முனைவர் சுஜா சுயம்பு
என்னைப்போல நகர வாழ்க்கையுடையவர்கள் ஆனாலும் உடன் பயின்ற தோழர்கள் பலரைப் போல கிராமத்துப் பின்னணியைக் கொண்டவர்களானாலும் உயர் கல்விக்காகப் பேராசிரியர்களாலும் பொறுப்பாளர்களாலும் பல்கலைக்கழகம் நோக்கி வழிபடுத்தப்பட்டவர்கள் பலர். வாய்ப்பு இல்லாமல் தமிழைப் படித்தவர்களையும் தமிழையே வாய்ப்பாகப் பிடித்துக்கொள்ளும்படி அறிவுரை கூறி கல்வியின் மீது பற்றும் ஈடுபாடும் வரச் செய்பவர்கள் நம் பேராசிரியர்கள். இதைக் கேட்டு உணர்ந்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கலாம். இளங்கலைத் தமிழ் இலக்கியத்தை விருப்பத்துடன் எடுத்த என்னைப் பல்கலைக்கழகம் நோக்கிப் பயணம் செய்யச் சொன்ன பேராசிரியர் ஒருவரின் சொற்களுக்கு அன்று எனக்கு விளக்கம் கிடைக்கவில்லை. ஆனால் அந்த வழிகாட்டலுக்கான பொருள் பின்னர் விளங்கியது. அது குறித்துப் பின்னர் பேசுவோம்.

தமிழ்க் கல்வியைத் தேர்ந்தெடுப்போர் பற்றிப் பரவலான பார்வைகள் உண்டு. ‘எந்தத் துறையும் கிடைக்காதவர்கள்தான் தமிழ் படிக்கிறார்கள்’, ‘தமிழைப் படித்தால் உன்னை யாரும் மதிக்க மாட்டார்கள்’, ‘என்ன படிக்கிறாய்? என்ற கேள்விக்குப் பதிலாகத் தமிழ் படிக்கிறேன் என்று சொன்னால், தமிழா!’ என்று சலிப்பு தட்டும் மறுசொல் எதிராளியிடம் இருந்து வரலாம். தமிழ்க் கல்வியின் தரம் பற்றி வெகுசன மக்களின் மனப்பதிவு வடிவங்களில் சில இவை. உண்மையில் பிற இந்திய மொழிக் கல்வி கற்பவர்கள் எல்லோரும் இத்தகைய அவமானங்களையும் கேலிப் பேச்சுகளையும் எதிர்கொண்டு இருப்பார்களா என்று கேட்க வேண்டும் என்று மனம் எப்போதும் எண்ணும். ஆனால் ஏதோ ஒரு வகையான தயக்கம் அதற்குத் தடை போடுவதால் இன்றுவரை பிற மொழிக்கல்வி பயின்ற நண்பர்களிடம் அதைக் கேட்காமலேயே இருந்து வருகிறேன். பிற துறைகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் வாழ்க்கைக்காகப் படிக்கிறார்கள், நீங்கள் வாழ்க்கையைப் படிக்கிறீர்கள் வாழ்க்கைக்காக என்ற மூத்த பேராசிரியர்களின் சொற்களைக் காதில் ஏற்றுக்கொண்டு படிக்கும் தமிழ் மாணவர்களும் பொதுவெளியில் தங்கள் முகத்தை மறைத்துக்கொள்வது அல்லது அடையாளம் இழந்து நிற்பதற்கான அடிப்படை என்ன என்று பார்த்தால் அதற்குப் பின்னாலும் ஒரு மொழிதான் இருக்கிறது.
