வரலாற்றை அறிவியல் கண்கொண்டு பார்க்க வேண்டும்; அறிவியலையும் வரலாற்றுக் கண்கொண்டு பார்க்க வேண்டும் – பேராசிரியர் ப.முருகன்
சந்திப்பு: பேரா. அருள்
“வரலாற்றில் அறிவியல் – ஜே.டி.பெர்னால் எழுதிய, நான்கு பாகங்கள் கொண்ட மாபெரும் அறிவியல் நூலை முன்வைத்து, வரலாற்றில் அறிவியலின் பங்கை தன் நூலில் விளக்கியுள்ள அறிவியல் இயக்க முன்னோடி, சென்னை விவேகானந்தா கல்லுரியின் இயற்பியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் ப.முருகன் ‘புத்தகம் பேசுது’ இதழுக்கு வழங்கியுள்ள நேர்காணல்:
நேர்காணல் நிகழ்த்தியவர் : பேரா. அருள்
கே: 1954 ல் வெளியிடப்பட்ட ஜே டி பெர்னாலின் வரலாற்றில் அறிவியல் என்கிற புத்தகம் 2021 லும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது? ஏன்?
1954 இல் இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு வந்தது. இதனுடைய மூன்றாம் பதிப்பு 1969 இல் வந்தது. 50 ஆண்டுகளுக்குப் பின்பும் இதைப் படித்து விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறீர்கள்.
இந்தப் புத்தகம் எதைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம்? இது அறிவியலின் வரலாறு அல்ல. இதன் தலைப்பே “வரலாற்றில் அறிவியல்” என்பதுதான். இது அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை வரலாற்று ரீதியாக ஆராய்வது.மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து 1950கள் வரை இருந்த காலத்திற்கான வரலாறு இது.
பெர்னால் ஒரு மார்க்ஸிஸ்ட். மார்க்சியத் தத்துவத்தில் சிறந்த வல்லுனர். அவர் சிறந்த அறிவியல் வல்லுனரும் கூட. அவர் நோபல் பரிசு வாங்காவிட்டாலும் அதை பெறக்கூடிய அளவிற்கு அறிவியல் சாதனைகளப் படைத்தவர். இந்தக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு இந்தப் புத்தகத்தைப் பற்றி மதிப்பீடு செய்ய வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி, சமூக அமைப்பு (முதலாளித்துவ சமூகமாக அல்லது நிலப் பிரபுத்துவமாக அல்லது வேறு வகை சமுதாய அமைப்பாக இருக்கலாம்), தத்துவம், அறிவியல் மற்றும் மற்ற பலவிதமான நம்பிக்கைகள் ஆகிய அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருப்பவை. அது இதைத் தீர்மானிக்கிறது; இது அதைத் தீர்மானிக்கிறது. இந்தப் பின்னணியில் சமுதாயத்திற்கும், அறிவியலுக்கும் உள்ள தொடர்பை ஆராய்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
அது ஏன் வரலாற்று ரீதியாக சமுதாயத்திற்கும், அறிவியலுக்கும் உள்ள தொடர்பைப் பார்க்க வேண்டும்?
இது அடிப்படையில் ஒரு பிரச்சனையைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சிய முறையில் கையாளப்படும் முறை. (Method). முதலாளித்துவ சமூக அமைப்பைப் புரிந்து கொள்வதற்கு மார்க்ஸ் இந்த முறையைத்தான் கையாள்கிறார். வேறோர் உதாரணத்தைத் தர வேண்டுமானால், ஒரு நகர்ப்புற சமுதாயத்தின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் வரலாற்று ரீதியாகப் பார்ப்பதுதான் சரியாக இருக்க முடியும் என்று டேவிட் ஹார்வி சொல்கிறார்.
கி.பி. 1400 வரை இந்தியா, சைனா மற்றும் ஐரோப்பா ஆகிய எல்லாப் பகுதிகளிலும் பொருளாதார அளவிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. ஆனால் ஐரோப்பாவில்தான் நவீன அறிவியல் தோன்றியது. அது ஏன்?
அடிக்கடி நாம் காணும் ஒரு விளக்கம்.இந்தியாவின் மிதமான தட்ப வெப்ப நிலையால் இந்தியர்களுக்கு எல்லாம் சுலபமாகக் கிடைத்தது. அதனால் அறிவியலிலும், தொழில் நுட்பங்களிலும் புதிய கண்டு பிடிப்புகளுக்கான முனைப்பு இல்லை. இது சரியா அல்லது தவறா?
இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் மேலை நாடுகளை ஒப்பிடும் போது அறிவியலில் நாம் அதிகமாக வளர்ச்சி அடைந்து விடவில்லை. இந்திய மக்களிடையே நிலவி வரும் மூடநம்பிக்கைதான் இதற்கு முக்கியமான காரணம் என்றொரு வாதம் உள்ளது. அறிவியலில் வளர்ச்சி ஏற்பட்டால் மூடநம்பிக்கைகள் ஒழிந்து விடும் என்றொரு கருத்தும் உண்டு. இவை சரியான கருத்துகளா?
அறிவியல் மனிதனுக்குப் பல நன்மைகளைத் தந்துள்ளது. அதே சமயத்தில் பல பிரச்சனைகளையும் தந்துள்ளது. உலகத்தையே அழித்து விடும் என்று தெரிந்திருந்தும் அணுகுண்டுகள் ஏன் தயாரிக்கப்படுகின்றன?புவிவெப்பமயமாதல் பூமியை உயிரினங்கள் வாழத்தகுதியற்ற இடமாக மாற்றிவிடும் என்று தெரிந்திருந்தும் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஏன் மறுக்கின்றார்கள்?
