சிதம்பரம் இரவிச்சந்திரன்
கொரோனா என்ற கொள்ளைநோய் தனிமையின் கொடுமையை மனிதகுலத்திற்கு இன்று நன்றாகப் புரியவைத்துள்ளது. ஆனால், உலகின் ஒற்றை யானை (World’s loneliest elephant) என்று வர்ணிக்கப்பட்ட காவன் (Kaavan) கடந்த 35 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் மோசமான சூழலில் வாழ்ந்தது. மனிதர்களாகிய நமக்குக் கையில் ஒரு அலைபேசி இருந்தால் போதும். இடமிருந்து வலமாக விரல்களைக் கொண்டு நகர்த்தியபடி வெளியுலகுடன் தொடர்புகொண்டு தனிமையின் துயரத்தைக் குறைத்துக் கொள்ளமுடியும். ஆனால், உடலாலும், மனதாலும் காயப்பட்ட ஒரு யானையின் நிலை?
காட்சிசாலையில் காவனின் வாழ்க்கை
பாகிஸ்தான் இஸ்லாமாபாத் மர்காசார் மிருகக்காட்சிச் சாலையில் (Marghazar zoo) காவன் (Kaavan) கரடுமுரடான குறுகிய தரையில் இருந்து வருகையாளர்களை நோக்கி தும்பிக்கையைத் தூக்கி வந்தனம் சொல்லி தன்னைக் கொடுமைப்படுத்திய யானைப்பாகனுக்குக் காசு சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருந்தது. வருகையாளர்கள் மீண்டும் மீண்டும் வணக்கம் சொல்லச் சொல்லி காவனைக் கேட்கும்போது எல்லாம், யானைப்பாகன் தன் கையில் இருந்த ஆணிகளாலான குச்சியால் அதன் தும்பிக்கையைக் குத்திக் காயப்படுத்துவது வழக்கம். பல முறை காவன் வணக்கம் சொல்ல பாகனின் பாக்கெட் பணநோட்டுகளால் நிரம்பி வழிந்தது. இதேநேரம், காவனைச் சுற்றிலும் வாழ்ந்துவந்த பல விலங்குகள் திடீர் திடீரென்ரு காணாமல் போய்க்கொண்டிருந்தன. பணக்கார மனிதர்களின் சாப்பாட்டு மேசைகளில் அந்த விலங்குகளின் இறந்த உடல்கள் விருந்து படைக்கப்பட்டதாக வதந்திகள் எழத் தொடங்கின. காவனின் ஒரே துணையும் பாகனின் கொடுமையால் மரணம் அடைந்தபோது காவனின் வாழ்க்கை நரகமாகத் தொடங்கியது. இதன் பின் பல ஆண்டுகள் காவனின் நிலை பற்றி யாரும் கவலைப்படவில்லை. காவனின் உடற்காயங்கள் ரணங்களாக மாறின. கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலிகளால் காவனின் பாதங்களுக்கு மேல் நிரந்தரமாகப் புண்கள் ஏற்பட்டன. மெல்ல மெல்ல காவன் மனநோய்க்கும், உடற் பருமனுக்கும் ஆளாகியது.
பிரார்த்தனையில் தொடங்கி பாடலில் முடிந்த இது, காவனின் கதை
பிரார்த்தனை ஒரு பாலிவுட் திரைப்படம் மட்டும் வெளிவந்திராவிட்டால், காவன் பாகிஸ்தானிற்கு வந்திருக்காது. அந்தத் திரைப்படம் ஏற்படுத்திய எழுச்சி, சர்வதேச ராஜதந்திர உறவுகள், ஒரு சிறுமியின் ஆசை இவையே காவனை இஸ்லாமாபாத் மிருகக்காட்சிச்சாலை என்ற நரகத்திற்கு அழைத்துவரக் காரணமாயிற்று.பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் ஜியாஉல் ஹக்கின் (General Ziaul Haq) மகள் ஜைன் ஜியா (Zain Zia) ஹாத்தே மேரே சாத்தே (elephants my friends) என்ற பிரபல இந்தித் திரைப்படத்தைப் பார்த்தது முதல் யானைகளை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தார். அப்போது முதல் ஜைன் தினம் தினம் தனக்கு ஒரு யானையைத் தரவேண்டும் என்று கடவுளிடம் வேண்ட ஆரம்பித்தார். இதற்காக அவர் ஒரு பிரார்த்தனைப் பாடலையும் எழுதினார்.