தனித்துவமான அறிவுப் புலமை மட்டுமே ஒரு மனிதனுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதில்லை. புலமை வெளிப்பாட்டை உலக மரபுகளோடு இணைத்துப் பார்க்கவும் பரவலாக்கவும் ஒரு தொடர்பு மொழி அவசியப்படுகிறது. நமது சிந்தனை மரபையும் புரிதலையும் விரிவுபடுத்திக்கொள்வதற்கு உலக அளவில் நமது இயக்கத்தின் வேகத்தை முன்னெடுக்கவும், நிலைப்படுத்திக்கொள்ளவும் ஆங்கிலம் என்கிற தொடர்பு மொழி தேவைப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கையின் அதிகமாக விவாதத்திற்கு உள்ளாக்கப்படும் மும்மொழிக் கொள்கை பற்றி இந்த இடத்தில் நினைத்துப் பார்த்துக்கொள்கிறேன். உண்மையில் இந்தியா பல்வேறு அறிவு, ஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் புதிய கண்டுபிடிப்புகளோ (Invention) ஆக்க உரிமையையோ (Patent) எத்தனை இந்தியர்கள் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரம் நமக்கு ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ தரலாம். தாய்மொழியில் சிந்திக்க மறந்ததன் விளைவாக இதனை அறிவுச் சமூகம் பார்க்கிறது. மாணவர்களுக்கான அடிப்படைக் கல்வி தாய்மொழியிலும் தொடர்பு மொழி ஒன்றும் பிராந்திய மொழி ஒன்றுமாக மூன்று மொழியறிவு உடையதாக மாணவர் சமூகம் உருவாகுவதற்கு இது வழிவகுக்கும் என்றாலும் ஹிந்தியை ஏன் நான் தொடர்பு மொழியாகப் படிக்க வேண்டும் என்ற பிற தாய்மொழியாளர்களின் வாதமும் இந்தியாவில் இல்லாத ஒரு மொழியைத் தொடர்பு மொழியாகப் படிக்க முன்வருபவர்கள் இந்தியாவில் பேசப்படும் ஒரு மொழியைக் கற்பதற்குக் காட்டும் எதிர்ப்பு குறித்து எதிர்வாதமும் அடங்காக் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது. நிற்க.
மொழி ஒரு தொடர்பு ஊடகம். அந்த ஊடகத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்தக் கல்வியானாலும் அதனை மாறுபாடின்றி ஒரே நிலையில் பார்ப்பதற்கும் வேறுபட்ட துறை சார்ந்த அறிவுடன் அத்துறையை அணுகுவதற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடுதான் அந்தக் குறிப்பிட்ட துறையின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. இங்குதான் தமிழ் கற்கும் மாணவர்கள் அடிபடுகிறார்கள்; சிலர் நசுங்கியும் விடுகின்றனர். இதைக் கடந்து- வென்று தமிழை வாழ்க்கையாக்கிக் கொண்டவர்களுடனான தொடர்பு ஒரு மாணவனுக்கு ஆய்வு உலகின் துலக்கம் பெறாத புள்ளிகளை விளங்கிக்கொள்ள வழி கொடுக்கும். பிற துறை மாணவர்கள் இயந்திரத் தன்மையுடன் கருவியைப் போல இயங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் தமிழ் மாணவன் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களோடு இலக்கியங்கள் மூலம் ஊடாடி, உரையாடி வாழ்க்கையைப் புரிந்துகொள்கிறான்; வாழ்கிறான்; பிறருக்கும் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறான். பிற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடமிருந்து ஒரு பல்கலை