20.06.2024 அன்று பகல் 3.00 மணியளவில் ‘கடலும் போராளிகளும்’ சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை என்ற கடைக்கோடி கடலோர கிராமத்தில் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. திலகவதி தலைமை வகித்தார். சிறப்புவிருந்தினராக பாரதிபுத்தகாலயம் நாகராஜன் கலந்துகொண்டு நூலின் முதல் பிரதியை வெளியிட்டார். காலை முதல் மாலை வரை பள்ளியில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. பள்ளியில் அனைத்து மாணவர்களும் 20 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 20 எழுத்தாளர்கள் பெயர்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் தாங்கள் வாசித்த நூல்களை குழுவில் பகிர்ந்தார்கள். மாலை 3.00 மணியளவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கடலும் போராளிகளும் சிறுகதை தொகுப்பில் கதை எழுதிய ஏழு இளம் பெண் எழுத்தாளர்கள் உள்பட அனைவரும் கலந்துகொண்டனர். தொடக்கமாக பள்ளி தலைமை ஆசிரியர் வாழ்த்துரை வழங்க, தோழர் மெலோசா, நூலினை அறிமுகம் செய்தார்.

கடலோர மீனவ சமூகத்தின் பெண்ணின் வலிகளையும், அவர்களின் தொழில் சார்ந்த சிக்கல்களையும், போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தும் நல்ல ஆவணமாக இத்தொகுப்பு உள்ளதைக் குறிப்பிட்டார். புதிய இளம் எழுத்தளார்கள் எழுதியது சிறப்பு என்பதோடு தங்கள் வாழ்வின் அனுபவங்களை கதைகளாக்கியது அருமையானது என்று பதிவு செய்தார்.
நூலினை தோழர் நாகராஜன் வெளியிட முதல் பிரதியை பள்ளி தலைமை ஆசிரியரும், மாணவர்களும் பெற்றுக் கொண்டனர். தோழர் தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். நாகராஜன் பேசும்போது எல்லா ஊர்களிலும் துணிக்கடை உள்ளது, நகைக் கடை உள்ளது, மளிகைக் கடை உள்ளது ஏன் புத்தகக் கடை இல்லை? என்ற கேள்வி மூலம் மாணவர்களை சிந்திக்க தூண்டினார். நாம் அறிவைத் தேடவேண்டும். பள்ளிகளில் நடைபெறும் புத்தக கண்காட்சிகள் சமத்துவ சமுதாயத்திற்கான நம்பிக்கையை நமக்குத் தருகிறது என்று பேசினார். பாரதி புத்தகாலயத்தின் நூல்களை 50 சதவீதம் தள்ளுபடியில் மாணவர்களுக்கு வழங்கியதற்கு பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்தார்கள். பள்ளிகளில் நூல் வெளியீட்டுவிழா நடத்துவதும், நூல் அறிமுகம் செய்வது மாணவர்களிடம் புதிய பண்பாட்டை உருவாக்கியது. இதில் 600 மாணவர்களும் 32 ஆசிரியர்களும் கலந்துகொண்டார்கள். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.