மயிலம் இளமுருகு
தமிழன்பன் கவிதைகள் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே செல்வதற்கு தொடர்ந்து அயராது பாடிபட்டுக்கொண்டு வருபவர். பாரதியார் மீது பாரதிதாசன் எத்தகைய பற்று வைத்திருந்தாரோ அவ்வாறான முறையிலே தமிழன்பன் மீது நூலாசிரியர் அமிர்தகணேசன் அவர்கள் வைத்துள்ளார். தமிழன்பன் கவிதைகளை உலகத்தமிழருக்கு கொண்டு சேர்க்கும் பணியில் மும்முரமாக செயலாற்றிக்கொண்டு வருகிறார்… இவர் எழுதியுள்ள இந்நூல் கவனிக்கத்தக்கது..
ஈரோடு தமிழன்பனைப் பொருத்தவரை அவர் எவ்வகையில் மகாகவிக்குரிய தகைமைகளைப் பெற்றுத் திகழ்கின்றார் என்பதை இந்நூலின் பக்கம்தோறும் உள்ள அவர்தம் கவிதைகளும், அமிர்தகணேசன் தந்துள்ள விளக்கங்களும் நமக்கு உணர்த்துகின்றன.

தமிழன்பன் கவிதைகளின் ஊடாக வழியும் அவர்தம் அடிப்படைச் சிந்தனைகளை அடையாளமிட்டுக் காட்டுவதோடு, சமகாலச் சிக்கல்களைப் பாடும் துணிவையும் சுட்டிக் காட்டுகின்றார். சமூகம் தொடர்பான தமிழன்பனின் சிந்தனைகளுக்குச் சான்றுகளைக் காட்டி நிறுவுவதோடு, வன்கொடுமைகளைச் சாடும் பண்பையும் பாராட்டுகின்றார். அதுமட்டுமல்லாமல், ‘ஈரோடு தமிழன்பன் மரபு வடிவத்தில் வல்லாண்மை பெற்றுப் புதுக்கவிதை வடிவம் தேர்ந்து பன்னாட்டு வகைமைகளைத் தமிழுக்கு மடைமாற்றிப் பிறகு, தானே பல புதிய வடிவங்களை (வினா-விடை வகைமை, பழமொழியும் சென்ரியுவும் இணைந்த பழமொன்ரியு, ஈரோசென்வியம் என்ற புதிய யாப்பு) தமிழ் மொழிக்குத் தந்துள்ளவர்’ என்று ஆ. மணி கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.
மகாகவி ஈரோடு தமிழன்பன் என்னும் பாற்கடலில் இருந்து கடைந்தெடுக்கப்பட்ட அமுதக் கவிதைகளை மக்கள் கைகளில் கொண்டு சேர்ப்பதை இந்நூல் நோக்கமாகக் கொள்கின்றது. மகாகவி ஈரோடு தமிழன்பன் என்னும் கவிதைப் பேராற்றைப் பாதிரி செங்காலி மலர்கள் பெய்த செப்பாக மணம் கமழும் வகையில் இந்நூலை உருவாக்கிய அமிர்தகணேசன் பணி சீர்மிகு சிறப்புப் பணியாகும்.
கவிதை ஒரு விபத்து; உரைநடை ஒரு நிகழ்வு! கவிதை கனவுகளின் கண்ணாடி; உரைநடை வெயிலின் நிழல்! ஆனாலும் கவிதைகள் மேல் பலருக்கும் பன்னெடுங்காலமாக ஒரு காதல் இருந்து வருகிறது. கவிஞன் மீதும்தான்! ஆக, கவிஞன் நிகழ்வுகளின் கண்ணாடி; காலத்தின் ஆவணம்; தீர்க்கதரிசனத்தின் குறியீடு; மண்ணின் எதிரொலி; உரிமைக்கான கூக்குரல்; அநியாயத்திற்கு எரிதழல்; உழைப்பாளி; வெப்பத்திற்கு இளந்தென்றல்; பல பொழுதுகளில் மெல்லிசை ஒலிக்கும் வீணை; சில பொழுதுகளில் கூர் ஒளிரும் போர்வாள்; வலியும் வாதையும் சுமப்போரின் சொற்களின் அகராதி; சந்ததி விட்டுச் சந்ததிக்குத் தத்துவங்கள் கடத்தும் கடத்தல்காரன்!