இப்படி பல கேள்விகள் கேட்டுக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் இடையே நிலவும் தொடர்புகள் பற்றிய கேள்விகள். இவற்றிற்கான பதில்கள் ஆம் அல்லது இல்லை என்று ஓரிரு சொற்களில் சொல்லக் கூடிய பதில்கள் இல்லை.பல விதமான பதில்கள் உள்ளன. அவற்றில் எவற்றை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதுதான் கேள்வி. எந்த வர்க்கத்தின் பக்கம் நாம் நிற்கின்றோம் என்பதுதான் அதைத் தீர்மானிக்கக் கூடியது. அதற்கு பெர்னாலின் புத்தகம் இன்றும் உதவும் என்றுதான் நான் நம்புகிறேன்.
பெர்னால் 1971இல் இறந்தார். கடந்த 60 ஆண்டுகளில் பல அறிவியல், தொழில்துறைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவை சாதாரண மாற்றங்கள் அல்ல. சமுதாயத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய கருத்துத் தளத்திலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
1962-இல் தாமஸ் குன் (Thomas Kuhn) என்ற இயற்பியல் வல்லுனர் எழுதிய Structure of Scientific Revolution என்ற புத்தகம் ஒரு திருப்புமுனையாகும். அறிவியலின் பொதுப் பண்புகளின் அடிப்படையில் அறிவியல் என்றால் என்ன, அறிவியல் வழிமுறைகள் என்றால் என்ன, அறிவியலுக்கு எப்படி நம்பகத்தன்மை வருகிறது போன்ற விஷயங்களை ஆராய்வது தத்துவத்தின் (Philosophy) ஒரு பகுதியாகும். இது அறிவியலின் தத்துவம் (Philosophy of Science)எனப்படுகிறது. (பெர்னால் இதைக் கண்டு கொள்ள வில்லை). அதன் ஒரு பகுதியாகத்தான் தாமஸ் குன் எழுதிய புத்தகம் அமைந்துள்ளது.ஆனால், அது வேறு ஒரு முக்கியமான விளைவுக்கு வித்திட்டது. அறிவியல் உலகம் (Scientific Community) செயல்படும் விதம், அறிவியல் உலகில் எப்படி முடிவுகள் எட்டப்படுகின்றன என்ற விஷயங்கள் குறித்து சமூகவியல் பார்வையில் Sociolgists எனப்படும் சமூகவியல் வல்லுனர்கள் ஆராய ஆரம்பித்தார்கள்.அறிவியல் ஆய்வுகள் (Science Studies) என்ற புதிய ஆய்வுத்துறையே (field of research) இன்று உருவாகி உள்ளது. பின் நவீனத்துவம் இந்தக் காலத்தில்தான் உருவானது. இன்று அறிவியலின் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாகப்படுகிறது. இதில் சில இடதுசாரி சிந்தனையாளர்களும் உள்ளனர். சமுதாயத்திலும் இது தாக்கங்களை உருவாக்குகிறது. அறிவியல் வல்லுனர்களுக்கே இவை பெரும் சவால்களாக உருவாகின்றன.
பல மார்க்ஸிஸ்ட் அறிஞர்கள் சுற்றுப்புறச் சூழல் குறித்த அரசியல் பற்றியும், தகவல் தொழில்நுட்பங்களின் விளைவுகளைப் பற்றியும் இன்று ஆய்வு செய்கிறார்கள். பெர்னால் புத்தகத்தில் இந்தக் கருத்துகளைப் பற்றிய விவாதங்கள் இருக்காது.
கே: J.D.பெர்னால் பற்றியும், அறிவியலில் ஆய்வு மூலம் அவர் அளித்த பங்களிப்பு குறித்தும் கூறுங்களேன்
அயர்லாந்தில் 1901 இல் பெர்னால் பிறந்தார். 1913இல் பெட்ஃபோர்டில் இருந்த பள்ளியில் படித்தார்.1919 இல் கேம்ப்ரிட்ஜில் உள்ள இமானுவல் கல்லூரியில் பட்டப் படிப்பில் சேர்ந்தார்.1922இல் கல்லூரி மலரில் புதிய கணித முறையில் படிகவியலில் space group என்ற கருத்தைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். இதற்காக பெர்னாலுக்கும் நாரிஸ் என்பருக்கும் பரிசு வழங்கப் பட்டது. ராயல் இன்ஸ்டிட்யூஷனில் உள்ள டேவி ஃபாரடே ஆராய்ச்சிக் (Davy Faraday Laboratory, Royal Institution) கூடத்தில் படிகவியலில் (Crystallography) ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் வில்லியம் ஹென்றி பிராக் (William Henry Bragg) என்பவர் அவருடைய ஆராய்ச்சிக்கான ஆசிரியர். கிராஃபைட்டில் (graphite) அணுக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று விளக்கம் அளித்தார்.
1934இல் இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற காவெண்டிஷ் ஆராய்ச்சிக் கூடத்திற்கு (Cavendish Laboratory, University of Cambridge) உதவி இயக்குனரானார்.1937இல் லண்டன் பல்கலைக் கழகத்தில் உள்ள பிர்க்பெக் கல்லூரியில் (Birkbeck College) பேராசிரியராகச் சேர்ந்தார். அதே ஆண்டு அவருக்கு லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினர் (FRS- Fellow of Royal Society) என்ற விருது வழங்கப்பட்டது. இது ஒருவரது சாதனைகளை அங்கீகரித்து வழங்கப்படும் விருது.1968 இல் உடல் நலம் குறையும்வரை அந்தக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். 1971இல் அவர் இறந்தார்.
பெர்னால் பன்முகத்தன்மை வாய்ந்தவர். மிகுந்த திறமை உள்ளவர். கல்லூரியில் படிக்கும் போது பல விஷயங்களில் அவருக்கு இருந்த ஞானத்தைப் பார்த்த அவருடைய நண்பர்கள் அவருக்கு வைத்த பட்டப்பெயர்: மாமுனிவர் (Sage). இறுதிக் காலம் வரை அவருக்கு இந்தப் பட்டப் பெயர் நிலைத்து நின்றது. ஆண்ட்ரூ பிரௌன் (Andrew Brown) என்பவர் இவருடைய வாழ்க்கை வரலாற்றை 2005 இல் ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தின் தலைப்பு: J.D. Bernal- The Sage of Science. பல துறைகளைப் பற்றி அவருக்கு ஆழமான அறிவு இருந்தது.மிகவும் புத்தி கூர்மையுள்ளவர் என்று அன்றிருந்த அறிவியல் வல்லுனர்களால் கருதப்பட்டார். அவருடைய தன்னலமற்ற பண்பையும் பரந்த மனப்பான்மையையும் பல அறிவியல் வல்லுனர்கள் பாராட்டி உள்ளனர்.
