சோவியத் ரஷ்யா உள்நாட்டு யுத்தத்தில் பெற்ற வெற்றி, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளர் வர்க்கமும் விவசாயிகளும் இணைந்த கூட்டணியின் அடிப்படையில் அமைந்த மக்கள் சக்தி, பூமிப்பந்தில் உள்ள எந்தவொரு சக்தியும், அது எவ்வளவுதான் வல்லமை படைத்ததாக இருந்தாலும், வந்து மோதினால் அதனைத் தோற்கடிக்க முடியும் என மெய்ப்பித்திருக்கிறது….(நூலில் சௌகத் உஸ்மானி.)
சௌகத் உஸ்மானியின் இந்தக்கூற்று எக்காலத்திற்கும் பொருந்தி வரக்கூடியதாக அமைந்துள்ளதனையும், சமகால அரசியல் சூழலில் விவசாயிகளின் தொடர் போராட்டமும் கவனத்தில் கொள்ளத்தக்கதாக உள்ளதனை இங்கு குறிப்பிட வேண்டியதாகிறது. பயணக்கட்டுரைகள் எழுதுவது படைப்பிலக்கியத்தின் ஒரு வகையாகிறது. எல்லா எழுத்தாளர்களும் சிறுகதை, நாவல் என எழுதினாலும் மாற்றாக பயணக்கட்டுரைகளையும் எழுதுவதை வழமையாகக் கொண்டுள்ளனர். அத்தகைய கட்டுரைகள் அவர்களது எழுத்தின் தன்மைக்கேற்றார் போல் தாங்கள் பயணிக்கும் பகுதிகளில் வாழும் மக்களின் பழக்கங்கள், கலாச்சாரம், நாகரீகம், நம்பிக்கைகள் என பல்வேறு தரவுகளைக் கொண்டிருக்கும். இதுவன்றி சில படைப்பாளிகள் அவர்களது வாழ்வு நிலை, வரலாறு, போராட்டங்கள், பொருளாதாரம், அரசியல் நிலை, போன்ற அம்சங்களையும் தங்களது எழுத்தில் பதிவு செய்வர். இத்தகைய பதிவுகள் சுவாரசியமற்ற, சந்தை மதிப்பற்ற தகவல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகளை வெளியிட இதழ்களும் முன்வருதில்லை.
பொதுவாக, இக்கட்டுரைகள் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகள் குறித்தவையாகவே அமையும். இந்த நாடுகளுக்கு சுற்றுப்பணயம் மேற்கொண்டு அவற்றின் வளம், வளர்ச்சி, நாகரீகம், செல்வச் செழிப்பு என்ற பொருளடக்கம் கொண்ட கட்டுரைகளையே பலரும் எழுதுவர். அவற்றிற்கான வரவேற்பு நிரந்தரமாக உண்டு. மாறாக வறட்சி, வறுமை, போராட்டம், புரட்சி என நடந்து கொண்டிருக்கும் நாடுகள் குறித்த பதிவுகள் குறித்த நூல்களை வாசகர்கள் விரும்புவதாகவே இருப்பினும் அவற்றை எழுதுவோர் அரிது. அதுவும், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் குறித்த நூல்கள் தமிழில் இருக்கின்றனவா என அறுதியிட இயலவில்லை. எனினும், இந்நூல் அவ்வேக்கத்தினைப் போக்குவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நூலின் முதல் பகுதி பெரிதும் பேசப்படாத ஆப்கன் நாட்டின் நிலவமைப்பு, அந்நாட்டின் மக்கள் குறித்த பதிவுகள், அரசியல் நிலைமை, ஆட்சியாளர்களின் மனப்போக்கு என அனைத்துப் பதிவுகளையும் உள்ளடக்கியதாக இருப்பது சிறப்பானது.
