பிரேமா இரவிச்சந்திரன்
இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் இருபத்தி ஆறு கட்டுரைகளை எழுதிய ஆசிரியர்
மு.இராமநாதன் அவர்கள் உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கும் சில ஆண்டுகள் பொறியாளராக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். அவ்வாய்ப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக்கொண்டு, நம் தாய்மொழி மீது பற்றும், மண்ணின் மைந்தர்களான மாணவர்கள் மீது அக்கறையும் கொண்ட கண்களால் ஆராய்ந்து, தரவுகளோடு தன் கருத்தினை வெளிப்படுத்தி, ‘இந்து தமிழ் திசை’ போன்ற நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தளித்த நூல்தான் “ஆர்வெல்லின் ஆறு விதிகள்”. சில சிக்கல்களை அருகிலிருந்து உற்று நோக்கிப் புரிந்துகொள்வதைவிட, தொலைவிலிருந்து பருந்துப் பார்வையில் பரவலாக அறியும்பொழுது, தெளிவுடனான தீர்வினைப் பெறலாம்.
விமானப் பயணங்களை மேற்கொண்டு பல நாடுகளில் வாழும் மக்களுடனும், உடன் பணிபுரிந்த ஆளுமைகளுடனும், தொடர்பிலிருந்த வேளையில், அயலகங்களின் கட்டமைப்புகளையும், கலாச்சாரங்களையும், மக்களின் மனநிலையையும் புரிந்து கொண்டவர் இந்த நூலின் ஆசிரியர். அவற்றையே ஆயுதங்களாகக்கொண்டு வளர்ந்த நாடுகளில் ஒன்றான நம்மிடமும் இருக்கின்ற தீர்க்கப்படாத பிரச்சனைகளைக் குறித்து எழுதிய ஒவ்வொரு கட்டுரையிலும் இறுதியில் முடிவுகளையும் கொடுத்திருக்கிறார்.

“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இல்லானும் கெடும்”
-எனும் பொய்க்காத வள்ளுவனின் வாக்கின்படி, சிந்தித்துப் பார்த்தால் இந்த நூலை ‘இடிப்பார்’ என்று கொள்ளலாம். தமிழகத்தில் அன்றைய அரசுப் பள்ளியில் தாய்மொழி வழியில் அடிப்படைக் கல்வியைப் பயின்று பொறியாளராக பொறுப்பு வகித்த இராமநாதன் அவர்கள், பின்னாளில் ஹாங்காங்கில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். உலகளாவிய அளவில் முதல் 100 இடங்களில் அங்குள்ள பத்து பல்கலைக்கழகங்களில் குறைந்தது ஆறு பல்கலைக்கழகங்களாவது இடம் பெற்று விடுவதைச் சுட்டிக்காட்டி, நம் நாட்டில் இந்தியா அளவில் தகுதியுள்ள கல்லூரிகளாக இருக்கின்ற மத்திய மற்றும் மாநிலக் கல்லூரிகளான ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவைகூட உலகத் தரத்தில் முன்னணியில் இல்லாததற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்து, நம் மாணவர்கள் வலுவிழந்து கொண்டிருக்கும் தாய் மொழியில் நாம் செலுத்த வேண்டிய கவனத்தையும் எச்சரித்திருக்கிறார்.
நம் நாட்டில் முக்கிய நகரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை அதிகமென்பதை கண்களைக் கட்டிக்கொண்டு அப்படியே ஏற்றுக்கொள்ளாத இந்த நூலின் ஆசிரியர், ‘தனக்கு இல்லாத மொழிப் புலமையை அறியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்’ என்பதை இன்னும் ஒரு படி மேலே சென்று இதுவரை எவரும் கவனம் கொள்ளாத பலவீனங்களை இந்நூலிலுள்ள கட்டுரை ஒன்றில் சொல்லியிருக்கிறார். தனது அறியாமையை அறிந்த சீன மாணவர்கள், அவற்றை அகற்றிவிட மேலும் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்ததையும் தனது அனுபவத்தில் கண்டதாக இரு வேறு தலைப்புகளில் விளக்கமளித்திருக்கிறார்.

நம் நாட்டில் பத்திரிகைகளில் இடம்பெறுகின்ற தவிர்க்க வேண்டிய பொருத்தமில்லாத மொழிபெயர்ப்புச் சொற்கள், இடம்பெற வேண்டிய இனிமையான சொற்களென, தான் வாசித்தபோது நெருடியவற்றைக் குறித்துவைத்துக் கட்டுரை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற விலங்குகளின் பெயரை அப்படியே மொழிபெயர்த்து நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பதை தவிர்த்துவிட்டு, வளமான மண்ணும், அதில் வளரும் காடுகளும், உயிர்வாழும் விலங்குகளும் ஏராளமாக நாம் கொண்டிருக்கும் பொழுது, பஞ்சமில்லாத சொற்களையும் அளவில்லாமல் கொண்டிருக்கிறோம். வாசிப்பில் அவற்றை உயிர்ப்பித்துக்கொள்ள எச்சரிக்கும் கட்டுரையை நிதானமாக விளக்கமளித்திருந்தாலும், அதன் ஆழத்தைக்கொண்டு, தனக்கிருக்கும் பதட்டத்தை எந்த அளவிற்கு அவர் மறைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதை அளக்க முடிகிறது.
