நாம் ஒன்றிணைய வேண்டிய அவசியம் முன் எப்போதையும்விட இப்போது அதிகரித்துள்ளது. வெறுப்பு நஞ்சு அரசியலின் உச்சத்திற்குப்போய் இஸ்லாமிய- சிறுபான்மை மக்கள் மீது விஷத்தைக் கக்கும் ஒரு பிரதமர் இதுவரை நம் இந்தியக் குடியரசின் வரலாற்றில் இருந்தது இல்லை. மதச்சார்பற்ற சோசலிச ஜனநாயகக் குடியரசான இந்தியா எனும் ஒன்றியத்தின் அரசியல் சட்ட அடிப்படைகளைக் குப்பையில் வீசும் கயமைத் தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்தியா முழுவதும் காந்தியடிகள் தமது விடுதலைப் போராட்டத்திற்காக நிதி உதவி கேட்டுப் பயணித்தபோது திருச்சியில் காஜாமியான் ராவுத்தரும், ஜமால் முகமது அவர்களும் பதிவிடாத (BLANK) செக் கொடுத்து எவ்வளவு வேண்டுமோ, எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறி நெகிழ வைத்தது வரலாறு.
வ.உ.சி., கப்பலோட்டிய தமிழர், ஆவதற்காகக் கப்பல் வாங்கிடப் பணமின்றித் தவித்தபோது ஓடோடி வந்து தன்னலம் பாராமல் உதவிய ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகமது ராவுத்தர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை இந்தியாவில் தக்க நேரத்தில் இரு மொழிகளில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்த முதல் கல்வி அமைச்சர் மெளலானா அப்துல்கலாம் ஆசாத்.
இந்திய விடுதலைப் போரில் மட்டுமே நாடெங்கும் 6,500 இஸ்லாமியர்கள் மரணித்ததாக தேசிய- தியாகிகள் கூட்டமைப்பு அறிவிக்கிறது.
பூரண சுயராஜ்யம் எனும் முழக்கத்தை காந்திக்கே அறிமுகம் செய்த மாவீரர் என்று மகாத்மாவால் போற்றப்பட்டவர் மெளலானா ஹஸ்ரத் மொஹானி.
முதல் இந்திய விடுதலைப் போரில் பிரிட்டீஷாரை அலற வைத்த பேகம் ஹஸ்ரத் மஹல் இந்தியாவிற்காக உயிரை விட்ட முதல் வீராங்கனை.
இந்து வெறியர்கள் இஸ்லாமிய தாக்குதலில் இறங்கியபோது, பொது அமைதிக்காக வங்காளத்தில் காந்தியடிகளோடு சேர்ந்து, 21 நாட்கள் உண்ணாவிரதமிருந்த பிபி அம்டஸ் சலாம்.
கிலாபத் இயக்கத்தை முன்னின்று நடத்திய மெளலானா முகமது அலி, மெளலானா சவுகத் அலி எனும் அலி சகோதரர்களின் தாய், கபாடி பானோ பேகம் அம்மையார் பிரிட்டீஷாரால் எரித்தே கொல்லப்பட்டார்.பி. அம்மா என்று அழைக்கப்பட்ட அவரது தியாகம் எப்பேற்பட்டது.
மேலும் ஹாஜீரா பீபி இஸ்மாயில், குஸ்லும் சயானி, அருணா அசாஃப் அலி என வரலாற்று தியாக வேள்வியில் பங்கு பெற்றோர், எத்தனை பேர்!
தூக்கிலிடப்பட்ட மாவீரர்களான மெளலி அகமதுல்லாகான் (1889),
27 வயதில் மாவீரனாக தூக்குமேடையை முத்தமிட்ட அஸ்வகுல்லா கான் போன்றோரை மறக்க முடியுமா? மறந்தால் பிரதமரை மன்னிக்க முடியுமா?
இந்தியா கேட் (டில்லி) 95,300 விடுதலைப் போராட்ட தியாகிகளின் (உயிர் நீத்தவர்கள்) பேரைத் தாங்கி நிற்கிறது. அதில் 61,945 பேர் இஸ்லாமியர்கள். ‘இந்திய விடுதலை, இஸ்லாமியர் ரத்தத்தால் எழுதப்பட்டது.‘ என்று குஷ்வந்த் சிங் குறிப்பிடுவார்.
இஸ்லாமியர்களைப்பற்றி ஊடுருவல்காரர்கள், பல பிள்ளை பெறும் காட்டுக் கூட்டம், பிறர் சொத்துகளை அபகரிப்பவர்கள் என்றெல்லாம் பேசும் ஓர் ஆட்சி தொடரக்கூடாது. ஒன்றிணைந்த மதச்சார்பற்ற அமைதி விரும்பும் இந்தியாவை மீட்டெடுப்போம். பொய் அணுகுண்டுகளுக்கு எதிராகப் பேரணியில் திரள்வோம்.