எனக்கு ஒரு யானையைத் தோழனாகத் தாருங்கள் என்பதே அந்தப் பிராத்தனைப் பாடல். மகளின் இந்தப் பாடலை தந்தையும் அடிக்கடிக் கேட்க ஆரம்பித்தார். பல நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலைப்பொழுதில் ஜைன் பள்ளி செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ஜெனரல் ஹக் மகளைக் கூப்பிட்டார். அவள் கண்களை ஒரு துணியால் இறுக்கக் கட்டினார். அவளைப் பின்பக்கம் இருந்த தோட்டத்திற்கு அழைத்துச்சென்றார்.அங்கே அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. அங்கே இருந்த பொருளை அவளைத் தொட்டுப் பார்க்கச்சொன்னார். பிறகு அவள் கண்களில் கட்டியிருந்த கட்டை அவிழ்த்துவிட்டார். அங்கே அழகான ஒரு குட்டி யானை நின்றுகொண்டிருந்தது! அதுதான் காவன். அழகான காவனைப் பார்த்த ஜைனிற்கு அதைத் தன்னுடன் வீட்டிலேயே வைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசை பிறந்தது. தந்தையிடன் வேண்டினாள். ஆனால், அது அரசாங்கத்தின் சொத்து. அதனால் அதை மிருகக்காட்சிச்சாலையில் கொண்டுபோய் விடவேண்டும் என்று ஹக் கூறினார். நம்மால் இவனை சரியாகப் பார்த்துக் கொள்ளமுடியாது. அவன் வளர ஆரம்பித்தால் அவனைப் பார்த்துக் கொள்வது கடினம் என்று ஹக் ஜைனை சமாதானப்படுத்தினார். வேறு வழி இல்லாமல், ஜைன் ஒத்துக்கொண்டாள்.
காவனின் பழைய வீடு
ஜைனின் வீட்டுப் பின்புறத் தோட்டத்திற்கு வருவதற்கு முன்புவரை காவன் ஸ்ரீலங்காவில் பினைவாலா யானைகள் அனாதை இல்லத்தில் (Pinnawala elephant orphanage PEO) வாழ்ந்தது என்று கருதப்படுவதாக அமெரிக்காவில் இருந்து செயல்பட்டுவரும் யானைகள் மறுவாழ்விற்கான அமைப்பின் நிபுணர் ரவி கொரிய (Ravi Corea) கூறியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் ராணுவத்திற்கு எதிராக ஏற்பட்ட ஒரு புரட்சியை முறியடிக்க உதவி செய்ததற்காக, ஜெனரல் ஹக்கின் அரசிற்கு நன்றி தெரிவிப்பதற்காக காவன் பாகிஸ்தானிற்கு பரிசாக அளிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஆனால், காவன் உண்மையிலேயே ஒரு அனாதையா என்பது போலவே ஸ்ரீலங்காவில் இருந்து காவன் பாகிஸ்தானிற்கு கொண்டுவரப் பட்ட காரணமும் இன்னும் விடை இல்லாத வினாவாகவே உள்ளது. இளம் வயது காவன் 1985ல் இஸ்லாமாபாத் மிருகக்காட்சிச்சாலைக்கு வந்து சேர்ந்தது.
தங்கச்சுரங்கம்
மர்காசார் மிருகக்காட்சிச் சாலை காவன் அங்கு சென்று சேர்வதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே உயர் அதிகாரமட்டத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. பல பணக்கார வணிகக் கொள்ளைக்கூட்டங்கள் அங்கு நுழைந்தன. காட்சிச்சாலை அதிகாரிகள் அந்த மிருகக்காட்சிச் சாலையைப் பற்றி, அங்கு இருந்த விலங்குகளைப் பற்றி கவலைப்படவில்லை.இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட காட்சிச்சாலையின் உயர் மட்ட மனிதர்கள் அதிகாரத்தில் உயர் மட்டத்தில் இருந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அங்கு கடைகளை நிறுவி வியாபாரம் செய்ய அனுமதி அளித்தனர். குழந்தைகள் விளையாடும் இடங்கள் உருவாக்கப்பட்டன. காட்சிச்சாலையின் இரண்டு கால் விலங்குகள் பணம் சம்பாதிக்க வேறு வழிகளையும் கண்டுபிடித்தனர். அங்கு வாழ்ந்த மான் உட்பட பல விலங்குகள் அந்தப் பகுதியில் இருந்த செல்வாக்கு உள்ளவர்களின் விருந்துகளில் சிறப்பு உணவாக மாறின. மதுபானங்கள் பரிமாறப்பட்ட அந்த ஆடம்பர விருந்துகளில் மிருகக்காட்சிச்சாலையின் பல விலங்குகளும் விருந்தாளிகளுக்கு உணவாக்கப்பட்டன. 2019ல் இஸ்லாமாபாத் மிருகக்காட்சிச்சாலை நண்பர்கள் (Friends of Islamabad Zoo FIZ) என்ற தன்னார்வ அமைப்பினர் ஆய்வு நடத்தினர். அங்கு விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதைக் கண்டுபிடித்தனர்.