அரசு அலுவலகங்களில் எழுதப்படுகின்ற முறையான கடிதங்களில் இருக்கின்ற பிழைகளையும் ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாக வைத்திருந்த காலத்தில் அவர்கள் பயிற்றுவித்தபடி, செயப்பாட்டு வினையை வழக்கத்தில் கொண்டு இன்றும் கடிதங்களை எழுதி வருகிறோம் என்பதை இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அதன்படி பார்த்தால், “நான் இந்தக் கடிதத்தை சமர்ப்பிக்கிறேன்” என்று தன் சுயத்தோடு கூறாமல், “இந்தக் கடிதம் சமர்ப்பிக்கப்படுகிறது” என்று தாழ்ந்த குரலில் அறிவிப்பைக் கொடுக்கப் பழகியவர்கள் நாம். அதனை தற்பொழுது மாற்றிக்கொள்ள வேண்டுமென்பது மு. இராமநாதன் அவர்களது கருத்தாக இருக்கிறது. அவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்றாலும் இன்னொன்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் ஒருமுறை இது குறித்து பேசியிருக்கிறார். “ஊரின் ஒதுக்குப்புறத்தில் இடம் ஒதுக்கப்பட்டு வாழ்ந்து வருகின்ற நம் மக்கள் தற்பொழுதுதான் கல்வியில் இட ஒதுக்கீடு பெற்று உயர்கல்வியைப் பயின்றவர்களாக ஆங்கிலேயர்கள் அதிகாரம் செலுத்திய இருக்கைகளில் அமர ஆரம்பித்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி உச்சரிக்கின்ற, ‘மை லார்ட்; யுவர் ஆனர்’ போன்ற சொற்களை அவர்களும் சிறிது காலம் அனுபவிக்கட்டும்” என்று கூறிய கருத்துகள் ஏற்புடையது. இவ்வகையில் யோசித்தால் அலுவலகத்தில் பரிமாறப்படும் கடிதங்கள், சில காலமாவது அப்படியே இருக்கட்டுமென்றே தோன்றுகிறது.
தேர்வு முறைகளென்று எடுத்துக்கொண்டால், அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைக்காமல் கிராமப்புற மாணவர்களுக்குத் தடையாக இருக்கின்ற நுழைவுத் தேர்வுகளை நீக்கிவிட்டு, பள்ளியில் பெற்ற தகுதியான மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நுழைகின்ற வாய்ப்பை அவர்களுக்கு அனுமதிக்க வேண்டுமென்பதை ஆரம்ப காலத்திலிருந்தே போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். அவை அவ்வப்போது நீக்கப்பட்டும் வெவ்வேறு வடிவங்களில் மீண்டும் புகுத்தப்படுமென இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அவ்வரிசையில் தற்பொழுது இருப்பது நீட் தேர்வு. ஆரம்ப காலங்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே வழி அமைப்பதாக சமஸ்கிருத மொழியை கட்டாயப் பாடமாகக் கொண்டிருந்த மருத்துவக் கல்லூரிகளின் மூடிய கதவுகளை நீக்குவதற்கு, நமது பெரியோர்கள் போராடி வெற்றி கண்டனர். இதன் அடுத்தபடியாக பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பெண் மருத்துவர்களே இல்லாமல், வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்ளும் பெண்கள் ஆபத்தைச் சந்தித்தபொழுது, அவர்கள் ஆண் மருத்துவர்களை அணுகுவதும் இயலாமல் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். இதனை அறிந்த அமெரிக்கப் பெண்மணியான ஜடா சோபியா ஸ்கடர் என்பவர் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி பெண்களை மருத்துவப் பணிக்கு வரவேண்டுமென ஊக்குவித்தார்.
காலப்போக்கில் மருத்துவக் கல்லூரிகள் பல உருவாகினாலும் அவற்றில் கல்வித் தகுதியுள்ள யாவரும் இணைவதற்கு இட ஒதுக்கீடு ஏற்படுத்திக் கொடுத்த தலைவர்களை எவரும் மறுக்க இயலாது. முதல் பெண்மணியாக டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் உருவான வரலாறுகளெல்லாம் நாடறிந்த கதை. தரமான மருத்துவர்களை உருவாக்குகிறோம் என்கிற பெயரில் பணம் உள்ளவர்களை மட்டும் அனுமதித்து, இந்நாளில் ஆயுதங்கள் இல்லாமல் போர் புரிவதற்கு அரசுப் பள்ளி மாணவர்களை அழைப்பது எவ்வகையில் நியாயம்? உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில்கூட இல்லாத நுழைவுத் தேர்வுகளை நம் நாடு அவசியம் நீக்கவேண்டுமென்பதைக் குறித்தான தெளிவான கட்டுரை இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.
