கதை. உளவியல் அடிப்படையிலான, மனப்போராட்டங்களை கவித்துவமான வரிகளில் கதைகளாக்கி, அக்கதாபாத்திரங்களை நம்முன்னே உலவ விடுகிறார். நூலாசிரியர். பாராட்டத்தக்க படைப்பு. வாழ்த்துவோம்.