சுகன்யா ஞானசூரி
தொடக்கம்:
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப்பயிற்சிக்கு புத்தக வாசிப்பு – சிக்மண்ட் பிராய்டு.
புத்தக வாசிப்பு குறித்துப் பலரும் பல கருத்துகளைச் சொல்லியிருந்தாலும் சிக்மண்ட் பிராய்டு கூறியிருக்கும் வரிகள் மனப் பயிற்சிக்கான திறப்பினைத் தருகின்றன. மனம் சரியாக இருந்தால் தேகமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதே அறிவியல் சொல்லும் உண்மை. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமான தாக்கத்தினை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. சில புத்தகங்கள் மனபாரம் தீர்கவல்லவை. சில புத்தகங்கள் வாழ்வியலின் சூழலை மாற்றும் தன்மையானவை. எது எப்போது யாரைச் சேரும் என்பது மட்டுமே ஒரு புரியாத புதிர். அதைக் கண்டடைவதே ஒரு வாசிப்பாளரின் வெற்றியாகும். எனக்கு அப்படியான திறப்பினைத் தருகின்றன முனைவர் முபீன் சாதிகா அவர்களின் கட்டுரைத் தொகுப்புகள்.

ஒரு கவிதைத் தொகுப்பினை வாசிப்பது என்பது ஒரு வகையான பயிற்சி என்றால், ஒரு சிறுகதைத் தொகுப்பினை வாசிப்பது மற்றொரு வகையான பயிற்சி. அதோடு நாவல்களை/ புதினங்களை, திரைப்படங்களை, ஓவியங்களை, சிற்றிதழினை என பலதரப்பட்ட நூல்களை ஒரு தொகுப்பாக வாசிப்பது ஒரு கலைக்களஞ்சியத்தினை வாசிப்பதற்கு ஒப்பானது. 240 பக்கங்களில் 30 கட்டுரைகளை ஒரு பெரும் தொகுப்பாக எழுதியுள்ளார் எழுத்தாளர், ஓவியர், கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என பல முகங்களைக்கொண்ட முனைவர் முபீன் சாதிகா அவர்கள். 2023 டிசம்பர் அன்று போதிவனம் வெளியீடாக வந்துள்ளது ‘இரட்டை இணைகளின் ஒருமையும் பிளவும்’என்ற அவருடைய கட்டுரைத் தொகுப்பு.
பிரதி வாசிப்பிலிருந்து, சில கூறுகளின் அடிப்படையில் அணுகலாம் என எண்ணுகிறேன். தன்னிலை/ மற்றமை; பாலினங்களின் நிறுவனமயமும் அவற்றின் வெளிகளும்; சாதி, மதம், சமூகம், நுண்பாசிசம்; மறுவாசிப்பு, ஒப்பீடு புதிய வெளிப்பாடு.
தன்னிலை/மற்றமை:
தமிழ்க் கவிதைகள் சந்தித்துக்கொண்டிருக்கும் சிக்கலாக நான்/நீ என்ற தன்னிலை/மற்றமை விளக்கம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தன்னிலையை முன்வைத்து எழுதப்படும் கவிதைகள் மற்றமையால் விளக்கமடைவதைப் பற்றியவையாக இருக்கின்றன (முபீன் சாதிகா, நுட்பம் இதழ் 14இல்,). இச்சிக்கலை முதலில் ஆரம்பித்து வைத்தவர்களில் நகுலனே முதன்மையானவராக இருக்கிறார்.
நகுலன் என்னும் தன்னிலையே சுசீலா எனும் மற்றமையால் துலக்கமடைகிறது. நகுலனின் கவிதைகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. மேலும் சண்முகத்தின் ஈர்ப்பின் பெருமலர் தொகுப்பிலும், கயல்விழியின் குளிர் இருளுக்கு அவள் விழிகளின் செந்நிறம் தொகுப்பிலும், வினோதா கணேசனின் கவிதைகளிலும் இத்தன்மையான உரையாடல் நிரம்பி இருந்தாலும் ஒவ்வொரு தொகுப்பும் ஒவ்வொரு பொருளாம்சத்தினைக்கொண்டு பெரும் கதையாடலை நிகழ்த்துகின்றன என்று அந்தக் கவிதைத் தொகுப்பு குறித்த கட்டுரைகளில் குறிப்பிடுகிறார் ஆசிரியர் முபீன் சாதிகா.
கவிதைகளுக்குள் மட்டுமல்லாமல் ம. அரங்கநாதனின் கதைகளுக்குள்ளும் முத்துக்கறுப்பன் பாத்திரப் படைப்பின் தன்னிலையாக்கமும், மற்றமையாக்கமும் நிகழ்வதை அவரது தொண்ணூறு சிறுகதைகளை வாசித்து விளக்கியுள்ளார் அவர்.
