குழந்தைகளிடம் புத்தக வாசிப்பை ஒரு பண்பாடு ஆக மாற்றுவது இன்றைக்கு மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது… குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே பாடப்புத்தகத்துக்கு வெளியே புத்தக வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டுவருவதற்கு பல வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் இது போன்ற முன்மாதிரி முயற்சிகளை நாம் எப்போதுமே முன்னெடுத்தும் பாராட்டியும் ஆதரவு அளித்தும் வந்திருக்கிறோம்.சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடைகோடி மீனவ கிராமம். பெரியதாழை சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட வாசிப்பு இயக்கம் மற்றும் தமிழக அளவிலான நூற்றுக்கணக்கான நூலகர்களின் அமைப்பான நூலகம் மற்றும் தகவல் அறிவியல் மேம்பாட்டு அமைப்பு [SALIS], தமிழகம் முழுவதும் முனைப்போடு செயல்படும் தமிழக வாசிப்பு இயக்கம் போன்றவை மிகுந்த நம்பிக்கை தரும் விஷயங்கள் ஆகும்.
திருச்செந்தூரில் ஒரு கடைக்கோடி மீனவக் குப்பத்தில் ஒரு புத்தகத் திருவிழாவை நம்மால் நடத்த முடியும் என்று யாருமே கனவு காண முடியாது. 800 மாணவர்கள் உள்ள பள்ளியில் 20 சிறார் எழுத்தாளர்களின் பெயர்களை வைத்து 20 குழுக்களாக அவர்களைப் பிரித்து அமரவைத்து ஒரு வாசிப்பு முகாம் நடத்தி இருக்கிறார்கள். நாள் முழுவதும் புத்தகங்களை குழந்தைகள் வாசிக்க வாசிக்க அங்கே அற்புதமான அறிவுச்சுடர் பிரகாசிக்கத் தொடங்கியது. ஒரு வாசிப்பு இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு இந்தப் பள்ளிக்கூடத்தில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சி மிகுந்த நம்பிக்கையோடு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.
பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியப் பெருமக்கள் மூன்று வகுப்பறைகளை கொலு படிகள்போல மாற்றி அவற்றில் புத்தகங்களை அடுக்கினார்கள். சிறார் நூல்கள், அறிவியல், வரலாறு, பொது, கதைகள் என்று புதிய புதிய புத்தகங்கள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டன.

குழந்தைகள் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நாம் பார்த்த வரையில் இந்தப் புத்தக நூல் அறிமுகத்துக்கு தாங்கள் கொண்டாடும் ஒரு ஆசிரியரின் புத்தகத்தை எடுக்கின்ற ஒரு மாணவர் அவர் கையிலிருந்து ₹20 – 50 வரை செலவழிக்கத் தயாராக இருக்கிறார். அதற்கு மேல் விலையுள்ள புத்தகங்களை அந்தக் குழந்தைகளால் வாங்க முடியவில்லை. இது நமக்குக் கிடைத்த முக்கியப் படிப்பினையாகும்.
புத்தகங்களை வாங்குவதோடு அவர்கள் நிறுத்தவில்லை. குழந்தைகள் வந்து சென்ற பிறகு அந்த அரங்கத்தைப் பார்த்தால் அனைத்துப் புத்தகங்களும் கலைத்துப் போடப்பட்டிருந்தன.அவர்கள் அந்த அரங்கத்தையே புரட்டிப் போட்டுவிட்டார்கள். ஆனால் தங்களுக்குரிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு அந்தக் குழந்தைகள் மிகுந்த நேர்மையோடு பணம் செலுத்தி அந்தப் புத்தகங்களைத் தங்களுடைய தாக்கிக் கொண்டார்கள். பிறகு தொடங்கியது வாசிப்பு முகாம். அவர்கள் வட்டமாக அமர்ந்து அல்லது தனித்தனியே அல்லது எங்கோ ஒரு மூலையில், மரத்தடியில், வகுப்பறையில், படிக்கட்டில் எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து
அந்தப் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது.
20 குழுக்களாக பிரிந்து அவர்கள் தாங்கள் வாசித்த புத்தகம் குறித்த நூல் அறிமுகத்தை அவர்கள் வழங்கினார்கள். 800 மாணவர்களும் ஏதோ ஒரு வகையில் பங்கேற்றார்கள் அதுதான் முக்கியம், வாசிப்பின் மகத்துவம் என்பது அறிவை மனிதர்கள் தங்களுக்குள், பகிர்ந்துகொள்கிற ரசனையைப் பகிர்ந்துகொள்கிற, விமர்சனத்தைப் பகிர்ந்துகொள்கிற ஒரு வாய்ப்பை நாம் என்ன நினைக்கிறோம் என்பதைப் பேசுகின்ற, வாயைத் திறந்து முழங்குகின்ற ஒரு வாய்ப்பை குழந்தைகளுக்கு வழங்குகிறது. வகுப்பறையில் பேச்சற்றவர்களாக, வெறும் கவனிப்பவர்களாக நம்முடைய கல்வி முறை அவர்களை மாற்றி வைத்திருக்கிறது. வாசிப்புதான் அவர்களுடைய மௌனத்தைக் கலைக்க முடியும் என்பதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ஏற்பாடு செய்த சிறார் பணிக்குழு, தூத்துக்குடி மறைமாவட்ட அமைப்பு, தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருச்செந்தூர் கிளை என அனைவரையும் நாம் மனதாரப் பாராட்ட வேண்டும்.

நூலகம் மற்றும் தகவல் அறிவியல் மேம்பாட்டு அமைப்பு சென்னையை தலைமையகமாகக்கொண்டு இந்தியா முழுவதும் உள்ள நூலகர்களுக்கான ஒரு சங்கமாகச் செயல்படுகிறது. இவர்கள் செயல்பாடும் முக்கியமானது.
தமிழக அரசு முன்னெடுத்துள்ள தமிழ்நாடு வாசிப்பு இயக்கம் இன்னும் அற்புதமான செயல்பாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் இவற்றோடு இணைந்து பெரிய அளவில் எடுத்துச் செல்கிறார்கள். இந்த வாசிப்பு இயக்கம் குறித்து பெரிய அளவில் தங்களுக்குள் இவர்கள் விவாதிக்கிறார்கள்.
நூலகர்கள் புத்தகங்களை குழந்தைகளிடம் நேரடியாக சேர்ப்பிக்க பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. நூலகத்தை நோக்கி குழந்தைகளை ஈர்ப்பதற்கு பெரிய திட்டங்கள் தீட்டப்பட்டு அவர்களைக் கவரும் வகையில் நூலகத்தினுடைய அமைப்புகளை மாற்றியும் நூலகத்தில் பல வகையான குழந்தைச் செயல்பாடுகளை இணைத்தும். ஒரு வெற்றிக்கான பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது மிகுந்த நம்பிக்கை தரும் விஷயமாகும்இதுபோல் வாசிப்புக்கான செயல்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச் செல்லும் பொழுது புத்தக இயக்கம் புத்துயிர் பெறுகிறது. பாரதி முழங்கியதைப்போல ஜெய பேரிகை கொட்டடா என்று கொண்டாட வேண்டியிருக்கிறது.