ஸ்ரீதர் மணியன்
புரட்சி செய்து, போராடி உரிமைகளைப் பெற்ற போராளியின் பெயரைக் கொண்ட படைப்பாளி மால்கம், அதற்கேற்ப காத்திரமான கதை ஒன்றினை வாசகர்களுக்கு அளித்திருக்கிறார். சமகாலத்தில் பெரும்பாலான தருணங்களில் இலைமறை காய் மறையாகவும், சில தருணங்களில் வெளிப்படையாகவும், ஆணவம் கொண்டும் அடக்குமுறைகளுக்கு மட்டுமல்லாது, சிறுமைப்படுத்தப்படும் மக்களின் அவலச் சூழலை தோலுரித்துக் காட்டும் புனைவாக உருவாகியுள்ளது ‘பகை நன்று‘ என்னும் குறுநாவல்.

புத்திசாலியை அறிவால் வெல்ல வேண்டும் என்ற வழங்கு மொழிக்கேற்ப இதனை எழுதியுள்ளார் மால்கம். பசுமரத்தாணிபோல பிஞ்சான நெஞ்சில் பதிந்து போகும் அவமானமானது எத்தகையதாக உருமாறக் கூடும், உருமாற்றம் பெற வேண்டும் என்பதை இக்கதை கருவாகக்கொண்டு படைக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் இத்தகைய நிகழ்வுகளை எவ்விதகுற்ற உணர்வுமின்றி மிக எளிதில் மனித இனம் கண்டும் காணாது கடந்து செல்வதே இயல்பு. பரபரப்பான இக்காலச் சூழலில் மலிவான, போலிகளால் ஈர்க்கப்பெற்று அதை நோக்கிச் சென்று, சுயசிந்தனையை இழக்கும் விட்டில்பூச்சிகளாக, மந்தைகளான நம்மை மட்டுமல்லாது, வளரும் தலைமுறையை மாற்றியிருக்கும் ஊடகங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை. இவற்றையெல்லாம் புறந்தள்ளி இதனை வீர்யமுள்ள புனைவாக மாற்றியுள்ளார் மால்கம்.
ஒரு குழந்தை தனது தாயிடம் கழிக்கும் நேரத்தினைக் காட்டிலும் தற்போது பள்ளிகளில் செலவிட வேண்டியதாகிறது. கல்வி முறை, கல்வி நிறுவனங்களுக்கிடையிலான போட்டி, கவனிக்க, கல்விச் சாலைகள் அல்ல இவற்றால் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளிலேயே தங்கள் பெரும்பான்மை நேரத்தினைக் கழிக்கின்றன. எனவே, கற்பிப்போரே அவர்கள் மனதில் பெரும் தாக்கத்தினை உண்டாக்குகின்றனர் என்பது கண்கூடு. இவ்வாறான சூழலில் தனது ஆசிரியரோ, ஆசிரியையோ அவர்களையே அப்பிஞ்சு மனம் ஆதர்சமாகக் கொள்கிறது. பெற்றோர் சரியானவற்றை எடுத்துக் கூறினாலும், ஹும், இல்ல, இல்ல, எங்க டீச்சர் இப்படித்தான் சொன்னாங்க, அதான் கரட்க்டு எனக் கூறி கற்பிக்கும் இனத்தை பெருமைக்குள்ளாக்குகிறது. இவ்வாறான மாண்பினைக் கைகொள்ள வேண்டிய ஆசிரியப் பெருமக்கள் தங்களது கடமையினை செவ்வனே செய்யாது, கற்றிருந்தும் அதற்கான பரந்த மனப்பான்மையினை இழந்து குறுகிய குணக்கேடு கொண்டு, இறுதியாக சாதி வெறி, ஆற்றாமையினால் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் அவலத்தினை இப்புனைவில் காணலாம். இது வாசகனுக்கு அதிர்ச்சியளித்தாலும், எத்துணை ஆழமாக இந்த வன்மமும், கோபமும், சாதி வெறியும் மனதில் கசடாகப் படிந்து, கெட்டிப்பட்டுள்ளது என்பதற்கு இக்கதை ஓர் உரைகல்லாகிறது. எவ்வாறு கல்வி கேடில்லா விழுச் செல்வம் எனப் போதிக்கப்படுகிறதோ, அதே கல்வியறிவும், மேட்டிமைத்தனமும் ஒரு மாணவனுக்கு எத்தகைய இழிவினை உண்டாக்கும் என்பதனை இதை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் தெளிவாக உணரலாம்.