இருப்பினும், மனிதவர்க்கம் தனக்கான வாழ்வினை நகர்த்திட பல்வேறு சூழல்களை எதிர்கொள்கிறது. அதில் இன்றியமையாத கூறாக தனக்கான அடிப்படை உரிமைகளை உறுதி செய்து கொள்ளுதலும், தனக்கான இருப்பினை தக்க வைத்துக் கொள்ளுதலும் ஆகும். ‘ஒரு புரட்சியாளனின் பயணங்கள்‘ என்னும் நூல் காரிலோ அல்லது விமானத்திலோ பயணம் மேற்கொண்டு எழுதப்பட்டதல்ல. பெரும்பாலும், கால்நடையாக சற்றேறக்குறைய பல தருணங்களில் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து சென்று எண்ணற்ற சாமானியர்களையும், போராட்டக்காரர்களையும், அதற்கு தலைமையேற்ற பொறுப்பாளர்களையும் சந்தித்து, விவாதித்துப் பெற்ற அனுபவங்களால் என உருவாக்கப்பட்டது. வழி நெடுக தாங்கவொணா இன்னல்கள் மட்டுமல்லாது கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப் பெற்று மயிரிழையில் அதிலிருந்து தப்பிச் சென்று போராடியவர் சௌகத் உஸ்மானி. மாஸ்கோ நகரினை அடையும் வரை அணுவளவும் தனது நோக்கம், குறிக்கோள்களிலிருந்து பிசகிவிடாது அதனை முன்னெடுத்துச் சென்ற ஒரு புரட்சிக்காரரின் பயண அனுபவங்களை உள்ளடக்கியது இந்த நூல்.
‘மௌலா பக்ஸ் உஸ்தா‘ எனும் பிறப்புப் பெயர் கொண்ட சௌகத் உஸ்மானி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உயிரளித்தவர். அவர் வளர்த்தெடுத்தோரில் பின்னர் பொதுச்செயலர்களான பி.சி.ஜோஷி மற்றும் அஜாய் கோஷ் குறிப்பிடத்தக்கவர்கள். துருக்கி கிலாபத் இயக்கத்தில் பங்கு பெறுவதற்காகத் தொடங்கிய சௌகத் உஸ்மானியின் அரசியல் வாழ்வு பின்னர் தடம் மாறி பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தினை இந்தியாவிலிருந்து வேரறுக்கும் போராட்டமாக மாறியது. சாத்வீக வழியிலான போராட்டத்தில் பற்றில்லாத எண்ணற்றோர் ஆயுதவழிப் புரட்சியினைத் தெரிவு செய்து கொண்டனர்.
தனது வாழ்நாள் நெடுக மார்க்சீய நெறிகளில் ஆழ்ந்த பிடிப்புள்ளவராய், மாறாப் பற்றுள்ளவராய் அவர் விளங்கினார். இருப்பினும், துவக்க நாட்களில் அவர் அது குறித்த புரிதல்கள் ஏதுமற்றவராய் இருந்தார். பூர்ஷ்வா, (bourgeoisie) தொழிலாளி வர்க்கம், (proletariate) பெட்டி பூர்ஷ்வா, (petty bourgeoisie), தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் (dictatorship of proletariate) ஆகிய சொற்கள் அப்போது எனக்கு மிகவும் வேடிக்கையாய்த் தோன்றின என அவரே நூலில் குறிப்பிடுகிறார். பின்னர், மாஸ்கோவில் மார்க்சீயத் தத்துவம் நடைமுறை, மார்க்சீயப் பொருளாதாரம், வரலாற்றினை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் விளக்குதல் போன்றவற்றில் போதுமான அளவு கல்வி கற்றுத் தேர்ந்ததையும் குறிப்பிடுகிறார். தோழர் லெனினைச் சந்தித்த நிகழ்வுகளையும் அவர் குறிப்பிடுகிறர். அப்பகுதிகள் மிகவும் முக்கியமானவை. தாஷ்கெண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது குறித்த தகவல்களும், பல்வேறு இந்தியத் தலைவர்கள் குறித்த பகுதிகளும், தமிழகத்தினைச் சேர்ந்த புரட்சியாளரான செண்பகராமன் குறித்து லெனின் அறிந்திருந்த பகுதிகளும் குறிப்பிடத்தகவை.
அக்டோபர் புரட்சி, செஞ்சேனை குறித்த தரவுகள், போராட்டங்களை முன்னெடுத்துச் சென்ற அன்றைய தலைவர்கள், போராளிகள் என பல விபரங்கள் நூலில் இடம் பெறுகின்றன. ஒரு சிறந்த வரலாற்று ஆவணமாக இந்நூல் திகழ்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள விழையும் தோழர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்நூல் மிக்க பயனுள்ள கையேடாக விளங்கும். துவக்க கால சோவியத் யூனியனின் நிகழ்வுகள், அதன் வளர்ச்சி, மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரது உத்வேகம், மனவெழுச்சி, அவர்களது தளர்விலாத செயல்பாடு ஆகியவற்றினை சௌகத் உஸ்மானி சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். நூலின் முதல் பகுதி இவற்றினை அடக்கியுள்ளது.
