நிகழ் அய்க்கண்
இந்நூலானது, இந்திய சுதந்திரத்திற்கு முன்பான வேளாண்மையின் நிலை பற்றி நேரு முதல் மோடி வரையிலான காலகட்டத்தில் 19 தலைப்புகளின்கீழ் கட்டுரைகளையும், 26 அட்டவணைப் பட்டியல்; 11 வரைபடப்பட்டியலையும் உள்ளடக்கியுள்ளது. இத்தகையத் தலைப்புகளில் கூறியுள்ள கருத்துக்களைப்பற்றி ஒவ்வொன்றாக சுருக்கமாக்கிக் கீழே தரப்பட்டுள்ளது. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் மு.நாகநாதன், இந்திய வேளாண்துறையானது கிழக்கிந்தியக் குழும ஆட்சியில் நூறு ஆண்டுகளும் ( 1757-1857); பிரித்தானியப் பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ் 90 ஆண்டுகளும் (1857-1947) இருந்து வந்ததன் விளைவாக, இந்தியப் பொருளாதாரத்தின் அனைத்து வளர்ச்சிக் காரணிகளும் முடக்கப்பட்டதையும்; இந்திய வள ஆதாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இங்கிலாந்து எடுத்துச்செல்லப்பட்டு விற்கப்பட்டதையும் விவரித்துக்கூறுகிறார்.

இதன் தொடர்ச்சியாக நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, பிரதமர் நேரு முதல் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்ததையும் கூறுகிறார். 1990களுக்குப் பிறகு தாராளமயவாதம், தனியார் மயமாதல், உலக மயமாதல் எனக் குறிப்பிடப்படுகிற கொள்கைத் திட்டத்தை இந்தியா ஏற்றபிறகு வேளாண்துறை சந்தித்துவரும் பிரச்சினைகளையும் எடுத்துக்கூறுகிறார். இந்திய வேளாண்மையானது 11,000 ஆண்டுகள் வரலாற்றுப் பின்புலம் கொண்டதாகும். மேலும் பண்பாடு, பாரம்பரியம் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டதும் ஆகும். இந்திய வேளாண்மையானது, பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அடிப்படையில் வேலைவாய்ப்பினை அளிப்பதாகவும், மக்களுக்கான உணவு தானியப்பொருள்களை விளைவிப்பதாகவும், தொழில்துறைக்கான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வதாகவும், நாட்டின் ஏற்றுமதியில் முக்கிய பங்களிப்பினை வழங்குவதாகவும் விளங்குகிறது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஐரோப்பிய நாடுகளின் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, வேளாண்மையில் புதியவகைப் பயிர்களை சாகுபடி செய்ய வலியுறுத்தப்பட்டது. இதன் காரணமாக 1769-1943 காலகட்டத்தில் நாட்டின் பெரும்பகுதி மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி, வேளாண்மையின் மீதான வரி அதிகளவு இருந்ததால் விவசாயிகள் பெருந்துயரத்திற்கு ஆளானார்கள். நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில், வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 1960களில் பசுமைப்புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபின் கோதுமை, நெல் உற்பத்தியானது 80 சதவீத அளவுக்கு அதிகரித்து உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்தது. 1980 களில் மஞ்சள் புரட்சியின் விளைவால், சமையல் எண்ணெய் உற்பத்தி அதிகரித்தது. 1990களில் பருப்பு புரட்சியின் விளைவால் 2010களில் பருப்பு உற்பத்தியில் தன்னிறைவையடைந்தது. 2000வது ஆண்டில் உணவு உற்பத்தியானது ஏற்றுமதியினை நோக்கியதாக இருந்தது. 2010ஆம் ஆண்டு, அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
சுதந்திரத்திற்கு முன்பு வேளாண்மையின் நிலை எனும் கட்டுரையில், காலனி ஆதிக்கத்தில் கிழக்கிந்திய நிறுவனம், பிரிட்டிஷ் ஆட்சியின்போது வேளாண்மைக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்; வேளாண்மைக்கு விதிக்கப்பட்ட வரி; விவசாயிகள் கடன் பெற்று விவசாயம் செய்தது; பஞ்சத்தின் கொடுமைகள்; விவசாயிகள் கலந்துகொண்ட சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. நேருவும், வேளாண்மை உள் கட்டமைப்பும் எனும் கட்டுரையில், இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்றபோது, காலனியாதிக்கத்தினால் சீர்குலைந்திருந்த தேசத்தினைக் கட்டமைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். குறிப்பாக, வேளாண் மேம்பாட்டிற்காக, நீர்ப்பாசன
வசதி, மின்சாரம் போன்றவற்றின் அவசியத்தினை உணர்ந்து வேளாண்- தொழில்துறைக் கட்டமைப்புக்களை மேம்படுத்தியதைக் கூறுகிறது.
