ஸ்ரீதர் மணியன்
வானமே எல்லை எனும் நூலினை கேப்டன் கோபிநாத் தனது சுயசரிதையாக படைத்துள்ளார். வளரும் தலைமுறையினருக்கு இவரது வாழ்க்கைக் கதை தக்கதொரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. கனவுகளே மனிதனின் ஆதர்சம். கனவுகளின் வலிமை எத்தகையது, எத்தகைய விளைவுகளை அது நிகழ்த்திக் காட்டும் வல்லமை பெற்றது என்பதற்கான நடைமுறை விளக்கத்தினை இந்நூல் மிகத் துல்லியமாக விளக்குகிறது.
கனவுகள் காணாத மனிதனைக் காண இயலாது. வருவாய் ஈட்ட இயலாதோனும் தனது வாழ்க்கை குறித்த வளமான கனவுகளை காண மறப்பதில்லை. மனிதன் பிறந்த கணம் முதல் கனவுகள் அவனைத் துரத்துகின்றன. பின்னர் அவன் தனது கனவுகள் வாயிலாக வாழ்க்கையை விரட்டி தனதாக்கிக் கொள்ள விழைகிறான். இது மனித இனத்தின் இயல்பாகிறது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த கோபி, ஆசிரியரான தனது தந்தையிடமே சீரிய ஒழுக்கத்தினையும், வாழ்விற்கான நெறிகளையும் பயின்றார். தாயிடமிருந்தும் பல பாடங்களைக் கற்றுக் கொண்டார். மகிழ்ச்சி குறித்த கருதுகோளுக்கு அவர் ஆல்பெர் காம்யூவின் புகழ் பெற்ற வாக்கியமான வறுமை ஒருபோதும் பிரச்சினையாக இருந்ததே இல்லை. அது சூரிய ஒளியைப் போல் பிரகாசமானது. என்பதை மேற்கோள் காட்டுகிறார். என் தந்தை மிகவும் சிரமப்பட்டார் என்றாலும் அவர் அதனை வெளிப்படுத்திக் கொண்டதேயில்லை. நாங்கள் எதைக் கண்டும், யாரைக் கண்டும் பொறாமைப்பட்டதில்லை.
ஏழையை வெறுக்காத மனநிலையைக் கொடு, அதிகாரத்திற்கு அடிபணியாத மனவலிமையைக் கொடு என்ற ,தாகூரின் ஒரு கவிதையில் வரும் வாக்கியத்தினை தனது தாய் தனக்கு எப்போதும் கூறிவந்ததை நினைவு கூறுகிறார்.
தேசத்தின் பெருமிகு ராணுவக் கல்லூரியான NDA ( நேஷனல் டிபன்ஸ் அகொதெமி ) தனது பயிற்சியினை வெற்றிகரமாக முடித்த பின்னர் அவர் தரைப்படையில் அதிகாரியானார். கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் என்னும் நாடு உருவாகக் காரணமாயிருந்த போர் முனையில் பணிபுரிந்தார். ராணுவப் பயிற்சி அவருக்கு மன உறுதியினையும், எதனையும் எதிர்த்துப் போராடும் வலிவையும் கற்றுத் தந்தது.
