அன்பாதவன்

‘கொமாரன் குறிப்புகள் நூலில், குடும்பம், அலுவலகம், அலுவலகத்தில் சாதி, தொழிற்சங்கம், தோழமைகள், தொடர் வாசிப்பு, பிடித்த நூல்கள், ரசித்த சினிமா, என எல்லாமும் உண்டு. ‘கொமாரன் குறிப்புகளை’ வாசிக்கும்போது, ஒரு மனிதன், மகனாய், சகோதரனாய், காதலனாய், அலுவலகனாய், தொழிற்சங்கவாதியாய், கவிஞனாய், நல்ல சிநேகிதனாய்… திரைப்பட ரசனை கொண்டவனாய், வாசகனாய் என தசாவதாரம் எடுத்திருக்கிறார் நிமோஷினி.இது ஒரு தன் வரலாறா? ஆம் எனலாம்! நாவலா எனில் ஆமாம் எனலாம். வரிசை எண்கள் கொண்ட வாழ்க்கைப் பதிவுகளின்றி, non-linear – முறையில் கலைத்துப் போட்ட புடவையாய்… இந்நூல்..!
கொமாரனின் தோழமையுலகம்:
“பால்ய கால ஸகி லில்லியின், நினைவுகள் ஆப்பம் சாப்பிடுகையில் நினைவிலாடுகின்றன. உள்ளொடுங்கிப் போனதான வாழ்வின் மீட்சியாக புடைத்துப் பெருகும், ஆப்பத்தைக் குறியீடாகக் கொண்ட பெண் மனம் ஒன்று அவளுக்குள் இருந்திருக்கலாம். (ப.8) ‘ஆப்பம்’ என்கிற திடத் தின்பொருளை வாழ்வின் படிமமாய், குறியீடாய்க் காண ஒரு கவிஞனின் விழிகள் வேண்டும். நிமோஷினிக்கு கவிழி!
கொமாரனின் தொழிற்சங்க அனுபவங்கள்…
சுயசாதி அதிகாரியையும் விமர்சிக்கும் நேர்மை நிமோஷினியின் பலமெனலாம் (ப 9) “அதிகாரத்தை மீறி வெளிப்படும் வல்லமை சாதிக்கு உண்டு”!-கொமார கீதை! “நான்காம் பிரிவு ஊழியராக இருந்தாலும் ஐந்தாம் படை வேலைகளில் கெட்டிக்காரர் என்பது புரிந்தது! (ப.16) மரபில் கவியூறிய ஒருவனால் மட்டுமே இப்படி முரணில் சிந்திக்க முடியும். SCPTE – என்கிற அமைப்பில் தலைவராக இருந்த போது நிமோஷினி எதிர்கொண்ட மனிதர்கள்… வாழ்வின் காவல்களே! அலுவலகத்தில் சாதி-என்பது சுமைச்சிலுவை!
குடிநோயாளியான ஓர் அதிகாரியின் மனைவியைப் பற்றி எழுதுவதிது: “ஒரு தேர்ந்த குடிகாரரின் மனைவியாக எல்லாத் தழும்புகளும் அவருக்கிருந்தன” (ப.18)- தொழிற்சங்கங்கள் தோற்று படைப்பாளி வெல்லும் தருணமிது! ஒருவருக்காக மற்றொருவர் என்பதே சங்கத்தின் தாத்பர்யம், இன்றைக்கு சாதி சங்கங்களாக வெம்பிப்போனது சமூக வேதனை எனவும் புரிந்து கொள்ளலாம்.