லால்பகதூர் சாஸ்திரியும் உணவுப்பற்றாக்குறையும் என்கிற கட்டுரை, நேருவிற்குப் பிறகு பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி உணவுப் பற்றாக்குறையினைத் தீர்ப்பதற்கு குறுகியகாலத் தீர்வுகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல், நீண்டகால நோக்கில் பசுமைப்புரட்சிக்கான அடித்தளத்தினை உருவாக்கியது பற்றி விவரிக்கிறது. இந்திரா காந்தியும் பசுமைப்புரட்சியும் எனும் கட்டுரையானது, கடுமையான உணவுப்பற்றாக்குறை,விலைவாசி உயர்வு, வறுமை, தீவிரவாதச் சவால்களை எதிர்கொண்ட இந்திரா காந்தியால், கிராமப்புற மேம்பாடு; உணவுப்பற்றாக்குறையைப்போக்க நீண்டகால அணுகுமுறை ஆகிய இரு யுக்திகளை கையாண்ட விதம்பற்றிப் பேசுகிறது.
ஜனதா அரசும், வேளாண்மையும் என்கிற கட்டுரை, 1977-1979 காலகட்டத்தில் நிலம், குத்தகைச் சீர்திருத்தம், கிராமப்புற மேம்பாடு, வேளாண்மை ஏற்றுமதிக்கான அடித்தளம் அமைத்தது என பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதினை விவரிக்கிறது. ராஜீவ் காந்தியும் மஞ்சள் புரட்சியும் எனும் கட்டுரையானது, ராஜீவ் காந்தி வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்பங்களின் அவசியத்தை உணர்ந்து செயல்படுத்தியதையும், உணவு உற்பத்தியில் சுய சார்பு அடைந்து அதனை எற்றுமதி செய்ததையும் குறிப்பிடுகிறது. மஞ்சள் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு தாவர எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது பற்றிக்கூறுகிறது. வி.பி.சிங் குழப்பமான அரசியல் நிலையும் வேளாண்மையும் எனும் கட்டுரையில், மிகக்குறைந்த காலமே ஆட்சி செலுத்திய இவரது காலமானது, விலைவாசி உயர்வு; அன்னியச்செலவாணிக் கையிருப்பு காலியாகிப்போனது போன்ற காரணங்களால் வேளாண்மை பெரும் சவால்களை சந்தித்ததுபற்றி விளக்கியுள்ளது.
பி.வி நரசிம்மராவின் பொருளாதார சீர்திருத்தங்களும் வேளாண்மையும் என்கிற கட்டுரையானது, பி.வி.நரசிம்மராவ் பிரதமராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, பொருளாதார சீர்திருத்தங்களான தடையற்ற வணிகம், மானியங்களைக் குறைப்பது; தொழில் தொடங்கும்போது ஏற்படும் தடைகளைக் களைவது; தனியார் முதலீட்டை ஊக்குவிப்பது போன்ற யுக்திகள் கடைபிடிக்கப்பட்டதையும், இதனால் வேளாண்மை இடுபொருள்களின் விலை உயர்ந்ததுபற்றி விவரிக்கிறது. ஐக்கிய முன்னணி அரசும் வேளாண்மையும் என்கிற கட்டுரையில், ஐக்கிய முன்னணி அரசின் 1996-98 காலகட்டத்தில் கிராமப்புற மற்றும் வேளாண்மை மேம்பாட்டிற்கு முன்னுரிமையளிக்கப்பட்ட விதம். குறிப்பாக வேளாண்மை ஏற்றுமதி, கிராமப்புறக் கடன், வேளாண் மானியம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்ததுபற்றிக் கூறப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக்கூட்டணியும் வேளாண்மைக்கான கிராமப்புற உள்கட்டமைப்பும் எனும் கட்டுரையில், 1996-2004 வரை பதவியிலிருந்த வாஜ்பாய் காலகட்டத்தில், கிராமப்புறக் கட்டமைப்பு மேம்பாடு; கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரிப்பு; வட்டார ஏற்றத்தாழ்வுகள் குறைப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவமளிக்கப்பட்டது பற்றி விவரிக்கிறது. ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சிக்காலத்தில் புதிய தாராளமயக் கொள்கையும், வேளாண்மையும் என்கிற கட்டுரையானது, 2004ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற மன்மோகன் சிங் புதிய தாராளமயமாக்கல் கொள்கையை அமல்படுத்தியதையும், இரண்டாம் கட்ட பசுமைப்புரட்சி அதாவது, பழங்கள், காய்கறிகள், தோட்டப்பயிர்கள் உற்பத்தியினை அதிகரிப்பதனை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டதையும், வேளாண்மையில் தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறது. நரேந்திர மோடியும் வேளாண்மைச்சந்தைப் பொருளாதாரமும் என்கிற கட்டுரை, பருவம் தவறிய மழை, சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு போன்றவற்றுக்கு, விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட வழிகள் யாவும் பொய்த்துப்போயின. இது மட்டுமல்லாது, பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, புதிய வேளாண் சட்டங்களினால் விவசாயம் கடும் பாதிப்புக்குள்ளானது பற்றி விவாதிக்கிறது.