இதைச் சுட்டிக்காட்டியபோது, புதிதாக விலங்குகள் பல அங்கு தோன்றின. அங்கு விலங்குகளுக்கான மருந்துகள், மருத்துவ வசதிகள் எவையும் இல்லை என்று தாங்கள் கண்டறிந்ததாக அந்த அமைப்பின் ஆர்வலர் முகமது பின் நவீட் (Mohammad Bin Naveed)கூறியுள்ளார். நோய்வாய்ப்பட்ட விலங்கைப் பராமரிக்க ஒரு தனி அறை, அறுவைசிகிச்சை செய்ய வசதி போன்றவையும் அங்கு இல்லை என்பது வெளியுலகிற்குத் தெரியவந்தது. இந்நிலையில் மிருகக்காட்சிச்சாலை திறக்கப்படும் நேரத்தில், வருகையாளர்களை நோக்கி தன் தும்பிக்கையில் இருக்கும் பிச்சைப் பாத்திரத்தை நீட்டி பிச்சை எடுப்பது காவனின் வேலையாக மாற்றப்பட்டது. பிச்சை எடுத்த காசை பாகன் ஆணியடிக்கப்பட்ட அங்குசத்தால் காவனின் தும்பிக்கையைக் குத்தி பெற்றுக்கொள்வான். 2016 ஈத் விடுமுறையில் அங்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் காவனுடன் தங்களை இணைத்துப் படம் எடுத்து வெளியிட்டனர்.
ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் பாதியளவிற்கு இருக்கும் அரை ஏக்கர் பரப்பளவு உள்ள கரடுமுரடான தரையில் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில், காவன் தன் இரவுகளை வேதனையுடன் நகர்த்தத் தொடங்கியது. நிழலிற்கு மரம் செடி கொடிகளோ, காற்று, மழைக்கு ஒதுங்க ஒரு வசதியோ இல்லாமல் காவனின் வாழ்க்கை நரகமயமாகியது. ஃபோர் பாஸ் (Four Paws International FPI) என்ற சர்வதேச விலங்குரிமை அமைப்பினர் காவனின் நிலை குறித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரித்தனர். காவன் வாழ்ந்த இடத்தில் இயற்கையான மண் அமைப்பு இல்லாத நிலை, நான்குபுறமும் குறுகலான கான்கிரீட் சுவர்கள், கட்டாந்தரை, மருந்திற்குக் கூட மரம் செடி கொடி என்று எதுவும் இல்லாத நிலை இருப்பதைக் கண்டனர். இத்தனைத் துயரங்களுக்கும் இடையில் காவனிற்கு அவனுடைய துனை சஹீலி(Saheli) மட்டுமே ஒரே ஆறுதலாக இருந்தது. உருதுமொழியில் சஹீலி என்ற சொல்லிற்கு பெண்துணை (female friend) என்று பொருள். 1990களின் தொடக்கத்தில் சஹீலி பங்களாதேஷில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கைத்துணை என்பது யானைகளுக்கு மிக முக்கியமானது என்று வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர். மனிதர்களைப் போலவே தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள அவற்றிற்கும் துணை தேவை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். காடுகளில் அறுபது எழுபது ஆண்டுகள் வாழும் யானைகள் மனிதர்களைப் போலவே நெருக்கமான குடும்ப உறவுகளை கொண்டவை. குடும்ப உறவுகள் மரணம் அடையும்போது அவற்றின் பிரிவினால் துயரமடையும் இயல்புடையவை.
