சிதம்பரம் இரவிச்சந்திரன்
காடுகளை அழித்து நாடாக்கிவிட்ட சூழ்நிலையில் வனங்களில் வாழும் விலங்குகளைக் காக்க ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நகரமயமாக்குதல், தொழில்மயமாக்குதல், போக்குவரத்து வளர்ச்சி என்று பல்வேறு காரணங்களால், காடுகள் அழிக்கப்படுகின்றன. காட்டின் அடர்ந்த வனப் பகுதிகளின் வழியே இரட்டைவழிச் சாலைகள், நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்படுகின்றன.
சில இடங்களில் இந்த சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவதும் நடைபெறுகிறது. உணவுத் தட்டுப்பாடு, நீர்ப் பற்றாக்குறை, வறட்சி, வெப்ப உயர்வு, பெரும் மழை, காட்டுத்தீ போன்ற பல்வேறு பேரிடர்களால் பாதிக்கப்படுகின்றன. வனவிலங்குகள் மனிதக் குறுக்கீடுகளாலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அடர்ந்த சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் வழிகள் பெரும்பாலும் காடுகளில் அமைந்துள்ளன.
காட்டிற்கு நடுவே போடப்பட்டுள்ள சாலைகள் வழியாக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு வனவிலங்குகள் கடந்துசெல்லும்போது அவற்றின் உயிரிழப்பிற்குக் காரணமாகிறது. இதனால், ரயில், வாகனங்கள் மோதி யானை உட்பட பல வனவிலங்குகள் அநியாயமாக உயிரிழக்கின்றன. யானை, புலி, சிறுத்தை போன்ற பெரிய விலங்குகள் அடிபட்டு உயிரிழப்பது அடிக்கடி செய்தியாக வெளிவருகிறது.
ஆனால், பாம்பு, அணில், உடும்பு, எரும்புத் தின்னி, மான், கரடிகள் போன்ற உயிரினங்கள் மனிதர்களால் ஏற்படும் விபத்துகளில் பலியாவது செய்தியாக வெளிவருவதில்லை. இந்நிலையை மாற்றியமைக்க காடுகளுக்கு நடுவே இயற்கைப் பொருட்களால் கட்டப்படும் பாலங்கள் உதவுகின்றன. வனவிலங்குகளின் நடமாட்டம், இடப்பெயர்வு, இனப்பெருக்கக் காலம் போன்ற பல்வேறு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சாலைகளுக்கு நடுவில் இத்தகைய பாலங்கள் உருவாக்கப்படுகின்றன.
சூழலுக்கு நட்புடைய இவை சூழல் பாலங்கள் (eco ducts/eco bridges) என்று அழைக்கப்படுகின்றன. இதன் மூலம் வனவிலங்குகளின் நடமாட்டத்தில் ஏற்படும் இடையூறுகள் அகற்றப்படுகிறது. இந்தியாவின் பல இடங்களிலும் கட்டப்பட்டுள்ள இவை வனவிலங்குகளுக்கு உதவுவதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
பாலங்களின் கட்டுமானம்
தமிழ்நாடு ஆனமலை வால்பாறை பீடபூமியில் அமைந்துள்ள இதுபோன்ற விதானம் ஒன்றை மக்காக் வகைக் குரங்குகள் (macaque) பயன்படுத்துகின்றன. உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற வட இந்திய மாநிலங்களிலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களிலும் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு நடுவில் இத்தகைய பாலங்கள் அமைந்துள்ளன.
விதானங்களாகக் கட்டப்படும் இது போன்ற சில பாலங்கள் குரங்குகள், காட்டு அணில்கள் போன்ற விலங்குகள் காட்டில் உள்ள சாலைகளைக் கடந்துசெல்ல உதவுகின்றன. கான்கிரீட்டால் கட்டப்படும் சுரங்கப்பாலங்கள், மேம்பாலங்கள் பெரிய விலங்குகள், இருவாழ்விகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. இந்தப் பாலங்கள் வழக்கமாகச் செடி, கொடிகள் வளர்க்கப்பட்டு, சாலையின் சிறிது தூரத்தில் இருந்தே காட்டுப்பகுதியில் விலங்குகள் பார்க்கக்கூடிய விதத்தில் அமைக்கப்படுகின்றன.