பாலினங்களின் நிறுவனமயமும் அவற்றின் வெளிகளும்:
ஆண், பெண் பாலினங்கள் கொண்டுள்ள உறவுகளும் அவர்களுக்கிடையேயான உணர்வுகளும், உணர்வற்றவையுடனான அவர்களின் உறவுகளும், அவை ஏற்படுத்தும் வெளிகளும் ஒரு புதிய அம்சமாக அமைகின்றன. இதனை டெல்யூஜின் வார்த்தைகளில் சொல்வதானால் உணர்வு என்பது இருப்புக்குரிய அம்சம் அல்ல. தவிர உணர்வற்றதுடன் குறிப்பிடத்தக்க உறவையும் அது கொண்டிருக்கிறது. ஆண்/பெண் நான்/நீ விழி/ஒளி என்ற முதல் வகைமையோடு ஒன்றியும், பிளவுபட்டும் இரட்டை இணைகளின் ஒருமையும் பிளவும் ஆகிறது என்பதை பாரதியின் பாடல் வரிகளிலிருந்து எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர்.
இதில் மற்றொரு அம்சமாக கி. ராஜநாராயணின் மூன்று சிறுகதைகளில் பெண்களின் இயங்கு பரப்பை தெய்வமாதல், பேயாதல் (பக்கம்: 115) என்ற நோக்கிலான வாசிப்பு எதார்த்தம் கொண்டதாக இருக்கிறது. பெண் என்னும் அம்சம் உற்பத்தி அலகாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இந்த அலகை மாற்றி எழுத முற்பட்டால் சமூகம் விலக்கி வைக்கவே முயல்கிறது. அதாவது ஆண் மையவாதம் பெண்ணை விளிம்புக்குத் தள்ளுகிறது என்பதை ஆசிரியர் அந்தக் கதையை வாசித்துக் காட்டுவதன் மூலம் வெளிப்படுகிறது. இருபத்தியெட்டு பெண் எழுத்தாளர்களின் முப்பது சிறுகதைகள் கொண்டஉடைபடும் மௌனங்கள் தொகுப்பின் மீதான கட்டுரையாசிரியரின் வாசிப்பு பெண்மையின் வரையறையும், அதன் இயங்கு வெளியும் குறித்த பெரும் உரையாடலை நிகழ்த்துகிறது.

பாரதியின் குயில் பாட்டு பெண் விடுதலையின் அசலான வாசிப்பு எனலாம். மணிமேகலையில் பெண்ணின் துறவை ஒரு விடுதலையாகக் கொண்டால் ம.அரங்கநாதனின் சிறுகதையில் முதுக்கறுப்பனின் துறவு மற்றொரு விடுதலையைக் கோருகிறது எனலாம்.
சாதி, மதம், சமூகம், நுண்பாசிசம்:
சாதி, மதம், சமூகம், நுண்பாசிசம் அனைத்தும் அதிகாரம் ஒரு நிறுவனமயம் ஆகுவதற்கு துணைக் கருவிகளாகக் கொள்கின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி நிறுவனமாக அதிகாரத்தைக் கட்டி எழுப்புகின்றன அல்லது அதிகாரத்தைக் கட்டி எழுப்புவதற்கு இவை துணை அலகாகின்றன. அதிகாரம் இருக்கும் இடத்தில் ஆசை இருக்கும்; ஆசை இருக்கும் இடத்தில் அதிகாரம் இருக்கும் என்கிறார் டெல்யூஜ். இந்த நிறுவனமயமாகும் நுண்பாசிச அதிகாரத்துக்கு எதிரான எதிர்ப்பும் இருக்கும் என்ற பூக்கோவின் வார்த்தையையும் அவதானத்தில் கொள்ளவேண்டும்.
மத மேலாண்மையை முன் வைத்தல், சாதிய ஒடுக்குமுறையை விமர்சித்தல், பாலியலின் முடக்கத்தை கருத்தாக்குதல் என்ற வகையிலான கோணங்களில் ப்ரதிபா ஜெயச்சந்திரனின் கரசேவை சிறுகதைத் தொகுப்பின் மீதான வாசிப்பு ஒரு பிரிவினரின் தவறான கொள்கைப் பிடிப்பினை படம் பிடித்துக் காட்டுகிறது.
குறிப்பாக விளிம்புநிலைச் சமூகங்கள் பாசிஸ்டுகளுடன் கூட்டுச் சேர்வதன் அரசியலை, சாதிய மத போக்கின் நிலையை தெள்ளத் தெளிவாக்குகிறது. தமிழவனின் ஷாம்பாலா மீதான கட்டுரையாசிரியரின் வாசிப்பு நுண்பாசிசத்தின் போக்குகளை வெளிப்படுத்தும் குறியீட்டு வடிவிலான வாசிப்பு எனலாம்.
