மௌனத்தின் சிறை
கொய்யவரும் விரல்களையும்
கூடி இரசிக்கும் விழிகளையும்
ஒருசேர வரவேற்கும்
பூக்களடர்ந்த விடியலின்
கதவுகள் தாழ்திறந்து
பொன்னிறத்தில் தவழ்கிறது
சிறுபிள்ளையாய் கிழக்குவானம்
திருமிகு அபயக்கரங்களில்
சிலருக்கு மாலையும்
சிலருக்கு வெற்றுச் சாம்பலும்
வரமாகப் பொழிந்து
சிறப்புக் கட்டணத்தில்
தெள்ளத் தெளிவாகவும்
இலவசத் தரிசனத்தில்
நிறைந்த மங்கலாகவும்
காட்சி தந்து நகைக்கிறார்
மாண்புமிகு கடவுள்
வேர்களைத் தகர்க்கும் ஆயுதங்களை
மனமுவந்து ஏற்று
மௌனத்தின் சிறையில்
வழக்கம்போல் வாழ்வியக்கி
தலைவிதியைக் கழிக்கும்
ஒட்டிய வயிற்றோடு
சிறகுகள் பிய்ந்த பறவைகள்!
நவீன நீர்வாழ்வு
பனிக்கட்டிகள் மிதக்கும்
கண்ணாடிக் கோப்பைகளில்
மனங்கள் விழைந்து மோதிட
வண்டிவண்டியாய் களவுபோன
ஆற்றின் ஆதாரம்
தள்ளாடும் போதையேற்றி
தலைசுற்றி வீழ்கிறது
வாரக்கடைசியின்
மதுபானக் கடைகளுக்குள்…
ஆபத்தில் கைகொடுக்க
அபயக் கண்ணன் யாருமின்றி
முழுவதுமாய் துகிலுரிந்தபின்
குண்டுங்குழியுமான காயமேனியெங்கும்
முட்புதர் போர்த்தி பிணங்களைச் சுமந்து
இடுகாட்டுப் பாழ்வெளியாய் கதறியழும்
முப்போகம் தளிர்த்த
முதுபெரும் நீர்வழி…
தூய்மை இந்தியாவின்
துப்புரவு கழிவுகள்
மடுக்களின் கர்ப்பம் நிரப்ப
சாபத்தின் பேரிடராய்
மதிப்பற்றுக் கிடக்கிறது
நாகரிகத்தின் தோற்றுவாய்…
ஊற்றுநீர் கேணிகளில்
ஆழ்துளைக் கிணற்றில்
குழாயில் அடியில்
உவர்நீரே உற்பத்தியாக
தூயநீர் வடிகட்டி இயந்திரத்தில்
தாகத்தின் மருந்தருந்தி
நாட்டுப்புறங்களிலும் நகர்கிறது
நவீன நீர்வாழ்வு!
மழைக்காட்டின் இரம்யம்
உறங்கிக் கொண்டிருக்கிற
நடுநிசியின் பேராழத்திலிருந்து
வாழ்நாளின் உதிர்ந்த மலரொன்று
எதிர்பாராமல் மீண்டும் மலர்ந்து
மின்னலென மோதுகிறது உயிரில்
செறிந்த வெளிச்சத்தால்
கண்கூசிடும் அதன் வசீகரத்தோரணை
முன்நின்ற யாவற்றையும்
ஆங்காரமாய் விரட்டி
அதிர ஈர்க்கிறது விழியருகில்
நடுங்கி விலகிய தயக்கங்களின்றி
இதயத்தின் இரணங்களை
வீரமொழிகளால் களிம்பிட
ஆர்ப்பரித்தோடும் நதியில்
மனம்மகிழ்ந்து மெல்லசாய்கிறேன்
புத்தரின் அருட்கரங்கள்
மழைக்காட்டின் இரம்யங்களால்
கழிமுகந்தேடி அழைத்துச்செல்ல
பசித்த வயிற்றின்
விருந்தோம்பல் நிறைவோடு
துயிலெழும் அறையெங்கும் சிதறிக்கிடக்கின்றன
கனவுமரத்தின் மக்கிய சுள்ளிகள்!