புத்தகக் காதலர் தோழர் ஆர். ஜவஹர் – ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
தோழர் ஆர். ஜவஹர், மூத்த பத்திரிகையாளர் தனது 71ஆவது வயதில் கோவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவர் கடந்த இரண்டாண்டு காலமாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாகப் பரவியபோது தோழர் ஜவஹர் கொரோனாவைக் கடந்துவிடுவார் என நான் நம்பினேன். ஆனால், தொற்று ஏற்பட்டு அதிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. முதலலையில் அவரது இணையர் பேராசிரியர் பூரணமும், இரண்டாவது அலையில் அவரும் நம்மைவிட்டுப் பிரிந்தது நாம் எதிர்பார்க்காத ஒன்று. அவரது இணையர் பூரணத்தின் மறைவை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த இழப்பு அவரது உடல்நிலையை வெகுவாகப் பாதித்தது. மரணம் கொடியது; கொரோனா மரணம் மிகவும் கொடியது. காரணம், கொரோனாவால் மரணித்தவர்களின் உடலை அவர்களை நேசிக்கும் நண்பர்களாலும், தோழர்களாலும், உறவுகளாலும் இறுதியாகப் பார்க்கக்கூட முடியாத சூழல். அப்படித்தான், ஜவஹர் மரணமும் அவரை அறிந்தவர்களைத் துயரத்தில் ஆழ்த்தியது. அரசியல் கட்சித் தலைவர்களும், காட்சி மற்றும் அச்சு ஊடகங்களும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்கள்.
ஜவகரின் வாழ்க்கை பல அம்சங்களில் சுவாரசியமானது; முக்கியமானது. அவர் பிறந்த மதுரை மாநகரில் கம்யூனிஸ்ட் ஆகிறார். சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அரங்கத்தில் முழுநேர ஊழியராக 1971 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். 1976க்குப் பிறகு அவர் வேறு ஒரு தளமான எழுத்து மற்றும் இதழியியல் துறையில் தனது பணியை மேற்கொண்டார். முன்பின் தெரியாத அந்தத் தளம் அவருக்குச் சவால் மிக்கதாக இருந்தது. தமிழன், ஜூனியர் போஸ்ட், தினமணி, தமிழன் எக்ஸ்பிரஸ், நக்கீரன் போன்ற அச்சு ஊடகங்களில் தொடர்ந்து பணியாற்றினார். ஊடகத் துறையில் தொடர்ச்சியாகப் பணியாற்றி வந்த காலத்தில் அவர் சந்தித்த பலரிடமிருந்தும் ஏராளமானவற்றைக் கற்றுக்கொண்டார். ஆனால், அதே நேரத்தில் அவர் சுயத்தை ஒரு போதும் இழந்துவிடவில்லை. ஒரு இதழியலாளராகத் தன்னுடைய பணியை மேற்கொண்டு, வாழ்க்கைக்கான உத்திரவாதத்தை ஏற்படுத்திக்கொண்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமாக இருந்தபோது கற்றுக்கொண்ட, ஏற்றுக்கொண்ட சிந்தனையில் இருந்து, இறுதி மூச்சுவரை விலகாமல் இருந்ததுதான் அவருடைய வாழ்க்கையின் சிறப்பு.
1977ஆம் ஆண்டிலிருந்து ஊடகத் துறைக்கு அவர் வந்த பிறகும், அவருடைய பரந்த வாசிப்பைத் தொடர்ந்தார். பல இதழ்களில் அவரெழுதிய கட்டுரை, அரசியல் தலைவர்களை அவர் சந்தித்து எடுத்த பேட்டிகள் என அனைத்திலும் தன்னுடைய முற்போக்கு சிந்தனையை, இடதுசாரி சிந்தனையை அவர் பதிவு செய்துள்ளார்.
1993-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் இ.எம்.எஸ். அவர்களை ஜூனியர்போஸ்ட் இதழுக்காகப் பேட்டி எடுக்கிறார். அதில் நிருபராக தோழர் ஜவஹர் கேட்ட கேள்வியும், தோழர் இ.எம்.எஸ் அளித்த பதிலும் எல்லோராலும் இ.எம்.எஸ் பற்றி மேற்கோள் காட்டக்கூடிய அம்சமாக இன்றும் உள்ளது
கேள்வி: 70 ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுப்பணி செய்து வருகிறீர்கள். உங்கள் பணிகளில் மிகச் சிறந்தது என நீங்கள் கருதுவது எதை?