சஹீலியின் மரணம்
சஹீலி 2012ல் மரணம் அடைந்தது. வெய்யிலின் பாதிப்பால் அதற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அது இறந்ததாக அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்பட்டது. ஆனால், நோய்நீக்கம் செய்யப்படாத ஆணிகள் அடிக்கப்பட்ட குச்சியால் அதன் தும்பிக்கையில் பாகன் ஆழமாகக் குத்தி, அந்தக் காயம் ஆழமாகி அந்த அதிர்ச்சியால் சஹீலி உயிரிழந்ததே உண்மை. இது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அப்போது எவரும் இதை வாய் திறந்து சொல்லவில்லை. ஏற்கனவே துன்பப்பட்டுக் கொண்டிருந்த காவன் சஹீலியின் மரணத்தால் மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. காவனின் கண்ணெதிரிலேயே இரண்டு நாட்கள்வரை இறந்த சஹீலியின் உடல் கிடந்தது. அதை அப்புறப்படுத்த நிர்வாகம் எதுவும் செய்யவில்லை. இது காவனின் மனதை பாதித்தது. வாய் பேசமுடியாத ஜீவன் என்றாலும், காவன் நம்மைப் போல உணர்ச்சிகள் உள்ள ஒரு உயிரினம். காவனின் மனக்கொந்தளிப்பு அதை மனநோயாளியாக்கியது. 2000ம் ஆண்டில் இருந்தே நீண்டநேரம் கால்களில் பிணைக்கப்பட்ட சங்கிலியுடன் நின்றுகொண்டே இருந்த காவனால் சஹீலியின் பிரிவைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. காவனின் நிலை மோசமானது. அதன் பாகன் காவன் மோசமாக நடந்துகொள்வதால், அதற்கு அருகில் செல்வதே தான் உட்பட அனைவருக்கும் ஆபத்து என்று கூறினான். இந்நேரத்தில், இஸ்லாமாபாத் காட்சிச்சாலை நண்பர்கள் குழு 2016ல் காட்சிசாலையைப் பார்வையிடவந்தது.
மனநோயால் பாதிக்கப்பட்ட காவனை அவர்கள் அப்போது கண்டனர். நகர்வதற்கு இடம் இல்லாமல், இருப்பதற்கு வசதி இல்லாமல், காவன் தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தனர். ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்யும் நோய்க்கு ஆளான காவன் எப்போதும் தலையை ஆட்டிக்கொண்டு மனிதர்களுக்கு பீதி ஏற்படுத்தும் ஒன்றாக மாறியது.
அரிதாக எப்போதாவது சில சமயம் தும்பிக்கையைத் தூக்கிப் பிச்சைக் கேட்பது தவிர நகரவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் படுக்கவும் முடியாமல் நின்றுகொண்டே சங்கிலி பிணைக்கப்பட்டநிலையில் காவன் எப்போதும் தலையை ஆட்டிக்கொண்டிருந்தது. காவனின் உடல்நிலை மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது. இடதுகண்ணில் நோய்த் தொற்று, சங்கிலியின் தழும்புகள் கால்கள், பாதங்களில் தோலின் நிறத்தையே மாற்றியிருந்த நிலை, உடைந்த நகங்கள், உடல் துவாரங்களில் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் கண்டறியப்பட்டது. காவன் நோய்வாய்ப்பட்டுள்ளதை இது முழுமையாக உணர்த்தியது. காவனின் உடல் எடையும் அதன் பாகன் தினம் தினம் கொடுத்த கரும்புகளால் பருமனாக இருந்தது. இத்தனைத் துயரங்களுடன் இருந்த காவன் அங்கிருந்து வெளியே செல்வதை எவரும் விரும்பவில்லை. காட்சிசாலையின் நட்சத்திரக் கதாபாத்திரமாக இருந்த காவனை இழக்க எவருக்கும் மனது இல்லை. ஆனால், காவனை மீட்க இன்னொரு பெரிய நட்சத்திர நாயகியை இயற்கை அனுப்பிவைத்தது.
விடியலின் வெளிச்சப் பாடல்
ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்கப் பாடகி மற்றும் நடிகை ஷெர் (Cher) காவனைப் பற்றி முதல்முறையாக 2016ல் கேள்விப்பட்டார். அவர் தோற்றுவித்த வன உயிரினங்களின் விடுதலைக்கான தன்னார்வத் தொண்டு அமைப்பு (Free the Wild) காவனின் மீட்பிற்கு சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. இஸ்லாமாபாத் நீதிமன்றம் மே 2020ல் காவனை விடுதலை செய்யச் சொல்லி கட்டளையிட்டது. இந்தச் செய்தி தன் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று என்று ஷெர் மகிழ்ச்சி தெரிவித்தார். உலகம் முழுவதும் 3.8 மில்லியன் ரசிகர்கள் கொண்ட தன் டிவிட்டர் ஊடகம் வழியாக ஷெர் காவன் குறித்த நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். காவனின் விடுதலைக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், காவனுடன் அங்கு கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த மற்ற விலங்குகளும் உடனடியாக விடுதலை செய்யப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இறுதியில் ஜூன் 2020ல் பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் மிருகக்காட்சிச்சாலையை இழுத்து மூட உத்தரவிட்டது. ஆனால், காவனின் நிலை கவலை அளிப்பதாகவே நீடித்தது. அங்கிருந்து காவனை வெளியே அனுப்பமுடியாது என்றும், தாங்களே காவனைப் பார்த்துக் கொள்ளப் போவதாகவும் சிலர் காவனின் விடுதலைக்கு எதிராகக் குரல் எழுப்பினர். பாகிஸ்தான் மிருகக்காட்சிச்சாலைகள் மற்றும் நீர் வாழ் உயிரினக் காட்சியகங்களுக்கான சர்வதேச அமைப்பில் (World Association for Zoos&Aquariams WAZA) உறுப்புநாடாக இல்லை என்பதால் சிக்கல் நீடித்தது.இதற்கிடையில் இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலையின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் அமிர் காலில் (Amir Kaalil) காவனின் உற்ற தோழனாக மாறினார். காவனிற்கு உணவூட்டுவதில் இருந்து குளிப்பாட்டிவிடுவது வரை அமிர் காவனை தன் செல்லக்குழந்தை போல கவனித்துக் கொண்டார். பிரிட்டனில் இருந்து ஃபோர் பாஸ் அமைப்பின் நிபுணர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டனர்.