ராணுவ சேவையிலிருந்து தங்கள் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர் ராணுவத்தினரின் சிரமம் நிரம்பிய வாழ்க்கையை கோபி பதிவு செய்துள்ளார். இதில் அதிகாரி, சாதாரண வீரர் என்ற வேறுபாடுகள் இல்லை. அதுவரை வீடு, ஊதியம் என்ற எவ்விதமான பிரச்சினைகளுமின்றி கழிந்த வாழ்வு மிகப் பெரும் சிக்கலாக மாறுவதும், பெரும்பாலானோர் சொற்ப ஓய்வூதியத்துடன் சாதாரண காவல் பணியில் எஞ்சியுள்ள நாட்களைக் கழிக்க வேண்டிய எதார்த்தமான அவலத்தினை கோபி எழுதுகிறார். முயற்சி குறித்த ப(ல)ழமொழிகள் மனிதனுக்கு முயற்சியின் சிறப்பினையும், அதன் மேன்மையினையும் விளக்கிக் காட்டுகின்றன. கோபியின் முயற்சிகள் அத்தகையன. உழவுத் தொழிலிருந்து விமான சேவை வரை அவரது முயற்சிகள் மண்ணில் துவங்கி விண்ணைத் தொட்டது மிகையன்று. தனது பண்ணை நிலத்தினைப் பண்படுத்தி அதில் இயற்கை முறையில் பயிர் வளர்த்து சுற்றுப்புற உழவர்களுக்கு முன்னோடியானார். புகழ் பெற்ற இயற்கை அறிவியலாளரான மசானபு ஃபுகோகாவினை நேரில் சந்தித்து அவரிடம் இயற்கை முறையில் பயிர் விளைவிக்கும் முறையினை அவர் அறிந்து கொண்டு தனக்குச் சொந்தமான விளைநிலத்தில் பல புதுமைகளைச் செய்தார். பலர் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அவரிடம் ஆலோசனைகளைப் பெற அவரது பண்ணைக்கு வந்தனர். அப்போது நடைமுறையிலிருந்த முறையினை மாற்றி வைக்கோலினைப் பயன்படுத்தி பட்டு புழு வளர்ப்பு தொழில்நுட்பத்தினை புகுத்தி வெற்றி பெற்றார். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப் பெறும் ரோலக்ஸ் லாரியேட் விருதினை 1996இல் பெற்றார். இவ்விருதானது உலகலாவிய அளவில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல் ஆகிய காரணிகளுக்காக அவருக்கு வழங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் குறித்தான கோபியின் உள்ளார்ந்த ஈடுபாடு, கருத்துகள் பாராட்டத்தக்கவை. இத்தகைய எண்ணங்கள் இன்றைய வளரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தப்படுதல் நடைமுறைச் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. பின்னர் உணவகம், இரு சக்கர வாகன முகமை, வேளாண் ஆலோசனை மையம், விவசாய நீர் மேலாண்மை மையம் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டார். எந்தச் சூழலிலும் தனது நிலைப்பாட்டினை உறுதியாக முன்னெடுத்துச் செல்வதில் அவர் சமரசம் செய்து கொள்ளாமல் பயணித்தார். அதே போல், தனது தோல்விகளை அவர் ஏற்றுக் கொண்டு ஒப்புக் கொள்ள தயங்காதவராகவும் இருந்தார்.. அவரது அரசியல் பயணம் பெரும் தோல்வியில் முடிந்தது. வாழ்வென்பதே முயற்சித்தல்தான் என்ற கருதுகோளினை அடிப்படையாகக் கொண்டு சலியாது இயங்கிக் கொண்டிருந்தவர். வெற்றி தோல்விகளை அவர் பொருட்படுத்திடவில்லை. இந்த நூல் மனித வாழ்வின் பல பரிமாணங்களை வாசகனுக்குக் காட்டித் தருகிறது.
தனது கனவுத் திட்டமான சாமானியனுக்குமான விமானப் பயணம் – ஒரு ரூபாய் கட்டணத்தில் – குறித்த பகுதிகள் மிகச் செறிவு பெற்றவை. நகரப் பேருந்துகளில் கூட ஒரு ரூபாய் பயணம் சாத்தியமற்ற சூழலில் அத்தொகையில் விமானப் பயணமென்பது கனவிலும் எண்ணிப்பார்க்கவியலாதது. இருப்பினும் அவர் அந்தத் திட்டத்தினை செயலாக்கி மாபெரும் வெற்றியை ஈட்டினார். இதற்கான ஒரு வரைவுத் திட்டத்திற்காக வெளிநாட்டு நிபுணரை அவர் அணுகினார். அவரோ. இத்திட்டமெல்லாம் இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படும் வாய்ப்புகள் குறைவு என நிராகரித்துவிட்டார். அப்போது கோபி இதயத்தின் மொழியினை மூளை அறியாது என அவரது முடிவினை உதறித் தள்ளினார். கோபி, இந்திய நாட்டினையே தனது செயல்பாடுகளின் வாயிலாக தன்னைத் திரும்பிப் பார்க்கவைத்தவர். அவரைத் தவிர்த்து அச்சூழல்களை வேறெவராவது எதிர்கொண்டிருப்பின் அவர்கள் மனப்பிறழ்வுக்கு ஆட்பட்டு மனம் வெதும்பி அதனைக் கைவிட்டிருப்பர்.