பதில்: பெரும் நிலப்பிரபு வர்க்கத்தையும், மேல் சாதி’யையும் சேர்ந்த ஒரு குடும்பத்தில் நான் பிறந்தேன். அந்த இரண்டில் இருந்தும், தொடர்புகளை துண்டித்துக்கொண்டு விலகிவிட்டேன். அதுமட்டுமல்ல…நிலப்பிரபு வர்க்கம் மேல் சாதி’ ஆகிய இரண்டுக்கும் எதிரான போராட்டத்தில் நான் தீவிரமாகப் பங்கேற்றேன். இத்தகைய போராட்டங்களின் வழியாக, இந்திய தொழிலாளி வர்க்கம் என்னைத் தனது புதல்வனாகத் தத்தெடுத்துக் கொண்டது. இதுதான் எனது மிகச் சிறந்த பணி என்று நான் கருதுகிறேன்.
ஜூனியர் போஸ்ட், 26.11.93.
அவரது பேட்டியில் இ.எம்.எஸ் தெரிவித்த இந்த பதிலை நான் உட்பட பலரிடமும் அவர் திரும்பத் திரும்பப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இ.எம்.எஸ்ஸின் விளக்கம் ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு, இந்த பதிலைப் பெற்றதற்கு தான் பெருமைப்படுவதாக அவர் பலமுறை சொல்லி இருக்கிறார். ஒரு இதழியலாளர் என்ற முறையில் அவர் வாசகர்களுக்கு இத்தகைய கருத்தைக் கொண்டு போய்ச் சேர்த்ததில் மிகுந்த அளவுக்கு ஆர்வம் காட்டியதே அவருடைய சிறந்த சிந்தனைக்கு ஒரு உதாரணம்.
அவர் ஊடகத் துறைக்கு வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, கம்யூனிஸம் நேற்று இன்று நாளை என்று அவர் நக்கீரன் இதழுக்கு எழுதிய தொடர், 2003-ஆம் ஆண்டில் நூலாக வெளியானது. அந்த நூலை எழுதுவதற்காக அவர் நான்காண்டுகள் தொடர்ச்சியாகப் பல நூல்களைப் படித்து, ஆய்வு செய்திருக்கிறார். அந்நூலின் தன்னுடைய முன்னுரையில் அவர் பாடம் கற்றுக் கொண்ட பலரைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். குறிப்பாக தோழர் வி.பி.சிந்தன் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தது முக்கியமானது.
எனது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியவர். அப்போது (1971-ம் ஆண்டு) வெறும் 21 வயது இளைஞனான நான் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகவும், அம்பத்தூர்-ஆவடி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கப் பொறுப்பாளராகவும் ஆவதற்கு முன்முயற்சி எடுத்து, வாய்ப்பளித்து, வழிகாட்டி,கனிந்து, கண்டித்து…அழுக்குச் சட்டையுடன் நான் கூட்டத்துக்கு வந்தால், “முதலில் துவைத்துச் சுத்தமாகப் போட்டு வா, புரட்சி ஒருநாள் தள்ளிப் போனால் பரவாயில்லை. போ!” என்று எல்லார் முன்னிலையிலும் கறாராக என்னை விரட்டிவிட்டு…”சாப்பிட்டாயா? அம்மா, அப்பாவுக்குக் கொஞ்சமாவது பணம் அனுப்புகிறாயா?…” என்றெல்லாம் பராமரித்து…கட்சி நடத்துவது எப்படி?… என்றெல்லாம் தொடர்ந்து சொல்லிக் கொடுத்து…எனது மாற்றுக் கருத்தோ, விமர்சனமோ சரியென்று பட்டால் ஈ.கோபார்க்காமல் ஏற்று, பாராட்டி…எதைச் சொல்ல? எதை விட?”