காவனை பாகிஸ்தானில் இருந்து கடல் தாண்டி 4000 கி.மீ தொலைவில் உள்ள கம்போடியாவிற்கு அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. காவனின் ஆக்ரோஷமான போக்கு, அதன் உடல் பருமன் இவை காவன் கம்போடியாவிற்கு செல்வதில் பிரச்சனைகளாக நின்றன. எகிப்தில் பிறந்த டாக்டர் அமிர் காலில் தற்செயலாக இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார்.
காவனின் மனநிலை, உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக அமிர் மற்றும் அவரது நண்பர் ஒருவர் எப்பொழுதும் காவனின் அருகிலேயே இருந்தனர். இந்த வேலை அமிருக்கும், அவரது நண்பருக்கும் அலுப்பை ஏற்படுத்தியது. அதனால், அமிர் ஒருநாள் பொழுதுபோவதற்காக பாட்டு பாட ஆரம்பித்தார். சிறிதுநேரம் கழித்து இயற்கையின் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அமிரின் குரலால் காவன் ஈர்க்கப்பட்டது. காவனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. அமிருடன் தோழமையுடன் பழக ஆரம்பித்தது. தான் பெற்றக் குழந்தையுடன் ஒரு தாய் பழகுவது போல அமிர் காவனுடன் பேசி, பாட்டு பாடி பழக ஆரம்பித்தார். சில நாட்களிலேயே காவன் குளிக்கும்போது கூட தன் தும்பிக்கையால் அமிரின் கையை வருடிப் பாட்டு பாடச் சொன்னது.
கம்போடியாவில் காவன்
பாதுகாப்பாக காவனை கம்போடியாவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்தன. காவனை ஒரு உலோகப் பெட்டகத்தில் ஏற்றி விமானம் மூலம் கம்போடியாவிற்கு அனுப்பத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஐந்தரை டன் எடையும், மூன்று மீட்டர் உயரமும் உள்ள காவன் எட்டு மணிநேர விமானப் பயணத்திற்கு தயாரானது. 35 ஆண்டுகால தனிமைச் சிறையில் இருந்து நவம்பர் 29, 2020 அன்று மீண்டும் காவன் தன் புதுவீட்டிற்குக் குடிபெயரத் தயாரானது.
பாடகி ஷெர், அமிர் உட்பட பலரும் காவனின் புதுவீடு வரை காவனைக் கூட்டிக் கொண்டுபோய் விட்டுவரத் தயாராயினர். கம்போடியாவில், 25,000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள கியூலன் புராம்டெப் (Kqlen-promtep) சரணாலயத்தினர் காவனை அன்புடன் கவனித்துக் கொள்ளத் தயாராயினர். புதுவீட்டிற்குக் குடிபெயர்ந்தாலும், காவனின் மனநலப் பிரச்சனைகள், புதிய இயற்கைச் சூழ்நிலைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வது போன்றவற்றில் சவால்கள் எழலாம் என்று அமிர் கவலையுடன் கூறுகிறார். என்றாலும், கடைசியில் காவன் ஒரு யானையாக வாழ வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ரஷ்யாவின் சிறப்பு ஜம்போ ஜெட் விமானத்தில் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் காவனை வழியனுப்பிவைக்க 74 வயதான பாடகி ஷெர், அமிர் உட்பட பல விலங்குநல ஆர்வலர்கள், மக்கள் இஸ்லாமாபாத் மிருகக்காட்சிசாலை முன் திரண்டனர். காட்சிச்சாலை விழாக்கோலம் பூண்டது.தோரணங்கள், பலூன்களால் அலங்கரிக்கப்பட்டது. காவனின் மீட்பிற்காக ஷெர் எல்லாச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். கம்போடியாவில் காவன் மகிழ்ச்சியுடன் வாழ்வதைக் காண ஆர்வமுடன் காத்திருப்பதாக கம்போடிய சுற்றுச்சூழல் அமைச்சர் கூறினார். காவனை வரவேற்க ஷெர் மற்றும் கம்போடிய அமைச்சர், விலங்குநல ஆர்வலர்கள் தயாராயினர். காவனுடன் அதே விமானத்தில் அமிர் பயணம் செய்தார். பாகிஸ்தானில் இருந்த கடைசி ஆசிய யானை காவன் விமானத்தில் கம்போடியாவிற்குப் பறந்தது.