இயற்பியலில் அவர் சிறந்த வல்லுனர். எக்ஸ் கதிர் படிகவியலில் (X-ray Crystallography) அவருக்கு நல்ல நிபுணத்துவம் இருந்தது. எக்ஸ் கதிர் படிகவியல் மூலம் ஒரு பொருளில் அணுக்கள் எப்படிக் கட்டமைக்கப் பட்டுள்ளன என்று அறியலாம். இன்று உயிரியலில் இது முக்கியமான பங்களிக்கிறது. ஆனால் 1930 களில் புரோட்டின் போன்ற உயிரியல் பொருள்களுக்கு (ஆயிரக் கணக்கான அணுக்கள் இந்த உயிரியல் பொருட்களில் இருப்பதால்) இது சாத்தியமில்லை என்ற கருத்து நிலவி வந்தது. இது சாத்தியம் என்று முதலில் பெர்னால்தான் நம்பினார். பெர்னாலும் அவரது மாணவர் உதவியோடு (பின்னாளில் நோபல் பரிசு பெற்ற டோரதி ஹாட்கின் Dorathy Hodkin) பெப்சின் எனப்படும் புரோட்டினை முதன் முதலாக எக்ஸ் கதிர் படிகவியல் மூலமாக ஆராய்ந்தார். இது முக்கியமான கண்டு பிடிப்பு என்று நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் தன்னுடைய புத்தகத்தில் கூறுகிறார். முதன் முதலாக எக்ஸ் கதிர் படிகவியல் மூலமாக வைரஸ்களை ஆராய ஆரம்பித்தவர்கள், பெர்னாலும் அவரது மாணவரும்தான்.
தண்ணீரின் மூலக்கூறில் ஓர் ஆக்ஸிஜனும் இரண்டு ஹைடிரஜன் அணுக்களும் இருக்கின்றன என்பது நீண்ட நாட்களாக அறியப்பட்டுள்ள உண்மைதான்.ஆனால், ஒரு டம்ளரில் நிறைந்துள்ளது போன்று பெரிய அளவில் உள்ள தண்ணீரில் கோடிக்கணக்கான தண்ணீர் மூலக்கூறுகள் உள்ளன. இந்தக் கோடிக்கணக்கான தண்ணீர் மூலக்கூறுகள் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று பெர்னால் ஆராய்ந்தார். 1933 இல் இது தொடர்பாக அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திரவ நிலையில் மூலக்கூறுகள் எப்படிக் கட்டமைக்கப்படுகின்றன என்று நீண்ட காலமாக ஆராய்ந்து வந்தார்.
அவருடைய மாணவர்கள் பலர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். குறைந்த பட்சம் ஐந்து நோபல் பரிசு பெற்றவர்கள் தங்களது ஆராய்ச்சி வாழ்வில் பெர்னால் அளித்த பங்களிப்பினை நினைவு கூர்ந்துள்ளார்கள் என்று ஆண்ட்ரூ பிரௌன் கூறுகிறார்.
பூமியில் உயிரினம் எப்படித் தோன்றியிருக்கக்கூடும் என்று பெர்னால் ஆராய்ந்துள்ளார்.
பெர்னாலின் மற்றொரு பக்கம் அவருடைய அரசியல் கருத்துகள் ஆகும். அவர் மார்க்சிய சிந்தனைகளால் பெரிதும் கவரப்பட்டவர். பிரிட்டன் கம்யூனிச இயக்கத்தில் சில காலம் உறுப்பினாரக இருந்தார். மார்க்சிய சிந்தனைகளில் பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதியுள்ளார். இயக்கவியல் பொருள் முதல் வாதமும் நவீன விஞ்ஞானமும் (Dialectical Materialism and Modern Science), எங்கல்சும் அறிவியலும் (Engels and Science), மார்க்சும் அறிவியலும் (Marx and Science), அறிவியலின் சமூகப் பணிகள் (Social Function of Science), வரலாற்றில் அறிவியல் (Science in History) ஆகியவை பெர்னாலின் முக்கியமான நூல்கள்..
1938 இல் பெர்னால் அறிவியலின் சமூகப் பணிகள் (Social Function of Science) என்ற புத்தகத்தை எழுதினார். இது புகழ் பெற்ற புத்தகம். பெர்னால் என்று கூறினாலே இந்தப் புத்தகம்தான் அனைவர் மனதிலும் தோன்றும். அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள உறவுகள் இதில் சொல்லப் பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள பல கருத்துகள் முக்கியமானவை.இன்றும் அவை விவாதிக்கப்படுகின்றன. முதலாளித்துவ சமுதாய அமைப்பில் அறிவியல், பொது மக்களுக்கு ஆக்கபூர்வமாக நலன்களை விளைவிக்கும் வண்ணம் செயல்படாமல்,பொதுமக்களுக்கு எதிராகவும், அழிவுக்காகவும் செயல்படும். ஆனால் சோஷலிஸ சமுதாய அமைப்பிலோ பொது மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் என்று பெர்னால் கூறுகிறார். அறியவிலின் வளர்ச்சிக்குத் திட்டமிடுதல் அவசியம் என்று கூறினார். சோவியத் ரஷ்யாதான் அவருக்கு முன் மாதிரியாக இருந்தது.அந்தக் காலத்தில் இந்தக் கருத்துக்கு பெரும் எதிர்ப்பு இருந்தது. இன்று முதலாளித்துவ அரசுகளே இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.