மாணவன் எப்படி வேறுபடுகிறான். உண்மையில் வேறுபடுகின்றானா? ஆம். அது மறுக்க முடியாத உண்மை. அந்த வேறுபாடு அவன் படிக்கும் சூழலில் இருக்கிறது. பாடத்திட்டத்தில் இருக்கிறது. வகுப்பின் நடைமுறைகளில் இருக்கிறது. அவன் சந்திக்கும் பல்வேறு மனிதர்களில் இருக்கிறது. அவன் பங்கேற்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும் நிகழ்வுகளில் இருக்கிறது. இவற்றின் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும் அறிவில், அனுபவங்களில் இருக்கிறது. இவற்றின மூலம் ஒரு இயல்பு மாற்றம் மிகச் சாதாரணமாக அவனுள் நிகழும். அந்த மாற்றம் பல்கலை மாணவர்களின் வாழ்விலும் நிகழ்ந்த இடமாக பல்கலைக்கழக வளாகம் அமைந்திருக்கும். அதன் தொடக்கமாக முதுகலைக் கல்வியும் முக்கியக் காரணமாக பேராசிரியர் வீ. அரசுவும் இருந்தார். சமீபத்தில் அவரது 70-ஆம் அகவை நிறைவுக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது; மிக்க மகிழ்வான தருணம். அரசியல் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் தனிமனித உறவுகள் சார்ந்தும் நடைபெறும் பல வகையான கொண்டாட்டங்களுக்கு இடையில், கல்வி நிறுவனம் சார்ந்து நிகழ்த்தப்பட்ட கருத்தரங்குகளில் அரசு 70 முக்கியமானது. பேராசிரியர்கள் பலர் கடிவாளமிட்ட குதிரையைப் போல ஒரே பாதையிலே செல்வதுண்டு
(சில நேரங்களில் ஒரு துறை சார்ந்த புலமையால் பல நன்மைகளும் விளைவதுண்டு. ஒரு துறையைப் பல பரிமாணங்களில் அணுகுவதன் மூலம் பெறுகின்ற பயனும் அளவற்றதே). பேராசிரியர் அரசு தனக்கென்று ஒரு செயல்பாணியை (style) உருவாக்கிக்கொண்டு தான் செயல்பட்ட எல்லாத் துறைகளிலும் அதனைச் சிறக்க விளங்க வைத்தவர். அதன் ஒரு அடையாளமாகத் தான் 31/5/2024 அன்று நிகழ்ந்த கருத்தரங்கம் அமைந்திருந்தது; அதற்குக் கட்டியமாக அன்றைய நிகழ்வில் வெளியிடப்பட்ட ஓர்மைத் தடம் நூல் அமைந்துள்ளது.

அவரது மாணவர்கள் 27 பேர் அவரிடம் நிகழ்த்திய உரையாடலின் எழுத்து வடிவமாக இந்த நூல் அமைந்துள்ளது. இதனை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவர் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்திலான அவரது செயல்பாடுகளின் வெளிப்பாடாக அதில் சேகரித்து வெளியிடப்பட்ட இணைப்புகள் அமைந்துள்ளன. இந்த மிக முக்கியமான பணியை ஸ்டெல்லா மேரிக் கல்லூரி மேனாள் ஆங்கிலப் பேராசிரியரும் அவரது மனைவியுமான மங்கை செய்துள்ளார். ஒரு நிறுவனம் சார்ந்து இயங்கக்கூடியவர்களின் செயல்பாட்டு ஒழுங்கு ஒரு சமூகத்திற்கு எப்படிப்பட்ட நன் விளைச்சலை ஏற்படுத்தித் தரும் என்பதற்கும் குறிப்பாகக் கல்வி நிறுவனம் சார்ந்து இயங்கக் கூடியவர்கள் அதனை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு பரந்துபட்ட அறிவுச் சமூகத்தைச் சிறப்பாக உருவாக்கி, அதன் வேர்களைப் படரவிட்டு அந்த வளர்ச்சியை ஒரு தொடர்ச் செயல்பாடாக்க முடியும் என்பதற்கும் முன்னோடியாக நம் முன்னே நிற்பவர் பேராசிரியர் வீ. அரசு.