அமிர் மற்றும் ஃபோர் பாஸ் அமைப்பின் பல ஆர்வலர்கள் பல மணிநேரம் காவன் கனமான உலோகப்பெட்டகத்தில் விமானத்தில் பயணம் செய்யப் பயிற்சி அளித்தனர். உலகமே ஆவலுடன் காத்திருந்த காவனின் கம்போடியா பயணம் நடந்தேறியது. முதல்முதலில் காவனின் நிலை பற்றி செய்தி வெளியிட்ட பாகிஸ்தான் வன உயிரின அறக்கட்டளையின் ஆர்வலர்கள் முதல் ஷெர், ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஃபோர் பாஸ், எப்.இ.ஜூ, அமிர் மற்றும் உலகம் முழுவதும் ஏராளமானோர் காத்திருந்தனர்.
கம்போடிய விமானநிலையத்தில், புத்தத்துறவிகள் வாழைப்பழம், தர்பூசணி கொடுத்து, புனித நீர் தெளித்து காவனை ஆசீர்வதித்தனர். ஷெர் உட்பட பலரும் பெரும் ஆரவாரத்துடன் காவனை வரவேற்ற்றனர். இனி உலகின் ஒற்றைவாழ் யானை (World’s loneliest elephant) என்ற பட்டப்பெயர் காவனிற்கு இல்லை. 2021ல் காவனின் கதை, ஸ்மித்சோனியன் தொலைக்காட்சி அலைவரிசையினரால் படமாக்கப்பட உள்ளது. இனி காவனின் வாழ்க்கை மகிழ்வுடன் அமையும் என்ற நம்பிக்கையுடன் காவனிற்கு பிரியாவிடை கொடுப்போம்.
மூன்றில் ஒன்று
2020 உலகமக்களால் மறக்கமுடியாத ஒரு ஆண்டாக மாறியுள்ளது. கொரோனா என்ற கொள்ளை நோய்த்தொற்று ஆட்டிப் படைக்கும் காலத்தில், உலகை அச்சுறுத்தும் வகையில் 2020 இதுவரை பதிவு செய்யப்பட்டதில், பூமியில் வெப்பம் அதிகமாக நிலவிய ஆண்டு என்ற செய்தி வெளிவந்துள்ளது. உலக வானிலை ஆய்வு நிறுவனம் (World Meterological Organisation WMO) இத்தகவலை ஜனவரி 2021ல் வெளியிட்டுள்ளது. 2020ல் உலக சராசரி வெப்பநிலை 14.9 டிகிரி செல்சியஸ் என்ற உயர்ந்தபட்ச அளவைப் பதிவு செய்துள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்ட தரவுகளில், உலகில் சாதனை அளவாக வெப்பம் மிகுந்து காணப்பட்ட மூன்று ஆண்டுகளில் 2020ம் இடம்பிடித்துள்ளது. இது 1850-1900 காலகட்டத்தில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்பிருந்த வெப்பநிலையைக் காட்டிலும் 1.2 டிகிரி செல்சியஸ் அதிகம். வானிலை, காலநிலை பிரிவில் நவீன வளர்ச்சி ஏற்படத் தொடங்கியதில் இருந்து உலக வானிலை ஆய்வு நிறுவனத்தால் வெப்பநிலைப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில், இதுவரை பூமியில் மிக அதிக வெப்பம் 2016, 2019க்குப் பிறகு 2020ல் அதிகரித்துள்ளது.
வெப்பமான பத்தாண்டு
இந்தியாவில் 2020 வெப்பமான எட்டாவது ஆண்டாக அமைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் (Indian metrological Department IMD) 1901 முதல் வெப்பநிலை தொடர்பான பதிவுகளை செய்துவருகிறது. 2020 டிசம்பரில் உலக வானிலை ஆய்வு நிறுவனம் 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டு காலத்தை உலகில் வெப்பம் அதிகம் நிலவிய பத்தாண்டாக (warmest ever decade) அறிவித்தது. 1980களுக்குப் பிறகு வந்த ஒவ்வொரு பத்தாண்டு காலமும் உலக சராசரி வெப்பநிலை அதிகரித்தே காணப்படுவதாக அந்த ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. 2020ல் உலக சராசரி வெப்பநிலை 14.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது. கொரோனா கொள்ளைநோய் உலகம் முழுவதும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.