இதனால், இவற்றை விலங்குகள் எளிதாக அடையாளம் கண்டு, பயன்படுத்துகின்றன. இது போல தேசீய நெடுஞ்சாலை 44ல் அமைந்துள்ள சுரங்கப்பாலத்தை ராயல் வங்காளப் புலிகள் பயன்படுத்துகின்றன.
வரும் ஐந்தாறு ஆண்டுகளில், இந்தியாவில் 50,000 கி.மீ தூரத்திற்கும் கூடுதலான சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய வனவிலங்குகள் கழகம் (Wildlife Institute of India WII) 2020ல் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் பல சாலைகளும் நான்கு வழிச்சாலைகளாக விரிவாக்கப்பட உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. வனவிலங்குகள் பயன்படுத்தும் மூன்று முக்கிய பாதைகள் இத்தகைய சாலை விரிவாக்கத் திட்டங்களால் பாதிக்கப்படும் என்று புதுடெல்லியில் அமைந்துள்ள இந்திய தேசீயப் புலிகள் ஆணையம் (National Tiger Conservation Authority NTCA) கூறியுள்ளது.
அஸ்ஸாமில் அமைந்துள்ள தேசீய நெடுஞ்சாலை 37ல் கஜுரங்கா கார்பி அலாங் (Kaziranga-Karbi Anglong) ஆகிய இடங்களுக்கு இடையில் செல்லும் சாலை, கர்நாடகாவில் அமைந்துள்ள மாநில நெடுஞ்சாலை 33ல் நாஹர்ஹோல் (Nagarhole) புலிகள் சரணாலயம் வழியாகச் செல்லும் சாலை ஆகியவை இவற்றில் அடங்கும்.
உத்தராகண்ட் மாநிலத்தில், களஹங்கி நைனிட்டால் (Kaladhungi-Nainital) சாலையில் ராம்நகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சமீபத்தில் ஊர்ந்து செல்லும் விலங்குகளுக்காக ஒரு புதிய கயிற்றுப் பாலம் கட்டப்பட்டுள்ளது. தரை மேல் பாலமான இது 90 அடி நீளம், 5 அடி உயரம், 40 அடி அகலம் உடையதாக, மூன்று பெரிய மனிதர்களின் எடையைத் தாங்கக்கூடிய வலுவுடன் அமைக்கப்பட்டுள்லது.
மூங்கில், சணல், புற்களால் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை உடும்புகள், அணில்கள், எறும்புத் தின்னிகள், பாம்புகள் போன்ற வகை விலங்குகள் எளிதில் பயன்படுத்துவதற்காக கொடிவகைத் தாவரங்களும் வளர்க்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்கானிக்கும் வகையில் இதில் நான்கு கண்காணிப்புக் காமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக வனச்சரக அதிகாரி சந்திரசேகர ஜோஷி கூறியுள்ளார்.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நைனிட்டால் சாலையில் ஊர்ந்து செல்லும் விலங்குகள் அடிபட்டு உயிரிழப்பது பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யானை, புலி போன்ற பெரிய வனவிலங்குகளுடன் ஒரு காட்டின் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவதில் சிறிய விலங்குகளும் முக்கியப்பங்கு ஆற்றுகின்றன.
பூச்சிகளை உண்ணும் ஊர்வன, அவற்றை உணவாக உட்கொள்ளும் பாம்புகள், பாம்புகளை உண்ணும் கழுகுகள் என்று பிணைக்கப்பட்டுள்ள உயிர்ச்சங்கிலி இதனால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாலங்களின் அமைப்பு
சாலையில் ஒரு வனவிலங்கு உயிரிழக்க நேர்ந்தால், அதனால் இது போன்ற பாலங்கள் கட்டப்படுவதாக நாம் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், இதற்கு இது மட்டும் காரணமில்லை என்று இந்திய வனவிலங்கு ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த வனவிலங்கு சூழலியல் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் பிலால் ஹபீப் (Bilal Habib) கூறுகிறார்.
