ரா.பி.சகேஷ் சந்தியா
நாம் எதை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோமோ அதுதான் நாம். அதன்படி பார்த்தால், உன்னதம் என்பது ஒரு செயல் அல்ல, ஒரு பழக்கம் – அரிஸ்டாட்டில்
பள்ளி இறுதித் தேர்வை முடித்த எட்டு மாணவர்கள், ‘அடுத்து என்ன படிக்க வேண்டும்?’ என்ற வழிகாட்டுதலுக்காக என்னிடம் வந்தார்கள். நாங்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டோம், அடுத்து என்ன படிக்கலாம்? என்று ஒரே குரலாய்க் கேட்டார்கள்.
நீங்கள் ஏன் படிக்கவேண்டும்? என்று நான் கேட்டேன், அதிர்ந்து போனார்கள். என்ன படிக்க வேண்டும் என்பதற்குப் பல இணையதளங்களும், வழிகாட்டிப் பயிற்சி மையங்களும் துணைபுரிகிறார்கள். ஆனால் நாம் ஏன் படிக்க வேண்டும் என்பதற்கான தேடல், குழந்தைகளிடம் உருவாக்கப்படவில்லை.
விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி அவர்களை வாசிப்பு இயக்கத் தோழர்களாக ஒருங்கிணைத்து தினமும் நூறு பக்கங்கள் வாசிக்க வேண்டும் என்ற சுய விதியை உருவாக்கச் செய்தோம். நூல்களை அவர்களே தேர்வு செய்தார்கள். முதலில் கதைப் புத்தகங்களைத் தேர்வு செய்து வாசித்தார்கள். வரலாற்று நூல்களையும், ஆளுமை உருவாக்க நூல்களையும் ஆர்வத்தோடு வாசித்தார்கள். தாங்கள் வாசித்ததைக் குழுவாகத் திறனாய்வு செய்தார்கள், எழுத்தாளர்களோடு தங்கள் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். வாசிப்பைத் தூண்டும் விதமாகச் சில சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. எட்டு வாசிப்பு இயக்கத் தோழர்களும் இணைந்து பாலபுரஸ்கர் சாகிதிய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய 50 நூல்களை வாசிப்பு இயக்கத் தோழர்களுடன் இணைந்து வாசித்துத் திறனாய்வு செய்தார்கள். 20.04.2024 அன்று காலை கோவில்பட்டியில் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களை நேரில் அவர் வீட்டிற்கே சென்று சந்தித்து, தாங்கள் வாசித்த நூல்கள் குறித்துத் திறனாய்வு செய்தார்கள். எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் துணைவியாரோடு உரையாடல் செய்தார்கள்.
• தாலி மறுப்பு, சமயச் சடங்கு மறுப்பு, வரதட்சணை மறுப்புத் திருமணங்கள் எப்படி நடைபெறும்? அதைச் செய்ய குடும்பங்களில் அனுமதி உண்டா?
• திருமணங்களால் பெண்களின் உரிமை பறிக்கப்படுகிறதா?
• குழந்தைகளின் சாதிமறுப்புத் திருமணங்களை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?
மேற்கண்ட கேள்விகள் குழந்தைகளின் உள்ளத்தில் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களைச் சந்தித்தபோது ஏற்பட்டன. எழுத்தாளரின் நேரடி அனுபவம் என்பது குழந்தைகளுக்கு வாசிப்பை எளிமையாக்குவதோடு எழுத்துகளுக்கு உயிர் சேர்க்கிறது. வாசிப்பு குழந்தைகளிடம் என்ன செய்கிறது என்றால், பல கேள்விகளை உருவாக்குகிறது. குழந்தைகள் வாசிப்பைப் பழக்கமாக்கியவுடன் அவர்களிடம் சில கேள்விகள் இயல்பாக எழுகின்றன. அதற்கான விடையை அவர்கள் புத்தகங்களில் தேடுகிறார்கள். உதயசங்கர் எழுதிய ஆதனின் பொம்பை, பீம்பேட்கா என்ற இரண்டு நூல்களையும் வாசித்த பின்பு மிசோலிகா என்ற குழந்தை எழுப்பிய கேள்விகள்… இவை.