முன்பே குறிப்பிட்டதுபோல பல்கலைக் கல்வியில் பேராசிரியர் அரசு ஏற்படுத்திய மாற்றங்கள், வளர்ச்சிகள், வித்தியாசங்கள் பல. அது குறித்த ஒரு சில பகிர்கிறேன். உலகம் முழுவதும் எண்ணிலடங்காத கல்வி நிறுவனங்கள் தோன்றி வளர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. கல்வி நிறுவனங்களின் பெருக்கத்தால் சமூகம் உண்மையில் பயன் அடைகிறதா? எதற்காக கல்வி? கல்வி, தன்னையும் தன்னைச் சுற்றி உள்ள உலகத்தையும் புரிந்து கொண்டு மனித வாழ்வுக்குத் தேவையானவற்றைப் பெறவும் அல்லனவற்றைத் தவிர்க்கவும் மாற்றம் பெற வேண்டியவற்றை மாற்றுவதற்குமான அறிவையும் அதன் மூலம் அதிகாரத்தையும் வழங்கக்கூடிய ஆயுதம். இந்த ஆயுதத்தைப் பெறுவதற்கு முன் வரும் மாணவர்களைக் காட்டிலும் ஆசிரியருக்கு அதிகப்படியான பொறுப்பு உள்ளது. உயர்கல்வி சார்ந்து இயங்கக்கூடிய பேராசிரியர்களுக்கு அதில் மிக முக்கியமான இடம் உண்டு. அந்த இடத்தைக் கவனமாகப் புரிந்துகொண்டு அவர் செயலாற்றியதை அவருடனான ‘நிறுவனம்சார் களமாடல்’ உரையாடல் பகுதிகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. கல்வி நிறுவனத்திற்குள் மரபாகப் பின்பற்றப்படும் மதிப்பெண் என்கிற குறியீட்டைத் தாண்டி சமூகத்தின் அடிநிலையிலிருந்து அதன் பல்வேறு எதிர்ப்புகளை முட்டி மோதிக் கொண்டு வெளிவரத் துடிக்கும் ஒரு மாணவனுக்கு வாய்ப்பினை வழங்கும்போது அவனால் தன்னளவில் அந்தச் சமூகத்தில் எத்தகைய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை அந்த உரையாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன. எழுதப்படாத சட்டங்களை மாற்றுவதற்கும் தேவை ஏற்படும்போது மீறுவதற்கும் தளைகளைக் கட்டுடைத்து வெளியேறுவதற்கும் எந்தத் தயக்கத்தையும் எப்போதும் காட்டாதவராகப் பேராசிரியர் அரசு வாழ்ந்து இருக்கிறார்.
கல்வியை ஒரு சமூகத்திற்குச் செறிவாக வழங்குவதற்கான வடிவமாகப் பாடத்திட்டம் அமைகின்றது. அந்தப் பாடத்திட்டத்தின் மூலம் அரசியலையும் பொருளாதாரத்தைம் சுற்றியுள்ள சமூகத்தையும் நுணுக்கமாக மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு ஏற்ப பாடத்திட்டத்தை அவர் வளைத்துக் கொண்டுள்ளார். அதற்காகப் பல பேராசிரியர்களின் வசைமொழிகளையும் ஏற்றுக்கொண்டார். பல்வகைப் பின்னணியில் இருந்து உயர்கல்வி நோக்கி வருகின்ற மாணவர்கள் பலர் குறிப்பிட்ட சூழலில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் விபரீத முடிவுகளை எடுத்து வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வரும் சூழலில் ஒவ்வொரு தனிப்பட்ட மாணவனையும் உள்வாங்கிக்கொண்டு அவனது தேவையை உணர்ந்து தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டவர். ‘வகுப்பறைக்குச் செல்வதே நிறைவான பணி’ என்ற மன உணர்வு கொண்ட உயர்கல்வி நிறுவனம் சார்ந்த பேராசிரியர்கள் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் பாக்கியவான்கள்தானே?