இவற்றின் கட்டுமானத்தில் அதன் அளவு, பாலம் அமையும் இடம் ஆகிய விஷயங்கள் முக்கியத்துவம் பெறுவதாக பிலால் கூறுகிறார். காடுகளின் நடுவில் மனிதர்கள் அமைக்கும் சாலைகள் வனவிலங்குகளுக்கு அவற்றின் நடமாட்டத்திற்கு இடையூறாக அமையும் பெரும் சுவர்கள் என்று அவர் கூறுகிறார். இரண்டு வழிச்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக்கப்பட்டால் இந்த நிலை ஏற்படாது என்பதும் சரியில்லை.
பசுமைச் சாலைகள் என்பது சாலையின் இருமருங்கிலும் மரங்களை நடுவது மட்டும் இல்லை. அந்தப் பகுதியில் உள்ள காட்டில் வாழும் விலங்குகள், அவற்றின் வாழிடம், நில அமைப்பு, இயல்பான வாழ்வியல் இடையூறுகள், சாலையின் நீளம், அதன் சரிவு போன்றவை பற்றிய புரிந்துணர்வும் வேண்டும் என்று பிலால் கூறுகிறார். பாலங்களின் அகலம், பரப்பு, எண்ணிக்கை போன்றவை விலங்குகளின் இடம்பெயர்வு முறைகளைப் பொறுத்து இவை கட்டப்படவேண்டும்.
பெரிய பாலங்களை சாம்பார் வகை மான்கள், புள்ளிமான், நீலகிரிக் குரங்குகள் (Nilgiri langurs), காட்டுப்பன்றிகள் பயன்படுத்துகின்றன. ஆனால், 5மீட்டர் என்றாலும், 500 மீட்டர் என்றாலும் புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கு அது பற்றிக் கவலையில்லை. குரைக்கும் மான்கள் (barking deers) போன்ற சில விலங்குகள் தமக்கென்ரு ஒரு குடும்பத்தை அமைத்துக்கொண்டு தனித்து வாழும் இயல்புடையவை. இவற்றிற்கு சிறிய பாலங்களே உதவியாக இருக்கும் என்று பிலால் கூறுகிறார்.
சவால்களும்-வெற்றிகளும்
தமிழ்நாடு ஆனமலையில் செயல்பட்டுவரும் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின் (Nature Conservation Foundation) மூத்த விஞ்ஞானி திவ்யா முத்தப்பா 2008ல் இந்த அமைப்பால் கட்டப்பட்ட 3 கி.மீ நீளம் உள்ள ஆறு பாலங்களை சிங்கவால் குரங்குகள், நீலகிரிக் குரங்குகள் போன்றவை நல்லமுறையில் பயன்படுத்துவதால் சாலையில் வாகனங்கள் மோதி உயிரிழப்பது பெரும் எண்ணிக்கையில் குறைந்துள்ளது என்று கூறுகிறார்.
இதில் சிறிய பாலங்கள் 10 மீ அளவிலும், பெரியவை 25மீ அளவிலும் கட்டப்பட்டன. இவை வனவிலங்குகளின் உயிர் காக்கும் அம்சங்களாக விளங்குகின்றன. தமிழ்நாட்டின் நீலகிரி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்தப் பாலங்கள் இப்போது வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு உரிய ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலத்தீன் அமெரிக்காவில் வனப்பகுதிகளில் வாழும் எண்ணற்ற வனவிலங்குகளைக் காக்க இது ஒரு உன்னத உதாரணமாகத் திகழ்கிறது.
குரங்குகள் இந்தப் பாலங்களை மிக சுலபமாகக் கடந்துவிடுகின்றன. இது போன்ற மூங்கில் பாலங்கள் கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் கேரள வனத்துறை ஆராய்ச்சிக் கழகத்தால் கட்டப்பட்டுள்ளன. பீச்சி அணைக்கட்டு பகுதியில் இவை சிறந்தமுறையில் செயல்படுகின்றன. இத்தகைய பாலங்கள் பற்றி இந்த ஆய்வு நிறுவனம் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. தொழில்நுட்ப ஆலோசனைகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.