வேளாண்மை விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையினை அரசு அளிக்கிறதா? எனும் கட்டுரையில், குறைந்தபட்ச ஆதரவு விலையானது, பசுமைப்புரட்சி நடைமுறைப்படுத்தப்படும்போது விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வேளாண் உற்பத்திப்பொருட்களுக்கான செலவு மற்றும் விலைக்கான வேளாண் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஒன்றிய அரசு அறிவிக்கிறது. தற்போது 23 வகை வேளாண் விலைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்பட்டு வருவதை விவரிக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையினைத் தீர்மானிப்பதில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுக் காரணிகளின் தாக்கமும் உள்ளடங்கியுள்ளது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
இந்திய வேளாண்மைக்கடனும் விவசாயிகளின் தற்கொலையும் என்கிற கட்டுரையானது, இந்திய விவசாயிகளில் பெருமளவுக்கு சிறு, குறு நடுத்தர விவசாயிகள் ஆவர். இவர்களின் பயிர்த் தொழிலுக்குத் தேவையான கடனை, வங்கி மற்றும் முறைசாரா நிதி நிறுவனங்களிடமும் பெறுகின்றனர். அவ்வாறு பெறுகிறவர்கள், முறைசாரா வங்கிகளிடமிருந்து மிகக்கூடுதலான வட்டி வீதத்திற்கு கடனைப்பெற்று திருப்பிச்செலுத்த முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை கடந்த 25 வருடங்களில் அதிகரித்திருக்கிறது. விவசாயத்தொழில் நசிவு; கடன் அதிகரிப்பு; விவசாயத்திற்கான கால்நடைகள் குறைவு; இயந்திர மயமாக்கல்; விவசாயத்தைவிட்டு வெளியேறுவது போன்ற காரணங்களால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருக்கிறது என எடுத்துச்சொல்கிறது..
இந்திய வேளாண்மைப் பயிர்க்காப்பீட்டு திட்டங்களும் சிக்கல்களும் எனும் கட்டுரை, வேளாண் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு கொள்கைகளையும், திட்டங்களையும் அமல்படுத்தி வரினும், பெருமளவிற்கான விவசாயிகள் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் பலனடைய முடிவதில்லை. இந்த அடிப்படையில் கொண்டு வரப்பட்டதுதான் பயிக்காப்பீட்டுத் திட்டமாகும். பயிர்ச்சாகுபடியினால் ஏற்படும் இழப்பு மற்றும் வேளாண் விலைகளினால் ஏற்படும் நிலையற்றபோக்கினை சரிசெய்ய இத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்கிறது.
மேலும், இத்திட்டத்தினால், இடுபொருட்களின் விலை உயர்வு; ஒன்றிய, மாநில அரசுகளின் காப்பீட்டுத் திட்டங்கள்; காப்பீட்டினைப்பெறுவ்திலுள்ள சிக்கல்கள் மற்றும் தீர்வுகள் பற்றியும் அலசுகிறது. இந்தியாவின் வேளாண்மை சூழலியல் மாறுபாடுகள் என்கிற கட்டுரையில், இந்திய வேளாண்மையில் அண்மைக் காலமாக பூச்சிக்கொல்லி உரங்கள், காலநிலை மாற்றம், இடுபொருட்கள் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. குறிப்பாக, நீர்ப்பாசன முறைகளினால் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்வாறு நிலத்தடி நீர்மட்ட அளவினைப் பாதிப்படையச் செய்துள்ளது எனவும், அரசாங்கம் இதனை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது பற்றியும் அலசப்பட்டுள்ளது.
உணவுப் பணவீக்கம் எனும் கட்டுரையானது, அண்மைக்காலமாக, உலக அளவிலும், தேசிய அளவிலும் உணவு விலையானது மிகவும் அதிக அளவில் அதிகரித்து வருவது பற்றியும், இதனால், ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கின்றனர் எனவும் விவரிக்கிறது. மேலும் கோவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்ட விளைவு; ரஷ்ய-உக்ரைன் போர்; பெட்ரோல்-டீசல் விலை உயர்வு; உணவுப்பொருள்களின் விலை உயர்வு போன்றவையே உணவுப் பணவீக்கத்திற்கான காரணம் என்கிறது.
வேளாண்மைச் சிக்கல்களும் தீர்வுகளும் என்கிற கட்டுரையானது, இந்தியா சுதந்திரம் அடைந்தபின் அரசு வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இதனால், வேளாண்மை உணவு தானியப் பற்றாக்குறையிலிருந்து தன்னிறைவையும், அதனைத் தொடர்ந்து வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாற்றமடைந்தது. தற்போதைய நிலையில் பன்னாட்டு அளவில் உணவு தானிய விளை பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பதும், உலகளாவிய அரசியல் சூழல் நிர்பந்தங்கள் போன்ற நிலைகளினால் இந்திய வேளாண்மை பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதையும் சுட்டிக்காட்டுகிறது.