இரண்டாவது பகுதியில் காங்கிரஸ் தலைவர்களுடனான அவரது நட்பு குறித்துப் பேசுகிறது. ரஷ்யப் புரட்சி குறித்து ‘ரஷ்யப் புரட்சியின் ஒரு பக்கம்‘ என்ற நூலினை அவர் எழுதினார். நேரு அதற்கான முன்னுரையினை ஒரே நாளில் எழுதிக் கொடுத்ததாக சௌகத் உஸ்மானி தெரிவிக்கிறார். இந்திய நாட்டின் விடுதலைக்கு சோவியத்தின் உதவி நிச்சயம் தேவைப்படும் என காங்கிரஸ் தலைவர்கள் உறுதியாக நம்பியதுடன், அவர்களுக்கிடையிலான ஒரு தூதுவராக சௌகத் உஸ்மானி செயல்பட வேண்டுமென அவர்களது எண்ணம் இருந்தது. மாஸ்கோ நகரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் மாநாட்டில் கட்சியின் தலைமைக்குழுவிற்கு அவர் தெரிவு செய்யப்பட்டார். அப்போது ஸ்டாலினைச் சந்தித்த நிகழ்வுகளை அவர் கூறுகிறார். கட்சி இந்திய விடுதலைக்கான போராட்டத்திற்கு வன்முறையிலான நடவடிக்கைகளை மறுதலித்து, பெருந்திரள் போராட்டங்களின் வாயிலாக அதனை மேற்கொள்ள வலியுறுத்தியதாக சௌகத் உஸ்மானி கூறுகிறார். இச்சூழலில் மேலும் பல பொறுப்புகளும் அவரைத் தேடி வந்தடைந்தன. இவற்றிற்கு அவரது நிலைப்பாடு எவ்வாறாக இருந்ததெனில், தன்னைப் பற்றிய மிகை மதிப்பீடுகளாக இவை எனக்குத் தோன்றின என்று பதிவிட்டுள்ளார் சௌகத் உஸ்மானி.
மாஸ்கோவிலிருந்து நாடு திரும்பியதும் 87 நாட்கள் மட்டுமே அவர் கைதாகாமல் வாழ்ந்தார். மீரட் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு ஆகியவற்றிகாக கைது செய்யப்பட்டார். நாடு முழுதும் பல்வேறு தலைவர்கள் கைதாயினர். போல்ஷ்விக் சதி வழக்குகள் என்று இவை அறியப்பட்டன. எண்ணற்ற இயக்கப் போராளிகளுக்கு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. சௌகத் உஸ்மானி தனது வாழ்நாளில் பதினாறு ஆண்டுகளை சிறையில் கழித்தார்.
புத்தகத்தின் இறுதிப் பகுதிகள் 75களில் சோவியத் குடியரசினைச் சார்ந்த அஜர்பெய்ஜான், துர்க்மேனியா, கஜக், உஸ்பெக்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தொழில் வளர்ச்சி, விவசாயப் பண்ணைகள், கைத்தொழில் முன்னேற்றம், மக்களின் அன்றாட வாழ்வு, கல்வி என புள்ளிவிவரத் தரவுகளால் நிரம்பியுள்ளது. நூலில் சோவியத் நாட்டின் ஐந்தாண்டுத் திட்டங்கள் ஏற்படுத்திய முன்னேற்றத்தினை அவர் மிகத் துல்லியமாக விவரித்துள்ளார். இத்திட்ட வரைவுகள், வளர்ச்சி குறித்து முதலாளித்துவ ஏடான நியூயார்க் டைம்ஸ் பாராட்டி எழுதியது நூலில் இடம் பெற்றுள்ளது. சோவியத்தில் முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் சாதனையாக ஒரு நாளில் சராசரியாக ஒரு புதிய தொழிற்சாலை, இரு அரசுப் பண்ணைகள், 115 கூட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன என்ற செய்தி வாசிப்போருக்கு வியப்பினை உண்டாக்குகிறது. இத்தகைய வளர்ச்சி குறித்து பெருங்கவியான ரவீந்திரநாத் தாகூர் தனது மரணப் படுக்கையில் இருந்தபோது வெளியிட்ட கருத்து கூர்ந்து கவனிக்கத்தக்கது. சோவியத் நாட்டின் முன்னேற்றம் கூட்டுறவின் அடிப்படையில் அமைந்து வியக்கதக்க அளவில் வெற்றி அடைந்துள்ளது. ஆயினும், இந்தியா, அறிவார்ந்த, தொன்மை பெற்ற