டெக்கான் நிறுவனத்தினைத் தொடங்குவதற்கான அனுமதியைப் பெற ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் இந்தியத் தலைநகருக்கு அலைந்ததைப் பதிவிடும் கோபி அதிகார வர்க்கத்தின் மனநிலையினை உள்ளவாறே எழுதுகிறார். அவை அரசு, அதிகாரம் இவை குறித்தான இயல்புகளை, நடைமுறைகளை துல்லியமாக உணர்த்துகின்றன. தனது ஹெலிகாப்டர் நிறுவனத்தின் துவக்கவிழா நேரம் வரை, நாள் வரை அல்ல, நேரம் வரை அரசு அனுமதிக்காக அலைந்து அதிகாலை 3.00 மணிக்கு அனுமதி பெற்ற நெருக்கடியான, பரபரப்பு நிறைந்த நொடிகள் ஒரு மர்ம நாவலை வாசிப்பதான ஆர்வத்தினை வாசகனுக்கு அளிக்கின்றன.
இப்பகுதிகளை வாசிக்கும் வாசகனுக்கு அவை பேராச்சரியத்தைத் தருபவை. அதே கணம் பல படிப்பினைகளைத் தருபவை. மேற்கொண்ட செயலில் கவனத்தினைக் குவித்துப் போராடுதல், உடனுக்குடன் விரைவில் முடிவுகளை செயலாக்குதல், திறமையானவர்களை, நண்பர்களை அருகில் வைத்துக் கொள்ளுதல், சக ஊழியர்களை சுதந்திரமாக குறுக்கீடுகளின்றி செயல்பட அனுமதித்தல், முக்கியமாக குறுக்கீடுகள், அதிகாரவர்க்கத்தின் மேம்போக்கான அலட்சியமான செயல்பாடுகளால் சோர்வடையாது ஊக்கத்துடன் முன்னெடுத்துச் செல்லுதல் ஆகிய பண்புகளை அவரது பயணம் வளரும் தலைமுறைக்கு உணர்த்திச் செல்வது கவனத்தில் கொள்ளத்தக்கது. அவரது மற்றுமொரு குறிப்பிடத்தக்க அரிய பண்பு தோல்வியினை திறந்த மனதுடன் ஒப்புக் கொள்ளுதலும் அதனைத் திருத்திக் கொள்ளத் தயங்காததும்.தனது விமான சேவை இந்திய நாட்டினைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என்பதில் கோபி உறுதியாக இருந்தார். இந்தியக் கலாச்சாரம், இந்தியப் பண்பாடு, இந்திய மேதமை ஆகியவற்றை தனது சேவையுடன் இரண்டறக் கலந்திருத்தல் அவசியமானதென உணர்வு பூர்வமாக அறிந்திருந்தார். வெற்றிகரமாக நடந்து வரும் எந்த நிறுவனத்தினையும் பெரு முதலாளிகள் விழுங்கத் துடிக்கும் நடைமுறையினை கோபி தெளிவாகக் கூறுகிறார். .விஜய் மால்யா தனது கிங் பிஷர் நிறுவனத்துடன் இணைய வற்புறுத்தி நெருக்கடி அளித்த தருணத்தில் கோபியின் சொற்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
விஜய் மால்யாவைப் பற்றிய அவரது மதிப்பீடு மிகத் துல்லியமானதென பல ஆண்டுகள் கழித்து இன்று நிரூபணமாகிவிட்டது. சிறு மீன்களை திமிங்கலங்கள் வளைத்து அவற்றை செயலற்றதாக்கிவிடும் அனுபவம் அவருக்கு விஜய் மால்யாவிடமிருந்து கிடைத்தது. விஜய் மால்யா கோபியின் கனவு நிறுவனமான டெக்கானைப் பறித்துக் கொண்டார். கிங்பிஷர் பிறந்தது. அத்தருணத்தில் அவர் மிக்க வருத்தமுற்றாரே தவிர சோர்வடைந்துவிடவில்லை, துவண்டுவிடவில்லை. அதிலிருந்து லாஜிஸ்டிக்ஸ் என்னும் விமான சரக்குப் போக்குவரத்து நிறுவனம் பிறந்தது. இவ்வாறு ஒன்று முடிந்தபின்னர் அவர் அதிலிருந்து மீண்டெழும் மனவலிமையைக் கொண்டிருந்தார்.
