கு.செந்தமிழ்செல்வன்

விழியனின் 49 மற்றும் 50வது புத்தக வெளியீட்டு விழா 23.06.2024 அன்று, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பல சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்ற விழா மிகவும் நெகிழ்வான பல தருணங்களுடனும் அமைந்தது. விழியனின் முதல் புத்தகத்தினை 2005 இல் வெளியிட்ட தோழர் ஜி. இராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, அவர்களே 50வது புத்தகத்தையும் வெளிட்டது என்பது நெகிழ்வானது. விழியனின் மகள் செல்வி ரஞ்சன குழலி வரவேற்புரையாற்றினர். செல்வன் கனியமுதனின் துவக்கப் பாடல்கள் அனைவரையும் உருக வைத்தது. நிகழ்வினை திருமதி பிரியதர்ஷினி ஒருங்கிணைத்தார். குழந்தை எழுத்தாளர் திரு விஷ்ணுபுரம் சரவணன் நிகழ்வுகளின் நோக்கம் குறித்து விளக்கினார்.
49வது நூலான “அதிசய மழை நின்றதா?” என்னும் நூலினை தோழர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட, அமீரக எழுத்தாளர் ஆசிப் மீரான் பெற்றுக்கொண்டார். 50வது நூலான தேன்கணியை தோழர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட, ஆரணி திருமதி குப்பு அவர்களும் இயற்கை ஆர்வலர் திருமதி பரிமளா அவர்களும் பெற்றுக்கொண்டனர்.


ஆசிரியர் திருமிகு மோகனா அவர்கள் தேன்கணி நேர்த்தியாகக் கதை சொல்வது போல அமைந்துள்ளதைப் பாராட்டினார். ஆசிரியை என்பதால் இடையிடையே கேள்வி கேட்டும் அறிமுகம் செய்து ஆவலைத் தூண்டினார். சிறார் எழுத்தாளரும் பாவேந்தர் தாய் தமிழ்ப்பள்ளி முதல்வருமான திரு வெற்றிச்செழியன் அவர்கள் சிறார் இலக்கியத்திலும் சிறார் உலகத்திலும் இடையறாது இயங்கி வரும் விழியனின் பங்கைப் பாராட்டினார். விழியனின் சிறார் இலக்கியம் சமூக நிகழ்வுகளின் இலக்கியப் பதிவாக அமைவதை எடுத்துக் கூறினார்.தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் சுருக்க உரை வழக்கம்போல நறுக்கென்றிருந்தது. அறிஞர் கோ.கைலாசபதியின் கட்டுரையைப் படிக்கத் தூண்டினார். சிறார் இலக்கியத்தில் நமக்கிருக்கும் பதபதைப்பைக் கூறி மிக இலகுவாக அதைக் கையாள வேண்டும் என்பதைக் கூறினார். கடினமான நாட்களையும் இலகுவாகக் கடந்து தொடர்ந்து இயங்கும் விழியன் & அவரது குடும்பத்தினரின் முனைப்பைப் பாராட்டினார்.
தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரையில் விழியனின் குழந்தைகளுக்கான தொடர் செயல்பாடுகளைப் பாராட்டினார். குழந்தைகளுக்கு விடியற்காலை 5.00 மணிக்கு கணிதம் குறித்த நிகழ்வுகளை ஆர்வத்துடன் நடத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.
விழியனின் ஏற்புரையில் கணிதவுணர்வு (Maths Sense) தரும் பயன்கள் பற்றிக் கூறியது உற்றுநோக்க வைத்தது. தனது அழைப்பினை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்தார். விழியன் தனது நட்பு வட்டத்தினரை ஒரே புள்ளியில் நிறுத்தி எழுதுவது என்பது உள்ளங்களை இணைப்பது என்பதை உணரவைத்துள்ளார். இலக்கியத்திலும் சமூகத்திலும் அவர் கொண்டுள்ள தெளிவான பார்வையே அவரது எழுத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைகிறது.

`களத்திலும் இணைந்திருக்கும் குடும்பங்கள்’
`வாழ்வின் தருணங்கள்’
என அடுத்த அமர்வுகளும் நெகிழவைத்தன
“களத்திலும் இணைந்திருக்கும் குடும்பங்கள்” என சமூக செயல்பாட்டிலும் இணைந்திருக்கும் சில குடும்பங்களை கெளரவிப்பது என்ற அடிப்படையில் 12 குடும்பங்கள் கவுரவிக்கப்பட்டனர். அவர்களைப் பற்றி செய்திகள் சேகரித்து ஒட்டுமொத்தமாகப் பார்த்த போது பிரம்மிப்பாக இருந்தது.
அவர்களின் குரல் வழியே அவர்கள் கடந்துவந்த பாதையைக் கேட்டபோது சிலிர்ப்பாக இருந்தது. முக்கியமாக குடும்பத்திலுள்ள பெண்களைப் பேச அழைத்தது சிறப்பாக அமைந்தது.