நிமோஷினியின் தொழிற்சங்க நடவடிக்கைகளில், தனி மனிதர்களை அணுகும் விதத்தில் ஒரு தனித்துவம், கண்ணியம் இருக்கிறது. கீழ்வரும் நிகழ்வும் ஒரு எ.கா: கடுமையான அதிகாரி; பணத்துக்கு அடிமை. சங்கம் நன்கொடை கேட்டு அறைக்குள் செல்கிறது. பத்து பைசா தேறாது என்பதே அவதானிப்பு 200 ரூபாய் எதிர்பார்ப்பு! ஆனால் அதிகாரிகளின் அன்பளிப்போ ரூ.1000/- இங்குதான் நிமோஷினியைத் தாண்டி விஜயகுமார் வெளிப்படுகிறார்: “இது அவர் மனசாட்சியை சமனப்படுத்தும், டேவணித் தொகையாகவும் இருக்கலாம். மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் [பக். 22].”
ஆனால் சமகால யதார்த்தம் என்பது வேறு. இன்றைக்கு அஞ்சல், வங்கி போன்ற துறைகளின் சங்கங்களை நிர்வாகம் விழுங்கி விட்டது. தகுதியில்லாத தலைவர்கள் எளிதாய் விலைபோக அனைத்துக்கும் தீர்வுகான கொல்லைப்புற வழிகள் திறந்து வைக்கப்பட்டன. நம்ம டெலிபோன் நெம்பர ஞாபகமா வெச்சிருக்கிற நாலு பேரையாவது நாம சம்பாதிக்கணும் (ப. 148) எனும் நுண் நோக்கமே, விஜயகுமாரின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக இருந்திருக்கிறது. சாதி பார்க்காத சேவை, அதிகாரிகள் மத்தியில் சுமுகம், தேவையெனில் குரலுயர்த்தல், மண வாழ்வில் தம் காலத்தை தொலைந்த கைம்பெண் சிலருக்கு, தொலைபேசித் துறையில் பணிக்கு COMPASSIONATE GROUND-ல் ஏற்பாடு செய்து, அவர்கள் வாழ்வில் சுயமரியாதைச் சுடரை ஏற்றி வைத்திருக்கிற அனுபவங்களும் உண்டு.
கொமாரன், குடும்பம் உறவுகள்:
‘அம்மா, சிறுசிறு விஷயங்களின் ரசிகை’ (ப.7) -கொமாரனின் எழுத்து நடைக்கான ஜீன் அம்மாவிடமிருந்துதான் ஊறுகிறது. அம்மாவுக்கு பிடித்த கம்மார் வெற்றிலையை நினைவு கொள்வது எப்படி? ‘ஒம் பேர் என்னா சொல்லு…’ ‘குமாரு!’ ‘எல்லோரும் அத எப்பிடிக் கூப்புடுறாங்க?’ கும்மாரு!’ ‘அவ்ளோதான்.. கடை வரைக்கும் கும்மாரு… கடைக்காரன்கிட்ட கம்மாரு’ ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!’ – சும்மாவா சொன்னான் பாரதி. “நல்ல அன்பை இறுதியில் ஒரு சாதியக் குறிப்பாக மாற்றுவதுதான் சமூக அமைப்பு தரும் வலி. சாதிக்கட்சியோசாதிச் சங்கங்களோ இல்லாத பொற்காலங்கள் பக்.239” – என்ற கொமாரின் குறிப்பில் இருக்கிறது பேருண்மை.
கொமாரனின் சென்னை
ஒவ்வொருவருக்கும் பால்யத்தின் சித்திரங்களே மனதில் கல்வெட்டாய்ப் பதிந்து காலம் முழுதும் கலையாய், படைப்பாய் பரிணமிக்கிறது என்பது உளவியல் உண்மை. நிமோஷினியும் அதற்கு விதிவிலக்கல்லபூர்வீக சென்னைவாசியான நிமோஷினியின் பார்வையில் அவரின் பால்யகால மெட்ராசின் கோட்டோவியங்களிவை: ‘நேற்று எங்கள் தெருவின் ஜெப வீடு…. இன்றும் இருப்பதைப் பார்த்தேன்..! எத்தனை வருமாச்சு! மெல்ல ஆங்கிலம் கற்க கிறித்துவமே உதவியது! நல்ல பேண்ட் சர்ட், டக்சின், ராலி சைக்கிள், பாமாலிவ், டென்னிகாய்ட், கேரம்போர்ட், பெல்ட், பால் பாயிண்ட் எல்லாம் சேர்ந்து ஒரு STYLISH URBAN ஆக கிறித்துவமே மாற்றிற்று’ [பக் 154] என வெளிப்படையாக கூறுபவரின் LAST LINE PUNCH இப்படி முடிகிறது. ‘என்னை மதம் மாறச் சொல்லும் குரல்களைக் கேட்டதே இல்லை!’