எனது நண்பர் ஒருவர் அரசுப் பணியில் மிக உயர்ந்த அதிகாரியாகப் பணியாற்றுகிறார். உயரதிகாரி என்பதால் பல தருணங்களில் அவரது தலைமையில், அவரது அறையில் துறைசார்ந்த கூட்டங்கள் நடக்கும். அப்போது தேநீர், எளிய சிற்றுண்டிகள் வழங்கப்படுவது நடைமுறை. அத்தகைய கூட்டங்கள் முடிந்தபின் தேநீர்க் கோப்பைகள் மற்றும் இதர காகிதத் தட்டுகளை பணியாளர் சுத்தம் செய்வார். ஆனால் இந்த உதவியாளர் அவரது அதிகாரியின் கோப்பைகளை அகற்றாது அப்படியே விட்டுச் சென்றுவிடுவாராம். அதனை நண்பரே சுத்தம் செய்து வைப்பாராம். எத்துணை அதிகாரமும், பதவியும் இருப்பினும் அங்கே இடையில் தடையாவது சாதி வெறியும், ஆணவமும். நண்பரது கல்வியும், பதவியும் இதனை நேரடியாகக் கேட்கவோ, விவாதப் பொருளாக்கவோ இடமளிக்கவில்லை. அவர் இதனைப் பெருந்தன்மையுடன் கடந்துசென்றுவிடுவார். மனிதனின் இருப்பு குறித்த அச்சம் அவனைப் பதற்றத்துக்குள்ளாக்குகிறது. எங்கே தனது நிலையை இழந்துவிடுவோமோ என்கிற சிந்தனை அவனை தன் கீழ் இருப்போரை அந்த நிலையிலேயே வைத்திருக்க பல குயுக்தி மிக்க திட்டங்களைத் தீட்டுகிறது. தனது சாதி வெறி, அந்தஸ்து என அதற்குப் பல முகங்களைக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துகிறது. அதற்காக ஒரு கட்டத்தில் எந்த எல்லைக்கும் அவன் செல்லத் துணிகிறான். இத்தகைய சூழலில்தான் பத்திரிகையாளரான அவர் தூண்டுகோலாகிறார்.
‘தெளிவிலார் நட்பின் பகை நன்று‘ என்ற பழந்தமிழ் இலக்கியமான நாலடியாரிலிருந்து மேற்கோளிடப்பட்டுள்ள வாக்கியத்தினை தாரகமாகக்கொண்டு மால்கம் இதனை மாஸ்டர் ஏ.ஜே., என்ற கதாபாத்திரத்தின் வழி தனது புனைவினை நிறுவியுள்ளார். ஒடுக்கப்பட்ட இனத்திற்கு உத்வேகமூட்டி, தட்டியெழுப்பி ஒரு எளிய குடும்பத்தினைச் சேர்ந்த மாணவனை எவ்வாறு படிப்படியாக நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்று சாதனை புரிபவனாக உருமாற்றுகிறார் என்பதை மால்கம் விளக்குகிறார்.
மாஸ்டர் ஏ.ஜே., புனைவு நெடுக ஊடாடி வருகிறார். படைப்பாளியான மால்கமின் நீட் தேர்வு குறித்த பார்வை மாறுபட்டதாகவும், அனைவரையும் சிந்திக்கத் தூண்டுவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றுக் கூச்சல்களால் பயனேதும் விளையாது, அறிவுபூர்வமாக, உணர்ச்சி வயப்படாது ஒன்றைத் திட்டமிட்டு மாற்றப் போராட வேண்டும் என்றும், நடைமுறை வாழ்வினையும் ஒருங்கே கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கருத்தினையும் சிறப்பாகப் பதிவாக்கியுள்ளார் மால்கம்.
இதற்காக அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். வளரும் தலைமுறையினரைக் குழப்பத்திற்குள்ளாக்கும் அறிவிப்புகளும், செய்திகளும் நாள்தோறும் வெளியாகும் நிலையில் இக்கதை இப்பிரச்சினைக்கு தெளிவானதொரு புரிதலை அளிக்கிறது. ‘நீட்டுக்கு எதிரா ஒரு பக்கம் போராடிக்கிட்டே, அதை எதிர்கொள்ளவும் தயாராகணும்‘ என்று மாஸ்டர் கதாபாத்திரம் மால்கமிற்கு எடுத்துரைப்பது சிறப்புமிக்கது. பன்னெடுங்காலமாக அடக்கி ஆண்டே பழக்கப்பட்ட இனம் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றத்தினைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளாது, மனம் புழுங்கிச் சாவது எதற்காக? அவர்கள் பிறப்பால் மேன்னையானவர்கள், கல்வியறிவால் சிறந்தவர்கள் என்று எவ்வாறு கூறிக்கொள்ள இயலும்? இத்தகைய மனநிலைக்காக நேர்மையாக மனச்சான்றின்படி அவர்கள் வெட்கித் தலைகுனிய அல்லவா வேண்டும்? கல்வி, அறிவு என்னும் கூறுகள் மனித குலத்திற்கு பொதுவானவை. இவற்றைப் பிரித்து தந்தை செய்யும் தொழிலைத் தான் பிள்ளைகள் தொடர வேண்டும் என வகுத்துக் கொள்ளவது எதற்கு? இத்தகைய வினாக்களுக்கு அறிவார்ந்த விடையினை தனது வாழ்க்கைக் கதையின் வாயிலாக மால்கம் கூறியுள்ளார்.
நிறைவாக்கிட, முகப்பு அட்டையினை வடிவமைத்த தோழர் லார்க் பாஸ்கரன் படைப்பின் பொருளுணர்ந்து செயல்பட்டுள்ளது சிறப்பு. படைப்பாளியான மால்கம் தனது முந்தைய நூல்களின் வழி தனது நோக்கத்தினைக் குறியீடாக வெளிப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. ‘என் புரட்சி‘ மற்றும் ‘மால்கம் அறிமுகமும் அரசியலும்‘ என்பவையே அவை. இவற்றிலிருந்தே அவர் எதை நோக்கிப் பயணிக்கிறார் என்பதை கணிக்கவியலும். பதிப்பகம், ஊடகம் என இலக்கியக் களத்தில் பயணித்து வருகிறார். அவரது இலக்கினை அடைய வாழ்த்துகளும், அன்பும். இதனைப் பதிப்பித்து அவருக்கு உறுதுணையாக விளங்கும் பாரதி புத்தகாலயமும் பாராட்டிற்குரியது.