எல்நினோவும், லாநினோவும், இயற்கைப் பேரிடர்களும்
இந்தியாவில், நிலப்பகுதிக்கு மேல் பரப்பில் உள்ள காற்றில் 2020ல் 0.29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இந்தப் போக்கு காலநிலை மாற்றம் தீவிரமாகிவருவதையே எடுத்துக்காட்டுகிறது என்று உலக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 2020 கடைசியில் பசுபிக் பெருங்கடலில் வழக்கமாக ஏற்படும் லாநினோ நிகழ்வு தொடங்கினாலும், புவி வெப்பமயமாதல் மாற்றம் இல்லாமல் தொடர்வதையே இது சுட்டிக்காட்டுகிறது. கடல் நீரோட்டங்களால், வழக்கமாக லாநினோ நிகழ்வு ஏற்படும் காலத்தில் கடற்பகுதியில் வெப்பம் குறைந்து, குளிர்ந்த சூழ்நிலை காணப்படும் என்றாலும், 2020ல் புவி வெப்பமயமாதலைக் குறைக்கக்கூடிய அளவு இந்தக் குளிர்ச்சி அமையவில்லை என்று வானிலை அறிஞர்கள் கருதுகின்றனர். மத்திய பசுபிக் மற்றும் நிலநடுக்கோடு பகுதியில், லாநினோ பருவத்தில் கடலின் மேற்பரப்பில் உள்ள காற்று இயல்பை விட குளிர்ச்சி அடையும். இதனால், இந்நிகழ்வு உலகளவில் காலநிலையை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
இதன் விளைவாக உலக சராசரி வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். லாநினோ நிகழ்வு 2021ன் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொரோனா காரணமாக உலகின் பெரும்பகுதியும் பொதுமுடக்கநிலையில் இருந்தாலும், இந்த வெப்ப உயர்விற்கு பசுமைக்குடில் வாயுக்களே முக்கியக்காரணமாக அமைந்துள்ளது என்று உலக வானிலை அமைப்பின் தலைமைச் செயலர் பேராசிரியர் பெட்டரி தாலஸ் (Professor Petteri Thalas) கூறியுள்ளார். 2015ல் ஏற்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின்படி, பசுமைக்குடில் வாயுக்களின், குறிப்பாக கார்பன் டை ஆக்சைடின் வெளியேற்றம் குறைக்கப்படவேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் மட்டுமே தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பிருந்த ஆண்டுகளில் நிலவிய வெப்பநிலையை நம்மால் அடையமுடியும். இந்தக் குறிக்கோளை அடைய உலகின் சராசரி வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்கவேண்டும் என்று பாரிஸ் உச்சிமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வளியுறுத்துகிறது.ஆனால், 2020ல் புவிவெப்பம் உயர்ந்ததுடன், இயற்கைப்பேரிடர்கள், புயல்கள், அண்டார்டிக் பனிப்பரப்பு உருகுதல், ஆர்க்டிக் பரப்பில் ஓசோன் மண்டலத்தில் விழுந்த பெரிய துவாரம், வெப்பக்காற்று சம்பவங்கள், இடி, மின்னல், அழிவை ஏற்படுத்தும் ஹரிக்கேன்கள், பெருவெள்ளப்பெருக்குகள், காட்டுத்தீ போன்றவை அதிகரித்தே காணப்பட்டன.
2020ம், புயற்காற்றுகளும்
2020ம் ஆண்டில் நிகழ்ந்த காலநிலை தொடர்பான நிகழ்வுகளில் முதலிடம் பெறுவது இந்த வெப்பநிலை உயர்வே என்று கருதப்படுகிறது. கிழக்கு பசுபிக் பெருங்கடலில் நீர்பரப்பிற்கு மேல் உள்ள காற்றின் வெப்பநிலை உயர்ந்து காணப்படும். இந்த நிகழ்வு எல் நினோ என்றும், சராசரியை விட குறைவாக வெப்பநிலை உள்ல நிகழ்வை லா நினோ என்றும் வானிலை ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.