இரண்டாவது உலகப் போரில் இங்கிலாந்திற்காகப் பங்கு பெற்றார். அதிலும் அறிவியல்பூர்வமாகச் செயல்பட்டார்,
இரண்டாவது உலகப் போருக்குப் பின் உலக சமாதானத்திற்காகப் பாடு பட்டார். உலக அமைதிக் கழகம் (World Peace Council) என்ற அமைப்பில் முதலில் உப தலைவராகவும், பிறகு தலைவராகவும் செயல்பட்டார். அணு ஆயுதங்கள் அற்ற உலகத்திற்காக நீண்ட காலமாகப் பாடுபட்டார்.
கே: ஐம்புலன்களின் நீட்டிப்பு என பெர்னால் எதைக் குறிப்பிடுகிறார்?
விலங்குகள் பொதுவாக இயற்கையோடு வினை புரிவதற்கு தங்களுடைய உடலின் பல அங்கங்களைப் பயன்படுத்துகின்றன.மனிதர்கள் இயற்கையோடு வினை புரிவதற்கு தங்களுடைய உடலின் பல அங்கங்களைப் பயன் படுத்துவதோடு மட்டும் இல்லாமல், பல கருவிகளையும் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கருவிகளை நமது ஐம்புலன்களின் நீட்டிப்பு என்று கூறுகிறார்.
மூக்குக் கண்ணாடி, மைக்ரோஸ்கோப், தொலை நோக்கி ஆகியவை கண்களின் நீட்டிப்பு; விபத்தில் ஒருவர் கால்களை இழந்தால் செயற்கைக் கால்களைப் பொருத்தி நடக்கிறார். அங்கே அந்த செயற்கை உபகரணம் கால்களின் நீட்டிப்பு. அடுப்பில் சூடாக இருக்கும் ஒரு பொருளை இடுக்கி கொண்டு கீழே இறக்குகிறோம். அங்கே இடுக்கி கைகளின் நீட்டிப்பு.
கே: மொழியை உற்பத்தி சாதனம் என்கிறாரே?
இந்தக் கேள்விக்கு மார்க்சிய மொழியியல் அறிஞர்கள்தாம் பதில் சொல்ல முடியும்.
கே: அறிவியல் வளர்ச்சியில் உழைக்கும் மக்கள் பங்களிப்பு எத்தகையது?
கடினமான கேள்வி. எந்தச் சிந்தனையின் அடிப்படையில் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது என்று தெரியவில்லை.
கடைசல் இயந்திரமான லேத்தில் (lathe)பணிபுரிபவர், மெக்கானிக்காகப் பணிபுரிபவர், பிளம்பர் போன்று உடலுழைப்பில் ஈடுபடுபவர்களை மட்டும் உழைக்கும் மக்கள் என்று கருதினால் அவர்களால் தங்கள் தினசரி பணிகளின் மூலம் அறிவியல் வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியாது (குறைந்த பட்சம் முதலாளித்துவ சமுதாயத்தில்). இது உழைப்புப் பிரிவினை உள்ள ஒரு சமுதாயம் அறிவியலில் பங்களிப்புச் செய்வதற்கு நீண்ட பயிற்சி தேவை.
உழைப்புச் சாதனமின்றி தனது உழைப்புச் சக்தியை விற்பதன் மூலம் கூலி பெறும் அனைவரும் உழைக்கும் மக்கள் என்றால், கோவிட் தடுப்பூசி உருவாக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளரும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்தான்.
இன்று உழைக்கும் வர்க்கத்தில் இருந்து பல சிறந்த அறிவியல் அறிஞர்கள் வந்துள்ளனர். சிறந்த உதாரணம் மைக்கேல் பாரடே. அவர் லண்டனில் உள்ள ராயல் இன்ஸ்டிட்யூஷன் (Royal Institution என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளராக வேலையில் சேர்ந்தார். பிறகு அங்கேயே பல ஆராய்ச்சிகள் புரிந்து படிப்படியாக உயர்ந்து அந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்குத் தலைவராக ஆனார்.
நமது நாட்டில் அப்துல் கலாமும், இஸ்ரோவின் சிவனும் சிறந்த உதாரணங்கள். ஆனால் அவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் பட்டம் பெற்றவர்கள்.
கே: கலீலியோ, நியூட்டன், ஐன்ஸ்டின், டார்வின் என மாபெரும் அறிஞர்களின் சாதனைகளின் பட்டியலே அறிவியலின் வரலாறாக சொல்லப்படுகிறதே.
இது தவறானது. தனி மனிதர்கள் வரலாற்றை உருவாக்க முடியாது. தனி மனிதர்கள் அறிவியலையும் உருவாக்க முடியாது. இது வரலாற்றை நாம் படிக்கின்ற முறையால் வரும் தவறு.
அறிவியல் ஆராய்ச்சியில் பல கோடிக் கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த காலத்தை விடுங்கள். இன்று பல நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான பல்கலைக் கழகங்களும் உள்ளன. பல லட்சம் அறிவியல் அறிஞர்கள் ஒரே துறையில் வேலை புரிகிறார்கள். நூற்றுக் கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவருகின்றன. அவை சரியானவை என்ற காரணத்தால்தான் வெளி வருகின்றன. ஆனாலும் ஒரு சிலர்தான் நோபல் பரிசு பெறுகிறார்கள். மற்ற ஆராய்ச்சிப் பணியாளர்களின் (அவர்களும் சரியான முடிவுகளைப் பெற்றவர்கள்) பங்கு என்ன? அவர்கள் அளித்த பங்குகளையும் பயன்படுத்திதான், அவர்கள் அளித்த பங்குகளின் மீதும்தான் நோபல் பரிசு பெற்ற அறிவியல் கட்டப்பட்டுள்ளது. இந்த வாதங்களைத்தான் கடந்த காலத்திற்கும் வைக்க வேண்டும்.