இந்நூல் 27 தலைப்பின் வழியாக தமிழன்பனின் சிறப்புகளையும் அவரது படைப்பாளுமையையும் எடுத்துக் காட்டுகிறது. ஆசிரியர் பல்வேறு நினைவுகளைக் குறிப்பிட்டு அதற்கான கவிதைகளையும் விரிவாக வாசகர்கள் படிக்கத் தந்துள்ளார். திருப்பூர்க் குமரன் சிலையருகில் புகைப்படம் எடுத்தோம். நினைவுகளின் நனைவுகளில் அவரின் நிமிடங்கள் எங்க வீட்டிற்கு எதிரே ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது… இந்த வேப்பமரம் பின்னாளில் ஒரு கவிதையாகியது என்று சொல்லி அந்த இடத்தையே உற்று நோக்கியவாறு இருந்தார். இப்போது இல்லாமற்போன, ஆனால் அவர் பால்யப் பருவத்தில் அவரோடு வாழ்ந்த வேப்பமரத்தின் மீதான ஒரு கவிதை இப்படித்தான் அவருள் உருவாகி அன்னை மடியே உன்னை மறவேன் எனும் நூலில் இடம்பெற்றது. இக்கவிதையின் தாக்கமே ‘வேம்பில் ஒரு செண்பகம் எனும் ஒரு குறுநாவலை நான் எழுதக் காரணமாயிற்று. அந்நாவல் தமிழக அளவில் முதல் பரிசும் பெற்றது என்று கவிதை பிறந்த கதையைச் சொல்லியிருப்பது மிகச்சிறப்பு.
பொருள்வயப்பட்ட இன்றைய நம் வாழ்வில் மலை வளம் அழிப்பு வணிகமயமாக்கப்பட்டு விட்டது. நாம் நம் பலத்தை இழந்து வருகிறோம். அரிய மூலிகைகளை, உயிரினங்களை இழந்து வருகிறோம். ஈரோடு தமிழன்பன் அவர்களின் இந்நூலில், மலையழகு, மலையின் பயன், மலையைக் காத்தலின் அவசியம், மலையும் மதமும் பற்றியெல்லாம் அழகுத் தமிழில்நமக்கு விவரித்திருக்கிறார்..! திராவிட உணர்வும் மார்க்சியப் பார்வையும் தமிழ்ப்புலமைத்துவம் மிக்க நுண்ணறிவும் பகுத்தறிவுத் தெளிவும் இவருக்கு ராஜபாட்டையை அமைத்தன. அதனால்தான் எந்தவொரு தத்துவத்திற்குள்ளும் சித்தாந்தத்திற்குள்ளும் தமிழன்பனைச் சிறைபடுத்த முடியும் என்ற தோன்றா உணர்வு உண்டாகிறது என்று பேரா. பா. இரவிக்குமார் கூறியுள்ளார்.

உலகளாவிய மனிதர்களின் விடுதலைக்கான வேட்கைக்குக் குரலாகத் தன் வரிகளை, தன் உணர்வுகளைத் தொடர்ந்து ஒரு பருவ காலம் போல் அளித்து விடாமல் தன் வாழ்வின் அங்கமாக இன்னமும் அளித்துக்கொண்டு வருகிறார். 1973இல் தோணி வருகிறது, 78இல் தீவுகள் கரையேறுகின்றன, 82இல் அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம், 89இல் நாமிருக்கும் நாடு, 2004இல் என் அருமை ஈழமே, 2015இல் திசை கடக்கும் சிறகுகள், மாற்று மனிதம், 2020இல் காலத்தால் மறையாத கருப்புச் சூரியன் மார்டின் லூதர் கிங், 2021இல் புன்னகை சிந்தும்பொழுது, இன்னும் இசை உண்டு இந்த வீணையில், தொடர்ந்து தன் முதுமையிலும் ஓய்வின்றிக் கவிதைகளை அளித்து வருபவர் மகாகவி ஈரோடு தமிழன்பன். 60, 70 வயதைக் கடந்த பின்னரும் எழுதிய டால்ஸ்டாய், ஹெமிங்வே, எலியட் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர் மகாகவி ஈரோடு தமிழன்பன்.