2020ன் ஆரம்பத்தில் லேசான ஒரு எல்நினோ நிகழ்வு நிகழ்ந்தது எளினும், சிறிதுகாலத்திற்குப் பிறகு இது லா நினோவாக மாறியது. இதன் விளைவாக அட்லாண்டிக் பெருங்கடலில் பாதிப்புகள் ஏற்பட்டன. பொதுவாக உலகளவில் ஒரு ஆண்டில் 90 புயற்காற்றுகள் உருவாகும். இவற்றில் அதிகமான புயல்கள் மேற்குப் பசுபிக் பெருங்கடலில் உருவாவது வழக்கம்.அட்லாண்டிக்கில் ஒரு ஆண்டில் உருவாகும் புயல்கள் 14 முதல் 15. ஆனால், இந்த ஆண்டில் இந்த எண்ணீக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் மிகத் தீவிர புயற்காற்றுகள். இதில் 12 புயல்கள் அமெரிக்கக் கடற்கரைப்பகுதியைத் தாக்கின. கத்ரீனா போன்ற அதி தீவிரப்புயல்கள் அமெரிக்காவைத் தாக்கி பெரும் இழப்புகளை 2005ல் ஏற்படுத்தியதற்குப் பிறகு 2020ல் ஏற்பட்ட இந்தப் புயற்காற்றுகள் அமெரிக்காவைத் தாக்கியுள்ளன. பொதுவாக அட்லாண்டிக் பரப்பில் உருவாகும் புயல்களில் 8 மட்டுமே கரையைக் கடக்கும் தன்மை உடையவை. ஆனால், 2020ல், இந்த எண்ணிக்கை 12க்கும் கூடுதலாக ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பொதுவாக எல்நினோ நிகழும்போது பருவமழை குறைந்து காணப்படும். வெப்பநிலை உயர்ந்து காணப்படும். ஆனால், 2020ல் மார்ச் ஏப்ரல் முதல் லாநினோ நிகழ்வு தொடங்கியதுடன் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது.
ஜூன் 1 முதல் தென்கிழக்குப் பருவமழை கேரளாவில் தொடங்கியபோதும், அப்போது ஏற்பட்ட ஆம்பன் (Amphan) புயலால், மழையின் அளவு கேரளா மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறைந்தது. இந்தியாவில் பொதுவாக பருவமழை கடந்த இரு ஆண்டுகளாக சராசரியை விட 9 முதல் 10% கூடுதலாகப் பெய்துள்ளது. 2019ல் இந்தியாவில் அரபிக்கடலில் ஐந்து புயல்களும், வங்கக்கடலில் நான்கு புயல்களும் உருவாயின. ஆனால், 2020ல் வங்கக்கடலில் 1999ல் வீசியதற்குப் பிறகு உருவான ஆம்பன் அதி தீவிரப்புயல் உட்பட இரண்டு புயல்களும், அரபிக்கடல் பகுதியில் மூன்று புயல்களும் உருவாகியுள்ளன. கிழக்குக் கரைப்பகுதியில் 1999ல் வீசிய புயலால் அப்போது இந்தியாவில் மேற்குவங்கம்), பங்களாதேஷ் பகுதிகளில் 15,000 பேர் உயிரிழந்தனர். ஆனால், மே 2020ல் வீசிய ஆம்பன் புயலால் நூற்றிற்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளனர். இது வானிலை முன்னறிவிப்பில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது என்று கொச்சி கடல்சார் பல்கலைக்கழக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 2020 நவம்பர், டிசம்பரில் வீசியபுரவி (Puravi) புயல் எதிர்பார்த்தது போல பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் கன்யாகுமரிக்கு அருகில் கரையைக் கடந்து பலவீனமடைந்தது.
என்ன செய்யப்போகிறோம்?
புவி வெப்பமடையும் இத்தகைய போக்கு நீடித்தால், 2024ல் உலகில் வெப்பநிலை சராசரியாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரிக்கும் என்று உலக வானிலை அமைப்பு எச்சரிக்கிறது. சூழலைக் காப்போம் என்று வாய் கிழியப் பேசினால் மட்டும் இயற்கையைக் காப்பாற்ற நம்மால் ஒருபோதும் முடியாது என்று சூழலியலாளர்கள் கருதுகின்றனர். உலகின் இளம் சூழல் போராளி க்ரெட்டா தன்பர்க் உட்பட பலரும் உலக அரசாங்கங்கள் சூழலைக் காப்பாற்ற இன்னமும் போதிய திட்டங்களைத் தீட்டவில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர்.வளர்ச்சி என்ற பெயரில் இருக்கும் இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கே சூழலுக்காக போதுமான நிதியைக் கூட ஒதுக்காத பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் செய்கின்றன என்று உலக வனநிதியம், ஐக்கிய நாடுகளின் சூழல் அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள் அஞ்சுகின்றன. என்ன செய்யப்போகிறோம் நாம்? சிந்திப்போம்.