இரண்டாவதாக, ஒருவருடைய அறிவியல் சாதனைகளை வரலாற்று ரீதியாகப் பார்க்க வேண்டும். பல புறச் சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு மெக்கானிக்ஸ் உருவான வரலாற்றைப் பார்ப்போம். கி. மு 320 வாக்கில் வாழ்ந்தவர் அரிஸ்டாட்டில். அவருடைய மெக்கானிக்ஸ்தான் அடுத்த 1800 ஆண்டுகளுக்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. கலீலியோதான் அரிஸ்டாட்டிலின் மெக்கானிக்ஸிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். கலீலியோவிற்கும் அரிஸ்டாட்டிலுக்கும் ஏதேனும் பகையா இருந்தது? 15ம் நூற்றாண்டில் பல புதிய தொழில் நுட்பங்கள் ஐரோப்பாவில் ஏற்பட்டன. அவற்றை விளக்க அரிஸ்டாட்டிலின் மெக்கானிக்ஸால் விளக்க முடிய வில்லை. உதாரணமாக பீரங்கியில் இருந்து வெளிவரும் குண்டு ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதிற்கு எப்படி பீரங்கியைப் பயன்படுத்த வேண்டும்? இது ஒரு பெரிய சவால். ஆனால், அரிஸ்டாட்டிலின் மெக்கானிக்ஸால் சரியாகக் கணிக்க முடியவில்லை. கலீலியோ ஆராய்ந்த பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. இது போன்று பல விஷயங்களைச் சொல்லலாம். இப்படிப்பட்ட தேவைகளை விளக்குவதற்குதான் புதிய மெக்கானிக்ஸ் தேவை என்று பலர் உணர்ந்தார்கள். அதை கலீலியோவும் உணர்ந்தார். அந்தத் திசையில் புதிய மெக்கானிக்ஸை ஆரம்பித்து வைத்தார். அதை நியூட்டன் முழுமைப்படுத்தி நிறைவு செய்தார்.
இந்தக் கதை நமக்குச் சொல்லும் பாடம் என்ன? குறிப்பிட்ட காலகட்டத்தில், சில குறிப்பிட்ட புறச்சூழ்நிலைகளில்தான் ஒரு குறிப்பிட்ட அறிவியல் உருவாகி வளர முடியும்.புதிய மெக்கானிக்ஸ் உருவாகுவதற்கு வேண்டிய சூழ்நிலை ஐரோப்பாவில் 16, 17ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டதைப் பார்த்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலை வரும் போது கலீலியோ அல்லது நியூட்டன் இல்லாவிட்டலும் புதிய மெக்கானிக்ஸ் உருவாகி இருக்கும். ஆனால் யாரால்,எப்போது,எப்படி என்றெல்லாம் சொல்ல முடியாது.
இதைப் புரிந்து கொள்வதற்கு வேறு சில கேள்விகள் கேட்போம். நியூட்டன் லண்டனில் 17ம் நூற்றாண்டில் இருந்ததற்குப் பதிலாக 10ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால் அந்தப் புதிய மெக்கானிக்ஸைக் கண்டு பிடித்திருப்பாரா? மாறாக 17ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்ததற்குப் பதிலாக இந்தியாவில் பிறந்திருந்தால் புதிய மெக்கானிக்ஸைக் கண்டு பிடித்திருப்பாரா?
ஓர் எச்சரிக்கை உணர்வோடு நாம் இதைப் பார்க்க வேண்டும். நியூட்டனின் சாதனைகளை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. அவருக்கு இணையாக அறிவியல் சாதனைகள் புரிந்தவரைக் காண்பது அரிது. அவர் மிகப் பெரிய ஜீனியஸ் என்பதை மறுக்க முடியாது.
இதே போல்தான் ஐன்ஸ்டீன், டார்வின் உள்ளிட்ட மற்ற அறிவியல் வல்லுனர்களையும் நாம் மதிப்பிட வேண்டும்.
தனிநபரின் சாதனைகளை நாம் மதிப்பிடும் போது அவர் வாழ்ந்த சமுதாயத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்க்க வேண்டும்.
கே: பிற்போக்கான (ரியாக்ஷனரி) தத்துவ அறிஞர்கள் என பெர்னால் யாரைக் குறிப்பிடுகிறார்? ஏன் ?
கிரேக்க நாகரிகத்தில் வந்த சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் ஆகிய மூவரையும் பிற்போக்கான தத்துவ அறிஞர்கள் (Philosophers of Reaction) என்று பெர்னால் குறிப்பிடுகிறார். இந்த மூவரும் மிகப் புகழ் பெற்ற சிந்தனையாளர்கள். தத்துவ உலகில் பெரிய ஜாம்பவான்களாகக் கருதப் படுபவர்கள். பெர்னாலும் அவர்களைப் பற்றி பெரிய அளவில் விரிவாக விவாதித்துள்ளார். மிகக் கடுமையான முறையில் அவர்களை விமரிசித்துள்ளார்.