அடுக்ககங்களில் வீட்டில் உரிமையாளராக என ஒருவரும் இருப்பதில்லை. இருப்பவர் அனைவரும் சுவர்களின் உரிமையாளர்களே (பக் 135)- -என்ற வரிகளில் வாசகருக்குத் தரும் FLAT OWNERS அதிர்வு எனப் பலர் மீதும் இடியாய் இறங்குகிறது. நகரம் என்கிற பெருவெளியில் ஒரு பாலைவனத்தை உருவாக்கி விட்டாய் என்ற குற்றச்சாட்டு தொனியில் (ப.185) மாநகரோடு தன்னையும் குற்றத்தில் இணைத்துக்கொள்வதில் தான் இலக்கியவாதி எனும் நிமோஷினி இருக்கிறார்.
ஆறு, குளம், ஏரி, கண்மாய், நிலத்தடிநீர் என நீர்நிலைகளையெல்லாம் கொலை செய்த மாநகரர்களின் கடைசிப் புகலிடமாக கடல்! கடலுக்கும் கோபம் வரும்… வக்கிரம் எழும்! ‘சுனாமி’ என்று அதற்குப் பெயர். “டிசம்பரில் புரசை, தானா தெரு மத்தியில் அமர்க்களமாக ஐய்யப்ப பூஜை நடக்கும். வழியை மறித்து இக் கச்சேரி நடக்கும் [பக் 191]” -இது பல ஊர்களிலும் நடப்பது தான். ஆனால் பக்தி என்பது ஒரு பாசிச கட்சியின் அடையாளமாக மதத்தை எடுத்துக்கொண்ட துர்சம்பவங்களும் இன்றும் தொடர்கின்றன.
‘செலக்டில் அமர்ந்து ஒரு டீ கேட்டேன்… டீ லாம் கெடயாது ஸார். எழுந்து வந்து விட்டேன். பழைய விடயங்கள் திரும்பவும் கிடைக்காதென்பது புரிந்தது [பக்.191]’. உண்மைதான். நிமோஷினி தொலைந்தவைகளைத் தேடத்தானே இலக்கியம். ஞாபகச்சில்லு தொலையாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளல் அவசியமாகப்படுகிறது. 37ம் பக்கத்தில் ‘புரசை’ எனும் தலைப்பில் நிமோஷினி தீட்டியிருக்கும் கோட்டோவியம் நாக்கடிமைகளுக்கு நல்விருந்து. அத்தனையும் விதவிதமான உணவகங்கள்!
கொமாரனின் கவிதை முகம்
கொமாரன் குறிப்புகள். நூலில் உரைநடைத் துண்டுகளின் ஊடாகத் தெறிக்கும் கவிதைகளில் மாணிக்கமா… முத்தா? கவிதை குறித்த அபிப்ராயங்களும் பல இடங்களில் பதிவாகின்றன. தொகுத்தால் சுவாரஸ்யமான ஒரு கட்டுரை கிடைக்கும். மழைநீரில் தவளைச் சத்தம் எதுவுமில்லை மழை நிரப்பும் குளமெதுவும் இல்லாததால் (பக். 51)– மாநகர்களின் அப்பட்டமான நீர் நிலைச் சுரண்டலின் மீதான கடுமையான காட்சிபூர்வ விமர்சனமிது!