- கடவுள் உலகைப் படைக்கவில்லையா?
1.கடவுள் ஆதாம் ஏவாளைப் படைத்தார் என்று நாங்கள் விவிலியத்தில் படித்திருக்கிறோம். ஆனால் அறிவியல்பூர்வமாக மனிதன் தோன்றியது பற்றி நாங்கள் அறிந்துகொள்ளவில்லையே?
2. ஒரே குழப்பமாக உள்ளது? எதை நம்புவது?
3. இதுதான் வாசிப்பின் வெற்றி எனக் கூறலாம். நாம் எதையும் சரி, தவறு என்று கூறுவதைக் காட்டிலும் அவர்களிடம் இயல்பாகவே உரையாடல் நிகழவேண்டும்.
பன்னிரண்டாம் வகுப்புவரை பூமியின் தோற்றம் பற்றிய அறிவியல்பூர்வமான விவாதம், கலந்துரையாடல் நிகழாமலே குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறுவது கல்விமுறையின் அபத்தம். அறிவியல் சிந்தனைகள் குழந்தைகளிடம் உருவாகாமல் சமயச் சிந்தனைகள் மூளையை மழுங்கடித்துவிடுகின்றன.
அறிவு என்பது திணிக்கப்படும் ஒன்றல்ல, திணிக்கப்படும் கல்வி கேள்வி கேட்க இயலாமல் ஒடுங்கிப்போகும் மனிதர்களையே உருவாக்குகிறது என்பார் பாவுலோ பிரையர். வாசிப்பு, குழந்தைகளிடம் மரபுகளுக்கு எதிரான கேள்விகளை உருவாக்குகின்றது என்பது உண்மை. அந்தக் கேள்விகள்தாம் உலகைச் சுத்திகரிக்கும். பழைமைவாத, அடிப்படைவாதச் சிந்தனைகளைக் குழந்தைகளின் கேள்விகள்தாம் மறு சுத்திகரிப்புச் செய்யும். அதற்கான வாசிப்பை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.


எங்கள் வீட்டிலிருந்து உறவினர்கள் வீட்டிற்கு மாலை ஆறு மணிக்குமேல் செல்லும்போது அப்பாவை அழைத்துச் செல், கல்லறைத் தோட்டம் பக்கம் செல்லும்போது சிலுவை அடையாளம் வரைந்து மனவலிமை செபத்தைச் சொல்லி விட்டுச்செல் என்று என் அம்மா என்னிடம் கூறினார்.
1.என்னிடம் கூறியதை, அம்மா ஏன் தம்பியிடம் கூறவில்லை? பேய், பெண்களை மட்டும்தான் பயமுறுத்துமா?
2.நான் சிலுவை அடையாளம் வரைந்தால் ஓடிப்போகும் பேய்கள், கல்லறையில் நடப்பட்டிருக்கும் சிலுவைகளைக்கண்டு பயப்படுவதில்லையா? அந்தச் சிலுவைகளுக்கு வலிமை இல்லையா?
3.பேய்கள் இருட்டில் மட்டும்தான் வருமா? என் அப்பாவை எதுவும் செய்யாமல் என்னை மட்டும் தாக்குமா?
பேய்க் கதைகள் அத்தனையுமே மூடநம்பிக்கைகள் தானா?
இப்படி பல கேள்விகளை எழுப்பியவர்கள் தொடர்ந்து தேடலைத் தொடர்கிறார்கள். வாசிப்பு என்பது மனப்பாடம் செய்வதல்ல, வாசித்தவற்றை உள்வாங்கி மீண்டும் வெளிப்படுத்துவதே என்பார் பாவுலோபிரையர்.