இரண்டு முக்கியமான தளங்களில் பெர்னால் மூவரையும் விமர்சிக்கிறார். அன்று கிரீசில் இரண்டு முக்கியமான நகர அரசுகள் இருந்தன. ஒன்று ஏதென்ஸ் மற்றொன்று ஸ்பார்ட்டா. ஏதென்ஸில் ஜனநாயகம் இருந்தது. ஸ்பார்ட்டாவில் செல்வந்தர்களால் ஆன ஆட்சி இருந்தது. சாக்ரட்டீஸின் மாணவர் பிளாட்டோ; பிளாட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டில். மூவரும் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்தவர்கள். சாக்ரட்டீஸின் வாழ்க்கையைப் பற்றி அதிகமாகத் தெரியாது. சாக்ரட்டீஸ் என்று ஒருவர் இருந்தாரா அல்லது பிளாட்டோவின் புத்தகத்தில் தன்னுடைய கருத்துக்களை கூறுவதற்காக அவரால் உருவாக்கப் பட்ட பாத்திரமா என்று கூட சிலர் சந்தேகிக்கிறார்கள். ஆனாலும் சாக்ரட்டீஸ் என்று ஒருவர் இருந்தார் என்று பெரிதும் இன்று நம்பப்படுகிறது.சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் ஆகிய மூவரும் ஜனநாயக அமைப்பை விரும்பவில்லை. பிளாட்டோ எழுதிய குடியரசு என்ற புத்தகத்தில் பிளாட்டோவின் கருத்துகள் தெளிவாக உள்ளன. அதில் ஒரு சிறந்த அரசு எப்படி இருக்க வேண்டும் என்று பிளாட்டோ விவரிக்கிறார். அதில் வர்ணாச்சிரம தர்மத்தைப் போன்ற சமுதாய அமைப்பைத்தான் பிளாட்டோ ஆதரிக்கிறார் என்று பெர்னால் கூறுகிறார். இதை சுருக்கமாகக் கூறி விட்டு பெர்னால் விட்டுவிடுகிறார்.
அவர்களது தத்துவத்தைத்தான் பெர்னால் பெரிய அளவில் கடுமையாக விமர்சிக்கிறார்.
சாக்ரட்டீஸ் வாழ்ந்த காலம் கி.மு 470-கி.மு. 399. கி.மு 600 முதல் கிரேக்க நாகரிகத்தில் மிகவும் முற்போக்கான தத்துவம் வளர்ந்தது. மனித வரலாற்றில் நீண்ட காலத்திற்கு இயற்கை நிகழ்வுகள் கடவுள்களின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில்தான் விளக்கப் பட்டன. கி.மு. 600 இல் வாழ்ந்த தேல்ஸ் என்ற அறிஞர்தான் முதன் முதலாக இயற்கை நிகழ்வுகளை இயற்கையின் நிகழ்வுகளின் அடிப்படையில் விளக்க முயற்சித்தார். அவருடைய விளக்கங்களில் கடவுள்கள் அல்லது நம்மை மீறிய சக்திகள் இடம் பெறவில்லை. உதாரணமாக நைல் நதியில் குறிப்பிட்ட காலத்தில் ஏன் வெள்ளம் வருகிறது என்பதற்கு ஏஜியன் கடலில் இருந்து வரும் காற்றுதான் என்று விளக்கினார். இது தவறான விளக்கம். அது பெரிய விஷயமல்ல. ஆனால் கடவுள் என்ற கருத்தை அவருடைய விளக்கத்தில் கொண்டு வர வில்லை. இயற்கை நிகழ்வுகளை விளக்கும்போது, அதில் கடவுளைக் கொண்டு வராமல் மற்ற இயற்கை நிகழ்வுகளையே காரணமாகக் கொண்டு விளக்குவது என்பதை methodological naturalism என்று இன்று கூறுகிறார்கள். இதை அயோனிய நேச்சுரலிஸம் என்று பெர்னால் கூறுகிறார். தேல்ஸிற்குப் பின்பும் கூட இந்தத் தத்துவப் போக்கு கிரேக்க நாகரிகத்தில் தொடர்ந்து நடை பெற்றது (தேல்ஸும் மற்ற அறிஞர்களும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் அல்லர்). இதை லோகாயதக் கண்ணோட்டம் என்று பெர்னால் குறிப்பிடுகிறார். இதன் விளைவாகத்தான் அணுக்கொள்கை வந்தது.
தேல்ஸ் காலத்தில் இருந்து சாக்ரட்டீஸ் வருகின்ற காலம் வரை (சுமார் 150 வருடங்கள்) கிரேக்க நாகரிகத்தில் எழுந்த தத்துவங்களில் புற உலகைப் பற்றிய விவாதங்கள்தாம் பெரும்பாலும் இருந்தன. அதுவும் லோகாயதக் கண்ணோட்டத்துடன் (நேச்சுரலிஸம்) இருந்தன. இந்தப் போக்கின் திசையை முதலில் மாற்றியது சாக்ரட்டீஸ்தான்.
சாக்ரட்டீஸ் புற உலகைப் பற்றி விவாதிக்கவில்லை. வாழ்வின் அர்த்தம், அறநெறி பற்றிதான் விவாதித்தார். அறநெறி (Ethics) தத்துவத்தின் ஒரு பகுதியாக உருவானது. சாக்ரட்டீஸ் காலம் முதல் நீதி நெறி (Morals) அல்லது அற நெறி (Ethics) என்ற ஒரு பகுதி, இயற்கை (புற உலகம்) பற்றிய இயல் ஆகிய இரண்டு பகுதிகளை தத்துவம் என்பது உள்ளடக்கியது என்றும் அடுத்த 2000 ஆண்டுகளுக்கு நீதி நெறி அல்லது அறநெறி தான் தத்துவத்தில் ஆட்சி புரிந்தது என்றும் பெர்னால் கூறுகிறார்.
நல்லொழுக்கம் அடைவதே மனிதனின் இறுதி இலக்கு என்றும் அது அறிவின் வழியாக கிடைக்கும் என்றும் ஸாக்ரடீஸ் கருதினார். இயற்பியல் சார்ந்த அறிவின் மூலம் நற்குணத்தை அடைய முடியாது என்று சாக்ரடீஸ் கருதினார் . அனைத்துக் கோட்பாடு அல்லது மதிப்பீடுகளையும் (opinion) நிராகரித்து விட்டு உள்ளுணர்வுகளை (inner intuition) மட்டும் நம்ப வேண்டும் என்று சாக்ரடீஸ் கருதினார் என்று பெர்னால் கூறுகிறார்.