இளம் தலைமுறைகளுக்கு இவர்கள் வழிகாட்டி. எத்தனை வலிகளிலும் விடாப்பிடியாக களத்தில் செயல்படுகின்றனர். களம் அவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கின்றது. களத்திலும் இணைந்து நிற்கும் ஒவ்வொரு குடும்பத்தினரையும் இந்தச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும். இந்த அமர்வு புது மாதிரியானது. இந்த நிகழ்வு அவர்களை கெளரவிப்பதோடு மட்டும் நில்லாமல் இளைஞர்களை, சக தோழமைகளை உற்சாகப்படுத்தவும், இப்படியான ஆளுமைகள் நம்மோடு இருக்கின்றன்ர் என வெளிச்சமிடவும், அவர்களிடம் இருந்து உற்சாகத்தையும் வேட்கையை உறிந்துகொள்வதற்கான ஏற்பாடாக அமைந்தது. நிகழ்ச்சி முடிந்தபின்னரும் பல தோழர்கள் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.கவுரவிக்கப்பட்ட “களத்திலும் இணைந்த குடும்பங்கள்”தோழர் சுதா- டாக்டர்.டி. சுந்தரராமன்:தோழர் சந்திரா- டாக்டர் வெங்கடேஷ்பி.ஆத்ரேயா
தோழர் பிரேமலதா- தோழர் எஸ்.கண்ணன்
தோழர் மஞ்சுளா- தோழர்.தேவப்பிரகாஷ் .
தோழர் தி. சாந்தி- தோழர் ஜெ. மனோகர்
திருமதி லட்சுமி -திரு பாலபாரதி- கனிவமுதன்
தோழர் பூங்கோதை – தோழர் உதயன்
திருமதி தேன்மொழி – டாக்டர் ஏ. கலைநேசன்- தெருக்குரல் அறிவு
தோழர் மெகபுனிசா- தோழர் முகமது பாதுஷா
தோழர் சங்கரி- தோழர் எஸ். தயாநிதி
தோழர் பாரதி -தோழர் செல்வா
தோழர் வனஜா-தோழர் குமாரதாஸ்
களத்தில் நிற்கும் குடும்பங்கள் பற்றிய விவரணையுடன் அவர்கள் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒரு இயற்கை வளப் பொருட்கள் அடங்கிய பை (Organic Kit).
திரு. கு.செந்தமிழ்ச் செல்வன் அவர்கள், எதற்கு இந்த நிகழ்வு, எந்தப் பின்னணியில் இவர்களை தேர்வு செய்யப்பட்டனர் என்பதை விளக்கினார். அதன் பின்னர், ஏற்புரைக்கு கவுரவிக்கப்பட்ட குடும்பத்தின் எல்லா பெண்களும் அழைக்கப்பட்டனர். அந்த உரைகள் ஒவ்வொன்றும் மிக நெகிழ்வாகவும் உருக்கமாகவும் அமைந்தன. ஒவ்வொருவருக்கு பின்னும் ஏராளமான வலிகளும் கதைகளும். அவர்கள் குரலில் கேட்டது இன்னும் பொருத்தமாக அமைந்தது. தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா, டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன் மற்றும் விழியனின் சின்னத் தாத்தா திரு வி.கே. சுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் எஸ். கண்ணன் வாழ்த்துரையோடு arivuthottam.org என்ற இணையதளத்தை துவக்கி வைத்தார். நிறைவாக, தோழர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினார்.
கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களுக்கு இடையேயான குடும்ப வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். மதிய அமர்வு – விழியனின் பெற்றோர் கு.செந்தமிழ் செல்வன் –செ.குணசுந்தரி வாழ்வின் தருணங்கள் நடைபெற்றது. இருவரும் கடந்து வந்த சவால்கள் – தாங்கள் விடாப்பிடியாக பின்பற்றிய விழுமியங்கள் அது ஏன் அவசியம் என நிகழ்வு அமைந்தது. பல ஆளுமைகள் நிகழ்வில் வாழ்த்துவதற்காக நேரில் வந்தது மிகவும் நிறைவாக இருந்தது. பல இளைஞர்களை இன்னும் வீரியமாக ஓடுவதற்கு வழிவகுத்தது. தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பெங்களூரிலிருந்து இந்நிகழ்வுக்காக வந்திருந்த தம்பதியரை தனியாகப் பாராட்டினார். அவர்கள் விழியனின் நண்பர்கள் திரு ஜெயக்குமார் – திருமதி ஷர்மிலா. அவர்கள் பெங்களூர் சென்றவுடன் அனுப்பிய செய்தி இதுதான்: “இயங்குவதற்கு எங்களுக்கு நிறையப் பாடங்களை உடன் எடுத்து வந்திருக்கிறோம். தொடர்ந்து செயல்படுவோம் என்று உறுதியளிக்கிறோம்.”
மூன்று நிகழ்வுகளும் முத்தாய்ப்பாக அமைந்தது சிறப்பு. பல இளைஞர்கள் நாள் முழுவதும் இயங்கிக் கொண்டிருப்பதை விழியன் குறிப்பிடும்போது: “20 நாட்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு, வேலையைப் பகிர்ந்து செயல்படுத்திய இளைஞர் பட்டாளத்தின் வேகம் இது. இவர்களின்றி இவ்வளவு கச்சிதமாக பிசிறின்றி இந்நிகழ்வினை நடத்தி இருக்க இயலாது. கூட்டாக, குழுவாகத் திட்டமிட்டு செயல்பட்டால் எதுவும் சாத்தியமே.”