‘நான் ஆசிரியன், நீ மாணவன், நான் சொல்வதை வகுப்பறை நடைமுறைக்கு உட்பட்டு நீ கேட்க வேண்டும்’ என்பதுதான் இந்தியக் கல்வி நிறுவனங்களின் ஒழுங்கு. ஆசிரியர்களைக் கேள்வி கேட்கும் சுதந்திரம் மாணவனுக்கு வழங்கப்பட்டாலும், அதனை ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்றும் குறைவு தானே? இதற்கு இடையில் தனது வகுப்பைக் கேள்வியும் உரையாடலும் நிறைந்த தர்க்கபூர்வமான வெளியாக மாற்றியவர். வகுப்பறைக்குள் மாணவனின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு முறை வைத்துப் (திங்கள் 2 மணிநேரம்- முதுகலை முதலாம் ஆண்டு, செவ்வாய் 2 மணிநேரம்- முதுகலை இரண்டாம் ஆண்டு,புதன்கிழமை 2 மணிநேரம்- ஆய்வியல் நிறைஞர்) பாடம் நடத்தி தனது மாணவர்களின் சிந்தனைகளில் என்றும் மறையாது வாழ்ந்து வருபவர். நம்பிக்கை, சடங்கு, விழுமியம், பண்பாடு, அலைவு -உழல்வு முதலான சொற்களுக்கான அவரது வரையறைகள் நாம் வாழும் சமூகம் குறித்து அவரது நுண்மையான புரிதலின் வெளிப்பாடாக அறிவுத்தடத்தில் நிறைந்து இருப்பவை. மக்களின் வழக்காறுகளை நேரடியாகப் பதிவு செய்வதற்கான பயிற்சியை வழங்கி முதுகலை விடுமுறை நாட்களில் கூட மாணவர்களை அவர் இயங்க வைத்தார். இதன் மூலம் இத்துறையைத் தனக்கான ஆய்வுத் துறையாக மாற்றிக்கொண்ட தோழர்கள் சிலரை ஒவ்வொரு முதுகலை மாணவர்கள் குழுவிலும் காண முடியும்.

இவ்வாறு மாணவர்கள் தொகுத்த பாடல்களை எல்லாம் பதிவு செய்து நான்கு பெரும் தொகுதிகளில் அடைவுபடுத்திய ஞாபகம் இப்போது எனக்கு வருகிறது. வகுப்பறைக்குள்ளே தனது மாணவர்கள் முடங்கிப் போய் அழிந்துவிடாமல் வெளியில் உள்ள அறிவு -ஆய்வு- அனுபவ வெளிக்கு கொண்டுசென்று விட்டவர். தமிழ் மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காகவே ‘கங்கு’ உருவாக்கப்பட்டது. படைப்புத் திறனை வெளிக்கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்ட ‘மேடை’ உலகப் படைப்புகள் குறித்துச் சிந்திப்பதற்காக &’திரைவெளி’க்களம், மனித மனங்களையும் அதன் எழுச்சிகளையும் விளங்கிக்கொள்வதற்கு &#’இந்தியச் சுற்றுலா’ இப்படியான அவரது செயல்பாடுகள் நீள்கிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் நிகழும் அறிவுத் திருவிழாவான அறக்கட்டளைச் சொற்பொழிவுகளில் தனிமனித விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு அவரால் அழைக்கப்பட்ட ஆளுமைகளின் உரைகளை நேரடியாகக் கேட்டுத் தெளியும் வாய்ப்பை என்னைப் போல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பெற்றார்கள். அன்புத்தம்பி சதீஷின் வரிகளுடன் இந்தப் பதிவை நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கலாம்.
‘மனிதர்கள் கொண்டாடப்பட /இங்கே பல காரணங்கள் /மண்டிக் கிடைக்கின்றன…/ஆனால் அவர் (பேராசிரியர் அரசு) /ஏன் இவ்வளவு கலியுகத்திலும் கொண்டாடப்படுகிறார்..? ஒருவரே அறிவில் ஆசிரியராகவும்/ அன்பில் அப்பாவாகவும் / இருக்க முடியுமா? /அதற்கான குறியீடுதான் / ஆசிரியப்பா.’
ஆங்கிலத்தில் சில வரிகள் உண்டு ‘A single conversation across the table with a wisemen is better than ten years mere study of books’ (Henry wads worth Longfellow). அறிவானவர்களிடம் உரையாடுவதும் அவர்களுடைய வாய் மொழிகளும் கூட நமக்கு அனுபவத்தையும் அறிவு முயற்சியையும் ஏற்படுத்தித் தரும் வாய்ப்பாக அமையும் என்று. அதற்கான மிகச் சிறந்த உதாரணமாக ‘ஓர்மைத் தடம்’ உள்ளது. அவரது அனுபவப் பகிர்வு அடுத்தடுத்து வரும் கல்வியியலாளர்களுக்குத் தனது இருக்கையின் முக்கியத்துவத்தையும் அதன் தன்மையையும் அறிவிக்கும் கல்லெழுத்துக் கதைகளாக அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.