கன்ஹாபெஞ்ச்-நெவ்ஹயான் மற்றும்- நஜ்ரா (Kanha-Pench&Pench-Navegaon-Nageira corridors) விரைவு வழிகளில் அமைக்கப்பட்டுள்ள காட்டுப் பாலங்கள் விலங்குகளின் உயிர் காக்கும் வழிகளாக உள்ளன. இவை தேசீய நெடுஞ்சாலை 44ல் அமைந்துள்ளது. உயர் மட்ட பாலங்கள், சுரங்கப் பாலங்கள் இந்த வழித்தடத்தில் வெவ்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ளன. 6.6 கி.மீ நீளம் உள்ல நான்கு சிறிய பாலங்களும் இதில் அடங்கும்.
வனவிலங்குகளைக் காக்கும் இந்தியாவின் முயற்சிகளில், இந்தப் பாலங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சுரங்கவழிப் பாலங்களை 18 வகையான விலங்குகள் பயன்படுத்துவதாக காமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விலங்குகளில் புலிகள், சிறுத்தைகள், தங்க நரிகள் (golden jackles) ஆகியவையும் அடங்கும்.
இந்தப் பாலங்களில் 750 கி.மீ நீளம் உடைய உலகின் மிகப் பெரிய காட்டுப் பாலமும் உள்ளது.
இதனை பெரும்பாலான விலங்குகள் பயன்படுத்துவதாக இந்திய வனவிலங்கு ஆய்வுக்கழகம் (WII) கூறுகிறது. 50 மீ உள்ள சிறிய பாலம் ஒன்றை சோம்பல் கரடிகள் (sloth bears), பெண் நீலகிரிக் குரங்குகள் பயன்படுத்துவதில்லை என்றும் தெரியவந்துள்ளது. 750 மீ நீளம் உள்ள பெரிய பாலத்தைக் கடந்துசெல்ல சோம்பல் கரடிகளுக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது.
ஓநாய், எறும்பு திண்ணிகள் கடந்துசெல்ல ஒரு ஆண்டிற்கும் குறைவான காலத்தை எடுத்துக்கொண்டன.
புள்ளிமான், காட்டுப் பூனைகள் கடக்க ஒரு மாதம் எடுத்துக் கொள்கின்றன என்று அந்தக் கழகத்தின் அறிக்கை கூறுகிறது. மத்தியப்பிரதேசம் மகாராஷ்டிரா மாநில எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள வனப்பகுதியில் 1.4 கி.மீ அளவுள்ல மிகப் பெரிய தரையடிப் பாலம் ஒன்று கட்டப்பட்டுவருவதாக இந்திய வனவிலங்கு அமைப்பு கூறியுள்ளது.
சென்னை பேங்களூரு நெடுஞ்சாலையில், ஹோசூர் கிருஷ்ணகிரி பகுதியில் யானைகள் கடப்பதற்கு உதவியாக ஒரு பாலம், மகாராஷ்டிராவில் டடோபா அந்தாரி (Tadoba Andhari) பகுதியில் ஒரு பாலம் கட்டப்பட உள்ளதாக வனவிலங்குக் கழகம் கூறுகிறது
காடு இல்லாமல் நாடு இல்லை. நாடு இல்லாமல் நாம் இல்லை. இதை உணராமல், காட்டை அழித்து, வளர்ச்சி என்ற பெயரில் சூழலைச் சூறையாடி, வனத்தில் அமைதியாக வாழும் விலங்குகளைக் கொன்றுவரும் மனிதர்கள் உள்ளநிலையில், வனவிலங்குகளைக் காப்பாற்ற கட்டப்படும் இது போன்ற பாலங்கள் வனங்களையும், விலங்குகளையும் நேசிக்கும் எவரையும் மகிழ்ச்சி அடையச்செய்யும் என்பதில் ஐயமில்லை. ** ** **