பூநூல் என்றால் என்ன?
தீண்டாமை என்றால் என்ன?
வர்க்கம் என்றால் என்ன?
இடஒதுக்கீடு என்றால் என்ன?
இன்னும் பல கேள்விகளைக் கேட்டார்கள். அதற்கான விடைகளைப் புத்தகங்களில் தேடத் தொடங்கியுள்ளார்கள். குழந்தைகள் எல்லா வகையான புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என்பது சரி என்றாலும் அவர்கள் யாராக மாறவேண்டும் என்பதை நாம் வடிவமைக்க வேண்டியுள்ளது.
மாமேதை மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றவர்களை உள்வாங்கிச் சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் குழந்தைகளை உருவாக்க வேண்டியது நமது பொறுப்பு என்பதை உணர்வோம்.
இடதுசாரி/ வலதுசாரி, முதலாளி/ தொழிலாளி, ஆண்டான் அடிமை, ஆதிக்கசாதி/ பட்டியல்சாதி இந்த முரண்பாடுகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
கதைகள் தொடக்கநிலை வாசிப்புக்கு மட்டுமே தேவை என்பதையும், சிந்திக்கத் தூண்டவும், எழுத்துகளை அறிமுகம் செய்யவும் கதைகள் பயன்படும், என்றாலும் கடைசிவரை கதைகள் என்ற பெயரில் புராணங்களையும், சமய நூல்களையும் திணிப்பது தடுக்கப்பட வேண்டும்.
புத்தகக் காட்சியில் பகவத் கீதை இலவசமாகக் கிடைக்கிறது. தாய் நாவல் ரூ.350-க்கு கிடைக்கிறது. குழந்தைகள் எப்படிச் சிந்திப்பார்கள்.
குழந்தைகளிடம் சிந்தனையைக் கொடுக்க வேண்டும், அதுவும் சமூகம் சார்ந்த சிந்தனையைக் கொடுக்க வேண்டும் என்பதில் நாம் உள்ளுறுதியோடு வாசிப்பை அறிமுகம் செய்கிறோமா?
“கல்லாமையை ஒழித்தல் என்பது வாசித்தல், எழுதுதல் போன்றவற்றை தொழில்நுட்பங்களாக கற்றுக்கொடுக்கிற விஷயம் அல்ல. இந்தத் திறன்களை உணர்வுரீதியாய் பெறுவதே ஆகும். என்ன படிக்கிறோம்? என்ன எழுதப்பட்டுள்ளது? ஏன் எழுதப்பட்டுள்ளது? என்கிற கேள்விகளோடு எழுதப்பட்டுள்ளதை வாசிப்பதாகும். வாசிப்பு என்பது வார்த்தையின் மீது நடை போடுகிற விஷயம் அல்ல. நாம் எதை வாசித்துக் கொண்டிருக்கிறோமோ, அதை மறுமுறை எழுதுகிற வேலை அது. பாடத்தை அது எழுதப்பட்ட சூழலில் மட்டுமல்ல, வாசிக்கிற சூழலிலும் வைத்து புரிந்து கொள்ளுகிற வேலை அது. வாசிப்பவர் பாடத்திற்கு முன்னால் பணிந்து கிடப்பதில் பொருள் இல்லை, மாறாக பாடத்தைக் கேட்க வேண்டும்; அதாவது கேள்விக்குள்ளாக்க வேண்டும், பாடவரிகள் வெளிப்படுத்தும் வளமையான சொல்லாடல்கள் மையங்களைத் தாண்டி பாடத்தின் உபரி அர்த்தங்கள் வெளிப்பட வேண்டும்; மாணவர்கள் அதிகாரத்தைப் பறிகொடுத்துள்ள நிலை போய் அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற பாவுலோ பிரையர் வரிகளை மனதில் கொண்டு குழந்தைகளிடம் வாசிப்பை முன்னெடுப்போம்.