ஹைக்கூ, லிமரிக் ஆகிய ஜப்பானிய ஆங்கிலக் கவிதை வடிவங்கள் அவ்வம் மொழிகளில் யாப்பு வடிவங்களே. இவ்வடிவங்களை தமிழில் பின்பற்றுகையில் தமிழ் யாப்பியலுக்கேற்றல் கூறுகள் இவற்றில் இடம்பெறுகின்றன; தமிழன்பன் தமிழில் ஹைக்கூ வடிவில் கவிதை படித்த முன்னோடிகளில் ஒருவராக லிமரைக்கூ வடிவில் கவிதை படைத்தவராகவும் முதன்மையானவராகவும் விளங்குகிறார். மூன்றடி என்னும் யாப்பு வரையறையைப் பின்பற்றும் தமிழ் ஹைகூக்களில் மோனை எனும் யாப்புக் கூறு முதன்மை பெறுவதை தமிழன்பனின் ஹைகூ படைப்புகள் புலப்படுத்துகின்றன.
எங்கள் வீட்டுக் கிணறு என்ற கவிதையில், ஊருக்குச் சென்றிருந்தேன் / கொல்லைப்புறம் /கிணற்றை எட்டிப் பார்த்தபோது /நான் தூக்கிப்போட்ட பந்துகள் / கிடந்தன / என் விளையாட்டுகள் /உலர்ந்து போகவில்லை/பந்துகளுக்குள்ளும் என் ஞாபகம்/கனத்துக் கிடந்ததாகவே நினைக்கிறேன்/ அழகும் புரட்சியும் கவிதையின் இரு பெரும் பொருண்மைத் தொகுப்புகள். எழுத்து வடிவமும் பேச்சுக் கவிதை வடிவமும் மனிதர்களுக்குக் கவிதையைப் புரிந்துகொள்ளத் தேவைப்பட்டன. இதில் பேச்சுக் கவிதை ஒருவித ஒழுங்கமைவு கொண்ட ஓசையால் கேட்பவரைச் சுண்டி இழுக்கும் ஆற்றல் பெற்றிருந்தது. உலக இலக்கியத்திலேயே எழுத்துக்கு வெவ்வேறு ஓசையைப் பெற்றிருக்கும் மொழியாகத் தமிழ் மொழி விளங்குகின்றது. கவிதை வாசிப்புத் திருவிழா நிகழ வேண்டும். புகைவண்டி நிலையங்களில், பேருந்து நிலையங்களில், வானூர்தியங்களில், பேருந்து நிலையகத்தில் உணவு விடுதிகளில் கவிதைகள் வேண்டும். ஒரு கவிஞனின் படைப்புகளை முதலில் காட்சிப்படுத்தப்படல், பின்னரே அவர் தகுதியை வாசித்து அதற்கு நாம் உரக்க முழங்க வேண்டும் என்பது ஆகச்சிறந்த பணியாகும்.
வள்ளுவம் பற்றித் தமிழன்பன் கூறுபவை சுவாரசியமானவை. இலங்கை கலாநிதி கா.சிவத்தம்பி ஈரோடு தமிழன்பன் மனித உறவுகள் மீது அளப்பரிய நம்பிக்கையைத் தன் கவிதைகள் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார். வாழ்வியல் கவிதைகள் அதிகம் அளித்துள்ளார். அவர் கவிதைகள் அனுபவச் செறிவுகளின் வழிசல்களாக நிரம்பி வழிவதை அவரின் கவிதை நூல்களிலும் நாம் காண முடியும். கலாநிதி நா.சுப்பிரமணியன் திறனாய்வு நோக்கில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள் எனும் நூலில் “தனது அனுபவ நிலைக் கவிதைகளின் மூலம் தமிழகக் கவிதைக்குப் புதியதொரு பொலிவை அவர்கள் (ஈரோடு தமிழன்பன்) ஏற்படுத்தியுள்ளார்கள்” என்று கூறியிருப்பது இங்கு நோக்கத்தக்கது.