இத்தகைய அவருடைய சிந்தனைதான் அவருடைய இறுதிமூச்சு வரை தொடர்ந்தது. கம்யூனிசம் நேற்று இன்று நாளை என்ற நூலில் கம்யூனிசம் தோற்காது, மார்க்சிய தத்துவம் தோற்காது என்று பல இடங்களில் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். அவருடைய இந்த சிந்தனையைத்தான் தன்னை சந்திக்க வருபவர்களுடனான கலந்துரையாடலின்போது குறிப்பிட்டிருக்கிறார். தன்னை சந்தித்த பல இளைஞர்களிடத்தில் அவர் பல மணிநேரங்கள் உரையாடி அவர்களை புத்தகங்களை வாசிக்கச் செய்திருக்கிறார். அவர்களுக்கு மார்க்சிய தத்துவத்தின் மகத்துவத்தையும் உணர்த்தி இருக்கிறார். ஒரு முறை அவரை நான் சந்தித்தபோது மார்க்சின் மூலதன நூலைப் படித்து வருகிறேன் எனக் கூறினேன். அவர் உடனடியாக அவரது அறைக்குச் சென்று அவருடைய குறிப்பேட்டை எடுத்து வந்து, மார்க்சின் மூலதனத்தின் அத்தனை தொகுதிகளையும் படித்து தான் எடுத்த குறிப்புகளைக் காட்டினார். புரிந்துகொள்வதற்குக் கடினமான நூலையும் விடாப்பிடியாக கவனம் செலுத்தி புரிந்துகொள்ள முயற்சி எடுப்பவர் தோழர் ஜவஹர். மார்க்சிய லெனினிய நூல்களை மட்டுமல்ல, பெரியார் அம்பேத்கர் படைப்புகளையும் படித்தவர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலகப் புகழ்பெற்ற சார்பியல் தத்துவத்தைப் படித்ததோடு தன்னுடைய கம்யூனிசம், நேற்று இன்று நாளை நூலில் மேற்கோள் காட்டி இருக்கிறார்.
ஜவஹரை நான் சந்திக்கும் போதெல்லாம் அவர் எனக்குப் பல நூல்களை வழங்கி இருக்கிறார். நானும் அவருக்குப் பல நூல்களை வழங்கி இருக்கிறேன். 1950களில் வெளியான இந்தியாவில் கம்யூனிசம் (Communism In India) என்ற ஆய்வு நூல் கடைகளில் எங்கும் கிடைக்காத போது டெல்லியில் பதிப்பகத்தாருக்குத் தகவல் கொடுத்து பிரின்ட் ஆன் டிமேண்டில் ஒரு பிரதியை வரவழைத்து எனக்குக் கொடுத்தார். கடைசியாக கடந்த மே மாதம் 6 ஆம் தேதி சந்தித்தபோது, இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் கிளையை தாஷ்கன்டில் உருவாக்கிய தோழர்களில் ஒருவரான சௌகத் உஸ்மானுடைய சுயசரிதை நூலை நான் அவருக்குக் கொடுத்தேன். அவர் எனக்கு அவருடைய கட்டுரைகள் தொகுப்பான ஒரு மார்க்சியப் பார்வையில் என்ற நூலைக் கொடுத்தார். அதில் நூலில் இருந்துதான் தோழர் இ.எம்.எஸ் பேட்டியை நான் மேற்கோள் காட்டி இருக்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட இதழில் நிருபராக, ஆசிரியக்குழு உறுப்பினராக ஆற்றும் பணியிலிருந்து விடுபட்டு நக்கீரன் போன்ற இதழ்களுக்கு தொடர் எழுத்தாளராக அவர் பணியாற்றிய காலத்தில், தன்னிடம் தொடர்பில் இருந்த இளைஞர்களை மார்க்சிய லெனினிய நூல்களைப் படிக்க வைக்கவும், இடதுசாரி சிந்தனைகளை ஆழமாகப் பதிய வைக்கவும், அரசியல் தளத்தில் இருக்கக்கூடிய பலரோடு உரையாட வைக்கவும், இடதுசாரி இயக்கங்களோடு இணைத்திடவும் கூடுதலாக நேரம் ஒதுக்கினார். இத்தகைய வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்ட தோழர் ஆர். ஜவஹருக்கு அவரது இறுதி நிகழ்ச்சியில் அவரது உடலுக்கு செங்கொடி போர்த்தி பெருமைப்படுத்தியது பொருத்தமானது. l