நூலின் தலைப்பான ஆர்வெல்லின் ஆறு விதிகளைக் குறித்து மு. இராமநாதன் அவர்கள் தனது கட்டுரையில் மிக அதிகமாக விளக்கமளித்திருந்தாலும் ஆர்வெல் அவர்களைக் குறித்த அதிகத் தகவலை இந்த நூலின் அணிந்துரையில் ஆயிஷா நடராசன் அவர்கள் கொடுத்திருக்கிறார். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. கற்றல் என்பது யாது என்பதை பிரித்துப் பிரித்து விளக்கமளித்து கோர்த்துக் கொடுத்த நூல் அவரது ஆராய்ச்சித் திறனை வெளிப்படுத்தி நமது புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது. தகுதியான நூலுக்கு பொருத்தமான அணிந்துரை வழங்கப்பட்டிருக்கிறது. ஆங்கில நாவலாசிரியரான ஜார்ஜ் ஆர்வெல்லின் ஆறு விதிகள் கூட வியப்பைக் கொடுக்கவில்லை.
சொல்லுக்குள் வார்த்தைகளை சுருக்கி வைக்கும் சூத்திரதாரிகள், நம் திரைப்படத்துறையில்கூட இருக்கிறார்கள். மூத்த மொழியான நம் தமிழ் மொழியை முழுமையாகக் கற்றுக்கொள்ள ஒருவரது வாழ்நாள் போதாது. இலக்கணத்தை எளிமைப்படுத்தி இளைய தலைமுறையினருக்கு கொடுக்காமல் இனிய தமிழை சுவைக்க விடாமல் தடுக்கிறோம். இன்றைய கல்வி முறையிலேயே இருக்கும்படி, வாழ்வதற்குத் தேவையான கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, வாழ்க்கைக்குத் தேவையான தமிழ் மொழியை புறந்தள்ள வைக்கிறோம். அவற்றைக் கண்டடைந்து களைய வேண்டும். வாழ்வாதாரத்திற்கே அவசியமான இடத்தில் நம் மொழியை அமர வைக்க வேண்டும்.
கற்றலில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு எல்லைக்குள் அடங்கிவிடாத தமிழ்ச் சொற்கள் ஏராளமாக இருக்கின்றன. மாமலைகளையும், நீர் அருவிகளையும், ஓடும் நதிகளையும், இதமான தட்பவெப்ப நிலையையும், ஏராளமான வாழ்விடங்களையும், செழித்து வளர்ந்த கலாச்சாரங்களையும், நுண்ணிய வேலைப்பாடுகளுடனான கலைகளையும் நுணுக்கமான இலக்கணங்களைக் கொண்ட தேனினும் இனிய தமிழ் மொழியையும் கொண்டிருக்கும் நமக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கடுகைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்திய வள்ளுவனின் திருக்குறளும், ஒரு வரியில் ஓராயிரம் நீதியை சொல்லிவிட்டுச் சென்ற ஔவையாரின் ஆத்திசூடியும், நாலடியாரும், நான்மணிக்கடிகையும் நமக்கு எத்தனையோ கற்றுக் கொடுத்திருக்கின்றன.
மக்களுக்கு சாதகமில்லாதபடி சட்டங்களில் மாறுபாடுகள் ஏற்பட்டால் முதலில் கொதித்தெழுவது தென்தமிழகம்தான். ஏனெனில் நம்மிடம்தான் எல்லா வளங்களும் இருக்கின்றன. அவற்றைக் காத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. உலக மொழிகளை அறிந்த தேசியக்கவி பாரதி,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்”
என்ற கருத்து முழுக்க முழுக்க உண்மையென்பதை இன்று உலகப் பயணங்கள் மேற்கொள்கின்ற அறிஞர்கள் தெளிவடைந்து மகாகவியைத் தொடர்ந்து உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் நமது செழிப்பான தாய்மொழியைக் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கும் நம் தலைமுறைகளுக்கும் இருக்கிறதென்பதை உறுதியோடு இயம்புவதாக இந்நூல் இருக்கிறது. அனைத்து நூலகங்களிலும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் இடம்பெற வேண்டிய முக்கியமான நூல்களில் ஒன்றாக, “ஆர்வெல்லின் ஆறு விதிகள்” எனும் இந்தப் புத்தகமும் இருக்க வேண்டும்.