கலாச்சாரத்தினைக் கொண்டிருந்தாலும் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் இவ்வாறான நிலையைக் கொண்டிருக்கிறது எனக் கூறியுள்ளார். இந்தியாவிலும் முன்னோடித் திட்டமாக ஐந்தாண்டுத் திட்டம் காலனியாதிக்கம் முடிவு பெற்ற பின்னர் நேருவால் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சோசலிசத்தின் மீதான அவரது மாறாப் பற்று, அசையா நம்பிக்கை இந்நூல் நெடுகிலும் நிரம்பித் தளும்புகிறது. அவர் மறையும் வரை சோவியத் நாட்டுடன் மானசீகப் பிணைப்பினையும், பிரமிப்பினையும் கொண்டவராகவே இருந்தார். வரலாற்றின் எண்ணற்ற பக்கங்களை புரட்டிச் செல்லும்போது எண்ணற்றோர் சிந்திய குருதியின் வாசத்தினையும், அதன் கறைகளையும் காண முடியும். முகமறியா போராளிகள் பலர் வரலாற்றிலிருந்து மறைக்கப்படுகின்றனர். மறக்கப்பட்டுவிடுகின்றனர். அத்தகையோரது வாழ்வு. கொள்கை, அவர்களது நோக்கங்கள், தியாகம் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுவதில்லை, எடுத்துரைக்கப்படுவதில்லை. தாங்கள் அனுபவிக்கும் சுதந்தரம் எத்தகைய சூழலில், எவ்வாறான போராட்டங்களின் வாயிலாகப் பெறப்பட்டது என்ற விவரணைகள் இவர்களுக்கு எடுத்துரைக்கப்படுவதில்லை என்பது ஓர் அவலமிக்க உண்மை. இவ்வாறான சூழல் அத்தலைமுறைகளை கூர்மைப்படுத்தவியலாது அவர்களை மழுங்கடிப்பதுடன் அவற்றை முறைகேடாக பயன்படுத்திக் கொள்ளவும் தூண்டுகிறது. வரலாற்றினை மறந்து வாழும் நாட்டில் மெல்ல மெல்ல எதேச்சாதிகாரம் நாமறியாது தழைக்கத் தொடங்கும் என்பது துவர்ப்புமிக்க உண்மை. சாமானியர் தங்களது அடிப்படை உரிமைகளை படிப்படியாக இழக்க நேரிடும். இதனையும் சேர்த்தே அவர்களுக்கு நாம் வரலாற்றினை கற்பிக்க வேண்டும். இஃது ஓர் சமூகக் கடமையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏனைய நூல்களிலிருந்து சௌகத் உஸ்மானியின் நூல் மிகவும் மாறுபட்டுக் காண்கிறது. அவர் நூலின் எப்பகுதியிலும் தனது தனிப்பட்ட வாழ்வு குறித்த செய்திகளை இதில் வாசகனுக்கு அளிக்கவில்லை. நூல் நெடுகிலும் தனது அரசியல் வாழ்வு, தனது நோக்கங்கள், தான் அடைந்த அனுபவங்கள் என அவற்றினையே தருகிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கை அவசியமற்றது, தனது போராட்ட அனுபவங்கள் மட்டுமே சமூகத்திற்கு போதுமானது என்ற தன்னலமற்ற அவரது சிந்தனையினை இது உணர்த்துவதாக அமைந்துள்ளது. தனது இருபதாவது வயதில் கட்சியில் இணைந்து பணியாற்றத் துவங்கியவர் சௌகத் உஸ்மானி. மலிவான விளம்பரங்கள், சொந்த ஊடகங்கள், துதிபாடிகள் வாயிலாக புகழ் பெறத் துடிக்கும் அரசியல் ‘சேவை நாயகர்கள் நிறைந்த நாட்டில் இறுதி வரை புரட்சியாளனாய் வாழ்ந்து மறைந்த அவரது தன்னலமற்ற வாழ்வும், ஆற்றிய பணிகளும் வியப்பினை ஏற்படுத்த வல்லவை. எச்சூழலிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவோ, பிரபலப்படுத்திக் கொள்ளவோ விழையாது வாழ்ந்து மறைந்த அவரது வாழ்வு அனைவருக்கும் சிறந்த முன்னுதாரனமாகிறது. இத்தகையதொரு அரிய நூலினை முதலில் தமிழில் வெளியிட்ட பாரதி புத்தகாலயத்தின் செயல் பாராட்டுக்குரியது. l
previous post