விடுமுறை நாட்களில்
இரவுமுழுக்க
காத்துக்கொண்டிருக்கின்றன பொம்மைகள்
குழந்தைகளின் விழிப்பிற்காக…
பள்ளி நாட்களில்
பொம்மைகள் அழுகின்றன
குழந்தைகள்
எழுப்பப்படுவதற்காக….
குழந்தைகளின் தாய்மையை
பொம்மைகள் அறியும்..
ஒவ்வொரு பொம்மைக்கும்
வெவ்வேறு தாய்கள்…
ஆசிரியர் மீதான கோபங்களை
குழந்தைகள்
பொம்மைகளிடம் மட்டுமே
தீர்த்துக்கொள்வதாய்
பாசாங்கு செய்கின்றன..
பொம்மைகளுடன் விளையாடும்போது
குழந்தைகளுக்கு
அம்மாக்கள் இரண்டாம்பட்சமே..
குழந்தைகளுடன் சேர்ந்து
இறைந்துகிடக்கும் பொம்மைகளும்
அவ்வப்போது அம்மாக்களின்
கோபங்களுக்கு ஆளாகின்றன..
விடுமுறைக்காலங்களில்
குழந்தைகளின் வற்புறுத்தலால்
ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது
பரண்களில் மூச்சுத்திணறும்
பொம்மைகளுக்கு..
விலை கொடுத்து வாங்கித் தருவது
நாம் என்றாலும்
கையில் வரும் வரை
பொம்மை வரம் தருபவன்
கடைக்காரன் என்றே
நம்புகின்றன குழந்தைகள்..
எவ்வளவு முயன்றாலும்
பொம்மை மொழி
புரிவதில்லை யாருக்கும்
குழந்தைகளைத்தவிர..
அடம்பிடித்து அழும்போது
ஆசுவாசப்படுத்த
அம்மாக்களால் முடியாதபோது
பொம்மைகள்
சமாதானம் செய்துவிடுகின்றன
குழந்தைகளை..
பொம்மைகளை விட்டுத்தர
குழந்தைகள் எப்போதும்
விரும்புவதேயில்லை..
குழந்தைகளுக்குள்ளான
முதல் உரிமைப்போராட்டமே
பொம்மைகளிடமிருந்துதான்
தொடங்குகின்றன….
பொம்மைகளின் தரம்பற்றி
பொம்மைகளின் விலைபற்றி
குழந்தைகள் கவலைப்படுவதில்லை..
ஏழைக்குழந்தையின்
கையிலிருக்கும் பொம்மையென்றாலும்
வசதிபடைத்த குழந்தையை
எளிதில் கவர்ந்துவிடுகிறது…
எல்லா பொம்மைகளையும்
குழந்தைகள் விரும்புகின்றன
எல்லாக் குழந்தைகளையும்
பொம்மைகள் விரும்புகின்றன…
ஆனால்………
ஏழைகளின் கனவைப்போலவே
அவர்கள் குழந்தைகளிடமும்
எப்போதும் இருக்கின்றன
உடைந்துபோன பொம்மைகள்…