எழுத்தாளன் என்பவன் கவிஞனாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் கதையாளனாகக்கூட இருக்கலாம். ஒரு நல்ல கவிஞனே கதையாளனாக பரிணாமம் பெறுகிறான் (பக். 101) – இது வாக்குமூலம்! கொமாரன் குறிப்புகளின் ஆதாரக் சுருதி எனவும் கொள்ளலாம். “அருகில்தான் அமர்ந்திருக்கிறாய் தூரமாக (பக். 118)”-ஸ்தூலங்களுக்கு இடையிலான மன இடைவெளியை எந்த மீட்டரால் அளக்கவியலும்? சொற்களைப் பூக்க வைக்கவேண்டுமெனில் அதைக் கவிதையாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை (பக். 145).
அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்ட ஒற்றை வன்முறை கத்திக்கப்பல் [பக்.180]-என்ற வரிகளில் நவீனத்துவத்தின் விமர்சனம்… கத்திக் கப்பல் – ஒரு குறியீடாகி சொல்லாதவனெவெல்லாம் சொல்கிறதே!
கொமாரனின் சினிமா ரசனை!
நிமோஷினி, கவிஞர், கதையாளர் மட்டுமல்ல, நல்ல சினிமா மீது தீராக் காதல் கொண்ட கலைரசிகரும்கூட! தீ நுண்மி தினங்களின் ‘லாக் டவுன்’ காலத்திலும், நாவடுக்களை, திரைக்கதையாக எழுதும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடுபவர், நூலின் பின்பகுதியில் திரைக்கதை குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. எனினும், தான் கண்டு ரசித்த பல்வேறு திரைப்படங்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.
பழைய படங்களைக்கூட புதிய மொழியில் விமர்சிக்க முடியுமா… ‘ஏலும்’ என்கிறார். இந்த உரைநடையின் சுவைதானே நிமோஷினி! ‘நெஞ்சம் மறப்பதில்லை’ – செல்வராகவனின் பழைய தலைப்பினாலான புதுப்படம்-நிமோஷினியின் விமர்சன வாக்கியமிது: சில நேரம் நமக்கு கதைகூட கிரிமினல் பைத்தியமாகவே கெடச்சுடுது பகவானே! காப்பாத்து (ப. 109) -வாய்ப்பில்ல ராஜா! விஜய் படங்களைப் பார்க்க பத்து வயதுச் சிறுவனாக மாற வேண்டியமாய யதார்த்தக் கட்டாயம் பற்றி குறிப்பிடுவதே. ‘நிறம் மாறாத பூக்கள்’ பற்றி எழுதுகையில், ‘காதலர்கள் என்றால் ஓடிப்போக வேண்டுமென்பது SCREEN PLAY ETHICS [பக் 143] உண்மையில் நிமோஷினிக்கும் இது தெரியும்!
கொமாரனோடு கொஞ்ச நேரம்:
பெண் பக்கம் நின்று பேசுவது நிமோஷினிக்கு அம்மாவிடமிருந்து கிடைத்த ‘தாய் வீட்டு சீதனம்’குடும்பம் தொடங்கி… தெரு… அலுவலகம், சங்கம் என நீளும் நற்கருணையது. சாதிக் கண்ணோட்டத்தில் தொழிற்சங்கத் தெளிவு இருப்பதை பல இடங்களில் வெளிப்படையான விமர்சனங்கள் / காட்சிகள் / நிகழ்வுகள் மூலம் பதிவிட்டிருப்பது சிறப்பு. வடசென்னையின் அடையாளங்களான புரசைவாக்கமும், பெரம்பூரும் கொமாரன் குறிப்புகளின் நிகழ்த்தளங்கள். மிக ஆரோக்கியமான கோட்டோவியங்களாக
அந்த வாழ்வியலைத் தீட்டியிருப்பதில் நிமோஷினி- எனும் மண்ணின் மைந்தனின்
பெருமிதப் பிரவாஹம்.