பல கோடி ரூபாய் தேவைப்படும் தொழிலான விமான நிறுவனத்தினை அவர் துவங்கியபோது அவர் கையிருப்பு சில லட்சங்களே என்று அறியநேரும் கணம் வாசகன் வியப்புறுகிறான். அவர் இது குறித்துக் கூறும்போது நான் என்றுமே முதலீடு குறித்துச் சிந்தித்ததே கிடையாது. அது தானாகக் கிடைக்கும். தேவைப்படுவது துணிச்சலும், நம்பிக்கையும் மட்டுமே என்ற வாக்கியங்கள் புதிதாகச் சாதிக்கத் துடிக்கும் இளம் உள்ளங்களுக்கான நம்பிக்கை குறித்த திறவுகோலாகிறது.
அவரது முன்னுரையினைக் கூறி இதனை நிறைவு செய்வது மிகப் பொருத்தமானதாயிருக்கும். நீங்கள் பல முயற்சிகள் செய்து சோர்வடைந்தவரா, மீண்டும் மீண்டெழ முடிவெடுத்துள்ளீர்களா… நல்லது. இதில் நான் கூறியுள்ள, எழுதியுள்ளவற்றை பின்பற்றாதீர்கள். உங்களது தனித்தன்மையை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கான வழிமுறையினை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடையதான ஒரு சாதனையைச் செய்யுங்கள். வெற்றி பெறுங்கள் என கோபிநாத் எழுதுகிறார்..
அத்துடன் நான் ஒரு லட்சியத் தலைவரோ, கணவரோ, அப்பாவோ கிடையாது. முன்கோபி, நிறையத் தவறுகள் செய்பவன். ஆனால், மற்றவர்களின் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளமாட்டேன். சர்வாதிகாரி போல நடந்து கொள்வேன் எனக் கூறியுள்ளார்.. என்னை கர்வம் பிடித்தவன் என எனது ஊழியர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆயினும், நான் பலருக்கும், நாட்டிற்கும் பலன் தரக்கூடிய சில நல்லவற்றைச் செய்திருக்கிறேன் என்ற பதிவுடன் தனது முன்னுரையினை நிறைவாக்குகிறார். எந்தவொரு மனிதனும் தனது வெற்றிகளையும் சாதனைகளையும் மட்டுமே கூறிக்கொள்வான். இது மனித இயல்பு. இருப்பினும், கோபி தனது பலம், பலவீனம், வெற்றி, தோல்வி என அனைத்தையும் தயக்கமேதுமின்றி இந்நூல் நெடுகிலும் பட்டியலிட்டுள்ளார். இது அவரது நேர்மையினை வெளிக்காட்டுவதுடன் கோபிநாத் என்ற தனி மனிதனின் பரிமாணங்களை வாசகனுக்குக் காட்டுகிறது.
சற்றேறக்குறைய நானுற்று முப்பது பக்கங்கள் கொண்ட இப்படைப்பினை நான்கு பக்க அளவில் சுருங்கத் தருவது சிரமமானது. நடைமுறை உலகத்தினை அதன் போக்கில் புரிந்து கொள்ளவும், வாழ்வின் இடையறாத ஓட்டத்தில் இடையூறுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதனை பல நிகழ்வுகளுடன் எடுத்துக்காட்டி வெற்றி, தோல்விகளைக் குறித்த தனது கருத்துகளை விளக்கி இதனை உருவாக்கியுள்ளார் கேப்டன் கோபிநாத். வயது வேறுபாடின்றி இதனை கோபி கூறியவாறே அனைவரும் இந்தப் படைப்பினை நிச்சயம் வாசிக்க வேண்டும். வாழ்வியல் தத்துவங்கள். ஆன்மீகம் குறித்தான கருத்துகள், (கோபி நாத்திகர்), செறிவு மிக்க மேற்கோள்கள், பல சிறந்த கவிதைகள் அடங்கிய சுவையான படைப்பாக இது திகழ்கிறது.
இந்ந நூல் Simply fly: A Deccan Odyssey என்ற தலைப்பிடப்பட்டு ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகத்தால் 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த அரிய படைப்பிற்கு அணிந்துரை அளித்த மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அமரர்.திரு.அ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் இந்திய நாட்டின் பல்கலைக் கழகங்களில் இந்த நூல் பாடமாக வைக்கப்பட வேண்டும் என்று தனது கருத்தினை வலியுறுத்தியுள்ளதே இப்படைப்பின் தரத்திற்கு தக்கதொரு சான்றாகிறது.
l