நண்பர்கள்/ நட்பு, அப்பா, அம்மா, பிள்ளைகள் / குடும்பம் மீதான அவரது கவிதைகள் ஒரு நட்புக்குள் /குடும்பத்தினுள் வாசகன் வாழ்வது போன்ற எண்ணத்தை உண்டாக்கிக் கலவையான உணர்வலைகளை உண்டாக்கிவிடும். உடல் மூப்பு அடைவதைத் தடுக்க முடியாது. ஆனால் உள்ளத்தைக் கிழடு தட்டாமல் பார்த்துக்கொள்ள முடியும்; பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நடைப்பிணம். உள்ளம் கிழடு தட்டாமல் இருக்கத் தமிழன்பனின் ‘கதை முடியவில்லை’ ஒரு மாமருந்து; படியுங்கள். அவ்வப்போது படியுங்கள். உங்களிடம் என்ன நடக்கிறது பாருங்கள்! – எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தம்
அக்கவிதைகளின் வாழ்வு என்பது எல்லோரின் வாசிப்பிலும் உள்ளது. ஆக எந்தக் கவிதையும் வாசிப்பில் வாழ்கிறது. நான் வாசித்துள்ள வகையில் மகாகவி ஈரோடு தமிழன்பன் 500க்கும் மேற்பட்ட பாடுபொருள்களில் 83 கவிதை நூல்கள் படைத்துள்ளார்.. இன்னமும் படைத்து வருகிறார். பல்வகைமைகளை தமிழுக்கு அளித்தவர். ஈரோடு தமிழன்பன் ஒரு மகாகவி மட்டுமல்ல, அவர் ஒரு பன்பாடுபொருள் மாமணி… அஃறிணை முதல் உயர்திணை வரை பாடியுள்ளார்… பல வகைமைகளில் பாடியுள்ளார்… நம் கால மகாகவி என்னும் இந்நூலின் இறுதியில் ஈரோடு தமிழன்பன் வாழ்வும் பணியும் என்ற தலைப்பில் ஈரோடு தமிழன்பன் தமிழுக்குச் செய்த பல்வேறு செயல்களும் அவருடைய வாழ்க்கையும் நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.. குறிப்புகள், சாதனைகள், அவர் பெற்ற விருதுகள், பட்டங்கள், பரிசுகள், இதுவரை அவர் எழுதியுள்ள படைப்புகள் என்று விரிவாகக் கூறப்பட்டுள்ளது…அந்த வகையில் விருதுகள் 37, கவிதைத் தொகுப்புகள் 83, மொழிபெயர்ப்புகள் 3, மொழிபெயர்ப்புப்பணி 27, பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு 7 நூல்களும் உரைநடை நூலாக 28 நூல்களும் எழுதப்பட்டுள்ளன.
ஈரோடு தமிழன்பன் கவிதைத் தொகுப்புகள் குறித்து பிறர் உருவாக்கிய தலைப்பில் 14 நூல்களும் இவரது படைப்புகள் குறித்த திறனாய்வு செய்த நூல்களின் வரிசையில் 23 நூல்கள் என்று ஈரோடு தமிழன்பன் அவர்கள் தமிழோடு இயைந்த வாழ்வியலை மிக நெருக்கமாக வாசகநோக்கில் நம் கால மகாகவி என்னும் இந்நூல் பதிவு செய்துள்ளது. நம்மோடு வாழ்கின்ற மகாகவிக்கு கலைமாமணி தி. அமிர்தகணேசன் அவர்கள் உரிய பங்களிப்பைச் செய்து தமிழன்பனை என்றைக்கும் தமிழோடு இணைத்துப் பேசும்படியாக செய்த அவரது அரிய பணி கவனிக்கத்தக்கது, பாராட்டத்தக்கது, போற்றுதலுக்குரியது. மேலும் இது போன்ற நூல்களை அவர் தொடர்ந்து எழுத வேண்டும். அதை அவர் தொடர்ந்து செய்வாராக… இந்த ஆவணப் புத்தகத்தைப் பதிப்பித்த ஒரு துளிக் கவிதை பதிப்பகத்தாருக்கும் கவிஞருக்கும் நூலாசிரியருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்…