இந்துமதக் கட்டமைப்பிலும் பௌத்த மதக் கட்டமைப்பிலும் உள்ள வேறுபாடுகளை மணிமேகலைக் காப்பியத்தின் மீதான வாசிப்பின் வழி நூலாசிரியர் விவரித்திருப்பது சிறப்பானது. சாதிய அழகியலின் அரசியலை நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தினை முன்வைத்து ஒரு தெள்ளிய நீரோட்டம்போல் விவரித்துள்ளார்.
மறுவாசிப்பு, ஒப்பீடு புதிய வெளிப்பாடு:
வரலாற்றை மறுவாசிப்பு செய்யவேண்டிய கடப்பாட்டை தற்போதைய அரசியற் செயற்பாடுகள் அதிகரிக்கச் செய்கின்றன. அதேவேளை வளர்ச்சிப் போக்கில் உள்ள விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் இவற்றிற்கு துணைபோகிறது. இவற்றை மாற்ற வேண்டும் எனில் சரியாகவும், உண்மையாகவும், ஏன் நேர்மையாகவும் மறுவாசிப்புகளை அனைத்து வழிகளிலும் எண்ணிமப்படுத்த வேண்டும். இத்தொகுப்பில் மணிமேகலை காப்பியத்தின் மீதான வாசிப்பு பல்வேறு திறப்புகளைச் செய்கிறது.
அதேபோல் இராமாயணத்துடன் ஒப்பீடு செய்து வாசித்திருப்பது ஆண் நிலை, பெண் நிலைச் சித்தாந்தங்களின் மீதான ஒப்புமைகளையும், பிளவுகளையும் கருத்தாக்கம் செய்துள்ளார். மேலும் மனித சிந்தனைகளைக் குறித்த கருத்துக்களை உருவாக்கியதில் மணிமேகலைக் காப்பியம் முதன்மையானது என்கிறார் நூலாசிரியர். போர்ஹேஸின் டான் கிஹாட்டேயும் பியர் மெனார்டின் போர்ஹேஸும் என்ற சிறுகதை போர்ஹேஸின் மறுவாசிப்பில் உருவாகிய பிரதியாக மிளிர்கிறது. டான் கிஹாட்டேவை திரும்பத் திரும்ப வாசித்ததின் மூலம் ஒரு புதிய பிரதியை எழுதிப் பார்க்கிறார் போர்ஹேஸ். இது மதங்களின் மீதான அரசியலை விமர்சிப்பதாகவும் கொள்ளலாம்.
நிறைவாக:
முனைவர் முபீன் சாதிகாவின் பிரதிகளில் மாய எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் கூறுகள் முக்கியமானவை. சில பிரதிகளின் மீதான வாசிப்புகளிலும் அவை வெளிப்படவே செய்துள்ளன. முருகன், மயில் போன்றவற்றில் இவருக்கு அதீதமான விருப்பு இருப்பதாகப்படுகிறது. நூறு புராணங்களின் வாசல் குறுங்கதைகள் தொகுப்பில் ஏழு குறுங்கதையில் முருகனை நாயகனாகக் கட்டமைத்திருப்பார். இத்தொகுப்பில் பாரதியாரின் குயில் பாட்டை முருகன் கோட்பாட்டின் அடிப்படையிலும், பெண் விடுதலை நோக்கிலும் வாசித்திருக்கிறார்.
தொன்மக் கதையாடல்கள் மீது இவருக்கு அலாதியான ப்ரியம் இருக்கிறது. அது நிறைவாகவும் அமைகிறது என்பதுதான் இவரது பலம். மேலும் ஒரு பிரதியை மரபான வாசிப்பு முறையிலும், நேர்கோட்டு வாசிப்பு அல்லாமல் குத்துக் கோட்டு முறையிலான வாசிப்புகளையும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்/புதினம், ஓவியம், திரைப்படம், சிற்றிதழ்ப் பிரதிகள் மீதான வாசிப்பின் வழி ஒரு பல்கலைக்கழகமாக பயிற்றுவிக்கிறார். தமிழ் இலக்கியப் பரப்பில் இவரது படைப்புகள் தனித்தவையாகவும், திறமாகவும் வலம் வருகின்றன. தொடர்ந்து சலிக்காமல் புதிய புதிய படைப்புகளை வெளியிட்டு புதியவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். ஆய்வு செய்வோருக்கு இந்தக் கட்டுரைத் தொகுப்பு சிறந்த கலைக்களஞ்சியம் எனலாம் இத்தொகுப்பினை. நிறைவான படைப்புகளால் தமிழ் இலக்கியப்புலம் வளம் பெறட்டும்.
துணை நின்றவர்கள்:
நுட்பம் இணைய இதழ் 2. முபீன் சாதிகா கட்டுரைகள், காவ்யா பதிப்பகம் 3. Tamilvu.org
Kavithaikal.in