பிளாட்டோ சிறந்த கருத்து முதல் வாதி. நமக்கு எப்படி உலகம் தோற்றமளிக்கிறது என்பதை விளக்க பிளாட்டோ முயற்சிக்கவில்லை. நம் புலனறிவைத் தாண்டி எக்காலத்திற்கும் அனைத்திற்கும் பொருந்தும் சில கருத்துகள் இருக்கின்றன என்று நம்பினார். அவற்றை உள்ளுணர்வின் (ஆன்மாவின் கண்கள் – eyes of the soul) மூலமாகத்தான் அறிய முடியும் என்றும் நம்பினார். அவை அனைத்தையும் தாண்டிய மூன்று மதிப்பீடுகளை (absolute values) பிளாட்டோ வலியுறுத்துகிறார். அவை : உண்மை (truth), நல்லது (goodness), அழகு (Beauty). இந்த மதிப்பீடுகள் (values) இன்றும் மிக உயர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவை புலனறிவைத் தாண்டியவை என்றும் புலனறிவை விட மேன்மையானவை என்றும் கருதுவது அறிவியலுக்கு எதிராகவும் உள்ளுணர்வு (intuition), மிஸ்டிஸிஸம் மற்றும் பிற்போக்குப் பார்வைகள் (reactionary views) ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் உள்ளன என்று பெர்னால் கூறுகிறார்.
அவர் படிப்பவர்கள் மனதை மயக்கும் வகையில் தர்க்கரீதியாகப் பல கருத்துகளை விவாதித்துள்ளார்.ஆனால் கூடவே மிஸ்டிஸிஸத்தையும் கலந்தார் என்றுதான் பொதுவாக மதிப்பிடப்படுகிறது.
அரிஸ்டாட்டில் பொது அனுபவ அறிவைச் சார்ந்த தத்துவ வல்லுனர் (Philosopher of common sense). அரசு என்பது மாறத் தேவை இல்லை என்று கருதினார். மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் மிதமான வழியில் இருப்பதுதான். எப்படிப்பட்ட அரசாக இருந்தாலும் அதில் வாழ்ந்து விடலாம். இடை நிலை கொள்கை (என்பது அவருடைய புகழ் பெற்ற தத்துவம் ஆகும். நற்பண்பு (Doctrine of the Mean) அல்லது நல்லொழுக்கம் (virtue) என்பது உச்ச கட்டத்திற்கும் போகாமல் தாழ்ந்த கட்டத்திற்கும் போகாமல் மிதமாக நடப்பதுதான் என்று கூறுகிறார் .
சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் ஆகிய மூவரும் கிரேக்க அறிவியலின் வளர்ச்சியில் என்ன தாக்கங்களை உருவாக்கினார்கள்?. பெர்னால் மூவரின் பங்களிப்பையும் கடுமையாக விமர்சிக்கிறார்.
இந்த மூவரும் வாழ்ந்த காலம் ஏதென்ஸ் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலம். ஐயோனிய தத்துவ வல்லுனர்களிடம் ஆரம்பித்த கருத்து வளர்ச்சிக்கு இந்த மூவரின் சிந்தனைகளும் முட்டுக்கட்டை போட்டன. சமுதாயம் முன்னேற்றம் காணாத நிலையில் இருந்ததால் இயற்கை மாறுகிறது என்ற கருத்தும் அது வளர்கிறது என்ற கருத்தும் மறுக்கப்பட்டன என்று பெர்னால் கூறுகிறார்.
தத்துவம் முற்போக்காக இருந்தது போய் விட்டது. தத்துவத்தில் பொருள் முதல் வாதமும் (materialism) விலகி விட்டது. அவற்றின் இடத்தில் எந்தக் கண்ணோட்டங்கள் வந்தன? ஸாக்ரடீஸ் மற்றும் பிளாட்டோவின் இறையுணர்வு கலந்த உள்ளுணர்வு (mystical form) வழியாக எழும் கருத்து முதல் வாதமும் (idealism) இருக்கும் நிலையோடு ஒத்துப் போவதுதான் சிறந்தது (conformist) என்ற அரிஸ்டாட்டிலின் கருத்துகளும்தாம் அவற்றின் இடத்தை கண்ணோட்டங்கள்.
வாழ்க்கை இப்போது எப்படியிருக்கிறதோ அதை அப்படியே ஒப்புக் கொள்வதுதான் சிறந்தது என்று தத்துவம் போதித்தது . சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு கஷ்டப்படுபவர்களுக்கு தத்துவம் மாற்று வழிகளைத் தர வில்லை. மாறாக , அப்படிக் கஷ்டப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் அது இயற்கையின் ஒரு பகுதி என்றும் கூறப்பட்டது.
கே: தொழில் நுட்பத்தில் ஏற்படும் சில முன்னேற்றங்கள் -மனிதர்களிடையே உருவாக்கிய பண்பு மாற்றம் என்ன?
தொழில் நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களால் எந்த அளவிற்கு மனிதர்களின் பண்பு மாற்றங்களை உருவாக்க முடியும் என்று தெரியவில்லை. பொதுவாக மனிதன் போன்ற பெரிய உயிரினங்களில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் டார்வினின் பரிணாமக் கோட்பாடுகளின்படி பல லட்சக் கணக்காண ஆண்டுகளாகும். அப்படித் தேவையில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். உயிரியல் வல்லுனர்களால்தான் இதற்குப் பதில் தர முடியும். நிச்சயமாக நானில்லை.
கே: உடலுழைப்பை விட சிந்தனை செய்வது மேலானது என்கிற கருத்து எப்போது தோன்றியது?
நதிக்கரை நாகரிகங்களில்தான் (எகிப்திய நாகரிகம், சுமேரிய நாகரிகம்,சீன நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம்) இந்தக் கருத்து முதலில் எழுந்தது. அன்றிருந்த சமூகச் சூழ்நிலை இதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது.
இந்த நாகரிகங்களில் முதலில் எழுதுவது என்பது தோன்றவில்லை. மிக நீண்ட காலத்திற்குப் பின் தான் எழுதுவது தோன்றியது. ஆனால் அவை இன்றிருக்கும் மொழிகளைப் போல் இல்லை. இன்று மொழிகள் ஒலியின் அடிப்படையில் alphabets களை உபயோகித்து எழுதும் முறை. உதாரணமாக ஆங்கில மொழியில் இருக்கும் 26 alphabets களை வைத்து எல்லாச் சொற்களையும் எழுதி விடலாம். முதலில் தோன்றிய மொழிகள் அப்படிப் பட்டவை அல்ல.அவற்றை எழுதுவது என்பது மிகக் கடினம். ஏற்கனவே வர்க்கப் பிரிவினை அடைந்திருந்த நதிக்கரை நாகரிகங்களில் இது பூசாரி வர்க்கத்தோடு எழுதப் படித்தலைக் குறுக்கி விட்டது.
பெர்னால் இன்னனும் சற்று ஆழமாக இதை விவாதிக்கிறார்.
முதலில் தோன்றிய நாகரீகங்களில் நகரங்கள் தோன்றியவுடன் நிர்வாக அளவிலான அமைப்புக்கான தேவைகள் (administrative needs) ஏற்பட்டன. இந்தத் தேவை தொழில் நுட்ப வேலைகளில் நேரடியாக ஈடுபடுவதிலிருந்து நிர்வாக அமைப்பாளர்களை விலக்கியது. நிர்வாகம் செய்யும் பணியிலிருப்பவர்களின் எண்ணிக்கை கூடியதும், அவர்கள் தவிர்க்க முடியாதவர்களாகவும் ஆகிய பின்னர் அவர்கள் ஒரு சாதியாக (இங்கு சாதி என்பது ஒரு பிரிவு என்ற அர்த்தத்தில்) உருவானார்கள்.அவர்கள் கைவினைஞர்களை விட தங்களை உயர்ந்த பிரிவாக எண்ணத் தொடங்கினார்கள்.
இந்த மன நிலையை உணர்த்தும் வகையில் தன் மகனுக்கு ஓர் அன்னாள் எகிப்திய தந்தை வழங்கிய அறிவுரையை பெர்னால் விவரிக்கின்றார்.
அன்றிருந்த அனைத்துத் தொழில்களிலும் எழுதுபவர் தொழில்தான் சிறந்தது என்று அந்த அறிவுரையில் அந்தத் தந்தை கூறுகிறார். உலோகம் சம்பந்தமான வேலை செய்பவர், தச்சர், நெசவாளர், மீன் பிடிப்பவர் போன்ற பணியாளர்கள் உடலளவில் படும் கஷ்டங்களை விவரிக்கிறார். எழுதுபவர்கள் உடலுழைப்பு செய்யாமல் நன்கு சொகுசாக வாழ்பவர்கள். அரச மாளிகையில் தினமும் உணவு உண்பவர்கள்; கடவுளே அவர்களுடன் எப்போதும் இருப்பார். அதனால் எழுதுபவர் தொழில்தான் சிறந்தது என வாதிடுகிறார்.
நதிக்கரை நாகரிகங்கள் அழிந்த பிறகு இரும்பு உலோக நாகரிகம் உருவாகியது. இரும்பு உலோகக் காலத்தில் எழுத்து மொழியில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டது. கி.மு 1600 வாக்கில் ஃபினிசீய (Phoenician) நாகரீகத்தில்தான் alphabetical எழுத்து முறை தோன்றியது. இது எழுதப் படித்தலை ஜனநாயகப்படுத்தியது.
பின்னர் வந்த கிரேக்க சமுதாயம் அடிமை சமுதாயம். கிரேக்க சமுதாயத்திலும் உடலுழைப்பை விட சிந்தனை செய்வது மேலானது என்கிற கருத்தே மேலோங்கியது. இதனால் கிரேக்க சமுதாயத்தின் அறிவியலுக்கும் பெருத்த நஷ்டம்.
ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ சமுதாயத்திலும் இந்தக் கருத்து மேலோங்கியிருந்தது.
ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவம் உடையும் போதுதான் இந்தக் கருத்து மாறுகிறது. இந்தக் கருத்து உடைந்தது நவீன அறிவியலின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக அமைந்தது.
கே: மோசமான பொருளாதாரச் சூழ்நிலையும், நியாயமற்ற சமூகச் சூழ்நிலையும் இருப்பது மதங்களும் – பகுத்தறிவுக்குப் புறம்பான நம்பிக்கைகளும் தழைப்பதற்கும் ஏதுவாகுமா?
மோசமான பொருளாதார சூழ்நிலையும், நியாயமற்ற சமூக சூழ்நிலையும் இருப்பது மதங்களும் – பகுத்தறிவுக்கு புறம்பான நம்பிக்கைகளும் தழைப்பதற்கும் ஏதுவாகும் என்று பெர்னால் அவருடைய புத்தகத்தில் கூறுகிறார். ஏன் அப்படி நடக்கும் என்று அவர் விளக்கவில்லை.ஆனால் பல வரலாற்றுச் சான்றுகளைத் தருகிறார்.
நதிக்கரை நாகரிகம் சீரழிந்த போது அந்த நாகரிகங்களில் பகுத்தறிவுக்குப் புறம்பான நம்பிக்கைகள் அதிகமாக வளர்ந்தன என்று கூறுகிறார்.
கிரேக்க நாகரிகத்தின் தத்துவ வரலாற்றில் இதை பெர்னால் நன்கு சுட்டிக் காண்பிக்கிறார்.
ரோமானிய நாகரிகத்தின் பொருளாதார வீழ்ச்சியும், பொதுமக்களின் படுமோசமான வாழ்க்கை நிலைகளும் எப்படி கிறிஸ்தவ மதத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்தன என்று கூறுகிறார்.
தமிழ்நாட்டின் கடந்த நூறாண்டு கால வரலாறும் மற்றும் இந்தியாவில் இப்போதிருக்கும் சூழ்நிலைகளும் இந்தக் கருத்தை வலியுறுத்துவதாக நான் கருதுகிறேன்.
இந்தக் கருத்து இன்னமும் தீவிர ஆராய்ச்சிக்குட்படுத்தப் பட வேண்டிய கருத்து. l